என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்.
    • இவர் இதற்குமுன் வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் எடுத்துள்ளார்.

    மும்பை :

    தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டரின் அறிவுரையின் பேரில் அவர் மும்பையில் உள்ள பிரிச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிவாஜிராவ் கார்ஜே வெளியிட்டுள்ள அறிக்கையில், "3 நாட்களுக்கு சரத்பவார் ஆஸ்பத்திரியில் தான் இருப்பார்.

    2-ந் தேதி அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 3-ந் தேதி நடைபெறும் கட்சி கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொள்வார். கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் கூட வேண்டாம்" என்றார்.

    81 வயதான சரத்பவாருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல வாய் புற்றுநோய்க்கான சிகிச்சையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது.
    • ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.

    மும்பை :

    நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

    தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன. அதேபோன்று, 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. தனியார் துறையினரும் இதை வெளியிடுகிறார்கள்.

    காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.

    இந்தநிலையில், இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்படுகிறது.

    இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இதில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.

    இதுபோல், 'டிஜிட்டல் ரூபாய் (சில்லறை பிரிவு)' என்ற டிஜிட்டல் கரன்சி, இன்னும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த கரன்சியை வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பயன்படுத்தலாம்.

    • நியூசிலாந்து, வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
    • நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.

    மும்பை:

    டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

    நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

    அதேபோல் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ந்து இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜடேஜா இந்த தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

    வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் , இஷான் கிஷன் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்

    டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் ஸ்பெயின் அணிக்காக கொலம்பிய வீராங்கனை கோல் அடித்தார்.

    நவி மும்பை,

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயின்- கொலம்பியா மகளிர் அணிகள் தகுதி பெற்று இருந்தன.

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியில் கொலம்பியா அணி வீராங்கனை அனா மரியா குஸ்மான் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தவறுதலாக ஸ்பெயின் அணிக்காக ஒரு கோல் அடித்தார்.

    இதையடுத்து அதை சரி செய்ய கொலம்பியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் மகளிர் அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். அமராவதியில் உள்ள பிரபாத் டாக்கீஸ் திரையரங்கம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவ்னீத் கவுர் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதல்வர், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மாநில அரசு ஏற்கும் என்றும், விசாரணை நடத்த கோட்ட ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    • இது மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சூழலை கெடுக்கும் முயற்சியாகும்.
    • அசோக் சவான் கட்சியை விட்டு விலகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

    அவுரங்கபாத் :

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்காக கட்சி அலுவலகத்தை திறப்பதற்கான நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் பாலசாகேப் தோரட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது அசோக் சவான் தன்னை பற்றி நிலவும் ஊகங்களுக்கு பதில் அளித்தார்.

    அவர் கூறுகையில், "இதுபோன்ற கருத்துகளுக்கு இயல்பாகவே நான் எந்த விளக்கமும் அளிக்க தேவையில்லை. சங்கர்ராவ் சவான் (அசோக் சவானின் தந்தை மற்றும் முன்னாள் முதல்-மந்திரி) காலத்தில் இருந்தே நாந்தெட் மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியுடன் பின்னி பிணைந்தது" என்றார்.

    காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், " அசோக் சவான் கட்சியை விட்டு விலகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கு நாங்கள் தினமும் பதில் சொல்ல நேரிடுகிறது. இது மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சூழலை கெடுக்கும் முயற்சியாகும். அசோக் சவான் கட்சியை விட்டு வெளியேறமாட்டார். நாங்கள் அவரை எப்போதும் நம்புகிறோம்" என்றார்.

    இதேபோல பாலசாகேப் தோரட், " இதுபோன்ற யூகங்களால் அசோக் சவான் கவலையடைந்துள்ளதாகவும், கட்சியை கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் அவரின் ஆளுமை தேவை என்றும் கூறினார்.

    • நகைச்சுவை நடிகை பாரதி சிங் மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார்.
    • பாரதி சிங் அவரது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    மும்பை

    மும்பை அந்தேரி பகுதியில் நகைச்சுவை நடிகை பாரதி சிங் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா மற்றும் அவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபரை கைது செய்தனர். இதில் பாரதி சிங்கும் அவரது கணவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் போதைப்பொருள் வழக்கில் நடிகை பாரதி சிங், அவரது கணவர் மற்றும் போதைப்பொருள் சப்ளை செய்தவருக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒரு வாரத்துக்கு முன் தாக்கல் செய்ததாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

    • நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு “ஒய் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    மும்பை

    முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கி வருகிறது.

    தலைவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அடிப்படையில் ஒய், ஒய் பிளஸ் என பல்வேறு வகைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் மராட்டியத்தில் ஆட்சி செய்து வரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் மந்திரிகள், தலைவர்கள் 25 பேரின் பாதுகாப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    இதன்படி முன்னாள் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரிகள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோரின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல விஜய் வடேட்டிவார், பாலாசாகேப் தோரட், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பாஸ்கர் ஜாதவ், சதேஜ் பாட்டீல், தனஞ்செய் முண்டே, சினில் கேதாரே, நர்கரி ஜர்வால் மற்றும் வருண் சர்தேசாய் உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு நீக்கப்பட்ட ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் அனில் தேஷ்முக் 3 பேரும் முன்னாள் உள்துறை மந்திரிகள் ஆவர்.

    அதேநேரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினர், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல காங்கிரஸ் தலைவர்களும், முன்னாள் முதல்-மந்திரிகளுமான அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோருக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    ஆச்சரியமளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட செயலாளரும், நம்பகத்தன்மை வாய்ந்த உதவியாளருமான மிலிந்த் நர்வேகருக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் அனைத்தும் அச்சுறுத்தல் உணர்வை கருத்தில் கொண்டு நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டவை என்றும், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் முன்னாள் மந்திரிகள் ஆவர். இனி இவர்களின் வீடுகளுக்கு வெளியேயும், அவர்களுக்கு துணையாகவும் நிரந்தர போலீஸ் பாதுகாப்பு இருக்காது.

    மராட்டிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மகா விகாஷ் அகாடி கூட்டணியை சேர்ந்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
    • எப்.ஏ.டி.எப்.-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

    மும்பை:

    சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

    இந்த அமைப்பு சேகரிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளை கருப்பு மற்றும் கிரே பட்டியலில் சேர்க்கும்.

    இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் சர்வதேச அளவில் நிதி உதவிகளை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரே பட்டியலில் இருந்தது. சமீபத்தில் இந்த பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.

    இந்நிலையில் எப்.ஏ.டி.எப்-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் 2 நாள் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பங்கை அதிகாரிகள் எடுத்து கூறினர்.

    லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவர் சஜித் மிர் பேசிய ஆடியோ கிளிப்பை போட்டு காட்டினர். அதில், அவர் மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியது உறுதியாகி இருந்தது. மிர் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கூறி வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானிய அதிகாரிகளால் சஜித் மிர் கைது செய்யப்பட்டதையும், அதிகாரிகள் பயங்கர எதிர்ப்பு குழுவிடம் எடுத்துரைத்தனர்.

    மேலும் இந்த கூட்டத்தில் மத்திய புலனாய்வு துறையின் அதிகாரி ஷபி ரிஸ்வி பேசுகையில், 2018-ம் ஆண்டின் மத்தியில் எல்லையில் 600 பயங்கரவாத தளங்கள் இருந்தன. அவை எப்.ஏ.டி.எப். பட்டியலின் போது 75 சதவீதம் குறைந்துள்ளன. இது மிக முக்கியமான வெற்றியாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.

    அதே நேரம் எப்.ஏ.டி.எப்.-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

    • கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.
    • மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    மும்பை:

    ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.

    பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா.வால் போதிய வெற்றியை பெற முடியாததற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    • கமல் கிஷோர் மிஸ்ரா ‘தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
    • போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    மும்பை:

    மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந்தேதி இந்தி சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்றார். தனது கணவர் வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். மேலும் கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் திடீரென அவர் தவறி விழுந்தார். எனினும் தயாரிப்பாளர் ஈவு இரக்கமின்றி அவா் மீது காரை ஏற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

    கார் ஏறியதில் யாஸ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வாகன நிறுத்த காவலர்கள் தயாரிப்பாளர் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே யாஸ்மின் மீது காரை ஏற்றி செல்லும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர். கமல் கிஷோர் மிஸ்ரா இந்தியில் வெளியான 'தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.

    ×