என் மலர்
மகாராஷ்டிரா
- நடைபெறும் அரசியல் குழப்பத்துக்கு எனது சகோதரர் (அஜித்பவார்) தான் பொறுப்பு.
- சந்தையில் விலை போகும் நாணயம் பற்றி தான் அனைவரும் பேசுவார்கள்
தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பும் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களில் அரசியல் பூகம்பம் வெடிக்கும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.
இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "அடுத்த 15 நாளில் 2 அரசியல் பூகம்பம் வெடிக்கும். அதில் ஒன்று டெல்லியிலும், மற்றொன்று மகாராஷ்டிராவிலும் வெடிக்கும். நடைபெறும் அரசியல் குழப்பத்துக்கு எனது சகோதரர் (அஜித்பவார்) தான் பொறுப்பு. சந்தையில் விலை போகும் நாணயம் பற்றி தான் அனைவரும் பேசுவார்கள்" என்றார்.
40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருடன் செல்ல இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரியா சுலே, "எங்கள் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சரத்பவார், அஜித்பவார், மாநில கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோருடன் நிரந்தர தொடர்பில் உள்ளனர். நானும் எம்.எல்.ஏ.க்களுடன் பேசி வருகிறேன். கட்சியில் யாராவது அதிருப்தியில் இருந்தால் அது பற்றி உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்" என்றார்.
- தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி.
- அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.
மும்பை :
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவலை அஜித்பவார் மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தால், கூட்டணி அரசில் இருந்து விலகுவோம் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சாட் கூறியதாவது:-
அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி சிவசேனா மற்றும் பா.ஜனதாவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் அவரை வரவேற்போம். அதே நேரத்தில் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அல்லது கட்சியின் ஒரு அணியாக (எம்.எல்.ஏ.க்களுடன்) சேர்ந்தால் அது தவறு. அப்படி நடந்தால் நாங்கள் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம். எங்கள் கொள்கை தெளிவானது. தேசியவாத காங்கிரஸ் துரோகத்தின் கட்சி. ஆட்சி அதிகாரத்தில் கூட தேசியவாத காங்கிரசுடன் இருக்க மாட்டோம். பா.ஜனதா, தேசியவாத காங்கிரசை சேர்த்தால் மராட்டியம் அதை விரும்பாது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்தது பிடிக்கவில்லை என்பதால் தான் நாங்கள் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.
முன்பு சிவசேனாவில் நிலவி வந்தது போல தற்போது தேசியவாத காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது. அஜித்பவார், உத்தவ் தாக்கரேவின் தலைமையை (மகா விகாஸ் கூட்டணி அரசில்) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேசியவாத காங்கிரசில் நீடிக்கவும் விரும்பவில்லை. அங்கு அவர் சுதந்திரமாக இல்லை என நினைக்கிறேன். அஜித்பவாருக்கு அவரது கட்சி மீதுள்ள அதிருப்திக்கும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள சிவசேனா வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அஜித் பவாரின் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே செல்வது புதிதல்ல. அஜித்பவாரின் மகன் பார்த் பவார் தேர்தலில் தோல்வியை சந்தித்ததில் இருந்து அவர் கட்சி மீது அதிருப்தியில் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ்.
- சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.
மும்பை:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ்.ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சிஎஸ்கே அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதில் இருந்து பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த நபர் ஒருவர், அணியின் உள் தகவல்களை பெற தன்னை நாடியதாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசியூ) இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின்போது, முகமது சிராஜை ஒரு நபர் அணுகியதாகவும், சிராஜ் உடனடியாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தைத் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ். மேலும், சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித்பவார் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலை சரத்பவாரும் மறுத்தார்.
- நான் உயிருள்ள வரை தேசியவாத காங்கிரசுக்காக உழைப்பேன்.
மும்பை :
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து பரபரப்பு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் கடந்த 7-ந் தேதி தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு திடீரென மாயமானார்.
கட்சி தலைமையுடன் அவர் தொடர்பை துண்டித்து விட்டதாகவும், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்க்க இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
2019-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்த வேளையில், அதிகாலை 3 மணிக்கு பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றதும், பின்னர் அந்த ஆட்சி 80 மணி நேரம் மட்டுமே நீடித்ததும் நினைவுக்கூரத்தக்கது. இப்படி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் அஜித்பவார் என்பதால், தற்போது அவர் திடீரென மாயமானதும் அரசியலில் விறுவிறுப்பை எகிற செய்தது.
ஆனால் மறுநாள் பொதுவெளியில் தோன்றிய அஜித்பவார் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுத்தேன் என்று கூறி சமாளித்தார். இந்த சம்பவத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி பற்றிய கல்வி தகுதி சர்ச்சை தேவையற்றது என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது பா.ஜனதாவுடனான நெருக்கம் தொடர்பான ஊகங்களுக்கு வலு சேர்த்தது.
இந்த நிலையில் மும்பையில் நேற்று அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட இருந்ததாக தகவல் வெளியானது. அஜித்பவார் எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அன்னா பன்சோடே, மாணிக்ராவ் கோகடே கூறியிருந்தனர்.
இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் நேற்று விறுவிறுப்பானது. ஆனால் எதிர்பார்த்தபடி அஜித்பவார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவில்லை.
இது தொடர்பாக அஜித்பவாரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் பதிலளித்து கூறியதாவது:-
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இருப்பதாகவும், பா.ஜனதாவுடன் நான் கைகோர்ப்பதாகவும் வெளியான செய்திகளில் துளியும் உண்மையில்லை. நாங்கள் (கட்சி எம்.எல்.ஏ.க்கள்) அனைவரும் தேசியவாத காங்கிரசுடன் இருக்கிறோம். நான் உயிருள்ள வரை தேசியவாத காங்கிரசுக்காக உழைப்பேன். கட்சியில் எந்த பிளவும் இல்லை. நாங்கள் குடும்பம் போல உழைத்து வருகிறோம். இது தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவுடன் செல்வதற்காக தேசியவாத காங்கிரசில் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரிடம் கையெழுத்து வாங்கி வைத்து இருப்பதாக எழுப்பிய கேள்வியை அஜித்பவார் மறுத்தார்.
இதுபோன்ற ஆதரமற்ற தகவல்கள் கட்சி தொண்டர்களை குழப்புவதோடு, அவர்களது மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் அஜித்பவார் கூறினார்.
இதேபோல அஜித்பவார் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலை சரத்பவாரும் மறுத்தார்.
சரத்பவாரும், அஜித்பவாரும் விளக்கம் அளித்தபோதிலும், தேசியவாத காங்கிரசில் உள்கட்சி குழப்பம் நீடிப்பதை மறுக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர். கடந்த காலங்களில் அதிரடி அரசியல் மாற்றங்களை கண்ட மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் மாற்றம் ஏற்படாது என்று சொல்ல முடியாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி எனப்படும் உத்தவ் தாக்கரே கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பலமிக்கதாக மாறி இருப்பது பா.ஜனதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் பின்னணியில் தான் அஜித்பவாரை அவரது ஆதரவாளர்களுடன் தன்பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவை அடுத்து ஏற்பட்ட மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி இன்னும் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்துத்வா தேசியநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
- பா.ஜனதா ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கொன்று வருகிறது.
மும்பை :
மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் இரவு நாக்பூரில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், அம்பாதாஸ் தான்வே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் நானா படோலே, பாலாசாகிப் தோரட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சுனில் கேதார் செய்து இருந்தார்.
கூட்டத்தில் 3 கட்சிகளையும் சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
ஒரு பக்கம் அவர்கள் அனுமன் பஜனை பாடுகிறார்கள். மறுபுறம் மசூதியில் போதனை கேட்கின்றனர். அது தான் அவர்களின் இந்துத்வாவா?. உத்தரபிரதேசத்தில் உருது மொழியில் 'மன் கி பாத்' நடத்துகின்றனர். நாட்டுக்காக வாழ்க்கையை அர்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா. நான் காங்கிரசுடன் சென்று இந்துத்வாவை கைவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.
காங்கிரசில் ஒரு இந்து கூட இல்லையா?. அவர்களின் (பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.) இந்துத்வா பசு கோமிய இந்துத்வா.
இந்துத்வா தேசியநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். சமீபத்தில் நாங்கள் அவுரங்காபாத்தில் பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில் பா.ஜனதாவினர் கோமியத்தை தெளித்தனர். அவர்கள் அந்த கோமியத்தை குடித்து இருக்க வேண்டும். அப்போது தான் இந்துத்வா தேசியம் சார்ந்தது என்பது அவர்களுக்கு உணர்ந்து இருக்கும். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்-மந்திரி அயோத்தி செல்கிறார். பா.ஜனதா ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கொன்று வருகிறது. அந்த கட்சிக்கு நெருங்கிய நண்பர்களுக்கு (அதானி) உதவி செய்வது தான் ஜனநாயகம். மோடி அரசின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்டபோது ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பல பிரச்சினைகளில் மோடியை கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் எந்த நேரமும் ஜெயிலில் அடைக்கப்படலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி வீட்டிலும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- சிரியர் பணிக்கு பலரிடம் பணம் வாங்கியதாக ஜிபன் கிருஷ்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இதில் 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக பார்த்தா சாட்டர்ஜி செயல்பட்ட போது ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி வீட்டிலும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் அர்பிதா வீட்டில் ரூ.20 கோடி சிக்கியது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் மாணிக் பட்டாச்சார்யா எம்.எல்.ஏ.வை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த நிலையில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜிபன் கிருஷ்ணா சஹாவிடம் கடந்த 14-ந்தேதி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
முர்ஷிதா பாத் மாவட்டம் பர்வானில் உள்ள இல்லத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது. இந்த நிலையில் ஜிபன் கிருஷ்ணா சஹா எம்.எல்.ஏ.வை இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து சென்றனர். அவர் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, 'ஜிபன் கிருஷ்ணா சஹா தனது இரண்டு செல்போன்களை வீட்டை ஒட்டியுள்ள குளத்தில் வீசியுள்ளார். அதில் இருந்து தண்ணீரை வெளியேற்றி ஒரு செல்போன் மீட்கப்பட்டது. அவரது செல்போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மீட்கப்பட்ட செல்போனில் உள்ள தகவல்களை மீட்டெடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளார்கள். விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த போது செல்போன்களை குளத்தில் வீசியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் பணிக்கு பலரிடம் பணம் வாங்கியதாக ஜிபன் கிருஷ்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது. சோதனையில் முறைகேடு தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்து இருந்த நிலையில் ஜிபன் கிருஷ்ணா சஜா எம்.எல்.ஏ. இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
- ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது அழகியான நந்தினி குப்தா, ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.
- தன் வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் தொழில் அதிபர் ரத்தன் டாடா என்று நந்தினி குப்தா கூறி உள்ளார்.
மும்பை:
'மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023' அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது
இந்த போட்டியில் 'மிஸ் இந்தியா' அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.
இதில் இரண்டாவது இடம் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சாவுக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடம், மணிப்பூரைச் சேர்ந்த தவ்னாவ்ஜாம் ஸ்ட்ரேலா லுவாங்குக்கு கிடைத்துள்ளது.
அழகி போட்டி நிகழ்ச்சியில் இந்தி பட உலக நட்சத்திரங்கள் கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் இடம் பெற்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னாள் அழகிகள் சினி ஷெட்டி, ரூபல் ஷெகாவத், ஷினட்டா சவுகான், மனசா வாரணாசி, மனிகா சியோகந்த், மான்யா சிங், சுமன்ராவ், ஷிவானி ஜாதவ் ஆகியோர் கண்கவர் உடையில் வந்து பார்வையாளர்களை வசீகரித்தனர்.
'மிஸ் இந்தியா 'அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள நந்தினி குப்தாவுக்கு வயது 19. இவர் ஒரு மாடல் அழகி ஆவார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தன் வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் தொழில் அதிபர் ரத்தன் டாடா என்று நந்தினி குப்தா கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "மனித குலத்துக்காக எல்லாவற்றையும் செய்வதுடன், சம்பாதிப்பில் பெரும்பகுதியை சமூக பணிகளுக்காக நன்கொடையாக அளிப்பவர். கோடிக்கணக்கான மக்களின் நேசத்துக்கு உரியவர் ரத்தன் டாடா" என தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடக்கிற 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் நந்தினி குப்தா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
- சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
கோடைக்காலம் தொடங்கிய நிலையில், நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
நவி மும்பையில் உள்ள ஒரு பெரிய மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடந்தது.
இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே கூறுகையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
மருத்துவர்களிடமிருந்து பெறப்பட்ட விளக்கத்தின்படி, இன்று (நேற்று) 7-8 பேர் இறந்துள்ளனர். சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வெயிலால் ஏற்பட்ட பாதிப்பு. முதன்மை சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.
- முதலில் ஆடிய கொல்கத்தா 185 ரன்கள் சேர்த்தது.
- வெங்கடேஷ் அய்யர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
மும்பை:
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்களை சேர்த்தது. நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யர் 51 பந்துகளில் 9 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 104 ரன்கள் எடுத்தார்.
மும்பை அணி சார்பில் ரித்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, மெரிடித், யான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்களை சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 20 ரன்னில் அவுட்டானார்.
அரை சதமடித்த இஷான் கிஷன் 25 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 58 ரன்களை குவித்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் 43 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 30 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மும்பை அணி 17.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்து வென்றது. டிம் டேவிட் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை:
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ், ஜெகதீசன் விளையாடினர். ஜெகதீசன் டக் அவுட்டானார். குர்பாஸ் 8 ரன்னில் வெளியேறினார். கேப்டன் நிதிஷ் ரானா 5 ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வெங்கடேஷ் அய்யர் ருத்ர தாண்டவமாடினார். மும்பை பந்துவீச்சை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தனி ஆளாக நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். அவர் 51 பந்துகளில் 9 சிக்சர், 6 பவுனட்ரி உள்பட 104 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.
மும்பை அணி சார்பில் ரித்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டும், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, மெரிடித், யான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்குவதற்கு பா.ஜனதா முடிவு செய்துவிட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
- மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதால் கூட்டணி முறிந்தது. இந்நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகனான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதையடுத்து பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
ஆனால் இந்த அரசு 72 மணி நேரம் மட்டுமே நீடித்தது. சரத்பவாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.
சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை இழுத்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். தற்போது ஆட்சியும், சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் உள்ளது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்ப வாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என கூறப்படுகிறது.
தீர்ப்பு ஷிண்டே தரப்புக்கு எதிராக அமைந்தால் ஆட்சியை காப்பாற்றுவதற்காக அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் ஆட்சியை தொடருவதற்கு பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்போது அஜித் பவார் தன்வசம் 35 முதல் 40 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி தந்தால் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டமும் நடை முறைக்கு வராது. ஆனால் இந்த கூட்டணிக்கு சரத்பவார் ஒப்புதல் தரமாட்டார் என்பதால் அவரின் ஆசியை பெறுவதற்காக அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
அதே நேரம் பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு சரத்பவார் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சரத்பவார், ராகுல்காந்தியை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில் கூட்டணி மாறினால் தனது அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படலாம் எனவும், பா.ஜனதா கூட்டணியை விரும்பவில்லை எனவும் அவர் அஜித் பவாரிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சி அமைந்த சில மணி நேரங்களிலேயே அஜித் பவார் தனது நிலையை மாற்றி கொண்டு கட்சி தலைமைக்கு அடிபணிந்தார்.
எனவே தற்போது கட்சி தலைமைக்கு எதிராக அஜித் பவாரின் பின்னால் செல்வது தங்கள் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருதுகிறார்கள். ஆனாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்கள் சரத்பவாரிடம் ஒப்புதல் பெறுவதற்கு அஜித் பவாரை வற்புறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் கடந்த 8-ந்தேதி அஜித் பவார் திடீரென டெல்லிக்கு சென்று பா.ஜனதா மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணியின் இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோர் அஜித் பவாருடன் சென்றதாகவும், பேச்சு வார்த்தையின் போது அமைச்சரவை இலாகாக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்குவதற்கு பா.ஜனதா முடிவு செய்துவிட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இதுதொடர்பாக மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், மகாராஷ்டிராவை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி தற்போது ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது. உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் ஆட்சி மற்றும் கட்சி சின்னத்தை இழந்தாலும் கூட மாநிலத்தில் அவர்களின் புகழ் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் மாநிலத்தில் மொத்தமுள்ள 48 பாராளு மன்ற தொகுதிகளில் 33 இடங்களை மகாவிகாஸ் அகாடி கூட்டணி கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறப்படுகிறது. எனவே மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை. அதற்காக தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர பா.ஜனதா விரும்புகிறது என்றனர்.
- தனியார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது.
- ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும்.
மும்பை :
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர், மும்பையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆளும் பா.ஜனதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும். பத்திரிகையாளர்களின் சுதந்திரத்திற்கு எங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும்.
2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால் " இந்து பாகிஸ்தானை" அவர்கள் உருவாக்க முயற்சிப்பார்கள் என்று எச்சரித்தேன்.
2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த அரசு முத்தலாக் மற்றும் காஷ்மீரின் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் எனது கணிப்பு சரியாகும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றியது.
ஆனால் கொரோனா தொற்று தான் நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது. தொற்றுநோயை கையாளுவதற்கான அவசர தேவை காரணமாக நாடாளுமன்றம் செயல்படுவது ஸ்தம்பித்தது.
தனியார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனத்திற்கும் தலைமை பதவிக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர்களின் அரசாங்க விசுவாசம் சோதிக்கப்படுகிறது.
சுதந்திரமான மற்றும் நேர்மையான நபர்களை நியமித்ததன் மூலம் தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி அதிகாரம் காப்பாற்றப்பட்ட காலம் முன்பு இருந்தது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மற்றும் ஜே.எம். லிண்டே ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.






