என் மலர்tooltip icon

    அரியானா

    • 8 வயது சிறுவன் 4-வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து லிப்டில் கீழே இறங்கி உள்ளார்.
    • இக்கட்டான நேரங்களில் பதட்டப்படவோ, பயப்படவோ கூடாது என எனது தந்தை கூறியிருக்கிறார்.

    பெரியவர்கள் சிலருக்கு லிப்ட் பயம் இருப்பதை இப்போதும் காண முடிகிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 8 வயது சிறுவன் 4-வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து லிப்டில் கீழே இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் 2-வது மாடியில் சிக்கி கொண்டது. இதனால் சிறுவன் டியூசனுக்கு செல்லவில்லை. வழக்கமாக அந்த சிறுவனை தாயார் டியுசனுக்கு அழைத்து செல்வார். ஆனால் அன்றைய தினம் சிறுவன் டியூசனுக்கு வராதது குறித்து ஆசிரியர் கார்விட்டில் என்பவர் சிறுவனின் தந்தை பவான் சண்டிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளர்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை தேடிய போது தான் சிறுவன் லிப்டுக்குள் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி லிப்டில் சிக்கிய சிறுவனை காப்பாற்றி உள்ளனர். மீட்புக்குழுவினர் மிகவும் பதட்டம் அடைந்து லிப்டுக்குள் சென்ற போது சிறுவனோ எந்த பதட்டமும் இல்லாமல் வீட்டு பாடம் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் சிறுவனிடம் கேட்ட போது, லிப்ட் பழுதாகி நின்றதும் எமர்ஜென்சி பட்டனை அழுத்தினேன். பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டினேன். ஆனால் யாரும் வரவில்லை. எனவே அமைதியாக எனது வீட்டு பாடத்தை எழுத தொடங்கினேன். இக்கட்டான நேரங்களில் பதட்டப்படவோ, பயப்படவோ கூடாது என எனது தந்தை கூறியிருக்கிறார். அதையே தான் பின்பற்றினேன் என அந்த சிறுவன் கூறினான்.

    • வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
    • பள்ளிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்து வைக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு.

    நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 நிகழ்வை மாணவர்கள் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் கன்வர் பால் கூறுகையில், " அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் சந்திரயான்-3ன் நிகழ்வை காண நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து பள்ளிகளும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்து வைக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் இதனை நேரலையில் பார்க்கும்போது அவர்களுக்கு உத்வேகமாக இருக்கும். மேலும், தன்நம்பிக்கை பெறுகும்." என்றார்.

    • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர்
    • பள்ளிகள் மூடப்பட்டு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன

    அரியானா மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த மாதம் 31-ந்தேதி பேரணி நடைபெற்றது. அப்போது சிலர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதில் ஆறுபேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக யாத்திரை பாதிலேயே நிறுத்தப்பட்டது.

    சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்குப்பின் நூ மாவட்டத்தில் முழுவதுமாக அமைதி திரும்பியது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத்தின் பிரிஜ் மண்டல ஜலாபிஷேக யாத்திரைக்கு அனுமதி கேட்டு நூ நிர்வாகத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக, நூ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நூ எஸ்.பி. நரேந்தர் பிஜார்னியா, அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் தேவேந்தர் சிங் கூறுகையில் ''எனக்கு இதுகுறித்து எந்த தகவலும் கிடைகக்வில்லை. அங்கே, யாத்திரைக்கு எந்தவிதமான அனுமதியும் தேவையில்லை'' என்றார்.

    நூ-வின் நல்ஹார் கோவிலில் இருந்து பிரோஜ்புர் ஜில்காருடைய ஜிர் மற்றும் ஷிங்கார் கோவில் வழியாக யாத்திரையை மீண்டும் தொடங்க கடந்த 13-ந்தேதி மகாபஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு
    • வெறுப்பு பேச்சு காரணமாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் அருகில் உள்ள மாநிலங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.

    நூ மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக இணைய சேவை முடக்கப்பட்டது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து சேவை முடங்கியது. தற்போது அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டன.

    வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நூ மாவட்ட கலவரம் தொடர்பாக பஜ்ரங் தள தலைவர் ராஜ்குமார் என்ற பிட்டு பஜ்ரங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது ஊழியர்களை கடமை செய்வதில் இருந்து தடுப்பது மற்றும் தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு அமைப்பு அவரை தேடிவந்தனர். இந்த நிலையில், இன்று காலை பரிதாபாத்தில் உள்ள தபுவா என்ற இடத்தில் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து அப்போது வீட்டில் பதுங்கியிருந்த பிட்டு பஜ்ரங்கி தப்பித்து ஓட முயற்சி செய்தார்.

    அதிகாரிகள் அவரை துரத்திச் சென்று பிடித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சுமார் 20 அதிகாரிகளில் பலர் கையில் லத்தியுடன் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    வெறுப்பு பேச்சு தொடர்பாக பஜ்ரங்கி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ''பிட்டு பஜ்ரங்கி தனது வீடியோவில் மத வெறியை தூண்டும் வகையில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக தனது சக அமைப்புகளை தூண்டிவிட்டு வருகிறார்'' என ஒரு வழக்குப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் கல்வீசப்பட்டதால் வன்முறை வெடித்தது
    • இரு தரப்பினர் இடையேயான மோதலில் 6 பேர் உயிரிழப்பு

    இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் மற்றொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மோதல் உருவானது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, பெரும் கலவரமாக மாறியது.

    இந்த கலவரத்தில் இரண்டு ஊர்க்காவல்படை வீரர்கள், மசூதி மதகுரு உள்ளிட்ட ஆறுபேர் கொலை செய்யப்பட்டனர். வாகனங்கள், கடைகள் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலை நிலவியதால் அரசு இணைய தள சேவையை முடக்கியது.

    சுமார் இரண்டு வார காலத்திற்குப்பிறகு தற்போது மீண்டும் இணைய தள சேவை அரியானாவின் நூ மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    விஷ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் பசு காவலர் மோனு மனேசர் கலந்து கொள்ள இருப்பதாக வதந்தி பரவியது. மோனு மனேசர், நூவில் நடைபெற இருக்கும் பேரணியில் ஆதரவாளர்கள் மிகப்பெரிய அளவில் திரள வேண்டும் என சமூக வலைத்தள வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம். நீங்கள் கலந்து கொண்டால் தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்கள்.

    இந்த வன்முறையில் மானேசர் பங்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற இருக்கிறது.

    நூ மாவட்டத்தை நீக்க வேண்டும், இறைச்சிக்காக பசுக்கள் கொலை செய்யப்படாத மாவட்டமாக வேண்டும் என 51 பேர் கொண்ட கிராமசபை கூட்டம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே நூ மாவட்டத்தில் ஆகஸ்டு 28-ந்தேதி ஜலாஹிஷேக் யாத்திரை மீண்டும் தொடங்கும் என முடிவு செய்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

    இந்த வன்முறை காரணமாக 390-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 118 பேர் வன்முறை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலமாக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார்

    கடந்த வாரம் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் முழு அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

    • நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்.
    • அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று மகா பஞ்சாயத்து கமிட்டி குற்றச்சாட்டு.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய ஜலாபிஷேக யாத்திரையின்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த வன்முறை நூ மட்டுமின்றி அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்திற்கும் பரவியது. இந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், பிரச்சனை காரணமாக தடைபட்ட யாத்திரையை நிறைவு செய்வதற்காக விஷ்வ இந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வால் மாவட்டத்தில் இன்று மகாபஞ்சாயத்து கூட்டம் நடத்தினர். வெறுப்பு பேச்சு பேசக்கூடாது, வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளின்பேரில் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின்போது போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

    எனினும் நிபந்தனைகளையும் மீறி, இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேச்சாளர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்சசை வெடித்துள்ளது. ஒரு பேச்சாளர் பேசும்போது, "நீங்கள் ஒரு விரலை உயர்த்தினால், உங்கள் கைகளை வெட்டுவோம்" என்று கூறியியதாகவும், மற்றொருவர் சுய பாதுகாப்புக்காக மக்களுக்கு துப்பாக்கிகளுக்கு உரிமம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    நூ மாவட்டத்தை ஒழிக்கவேண்டும், அப்பகுதியை பசுக்கொலை இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அப்பகுதியில் நடக்கும் அனைத்து சண்டைகளுக்கும் மூலக் காரணம் பசுக் கடத்தல் என்று கூறிய மகா பஞ்சாயத்து கமிட்டி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நூ பகுதியில் துணை ராணுவப் படை தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    மேலும், ஜூலை 31ல் நடந்த வன்முறை குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும், வகுப்புவாத மோதல்களில் கொல்லப்பட்ட தங்கள் சமுதாய மக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி, காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கமிட்டி கோரியது. மேலும், கலவரத்தின் போது ஏற்பட்ட இழப்புகளை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வரும் 28ம் தேதி நூ மாவட்டத்தில் மீண்டும் ஜலாபிஷேக யாத்திதையை நடத்த மகா பஞ்சாயத்து கமிட்டி முடிவு செய்துள்ளது. மேலும் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

    • நாளை வரை நூ மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன
    • கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

    இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ளது நூ (Nuh) மாவட்டம்.

    இங்கு கடந்த ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் வேறொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு மோதல் உருவானது. இதில் வன்முறை வெடித்து இம்மோதல் பெரும் கலவரமாக மாறியது.

    கலவரம் மேலும் பரவாமல் தடுக்கவும், அமைதி திரும்பவும் மாநில அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கலவரம் குறித்து இரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளை () வரை அந்த மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

    கலவரம் குறித்து பல பிரமுகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரயராக பணிபுரிபவர் முகேஷ் குமார். இவர் இக்கலவரம் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

    முகேஷ் குமார் எக்ஸில் (டுவிட்டர்) ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

    "கத்தார் நாட்டை தலைமை இடமாக கொண்ட அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம், குருகிராம் காவல்துறை ஆணையர் கலா ராமச்சந்திரன்-ஐ தொடர்பு கொண்டு இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நிர்பந்திக்கிறது. இந்த அழுத்தத்தால் ஆணையர் இந்து மத ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் எங்கிருந்தாலும் அவர்களை கைது செய்கிறார்." இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    இதை குருகிராம் காவல்துறை மறுத்தது. இதனை தொடர்ந்து முகேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கைக்கு சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.., "இந்த கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நாங்கள் அவருக்கு துணையாய் இருப்போம்" என தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹன்கே (Suresh Chavhanke) இது குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்தார். முகேஷ் விடுவிக்கப்பட்டதாக சுரேஷ் பின்னர் தெரிவித்திருந்தாலும் காவல்துறையினர் அதிகாரபூர்வமாக இதனை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுத்ரி அக்தாத் குற்றம் சாட்டியுள்ளார்.

    அரியானாவில் நூஹ் பகுதியில் கடந்த 31-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவிய நிலையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    வன்முறை தொடர்பாக 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 188 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

    இதைத்தொடர்ந்து கலவரக்காரர்கள் மற்றும் வன்முறையை துண்டியவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நூஹ், நல்ஹர், புன்கானா, டாரு, ஆகோன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

    நூஹ் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இதுவரை 1,208 கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சமூக மக்களை குறி வைத்து அரியானா அரசு கட்டிடங்களை இடிப்பதாக நூஹ் பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுத்ரி அக்தாத் குற்றம் சாட்டியுள்ளார்.

    • அரியானா வன்முறையில் 2 ஊர்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
    • வன்முறை தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது.

    கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் 2 ஊர்க்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 142 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அங்குள்ள எதிர்கட்சியான அரியானா காங்கிரஸ் சார்பில் 10 பேர் கொண்ட தூதுக்குழு அமைக்கப்பட்டு, வன்முறை நடந்த நூ பகுதிக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

    அவர்கள் நேற்று அங்கு செல்ல முயன்றபோது ரோஜ்கா மியோ கிராமத்தின் எல்லையில் அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழப்பு
    • சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றும் பணியை மேற்கொண்டது மாவட்ட நிர்வாகம்

    ஜூலை 31 அன்று, அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை என ஒரு யாத்திரையை நடத்தினார்கள்.

    யாத்திரை தொடங்கிய கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே பக்தர்கள் மீது அங்குள்ள கட்டிடங்களிலிருந்து கல்வீச்சு நடைபெற்றது. இதில் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன.

    இதனையடுத்து இரு பிரிவினருக்கிடையே வன்முறை மூண்டது.

    கடந்த சில நாட்களாக குருகிராம் பகுதியிலும் இந்த வன்முறை பரவியது. இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் 1 மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் காவல்துறை மும்முரமாக ஈடுபட்டது. மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து சட்டவிரோத ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு எதிராக அரியானாவின் நூ மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தொடங்கியது.

    நேற்று முன்தினம் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக வன்முறையால் பாதிக்கப்பட்ட நூ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டவ்ரு பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.

    பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர்களை கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    மூன்றாம் நாளான இன்று காலை நல்ஹர் பகுதியில் உள்ள ஷாஹீத் ஹசன் கான் மேவதி அரசு மருத்துவக் கல்லூரியின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே இருந்த 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மெடிக்கல் கடைகள் புல்டோசரை கொண்டு இடிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாக குழுக்கள் முன்னிலையில் நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தது. பல்வேறு பகுதிகளில் உள்ள 50 முதல் 60 கட்டடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன.

    காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து பலர் ஓடிவிட்டனர். கடந்த பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    உள்ளூர் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் துணை தலைவருமான அஃப்தாப் அகமது, இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ''கல்வீச்சு நடைபெற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் மேல் மாடியில் அதிகளவில் கற்கள் சேகரிக்கப்பட்டதை கொண்டு இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தோன்றுகிறது. மோதல்கள் தொடர்பாக இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று அரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று தெரிவித்தார்.

    இதுவரை 102 முதல் தகவல் அறிக்கை காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    • அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை என்றார் முதல் மந்திரி.
    • வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

    வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கை எதுவும் நடைபெறாமல் இருக்க 20 துணை ராணுவ படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை. எனவே போராட்டக்காரர்கள் அமைதி வழியில் திரும்ப வேண்டும்.

    வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • வன்முறையின் மையப்புள்ளியாக கருதப்படும் மோனு மானேசர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
    • வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    வன்முறையின் மையப்புள்ளியாக கருதப்படும் மோனு மானேசர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை கண்டுபிடிக்க உதவும்படி ராஜஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுள்ளேன். நாங்களும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். இப்போது ராஜஸ்தான் காவல்துறை அந்த நபரை தேடி வருகிறது.

    வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 190 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வன்முறைக்கு காரணமானவர்கள் இழப்புகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு பதிவுகள் மூலம் காவல்துறை விசாரித்து வருகிறது.

    அனைத்து மக்களையும் பாதுகாப்பது காவல்துறைக்கு சாத்தியமில்லை. மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×