என் மலர்
பீகார்
- பீகாரில் இந்திய-நேபாள எல்லையில் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய முயன்றது தெரிந்தது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ரக்சவுலில் இருந்து இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாகப் பேசிய கிழக்கு சம்பரான் காவல்துறை கண்காணிப்பாளர் காந்தேஷ் குமார் மிஸ்ரா, சீனாவின் கிழக்கில் உள்ள ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜாவோ ஜிங், எப்யூ காங். இருவரும் நேற்று இரவு இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் வருவதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. அவர்கள் நுழைய முயன்றதன் நோக்கம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. அவர்கள் இதற்கு முன்பு கடந்த 2-ம் தேதி ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில், அவர்கள் எச்சரித்து விடுவிக்கப்பட்டனர் . மேலும் விசாவுடன் இந்திய எல்லைக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
- சுமார் 9 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 4 வயது குழந்தையுடன் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்றார். தோட்டத்தில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தபோது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வெட்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது. இதைக் கண்ட தாயார் அதிர்ச்சி அடைந்து கிராமத்தினரை அழைத்துள்ளார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் 60 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 60 ஆடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சுமார் 9 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- துப்பாக்கி சூட்டில் தொழில் அதிபரின் வக்கீல் சையது உசேன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அகுதோஷ் சாகி.தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் அகுதோஷ் சாகி மற்றும் அவரது பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் தொழில் அதிபரின் வக்கீல் சையது உசேன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொழில் அதிபர் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையுண்ட அகுரோஷ்சாகி கடந்த பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
- பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி.
பாட்னா:
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது.
அதை தொடர்ந்து, 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.
ஆனால் நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என கூறினார்.
- பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
- இறந்தோர் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
ரோடாஸ் மாவட்டத்தில் 5 பேர், அவுரங்காபாத், பக்சர் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். அர்வால், கிஷன்கஞ்ச், கைமூர், வைஷாலி, ஷிவன், பாட்னா, அராரியா, ஷரண் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகினர்.
மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- வீடியோ வைரலானதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளனர்.
- வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள நிலையில், சிலர் ரெயில்வே போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.
பீகாரில் கயா மாவட்டத்தில் உள்ள மான்பூர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஒரு இளைஞர் நடைமேடையில் சாகசம் செய்வது போன்ற காட்சிகள் டுவிட்டரில் வைரலாக பரவியது. அதில், ரெயில் நிலைய நடைமேடையில் நடந்து வந்த அந்த வாலிபர் திடீரென இரண்டு, மூன்று முறைகள் துள்ளி குதித்து ஆபத்தான முறையில் சாகசம் செய்வது போன்று காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பான ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் டுவிட்டர் பதிவில், மான்பூர் சந்திப்பில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்கள் பெறுவதற்காகவே இதுபோன்ற வீடியோக்களை பதிவு செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள நிலையில், சிலர் ரெயில்வே போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர். அதே நேரம் சில பயனர்கள் நடைமேடை காலியாக இருப்பதாகவும், அந்த வாலிபரால் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
- மொட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார்.
- மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார்.
பாட்னா:
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள டோபி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.
அப்போது மணமக்கள் மேடைக்கு வந்தனர். விழாவின் போது மணமகன் பாரம்பரிய வழக்கப்படி 'செஹ்ரா' என்ற தலையை மறைக்கும் கவசம் அணிவது வழக்கம். அதன்படி தலைக்கவசம் அணிய முயன்ற போது அவர் விக் வைத்து மறைத்து திருமணம் செய்ய முயன்றது அம்பலமானது.
அதாவது மொட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார். இதை கண்ட மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர்.
அவர்கள் மணமகனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். அப்போது மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார்.
ஆனாலும் மணமகள் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை தாக்கினர். மேலும் அந்த மணமகன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணமகளின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவுகிறது.
- கணவர் வேலைக்கு சென்றதும் இளம்பெண் போன் செய்து கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
- ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பொதுமக்கள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனை சரமாரியாக அடித்தனர்.
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கள்ளகாதலனுடன் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கினார்.
பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்க விரும்பினர்.
கணவர் வேலைக்கு சென்றதும் இளம்பெண் போன் செய்து கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
இந்த நெருக்கமான சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது. இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றதும் இளம்பெண் தனது கள்ளக்காதலனை போன் செய்து வரவழைத்தார்.
அதன்படி தயாராக இருந்த கள்ளக்காதலன் இளம்பெண் வீட்டிற்கு வந்தார். இருவரும் கதவை பூட்டிக்கொண்டு தனி அறையில் உல்லாசமாக இருந்தனர்.
இதனை நோட்டமிட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். கதவை தட்டி இளம்பெண்ணின் பெயரைக் கூறி அழைத்தனர்.
அப்போது அவர்கள் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு கதவை திறந்தனர்.
ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பொதுமக்கள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனை சரமாரியாக அடித்தனர். இதில் அவரது முகம் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார்.
அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருந்ததை கையும் களவுமாக பிடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்டதும் அவர் உறைந்து போய் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் மனைவி கள்ளக்காதலனை அங்குள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்தார்.
இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இளம்பெண் தனது தவறை உணர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார்.
அந்த நேரத்தில் கள்ளக்காதலன் இளம்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்தார்.
நான் வேலைக்கு சென்ற நேரத்தில் என்னை ஏமாற்றி கள்ளகாதலனை சந்திக்க வேண்டாம். உன் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக் கூறி கணவன் ஆசீர்வதித்தார்.
கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்த இளம்பெண் கள்ளக்காதலுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கள்ளக்காதனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- பீகார் தலைநகர் பாட்னாவில் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு குறைந்தது 300 இடங்கள் கிடைக்கும் என்றார்.
பாட்னா:
பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.
அதன்பின், தனக்கே உரிய பாணியில் 53 வயதான ராகுல் காந்தியிடம் நகைச்சுவையாக பேசினார். அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளுமாறு உங்களிடம் (ராகுல்) ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால் என் அறிவுரையை நீங்கள் கேட்பது இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் (சோனியா காந்தி) கவலை அளிக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம். நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்றார்.
லாலு சொன்னதைக் கேட்டு, இதர தலைவர்கள் உரக்கச் சிரித்து மகிழ்ந்தனர். வெட்கம் கலந்த புன்னகையுடன் லாலுவைப் பார்த்த ராகுல் காந்தி, நீங்களே சொல்லிவிட்டதால், அது நடக்கும் என்று கூறினார்.
இந்நிலையில், பாட்னாவில் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யார் பிரதமரானாலும் மனைவி இல்லாமல் இருக்கக் கூடாது. மனைவி இல்லாமல் பிரதமர் இல்லத்தில் தங்குவது தவறு என்றார்.
மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என கேட்டதற்கு, குறைந்தது 300 இடங்களாவது கிடைக்கும் என தெரிவித்தார்.
- மோடி மீது வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.
- பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
பாட்னா :
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன.
இதுதொடர்பாக கடந்த 23-ந்தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். அடுத்தகட்டமாக பெங்களூருவில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றவர்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். பீகாரின் மங்கரில் நடந்த பா.ஜனதாவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஊழலுக்கு எதிராக பீகார் மாநிலம் எப்போதும் குரல் கொடுத்து வருகிறது. ஜூன் 23-ந்தேதி பாட்னாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த ஊழல்வாதிகளுக்கு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
ராகுல் காந்தியை மிகப்பெரும் தலைவராக காட்டுவதற்கு கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. மோடி மீது வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது? என நிதிஷ்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார்.
ஆனால் பீகாருக்காக நிதிஷ்குமார் என்ன செய்தார் என்பதை அவர் வெளியிட வேண்டும். அவர் எப்போதும் தனது கூட்டணி கட்சிகளை மாற்றி வருகிறார். அவர் நம்பகமானவர் அல்ல.
பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மறுபுறம் மருத்துவக்கல்லூரிகள், விரைவுச்சாலைகள், பாலங்கள், புதிய இருப்புப்பாதைகள், மின் திட்டங்கள் என பல உள்கட்டமைப்பு திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
முன்னதாக லகிசராயில் உள்ள மகாதேவர் கோவிலில் அமித்ஷா சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
- துப்பாக்கிகள், கியாஸ் சிலிண்டர்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்
- 20 முதல் 30 கொள்ளையர்கள் பதுங்கி உள்ளதால் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது
பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் இன்று காலை போலீசார் கொள்ளையர்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீசார் சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொள்ளையர்களிடம் இருந்து துப்பாக்கி, கியாஸ் சிலிண்டர், செயல் இழக்காத வெடிகுண்டு, கியாஸ் கட்டர் போன்றவை கைப்பற்றப்பட்டதாக மோடிகாரி எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், ''வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவிற்கு தகவல் அனுப்பியுள்ளோம். இன்னும் பல குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. 25 முதல் 30 கொள்ளையர்கள் அந்தப் பகுதியில் உள்ளனர். அவர்களை தேடிவருகிறோம்.
உயிரிழந்த கொள்ளையர்களின் உடல்கள் உடல்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அவர்களது போட்டோவை அனுப்பி வைத்துள்ளோம். நேபாள எல்லையில் சம்பவம் நடைபெற்றதால் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
- மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும், வெளிப்படையாக பேசியதும் ஆக்கப்பூர்வமான அறிகுறிகள்.
- நாங்கள் எல்லாம் தனித்தனி கட்சிகள். சில பிரச்சினைகளில் சிறிய மனமாச்சர்யங்கள் இருக்கலாம்.
பாட்னா:
கடந்த 23-ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால், வருங்காலத்தில் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்றும் அறிவித்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் அவர் புறக்கணித்தார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, டெல்லியில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாட்னாவில் நடந்த கூட்டம் மூலம் மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதையும், பா.ஜனதாவை தோற்கடிக்க உறுதி பூண்டிருப்பதையும் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் கூட்டாக முடிவு எடுக்க முடியும் என்று காண்பித்துள்ளோம்.
அக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும், வெளிப்படையாக பேசியதும் ஆக்கப்பூர்வமான அறிகுறிகள்.
கூட்டத்துக்கு பிறகு ஆம் ஆத்மி எடுத்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. சொல்லப்போனால், அது நேர்மறையான அறிகுறி. அப்படித்தான் பார்க்க வேண்டும்.
நாங்கள் எல்லாம் தனித்தனி கட்சிகள். சில பிரச்சினைகளில் சிறிய மனமாச்சர்யங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை கடப்போம். ஒன்றாக சேர சம்மதித்துள்ளோம். ஏனென்றால், நாடு சவாலான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது, அரசியல் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும் என்று நம்புகிறோம். அந்த அணியில் இருப்பது பற்றி ஆம் ஆத்மிதான் முடிவு செய்ய வேண்டும்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது ஒரு பிரச்சினை இல்லை. 1990-களில் ஐக்கிய முன்னணி ஆட்சியில் தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை எப்படி தேர்வு செய்தோமோ, அதுபோல் தேர்வு செய்வோம்.
தொகுதி பங்கீடு, வியூகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் விவாதிப்போம்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பா.ஜனதா விரக்தியில் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அக்கட்சிக்கு தெரிந்து விட்டது. எனவேதான், எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஜய் மக்கான், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஆம் ஆத்மியை விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரகடனங்கள், இணக்கத்துக்கான வார்த்தைகளாக தெரியவில்லை. ஒற்றுமையை சீர்குலைத்து, பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் திட்டமிட்ட அணுகுமுறையாக தோன்றுகிறது.
ஊழல் வழக்குகளில் சிறை செல்வதை தவிர்க்கவே அவர் பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். கோவா உள்பட பல மாநிலங்களில் ஊழல் பணத்தில்தான் ஆம் ஆத்மி போட்டியிட்டது. காங்கிரசின் வெற்றிவாய்ப்பை குறைத்து, பா.ஜனதாவுக்கு உதவி செய்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






