என் மலர்tooltip icon

    பீகார்

    • இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வெறும் 400 ரூபாய்க்காக 3 உயிர்கள் பலியானது பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் பதுஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுரகா கிராமத்தில் பால் நிலுவை தொகை ரூ.400 வழங்குவது தொடர்பான தகராறில் 2 பிரிவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. 2 பிரிவினரும் கைகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிகொண்டனர். அப்போது இரு தரப்பினருமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.

    இதில் 50 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தரப்பை சேர்ந்த ஜெய்சிங்(வயது50), சைலேஷ் குமார்(35) ஆகிய 2 பேர், மற்றொரு தரப்பில் பிரதீப்குமார்(35) என 3 பேர் கொல்லப்பட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மின்டு குமார் (22) என்பவர் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெறும் 400 ரூபாய்க்காக 3 உயிர்கள் பலியானது பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாக்மதி நிதியை கடக்கும்போது கவிழ்ந்து விபத்து
    • மீட்புப் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்

    பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் பாக்மதி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுபுர் பாத்தி காட் இடையே, 30 குழந்தைகளை படகு ஒன்று பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் குழந்தைகள் தண்ணீர் தத்தளித்தனர்.

    உடனடியாக மீட்புப்பணி நடைபெற்றது. இதன் பயனாக 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால், 10 குழந்தைகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தத் தகவல் அறிந்ததும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ''மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்யும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
    • பள்ளி மாணவிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

    பீகார் மாநிலத்தின் பாட்னாவை அடுத்த வைஷாலி மாவட்டத்தில் உள்ள மனார் பிளாக்-இல் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து மாணவிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தின் போது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட போது, பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் தங்களை அடித்த காரணத்தால் தான், கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கியதாக பள்ளி மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.

    மதன் சவுக் மற்றும் படேல் சவுக் அருகில் உள்ள மனார் மௌதிநகர் பிரதான சாலையை மாணவிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    பள்ளி மாணவிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது, போராட்டத்தின் போது கல்வித் துறை அதிகாரியின் வாகனம் மாணவிகளால் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் அந்த பகுதியில் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • அன்சுர்குமார் என்பவர் தன்னுடைய சொகுசு காரில் கால்நடைகளுக்கு தீவனங்களை ஏற்றி சென்றுள்ளார்.
    • தீவனங்கள் கீழே விழாமல் இருப்பதற்காக கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளார்.

    சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் உலா வந்தாலும் ஒரு சில வீடியோக்கள் அதிகம் பேரால் பகிரப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் சொகுசு கார் ஒன்றில் கால்நடைகளுக்கு தீவனத்தை ஏற்றி செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.

    இந்த வீடியோ பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த அன்சுர்குமார் என்பவர் தன்னுடைய சொகுசு காரில் கால்நடைகளுக்கு தீவனங்களை ஏற்றி சென்றுள்ளார். காரின் மேல்புறம் அவற்றை ஏற்றிக் கொண்டு, அந்த தீவனங்கள் கீழே விழாமல் இருப்பதற்காக கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளார்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலானதையடுத்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • ரெயிலில் பயணித்த போது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அதனை இணைப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.

    பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் தன்னுடைய ஒரு கை துண்டான நிலையில், அந்த கையை மற்றொரு கையால் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சுமன்குமார் என தெரியவந்தது. அவர் ரெயிலில் பயணித்த போது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அதனை இணைப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.

    உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • கணவர் வீட்டில் இல்லாத சமயம் பெண்ணிடம் ஆனந்த் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
    • வாலிபர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    லக்னோ:

    பீகார் மாநிலம் காதிர்கர் மாவட்டம் காபர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக உரிமையாளரின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவரது மனைவிடம் பேசுவது உண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடிக்கடி அவர் தனது உரிமையாளரின் மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    கணவர் வீட்டில் இல்லாத சமயம் அந்த பெண்ணிடம் ஆனந்த் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அவர் கண்டித்தார். சம்பவத்தன்று உரிமையாளர் வீட்டுக்கு சென்ற அவர் அவரது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். ஆனந்தின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதை கேட்டு அருகில் இருந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்களை பார்த்ததும் ஆனந்த் தப்பி ஓட முயன்றார், ஆனால் அவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர், மேலும் அவரது தலையை மொட்டையடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர், செருப்பு மாலையும் அணிவித்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆனந்தை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    ஆனால் இந்த பாலியல் தொந்தரவு குறித்து போலீசில் யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் அவரை விடுவித்தனர்.

    ஆனந்த் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • ஆன்லைன், டியூசன் மூலம் பாட்னாவில் பிரபலம்
    • ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியதால் வியப்பு

    பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.

    இதனால் பாட்னாவில் பிரபலமான திகழ்ந்து வருகிறார். நேற்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சகோதரிகள் எனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்ட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவிகள், சிறுமிகள் திரண்டு. கான் மணிக்கட்டில் ராக்கி கயிறுகளை கட்டினர். இதனால் அவரது கை முழுவதும் ராக்கி கயிறுகளாக காட்சியளித்தன. சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டியதாக கான் தெரிவித்துள்ளார். மேலும், இது உலக சாதனை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறார்.

    • பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?
    • பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது

    பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ''பீகாரில் சட்டம்- ஒழுங்கு பாகிஸ்தானை விட மோசமாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில் ''பா.ஜனதா தலைவர் பீகாரின் சட்டம்- ஒழுங்கு சூழ்நிலையை எப்படி பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் ஒப்பிட முடியும்?. பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?. அவர்கள் பாகிஸ்தானின் ஏஜென்டா?. பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது என்று நான் சொல்லுவேன்.

    ஜனநாயக பூமியான பீகாரை, ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, அவமதித்து விட்டார்கள். இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்திய தரவரிசை அமைப்புகள் பாராட்டியதை பிரதமர் மோடி சுதந்திர தின விழாவின் போது சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், பா.ஜனதா தலைவர்களுக்கு நான் கண்ணாடியை காட்டுகிறேன்.

    பத்திரிகை சுதந்திரம், உலக மகிழ்ச்சி குறியீடு, உலகளாவிய பசி குறியீடு, உலகளாவிய போட்டித்திறன் குறியீடு போன்றவற்றில் பாகிஸ்தானை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது. மேலும், நீங்கள் சட்டம்- ஒழுங்கு குறித்து பேசுகிறீர்கள். 2021 கால்அப் (Gallup) குறியீட்டின்படி, பாகிஸ்தானை விட இந்தியாவின் நிலை மோசமாக இருந்தது'' என்றார்.

    • செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி.
    • அடுத்த முறை நாமே கொடி ஏற்றுவோம் என லாலு பிரசாத் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சுதந்திர தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். அவரது மனைவி ராப்ரி தேவி உடன் இருந்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், இந்த சுதந்திர தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மவுலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கை மறக்க முடியாது என்றார்.

    அவரிடம், அடுத்த சுதந்திர தினம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வரும் என்பதால் அடுத்த ஆண்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவாரா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு லாலு பிரசாத், இல்லை... பிரதமர் மோடி இந்த தடவை கடைசி முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார். அடுத்த முறை நாங்கள்தான் (எதிர்க்கட்சிகள்) அங்கு கொடி ஏற்றுவோம் என தெரிவித்தார்.

    • சதார் மருத்துவமனையில் சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டிலை பொருத்தியுள்ளனர்.
    • மருந்துகள் பற்றாக்குறையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது.

    பாட்னா:

    பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை அமைந்துள்ளது.

    கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு நோயாளி சுயநினைவற்ற நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார். அப்போது பரிசோதனை முடிந்து நோயாளிக்கு சிறுநீர் பையை பொருத்தும்படி ஊழியர்களுக்கு டாக்டர் அறிவுறுத்தினார்.

    உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் அந்த ஊழியர்கள் சிறுநீர் பைக்கு பதிலாக நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டிலை இணைத்துள்ளனர்.

    நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவமனை மேலாளரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் பலனில்லை. மறுநாள் காலை அவருக்கு சிறுநீர் பை உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.

    பொறுப்பில் இருந்தவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருந்து தட்டுப்பாடு குறித்து தெரிவிக்கப்படவில்லை என மருத்துவமனை அதிகாரி கூறினார். அதன்பின், தேவையான பொருட்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    உபகரணங்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டில் பொருத்தப்பட்டது பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
    • மோடி தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்.

    பாட்னா:

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு மீண்டும் பல்வேறு கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் நேற்று அவரது மூத்த மகனும், பீகார் மந்திரியுமான தேஜ் பிரதாப் யாதவ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அவரிடம், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து லாலுபிரசாத் கூறுகையில், மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு வெளிநாட்டில் குடியேறுவார்.

    அவர் தான் விலகுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இதுவே அவர் பல நாடுகளுக்கு செல்வதற்கு காரணம். அவர் தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த கிண்டல் பேச்சு அங்கு தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • மகள் ரோகினி ஆச்சார்யா தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

    ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது.

    இதன் காரணமாக அவருடைய உள் உறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்டு உள்ளன. சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டது.

    அவருடைய சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாற்று சிறுநீரகம் பொருத்துவதும் இப்போது சரியாக இருக்காது என்றும் கூறினர்.

    பின்னர், மேற்சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற லாலுவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

    அறுவை சிகிச்சை முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில், லாலு பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×