என் மலர்tooltip icon

    சமையல்

    பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து செய்யும் இந்த பரோட்டா மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மூங்தால் பரோட்டா தயார்.

    உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்
    அரிசி - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    இஞ்சி - 1 இன்ச்
    சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

    இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!

    இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    நாண், பரோட்டா, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி அருமையாக இருக்கும் இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பெரிய கத்தரிக்காய் - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    சீரகம் - தாளிக்க
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    காய்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுத்து தோலுரித்து கொள்ளுங்கள்.

    தோலுரித்த கத்தரிக்காயை லேசாக மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, சேர்த்து சுருள வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

    கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம்.

    தனியாக ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கரம் மசாலா பொடி சேர்த்து சப்ஜியின் மேலே கொட்டி கொள்ளுங்கள்.

    காய்ந்த வெந்தயக்கீரை நன்றாக கசக்கி அதன் மேல் தூவி சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக பரிமாறலாம்.

    ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாட்டு காய்கறிகளை வைத்து சுவையான கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பீர்க்கங்காய் - 100 கிராம்,
    புடலங்காய் - 100 கிராம்,
    சுரைக்காய் - 100 கிராம்,
    தேங்காய் துருவல் - 1 கப்,
    நீர் பூசணிக்காய் - 100 கிராம்,
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய்தூள் - தேவையான அளவு,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

    செய்முறை:

    காய்கள் அனைத்தையும் சமமான அளவில் நறுக்கிக்கொள்ளுங்கள்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    அத்துடன் பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பும், மிளகாய்தூளும் சேர்த்து கிளறவும்.

    காய்களில் உள்ள நீர் போதுமானது. தண்ணீர் தனியாக சேர்க்க வேண்டியதில்லை.

    கடைசியாக அரைத்த தேங்காயை சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து வைக்கவும்.

    அடுத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கூட்டில் சேர்த்த பின்னர் இறக்கவும்.

    சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு ரெடி.

    இதையும் படிக்கலாம்...சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ
    குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    வெங்காயம் - 2
    பூண்டு - 1
    காய்ந்த மிளகாய் - 10
    உப்பு கலந்த தண்ணீர் - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    புளித்தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மிக்ஸ்டு ஆயில் - தேவையான அளவு

    செய்முறை

    முட்டையை வேக வைத்துகொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொரித்து கொள்ளவும். (மொறு மொறு என்று பொரிந்திருக்க வேண்டும்)

    அடுத்து பூண்டைபோட்டு அதே போல் பொரித்து கொள்ளவும்.

    அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும்.

    காய்ந்த மிளகாயை கைகளால் நொறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், பூண்டைபோட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு ( காரத்திற்கேற்ப) நொறுக்கிய வறுத்த மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒரு முட்டையை எடுத்து நடுவில் சிறிதளவு கீறிக் அதன் நடுவில் வறுத்த வெங்காய மசாலாவை சிறிதளவு வைத்து மேலே சிறிதளவு உப்பு தண்ணீர், எலுமிச்சை சாறு, புளிக்கரைசல், மிக்ஸ்டு ஆயில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழை வைத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை பேஜோ ரெடி.

    பட்டாணி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
    தேவையான பொருட்கள்

    பட்டாணி - கால் கிலோ
    பச்சை பயிறு - கால் கிலோ
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - அரை கட்டு
    வெங்காயம் - 1
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணி, பச்சை பயிரை 3 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக கழுவி மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பட்டாணி பச்சை பயிறு அடை ரெடி.

    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த முட்டை பிரை. 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 4 பல்
    பெரிய வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து முட்டையை சற்று கீறி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் வேக வைத்த முட்டையை சேர்த்து கிளறவும்.

    மசாலா முட்டையில் நன்றாக பரவியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்,

    சூப்பரான முட்டை பிரை ரெடி.

    எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும். நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
    வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற துணைபுரியும்.

    தேவையான பொருட்கள்
    :

    வெள்ளரி - 1
    எலுமிச்சை பழம் - 2
    தண்ணீர் - 4 டம்ளர்
    புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

    செய்முறை:

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.

    கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும்.

    புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும்.

    சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம்.

    நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
    இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உணவில் வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும்.
    தேவையான பொருட்கள்

    இறால் - 100 கிராம்
    முட்டை - 2
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - அரை ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    மிளகாய் தூள் - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

    இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
    டயட்டில் இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பாலக்கீரை கோதுமை தோசை மிகவும் நல்லது. இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    வெங்காயம் - 2
    இஞ்சி - 1 அங்குல துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரை, வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

    வதக்கிய கீரையை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகமாக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாலக்கீரை கோதுமை தோசை ரெடி.

    இனிப்பு, மசாலா, புளிப்பு என எல்லாம் கலந்தது தான் சாட் ரெசிபி. இன்று 10 நிமிடத்தில் சமோசாவை கொண்டு எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    சமோசா - 2
    அப்பளம் - 6
    தயிர் - 3 மேஜைக்கரண்டி
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    புதினா சட்னி - 2 தேக்கரண்டி
    புளி சட்னி - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    ஓமப் பொடி - 1 கப்
    உப்பு - சுவைக்க

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.

    அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.

    தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

    நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.

    அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.

    பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.

    அதன் மேல் ஓமப் பொடியை தூவவும்.

    இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

    சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
    அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
    தேவையான பொருட்கள்:

    அகத்திக்கீரை - அரை கட்டு,
    தக்காளி - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய்ப்பால் - 200 கிராம்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    அரிசி கழுவின நீர் - 200 மில்லி,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    அகத்திக்கீரையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

    பின்னர் அகத்திக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கீரை வெந்தபின் அரிசி கழுவின நீர்விட்டு ஒரு கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.

    சூப்பரான சத்தான அகத்திக் கீரை தேங்காய் பால் சூப் ரெடி.

    ×