என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
    • உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும்.

    மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்பது தமிழில் 'வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்று அழைக்கப்படு கிறது. இதற்கு சிண்ட்ரோம் எக்ஸ், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சிண்ட்ரோம், டிஸ்மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.

    வளர்சிதை மாற்றம் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டசத்துக்களை உறிஞ்சி, அதனை ஆற்றலாக மாற்றி உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.


    இந்தியாவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர் வளர்சிதை மாற்ற நோய் பிரச்சினையால் (குறிப்பாக இளம் வயதினர்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நோய் கீழ்குறிப்பிட்டுள்ள ஐந்து நிலைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

    உடல் பருமன் (குறிப்பாக தொப்பையை சுற்றிகொழுப்பு படிதல்), உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக டிரைகிளசரைடு அளவு, இன்சுலின் எதிர்மறை நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, ரத்தத்தில் குறைவான அளவு நல்ல கொலஸ்ட்ரால்(எச்.டி.எல்).

    வளர்சிதை மாற்ற நோய்க்குறி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் பிளேக் படிதலை உண்டாக்கி பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படக்கூடிய அபாயத்தை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வளர்சிதை மாற்ற நோய்க்குறி மீள்மாற்றம் சாத்தியம் உள்ள ஒரு நிலையாகும். இந்நோய்க்குறி வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், புரதங்கள் நிறைந்த கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை அதிகம் உண வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


    எண்ணெய்யில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை குளிர் பானங்கள், பேஸ்ட்ரி, சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். குறிப்பாக இடுப்பின் சுற்றளவை ஆண்கள் 94 சென்டிமீட்டருக்கு மிகாமலும், பெண்கள் 80 சென்டி மீட்டருக்கு மிகாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.

    யோகா, சுவாசப்பயிற்சி, தியானம் போன்றவையும் நல்ல பலனளிக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ், டிரைகிளசரைடு மற்றும் எச்.டி.எல் அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

    • ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும்.
    • 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.

    ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் முழுமையாக வாழ விரும்புகிறான். ஆனால் பலர் பல்வேறு நோய்களால் 70 வயதிற்கு முன்பே இறக்கின்றனர். சுகாதார அமைப்பான லான்செட் கமிஷன் தனது உலக சுகாதாரம்-2050 அறிக்கையில், தற்போதைய அகால மரணங்களின் எண்ணிக்கையை 2050-ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க முடியும் என்று வெளிப்படுத்தியுள்ளது.

    இது சாத்தியமாக, அந்தந்த நாடுகள் சுகாதாரப் பராமரிப்புக்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

    அனைவரையும் சுகாதார விழிப்புணர்வுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல முறையான மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அகால மரணங்களைக் கணிசமாகக் குறைக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.


    2001 முதல் 2018 வரை இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள் அகால மரணமடைந்துள்ளனர். இந்த இறப்புகளுக்கு 4 தொற்றா நோய்கள் முக்கிய காரணமாகும்.

    அதிக எண்ணிக்கை யிலான இறப்புகள் இதய நோய் (58.3 சதவீதம்), புற்றுநோய் (18.6 சதவீதம்), நாள்பட்ட சுவாச நோய்கள் (15.5 சதவீதம்) மற்றும் நீரிழிவு நோய் (5.6 சதவீதம்) ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன.

    காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் காரணங்களாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இவற்றுடன் சாலை விபத்துகளும் நாட்டில் அகால மரணங்களுக்கு வழிவகுக்கும். தற்கொலைகளும் அதிக அளவில் உள்ளன.

    எச்.ஐ.வி., காசநோய் நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் சாலை விபத்துகள் கடுமையான சுவாச நோய்கள் மற்றும் குழந்தை இறப்பு போன்ற 15 காரணிகள் சராசரி ஆயுட்காலத்தைக் குறைக்கின்றன.

    8 வகையான தொற்றுகள் தாய்வழி சிக்கல்கள் மற்றும் 7 தொற்றாத நோய்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக நிதி செலவிடப்பட வேண்டும்.

    புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்களை விட்டுவிடுங்கள்.

    நீங்கள் ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும். உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் மன அழுத்தத்தைக் குறைக்கவும். குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.


    கார்போஹைட்ரே ட்டுகள் அதிகமாகவும் புரதம் அதிகமாகவும் உள்ள உணவை உண்ணுங்கள் பருவகால பழங்கள். கீரைகள் மற்றும் காய்கறிகள் உணவில் அதிகமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்

    பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வைட்டமின் ‘ஏ’ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
    • சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும்.

    சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழல்கள், சிறுநீர்ப்பை இவைகளில் தாதுக்கள், உப்புக்கள் போன்றவை படிந்து கடினமாக உருவாவதைத் தான் பொதுவாக சிறுநீரகக் கற்கள் என்கின்றோம்.

    சிறுநீரக கற்கள் கீழ்க்கண்ட வகைப்படும், அவை: 1. கால்சியம் ஆக்சலேட் வகைக் கற்கள், 2. யூரிக் அமிலக் கற்கள், 3. ஸ்டுரைட் கற்கள், 4. கால்சியம் பாஸ்பேட் வகைக்கற்கள், 5. சிஸ்டீன் கற்கள், 6. ஷேந்தீன் கற்கள்.


    நோயின் அறிகுறிகள்

    கடுமையான முதுகு வலி மற்றும் விலாப்பக்கம் வலி பரவுதல், அடி வயிற்றில் இருந்து வலி பரவி, அடித்தொடை பகுதி வரை காணப்படல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல், வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு, வலியானது அலை அலையாக முதுகு, விலா, அடிவயிறு போன்ற இடங்களில் பரவுதல் மற்றும் சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறுதல்.


    தடுப்புமுறைகள்

    விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும் பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம், வைட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.


    இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இவைகளின் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.

    வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, பீன்ஸ் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்லி தண்ணீர் காலை, இரவு வேளைகளில் குடிப்பது நல்லது. தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

    • ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும்.
    • அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.

    உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

    உலக ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் இன்று (ஏப்ரல் 2) கடைபிடிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல், ஐ.நா. சபை ஏப்ரல் 2 -ந் தேதியை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தபோது இருந்ததை விட தற்போது ஆட்டிசம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிக புரிதல் ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்திரியாவை சேர்த்த லியோ கன்னர் என்பவர்தான் முதன் முதலாக ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளை பற்றி கூறியிருந்தார்.

    ஆட்டிசம் (Autism spectrum disorder) என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும். மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்றும் கூறலாம்.

    இது ஒரு மூளை நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடாக இருந்தாலும், மனஅளவில் பல சிக்கல்களால் இக்குழந்தைகள் இடர்படுகிறார்கள். உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது.

    இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் முதல் கலைஞர்கள் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் பலருக்கும் ஆட்டிசம் குறைபாடு இருந்துள்ளது.

     ஆட்டிசம் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் என்ன?

    குழந்தை பிறந்து மூன்று வயது நிறைவடைவதற்கு முன் இக்குறைபாடு ஏற்படும். இக்குறைபாடுடையக் குழந்தைகளின் உடலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. அவர்களின் நடத்தையிலேயே குறைபாடுகள் காணப்படும்.

    இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பேசும் மற்றும் பழகும் திறனில் வேறுபாடு இருக்கும். ஒரே மாதிரியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

    தனது உணவுர்களை அழுகை, முனுமுனுத்தல், கூக்குரல்கள் மூலம் வெளிப்படுத்துதல் வாய்மொழியற்ற பிற உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துதல், இயந்திரக் குரலில் பேசுதல், சமூக தொடர்புகளில் பிரச்சினை மற்றும் மொழித் தொடர்பில் பிரச்சினை, கண்களைப் பார்த்து பேச முடியாதது போன்றவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகள்.

    இதைதவிர்த்து ஆட்டிசத்தைக் கண்டறிய இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் ஏதும் இல்லை. பெற்றோர், ஆசிரியர், உறவினர், குழந்தைகள் நலமருத்துவர், மூளை நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர் போன்றவர்களே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல முடியும். நரம்பியல் தொடர்பான ஆட்டிசக் குறைபாடுகளை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் என்ன குறைபாட்டினால் ஆட்டிசம் ஏற்பட்டது என்பதைக் கண்டறியலாம்.

    இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள்.

    ஆட்டிசம் குறைபாடு ஏற்பட காரணங்கள் என்ன?

    ஆட்டிசம் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கிடையாது. மரபு ரீதியாக வரலாம். மதுப்பழக்கம், கருவில் குழந்தையை சுமக்கும்போது ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.

    கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.

    அதேபோல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்து கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆட்டிசம் குறைபாட்டுக்கான தீர்வு என்ன?

    ஆட்டிசம் ஒரு நோய் அல்ல என்பதால் அதற்கான முழுமையான குணப்படுத்தும் முறை கிடையாது. மாறாக பயிற்சிகள் மற்றும் அதிக கவனம் செலுத்தி வளர்ப்பதே ஆட்டிசத்தின் பின்விளைவுகளை குறைப்பதற்கான வழிமுறைகள்

    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன இறுக்கத்தை புரிந்து கொண்டு அவர்களை பராமரிப்பு செய்வது நமது கடமை. சமூகத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் சமூக அழுத்தங்களை பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகள் மேல் கவனம் செலுத்துதல் வேண்டும்.

    ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் குறைபாட்டின் விரைவுத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனவே, அவர்களுக்கு உள்ள குறைபாடு என்ன? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

    அவர்களின் அதிகப்படியான துறுதுறுப்புத் தன்மையைக் குறைப்பதற்கான மாத்திரைகள் உள்ளன. அதேபோல் அவர்களுக்கென்று சில பயிற்சி முறைகளும் உள்ளன.

    பயிற்சி முறைகள்:

    ஆக்குபேஷனல் தெரபி: பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். இவைகளைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மற்றவர்களைப் போல் தாமாக இயங்க முடியும்.

    பேச்சுப் பயிற்சி: மொழி மற்றும் பேச்சுப் பயிற்சிகளைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையவே பேச வேண்டும்.

    ஆட்டிசத்தில் பேச்சுப் பயிற்சியாளின் பங்கு: பயிற்சியின் மூலம் தொடர்புத் திறனை மேம்படுத்துதல், சரளமாக தடையின்றி பேச பயிற்சி அளித்தல், ஒரு வார்த்தை பேசுவதற்கு நாக்கு, மேல்வாய், தாடை மற்றும் உதடுக்கான தொடர்புகளை புரிய வைத்தல் (Aritculaction Skills), உடல் மொழியையும் முக பாவனையும் மேம்படுத்துதல், செய்யும் வேலைகளை குவிந்த கவனத்துடன் செய்யவைப்பது, சமூக தொடர்புகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.

    உளவியல் சார்ந்த பயிற்சிகள்: குழந்தைகளுக்கு உடலளவில் மட்டுமல்லாமல், மனத்தளவிலும் நெகிழ்வுத்தன்மை, மற்றவர்களோடு பழகும்முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

    கல்விக்கான பயிற்சிகள்: ஐ.ஈ.பி முறை ஆட்டிசக் குழந்தைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட, பலவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொடுப்பதே ஐ.ஈ.பி ஆகும். இதற்கென்று சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சேர்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

    பெற்றோரின் பங்கு 

    ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறுவிதமான சவால்களைச் சந்திக்கிறது என்பதால், பெற்றோரும் நிபுணர்களும் சேர்ந்து விவாதித்து, அந்தக் குழந்தைக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானிக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.

    இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒரு குழந்தைக்கு நல்ல பலனைத் தரும் ஒரு சிகிச்சை இன்னொரு குழந்தைக்குப் பலன் தராமல் இருக்கலாம், இதற்குக் காரணம் ஆட்டிசம் வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.

    பள்ளியோ, பயிற்சி வகுப்புகளோ குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையாகக் கற்றுக் கொடுத்துவிட முடியாது. பெற்றோரின் பங்கே முதன்மையானது என்பதை, ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் உணரவேண்டும்.

    என்னதான் ஆட்டிசத்திற்கு என்று மாத்திரைகள் பல இருந்தாலும் அன்பும், அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான், அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள்.

    எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளை ஆட்டிசக் குழந்தைகளுக்கு அளிக்கும்போது அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவதுடன், தத்தம் வேலைகளைத் தாமே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்கிறது.

    • எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
    • நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.

    அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட் சாப்பிடுவார்கள். பரவாயில்லை. ஆனால் சிலபேர் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையே காலி பண்ணிவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு.


    பிஸ்கெட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அநேகமாக எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.

    உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும். தினமும் தொடர்ந்து பிஸ்கெட் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும். நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.

    பிஸ்கெட்டில் அதிக கலோரி இருப்பதால் தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை கூட்டிவிடும். பிஸ்கெட்டில் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்று சொல்லக்கூடிய மாறுபட்ட கொழுப்பு இருக்கும். இந்த மாறுபட்ட கொழுப்பு தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகமாக்கியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தும்விடும்.


    அதிக கலோரி, அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்பு, அதிக அளவில் சோடியம் உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை இருப்பதால் அன்றாடம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன், அஜீரணம், மந்தம், மலச்சிக்கல், சில சமயங்களில் இதயக் கோளாறைக் கூட உண்டுபண்ணிவிடும்.

    வைட்டமின் சத்து இல்லாத, சத்துப் பொருட்கள் இல்லாத, நார்ச்சத்து இல்லாத சில பிஸ்கெட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் சில அழகழகான, கவர்ச்சியான, ருசியான பிஸ்கெட்டுகளை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?

    அனைத்து உலக மக்களும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவாகிய பிஸ்கெட்டை எப்பொழுதாவது சாப்பிடுங்கள். வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். இரவு நேரங்களில் பசிக்கும் போதும் சரி, ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்ட போதும் சரி பயணங்களின் போதும் சரி சாப்பிட உணவே கிடைக்காத இடத்தில் சிக்கி அவஸ்தைப்படும்போதும் சரி பிஸ்கெட் மாதிரி ஒரு சிறப்பான உணவு வேறெதுவும் இல்லை.

    • பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
    • தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.

    பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.


    பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.


    சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:

    உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.

    பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.

    வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


    பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

    தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

    கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

    • உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.
    • ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.

    கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கோடை வெயிலில் அலைந்தால் சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.

    அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீர்ப் பையில் சேருகின்றன. அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீர்ப்பாதை என அழைக்கிறோம்.

    இதில் ஏதேனும் கிருமித்தொற்று ஏற்படும்போது சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.

    இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கோடைக் காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிடில் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    சமீப காலமாக அத்தகைய பிரச்சனைகள் பலருக்கு ஏற்படுகிறது. அதிலும், பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.

    இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை சாறை அருந்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும்.
    • மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    டிஜிட்டல் யுகத்தில் கண் கண்ணாடி, அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை... எல்லோரும் கண் கண்ணாடிகளை உபயோகித்து வரும் நிலையில், அதை பராமரிக்க சில யோசனைகள்...

    * மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும். அது முடியாவிடில் கண்ணாடி பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.

    * மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பில் இணையும் இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒரு கையால் கழற்றும்போது மெல்லிய கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும், உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.

    * மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தும் முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

    * மூக்குக் கண்ணாடிகளை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இணைப்புகள் தளர்ந்துவிடாமல் முகத்தில் சரியாக பொருந்தும்படி செய்து உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒருவரது மூக்குக் கண்ணாடியை மற்றவர் உபயோகப்படுத்தக் கூடாது. இதனால் அளவுகள் மாறி உரியவர் அணியும்போது பொருந்தாமல் அசவுகரியம் ஏற்படுத்தும்.

    • நடனம் உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் சமநிலையையும் பராமரிக்கிறது.
    • மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

    நடனம்...வேகமாக மாறும் முகபாவனைகள் இசைக்கு ஏற்ப கால்கள் மற்றும் கைகளின் தாள அசைவுகளால் கவரப்படுகிறது.

    எந்த வகையான நடனமும் ஒரு அற்புதமான கலை. இது உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் சமநிலையையும் பராமரிக்கிறது.

    இருப்பினும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைப் போக்க நடனம் ஒரு மருந்தாக செயல்பட முடியும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது மன வலிமையை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


    ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மன அழுத்தத்தில் நடனத்தின் விளைவைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். நடனம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக்கு இடையிலான உறவு ஆராயப்பட்டது.

    நடனத்தால் உளவியல் ரீதியான நன்மைகள் உள்ளன. மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும். நடனக் கலைஞர்களில் உணர்ச்சி வெளிப்பாடு மேம்படுகிறது.

    நடனம் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற ஹார்மோன்களை வெளியிட உதவுகின்றன.

    இசையுடன் இசைந்து நிகழ்த்தப்படும் நடன அசைவுகள் மன அழுத்தம், பயம் சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கின்றன. கார்டிசோல் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

    உடலின் இயற்கையான மன அழுத்த நிவாரண வழிமுறைகளை திறம்பட பயன்படுத்துவதற்கு நடனம் ஒரு அற்புதமான கருவியாகும்.

    தினசரி மன அழுத்தங்களை திறம்பட சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. வழக்கமான பயிற்சிகளைப் போல் இல்லாமல் நடனம் இசை மற்றும் தாளத்தை உள்ளடக்கியது.

    நடனத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் படிகள் அடிக்கடி மாறுகின்றன. இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு தகுந்த முறையில் மாற்ற வேண்டும்.


    இந்த பயிற்சி மூளைக்கு ஒரு வகையான உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தச் சூழலில்தான் சமூக சுகாதாரத் திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

    திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.நடனமாடும்போது செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

    நடனம் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் ஈடுபடுத்துகிறது. நம் உடல்களை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது.
    • கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

    கோடைவெயிலில் இருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பங்கூழை அருந்தலாம். கம்பங்கூழ் என்பது நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவே உள்ளது.

    கம்பு, கேப்பை உள்ளிட்ட தானிய வகைகளை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக கூழ் கஞ்சி போல செய்து தங்களின் பிரதான உணவாகவே சாப்பிட்டு வந்தனர்.


    20 வருடங்களுக்கு முன்பு தினசரி தமிழகத்தில் உள்ள அனைவரது வீட்டிலும் இந்த கம்பங்கூழை சாதாரணமாக தயாரித்து சாப்பிட்டு வந்தனர். இன்னும் அம்மன் கோவில் திருவிழாக்களில் திருவிழா நிறைவு பெறும் நாளிலும், ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் கம்பங்கூழ், கேப்பைகூழை அம்மனுக்கு பிரசாதமாக படைத்து ஊர் மக்களுக்கு அதனை பருகி வருகின்றனர்.

    இந்த கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது. சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது. இந்த கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது வழக்கம்.

    மிக முக்கியமாக உடல் சூட்டின் காரணமாக இளம் வயது வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கான பாரம்பரியமான அற்புத பானம் தான் இந்த கம்பங்கூழ். இது எங்கு கிடைத்தாலும் நாம் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஆரோக்கியமானது இது.

    உடல் சூட்டை தணிப்பதாக நினைத்து சாலையோரங்களில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதே சாலையோரங்களில் விற்கப்படும் பாரம்பரிய உணவான கம்பங்கூழ் வாங்கி சாப்பிட்டால் நமது உடல் சூடு முழுவதுமாக குறையும்.

    பாரம்பரிய தானிய வகைகளில் ஒன்றான கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

    கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். கம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவைகள் நிறைந்துள்ளது.

    வைட்டமின் ஈ, பி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிம சக்திகள் பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை கம்பில் நிறைந்துள்ளது.

    தினமும் காலை மோர் கலந்த குளிர்ச்சியான கம்பங்கூழ் குடிக்கும்போது உடல் சூடு குறைந்து நாள் முழுவதும் பசி உணர்வு இல்லாமல் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். கம்பங்கூழ் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.

    கம்பை தினமும் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல், ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினையையும் இது போக்க உதவுகிறது.

    கம்பங்கூழில் உள்ள ட்ரிப்டோ பேன் என்ற அமினோ அமிலம் நம் பசி உணர்வை குறைத்து உடல் எடையை நிர்வகிக்க உதவும். கம்பங்கூழை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.

    இதேபோல கோடைவெயில் காலத்தை பொருத்தவரை தாகம் தணிப்பதில் தர்பூசணி முக்கிய இடத்தை பெறுகிறது. விலையும் மலிவு என்பதால் சாலையோர தர்பூசணி கடைகளில் விற்பனை தற்போது களைகட்டி வருகிறது.


    அங்கு தற்போது ஒரு பிளேட் அல்லது ஒரு சிறு துண்டு தர்பூசணி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு பழமாக வாங்கினால் கிலோ ரூ.25-க்கு தருகின்றனர்.

    மேலும் சாலையோர பகுதிகளில் கரும்பு மற்றும் சாத்துக்குடி சாறு பிழியும் விற்பனை கடைகளையும் அதிகளவில் பார்க்க முடிகிறது. அங்கு இளைஞர்களில் பலர் ஐஸ் கட்டி போட்ட கரும்பு ஜூஸை அதிகம் விரும்பி பருகுகின்றனர். பெண்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜூஸை விரும்பி குடித்து செல்கின்றனர்.

    அதுவும்தவிர சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் நன்னாரி சர்பத், ஐஸ் மோரின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


    நன்னாரி சர்பத்தின் சுவை பலருக்கும் பிடிக்கும் என்பதால், மதிய நேரங்களில் தள்ளு வண்டி குளிர்பான சர்பத் கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.

    அதே போல நீர்மோர் விற்பனையும் களைகட்டத் தொடங்கி உள்ளது. அங்கு ஒரு டம்ளர் சர்பத் ரூ.25-க்கும், மோர் ரூ.20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாலையோர கடைகளில் இளநீர் எல்லா நாட்களில் கிடைக்கிறது.

    ஆனால் பதநீரும், நுங்கும் கோடை சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் பதனீர் கடைகளை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்தி விட்டு பதனீர் குடித்து செல்கின்றனர். அங்கு ஒரு டம்ளர் பதநீர் ரூ.30-க்கும், நுங்கு கலந்த பதநீர் ரூ.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.
    • வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ குடிப்பது உற்சாகமாக உணர வைக்கிறது. உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்க பலர் டீ அருந்துகிறார்கள். அவர்கள் பலமுறை டீ பருகுவதை ரசிக்கிறார்கள்.

    ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகமாக டீ, காபி குடித்தால் பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.

    ஒரு நாளைக்கு 2-3 கப் டீ, காபி (200-300 மிலி) குடிப்பது பாதுகாப்பானது. ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த அளவை பரிந்துரைக்கிறது.

    தேசிய சுகாதார நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4-5 கப், 400 மி.கி.க்கு மேல் டீ உட்கொண்டால் தூக்கத்தைக் கெடுக்கும் என்று கூறுகிறது. அதிகப்படியான டீ பதட்டத்தை அதிகரிக்கும்.



    வெறும் வயிற்றில் அதிகமாக டீ குடிப்பது வாயு மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

    டீ, காபியில் உள்ள டானின்கள் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு 5 கப் அளவுக்கு மேல் குடிப்பது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

    அதிகப்படியான டீ உட்கொள்வது ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தும். அமெரிக்க இதய சங்கம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    உணவுக்கு பிறகு டீ, காபி குடிக்கவும், ஒரு நாளைக்கு 3 கப் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது அதிகமாக இருந்தால், மூலிகை டீக்களுக்கு மாறுங்கள். இது ஆரோக்கியத்தை பேணுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர். 

    • டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
    • மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது.

    அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


    குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

    அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    ×