என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது.
    தட்ப வெப்ப மாற்ற நிலை காரணமாக இந்தியா முழுவதும் தற்போது பலவித வைரஸ் கிருமிகள் பெருக்கம் ஏற்பட்டு ஒருவித காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பனிக்காலம் முடிந்தாலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதும் தற்போது பரவும் காய்ச்சலுக்கு ஒரு காரணம். இந்தக்காய்ச்சல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் அதிகம் பாதித்து உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் சிவப்பாக மாறி எரிச்சலை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகளுக்கு தொண்டைவலியும், உடல் வலியும் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கண் டாக்டரை சந்தித்து நோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக்காய்ச்சல் ஒரு வாரம் வரை இருக்கும். கண்ணுக்கு பாதிப்பு இருந்தாலும் பெரிய அளவில் இருக்காது. குழந்தைகளுக்கு கண்வலியுடன் இருமலும், சளியும் இருக்கும். இதனால் பெற்றோர்கள் தாமதிக்காமல் குழந்தைகள் டாக்டர் மற்றும் கண் டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பக்கூடாது. பள்ளி சென்று திரும்பியவுடன் குழந்தைகளை சுத்தப்படுத்தி தூய்மையான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

    இன்றைய காலக்கட்டத்தில் தொழிற்நுட்ப வளர்ச்சியில் செல்போன் சிறந்த கண்டுபிடிப்பாகும். இருப்பினும் இதில் சாதக பாதகங்களும் உள்ளன. செல்போனில் ’புளூலைட்’ உள்ளது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது புளுலைட் கண்களை பாதிக்கும். ஓய்வே இல்லாமல் செல்போனை பயன் படுத்துவதால் பார்வைக்கோளாறு, தலைவலி, மந்தமான பார்வை, ஒளியைக்காணும் போது கண்ணில் ஏற்படும் கூச்சம், கண்கள் சிகப்பு ஏற்படுதல் போன்றவை அடிக்கடி ஏற்படும்.

    கண்வலி, நிறங்கள் மங்கலாக தெரிதல். கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை கண்களுக்குண்டான பிரச்சினைகளை உறுதிப்படுத்தும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும் கண்ணின் பின்புறம் உள்ள விழித்திரையில் குவிகிறது. நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் போது கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செல்போனை இருளில் உபயோகிக்கக்கூடாது. வெளிச்சத்தில் தான் பயன்படுத்த வேண்டும். செல்போனை கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கக்கூடாது. தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் கண்ணீர் வரும்.

    ஸ்மார்ட்போனை தூரத்தில் வைத்து தான் பார்க்க வேண்டும். இருளில் பார்த்தால் கண் அழுத்தம், தலைவலி ,கழுத்துவலி ஏற்படும். ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப செல்போனை அதிகமாக பயன் படுத்தினால் அதனால் பல்வேறு பிரச்சினைகளை குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    முன்பெல்லம் வீட்டில் குழந்தைகள் அழுதால் பெண்கள் தாலாட்டுப்பாடல்கள் பாடி சமாதானப்படுத்துவார்கள். தற்போதுள்ள கம்ப்யூட்டர் உலகில் குழந்தைகள் கையில் செல்போனில் தாலாட்டுப்பாடல். அல்லது கார்ட்டூன்களை போட்டு கொடுத்து விடுகிறோம். குழந்தைகளும் அழுகையை நிறுத்திவிட்டு செல்போனை கூர்ந்து கவனிக்கின்றன. இதில் இன்னொரு பிரச்சினையும் இருப்பதை மறந்து விடக்கூடாது.குழந்தைகளுக்கு மண்டை ஓடு மெலிதாக இருக்கும். செல்போனை குழந்தைகள் பார்க்கும் போது செல்போனின் கதிர்வீச்சு மூளையைதாக்கும் அபாய நிலை உள்ளது. சில சமயம் மூளையில் கட்டிக்கூட ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியம் கருதி அவர்களிடம் பெற்றோர்கள் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    டாக்டர் விஜய் சங்கர்
    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களையே யோசிக்குமாறு செய்ய வேண்டும்.
    குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோருக்கிடையே தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் குழந்தை யாரையும் சாராமல் தனித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக இருக்கும்.

    குழந்தைகள் 3 வயதிலிருந்தே தங்களை சுற்றி நடக்கும் செயல்களை எளிதாக கிரகிக்க ஆரம்பிப்பார்கள். இந்த வயதிலிருந்தே அவர்களை சுயமாக செயல்பட அனுமதிக்கவும், கற்றுத்தரவும் வேண்டும். இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகள் தனித்து செயல்படுவதற்கு முடிவு எடுக்கும் திறன் அவசியமானது. உடைகள் விளையாட்டு பொருட்கள் உணவு போன்றவற்றை தேர்வு செய்யும் போது அவர்களின் விருப்பத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அவர்களின் தேர்வு தவறாக இருக்கும் போது அதைப்பற்றி மென்மையாக எடுத்துக்கூறிபுரிய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

    தனித்து செயல்படும் போது குழந்தைகளின் தைரியத்தை பாராட்டவேண்டும். அவர்கள் எந்த செயலில் ஈடுட்டாலும் அதன் முடிவை பற்றி கவலைப்படாமல் அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். முடிவு தோல்வியாக இருந்தாலும் அடுத்த முறை அந்த செயலை சரியாக செய்யும் படி உற்சாகம் அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களையே யோசிக்குமாறு செய்ய வேண்டும். அவர்களால் அந்த சிக்கலை சமாளிக்க முடியாத சமயங்களில் மறைமுகமாக உதவ வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையை தூண்ட முடியும்.

    வீட்டு வேலைகளிலும் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் குடும்ப பொறுப்பை அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பிட்ட வேலையை செய்யும் போது அதை முடிப்பதற்கான நேரத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நேரத்திற்குள் வேலையை கண்டிப்பாக முடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் நேர மேலாண்மையை கற்றுகொள்வார்கள்.

    உங்கள் கருத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளுஙகள். இதற்காக தினமும் சிறிது நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் நேரத்தை கருத்துகளை பரிமாறுவதற்கான நேரமாக மாற்றலாம். அதே சமயம் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு தகுந்த நேரங்களில் உதவுவது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை அந்த செயலை அவர்களே முயன்று முடிக்குமாறு செய்ய வேண்டும். இதன்மூலம் மற்றவர்களை சார்ந்திருக்கும் எண்ணம் உருவாகாமல் தானாகவே எந்தவொரு செயலையும் நிறைவேற்றும் வகையில் அவர்களின் மூளை வேகமாக செயல்படும்.
    கிரீன் டீ பருகியவுடன் அதிக உற்சாகத்தை பெற்றுவிட்டு, சில நிமிடங்களிலேயே சோர்வடைந்துவிட்டால் அதனை பருகுவதை தவிர்த்துவிட வேண்டும்.
    கிரீன் டீ மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதால் அனைத்து தரப்பினரும் அதனை பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும் குழந்தைகள் கிரீன் டீ பருகலாமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

    ‘‘கிரீன் டீ இளம் வயதிலிருந்தே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது, இது ஆரோக்கியமானது. மேலும் நிறைய ஊட்டச்சத்து குணங்களை கொண்டுள்ளது. இருப்பினும் தேநீரில் உள்ள காபினின் செயல்பாட்டை பொறுத்தே குழந்தைகளை கிரீன் டீ பருக அனுமதிக்க வேண்டும்.

    குறிப்பாக கிரீன் டீ பருகியவுடன் அதிக உற்சாகத்தை பெற்றுவிட்டு, சில நிமிடங்களிலேயே சோர்வடைந்துவிட்டால் அதனை பருகுவதை தவிர்த்துவிட வேண்டும். மேலும் தூக்கமின்மை, கவனமின்மை, கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கிரீன் டீயை குழந்தைகளுக்கு பருகக் கொடுக்கக்கூடாது. இத்தகைய பாதிப்புகள் ஏதும் இல்லாவிட்டால் சிறிதளவு பருகக்கொடுக்கலாம். எனினும் மருத்துவ ஆலோசனை பெற்று பருகுவதுதான் சிறந்தது’’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

    கிரீன் டீயின் பொதுவான நன்மைகள்:

    வாய் ஆரோக்கியம்: கிரீன் டீ பல் சிதைவைத் தடுக்க உதவுகிறது. அதிலிருக்கும் கேடசின்கள், துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் சல்பர் மூலக்கூறுகளுக்கு எதிராக செயல்பட்டு வாய் சுகாதாரத்தை பேண உதவும்.

    காய்ச்சல்: கிரீன் டீயில் ஆன்டிவைரல் போன்ற ஏஜெண்டுகள் உள்ளன. இவை காய்ச்சல் மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்கும். இருப்பினும் குழந்தைகள் ஒரு கப் போதுமானது.

    எலும்பு அடர்த்தி: கிரீன் டீ எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவும். கிரீன் டீயை தவறாமல் உட்கொள்வது எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கவும் உதவும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    குழந்தைகளுக்கு கிரீன் டீ தரும் பக்கவிளைவுகள்:

    கிரீன் டீயில் காபின் மற்றும் சர்க்கரை இருப்பதால் தூக்க சுழற்சியை பாதிக்கும். மேலும் காபின் குழந்தையின் உடல் செயல்பாடுகளையும் பாதிக்கலாம். ரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது. கிரீன் டீயில் டானின் உள்ளது. இது இரும்புச்சத்து நிறைந்த மூலங்களிலிருந்து இரும்பை உறிஞ்சும். அதனால் உடலின் சக்தியை குறைக்கும். குழந்தைகளின் உடலில் இருந்து இரும்பு அதிகம் உறிஞ்சப்படும்போது பாதிப்பு அதிகரிக்கும். அதனால் கிரீன் டீயை அதிகம் பருகுவது நல்லதல்ல. குழந்தைகள் வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு நாளைக்கு 400 மில்லி கிராமுக்கு அதிகமாகவோ கிரீன் டீ பருகுவது வாந்திக்கு வழிவகுக்கும். பாலிபினால்கள் எனப்படும் டானின்கள் வயிற்றில் அமிலம் அதிகரிக்க வழிவகுக்கும். அதன் காரணமாக வயிற்று வலி, குமட்டல், எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
    திரவ உணவுகளை மட்டுமே உண்ணும் பச்சிளம் குழந்தைகளுக்கு, தூளி அளிக்கும் சீரான, மெல்லிய அழுத்தத்துடன் கூடிய கதகதப்பான உடல் சமநிலை, உணவு செரித்தலுக்கு ஏற்றதாக இருக்கும்.
    குழந்தையை 10 மாதங்கள் கருவில் சுமந்து பெற்ற அன்னைக்கும், குழந்தைக்கும் உள்ள தொடர்பு அறிவியலுக்கும் எட்டாதது. உணர்வுப்பூர்வமான அந்த தொடர்பு, அம்மா உபயோகப்படுத்திய பழைய பருத்தி சேலையில் கட்டப்பட்ட தூளியில் குழந்தை உறங்கும்போது உறுதிப்படுத்தப்படுகிறது.

    குழந்தையின் முதல் உறவான அம்மாவின் வாசனையுடன் அந்த குழந்தை தூளியில் உறங்குவதால், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை அது அடைவதில்லை.

    தூளி, பிஞ்சு குழந்தையின் மென்மையான எலும்புகளுக்கு மெல்லிய அழுத்தத்தை அளிப்பதுடன், சீரான உடல் வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைகிறது. அதனால் உடலில் வலி ஏற்படாமல் குழந்தை உறங்கும்.

    திரவ உணவுகளை மட்டுமே உண்ணும் பச்சிளம் குழந்தைகளுக்கு, தூளி அளிக்கும் சீரான, மெல்லிய அழுத்தத்துடன் கூடிய கதகதப்பான உடல் சமநிலை, உணவு செரித்தலுக்கு ஏற்றதாக இருக்கும். தூளியில் உறங்கும் குழந்தையின் முதுகெலும்பு நேர்கோட்டில் சீராக இருக்கும்.

    தூளியில் இடப்பட்ட குழந்தை முன்னும் பின்னுமாக ஆட்டப்பட்டு உறங்க வைக்கப்படும்போது அம்மாவின் பாட்டு சத்தம் அதன் செவித்திறனை வளர்க்க உதவுகிறது. மேலும் அன்னையின் பனிக்குட நீரில் நீந்திய அனுபவம் பெற்ற குழந்தை தூளியில் அம்மாவை பார்த்தபடியே முன்னும் பின்னுமாக ஆடி அதே அனுபவத்தை பெறுகிறது.

    அத்துடன் தனது முதல் உறவான அன்னையை பார்த்தபடியே தூங்கவும் முயற்சிக்கும். அது கண்களில் பார்வை திறன் நிலைத்தன்மையுடன் அமைவதற்கு ஏற்ற பயிற்சியாகவும் அமைகிறது.

    தூளியில் உறங்கும் குழந்தைகளுக்கு வெளிப்புற வெளிச்சம் காரணமாக கண்கள் கூசுவதில்லை. வெளியில் ஒளிரும் மின்விளக்கின் வெளிச்சம் தூளிக்குள் விழுவதில்லை. தூளிக்குள் உள்ள நிழல் குழந்தையின் அமைதியான உறக்கத்துக்கு ஏற்றதாக அமைகிறது.

    பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
    கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிச்சூழலை மறந்து ஆன்லைன் வழியே வீட்டு கல்வி முறைக்கு பழகிவிட்ட மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு பழக்கப்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் பள்ளி ஒன்று மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது. மாணவர்களுக்கு வீட்டுச் சூழலை வழங்கு வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

    இதுநாள் வரை படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என வீட்டிலேயே பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு பழகி விட்டதால் சட்டென்று அவர்களை பள்ளிச் சூழலுக்கு தயார்படுத்துவது சிரமமானது. அதனை கருத்தில் கொண்டே இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இதில் இசை, நடனம், கலை வேலைப்பாடுகள் மற்றும் கைவினை, திரைப்பட விமர்சனங்கள், புகைப்பட விளக்கக்காட்சிகள், தோட்டக்கலை, புத்தக வாசிப்பு என பல விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.

    இந்த பாடத்திட்டம் பள்ளி நேரத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இந்த பள்ளிக்கூடம் ஆலுவாவில் உள்ள கீழ்மாட் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. ‘‘எங்கள் பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக இயங்குகிறது. இங்கு படிப்பவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் நீண்ட நாட்களாக வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மீண்டும் பள்ளிக்கு திரும்பும்போது வீட்டுச்சூழலை மறப்பது சற்று சிரமமானது. திடீரென்று குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதைப்போல அவர்கள் உணருவதையும் நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பழக்கப்படுத்தும் நோக்கத்தில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

    மகிழ்ச்சி பாடத்திட்டங்களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அதனை பின்பற்றி இரண்டு வாரங்களுக்கு இந்த பாடத்திட்டத்தை நடத்த இருக்கிறோம். மாணவர்கள் மீண்டும் கற்றல் சூழலுக்குத் திரும்ப உதவுவதற்கான சிறந்த வழியாக மகிழ்ச்சி பாடத்திட்டமும் அமைந்திருக்கிறது’’ என்கிறார்கள், ஆசிரியர்கள்.
    பிள்ளைகளுக்கு பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.
    மழலைப்பள்ளி மாணவர்கள்

    பத்து மழலைப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்கு மருத்துவரீதியான பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. மற்றவர்களை விட, இவர்களையே நாம் அதிகம் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் கற்கத் தொடங்கும் பருவம். இவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.

    அவர்களால் ஓவியம் தீட்ட முடியாது. அவர்களது கவனிக்கும் திறன் குறைந்திருக்கும். உதாரணத்துக்கு, உட்கார்ந்து ஒரு கதை கேட்கக்கூட அவர்களால் இயலாது. பள்ளியில் செயல்திறன் குறைவாக இருக்கும். இவற்றை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

    மழலைப் பள்ளி மாணவர்கள்

    பள்ளி மாணவர்கள்

    மூன்று வயதில் பார்வைக்குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்தபிறகு, ஆறு வயதில் மீண்டும் கண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும். இந்த வயதில் ஐந்தில் ஒரு மாணவருக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் அடிப்படை கண் சோதனையிலும்கூட தேறிவிடுவார்கள். ஆனால் பார்வைக் குறைபாட்டை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர்களது பள்ளிப் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

    பார்வைக் குறைபாட்டை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்

    * அடிக்கடி வரும் தலைவலி

    * அதிகப்படியாக கண்களைத் தேய்ப்பது

    * புத்தகம் அல்லது செல்போனை அருகிலோ அல்லது தொலைவிலோ வைத்துப் பயன்படுத்துவது.

    * ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிப்பது.

    * கண்களைச் சுழற்றுவது

    * வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள்

    * கவனம் செலுத்த இயலாமை

    * திடீரென மதிப்பெண்கள் குறைவது

    * வகுப்பறையில் கரும்பலகையில் உள்ள எழுத்துகளைப் பார்ப்பதில் பிரச்னை.

    இவை அனைத்தும் பார்வைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக இருப்பதால், இந்த செயல்பாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    கண்ணாடி

    சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்!

    * சிறுவர்களுக்கு பார்வைப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.

    * இரண்டு அடிக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்து டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

    * பிறந்த குழந்தைக்கு கட்டாயம் கண் பரிசோதனையை நாம் மேற்கொள்ளவேண்டும். அதன் பிறகு 6 முதல் 12 மாதத்துக்குள் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று வயது அடையும்போதும், பிறகு பள்ளிப்பருவ வயதிலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்படி குழந்தைப் பருவம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் கண் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

    * பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை வைத்தே பார்வைக் குறைபாடுகளை கண்டறியலாம். பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் பார்வை தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பிள்ளைகளுக்கு பார்வைக்குறைபாடு ஏற்படாமல் நாம் பாதுகாக்கலாம்.

    கண் பரிசோதனை

    பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் பொதுவான வழிமுறைகள்!

    * கண்களுக்கோ அல்லது பார்வைக்கோ எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும். இதனால், குளூக்கோமா எனும் கண் அழுத்த நோய் போன்ற பார்வை இழப்பு நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும்.

    * கண்களுக்கு எவ்விதக் கேடும் ஏற்படாதவகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளை நாம் மேற்கொள்ளும்போது, அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாளவேண்டும்.
    கட்டுக்கதைகள் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு அல்ல. மிகப்பெரிய உண்மைகளை எளிமையாக அவர்களுக்கு புரியவைப்பதற்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
    ‘குழந்தைகள் என்றாலே துறுதுறுவென வலம் வருவார்கள். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பார்கள்’ என்பது பெரும்பாலானவர்களின் எண்ண ஓட்டமாக அமைந்திருக்கிறது. பெற்றோர்களும் அத்தகைய மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மனதிலும் குழப்பமான சிந்தனைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதைத் தொடர்ந்து ஏற்படும் கவலைகள் அவர்களை சஞ்சலத்தில் ஆழ்த்திவிடும். அதனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    தேவையற்ற பயம் மனதை ஆட்கொள்ளும்போது அவர்கள் பலவீனமடைந்து விடுகிறார்கள். அவர்கள் மனதில் எப்படிப்பட்ட பயம் ஆட்கொள்ளும் என்பதை தெரிந்துகொண்டு அதை போக்குவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அவர்களுடைய வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் பயமும், குழப்பமும் அவர் களின் மனநிலையை சிதைத்துவிடும். எதற்கெடுத்தாலும் பயப்படும் மனநிலைக்கு மாறிப்போய்விடுவார்கள். அப்போது தனிமையை விரும்புவார்கள். தனிமை உணர்வும் அவர்களை வாட்டிவிடும்.

    குழந்தைகள் அம்மா-அப்பாவிடம் மட்டும்தான் பாதுகாப்பான சூழலை உணருவார்கள். புது இடம், புது மனிதர்களை சந்திக்கும்போது அவர்களிடத்தில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். அறிமுகமில்லாத இடத்தில் விட்டுச் செல்வதும் அவர்களை தனிமையில் துவள வைத்துவிடும். ‘அம்மா - அப்பா இன்னும் வரவில்லையே. வரும் வழியில் என்ன ஆனதோ என்று தெரியவில்லையே’ என்றெல்லாம் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். வெளியில் சொல்ல முடியாத ஒருவித கலக்கம் அவர்கள் மனதில் ஏற்படும். இத்தகைய திகில் உணர்வு குழந்தை களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். சுவாசப் பிரச்சினையும் தோன்றும். இத்தகைய திகில் உணர்வு குழந்தைகள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.

    வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் மனதில் பக்கத்தில் இருக்கும் காலி அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதை நினைத்து தேவையில்லாமல் பயம் கொள்வார்கள். அவ்வப்போது காலி அறையை சுற்றிக்காட்டி, ‘அங்கு யாரும் இல்லை’ என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாளடைவில் பயம் நீங்கும்.

    புதிய இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது அந்த இடத்தைப் பற்றி விளக்கமாக கூற வேண்டும். அங்கு இருக்கும் அறிமுகமற்றவர்களை பற்றியும் தெரிந்தவர்களை பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் தங்களுடைய கற்பனை சக்திக்கேற்ப குழப்பமாக புரிந்து கொள்வார்கள். புதிய மனிதர்களிடம் பேசவும், நெருங்கவும் அஞ்சுவார்கள். இந்த பயம் அவர்களுடைய ஜீரண சக்தியை பாதிக்கும். அதனால் உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகும். மன நலமும் பாதிக்கப்படும்.

    நாம் பேசுவது நமக்கு நியாயமான விஷயமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளால் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. வீட்டில் எப்போதும் பிரச்சினை, கடுமையான வாதம், விவாதம் நடந்து கொண்டிருந்தால் அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும். விவாதம் முடிந்த பிறகும் அந்த விஷயங்கள் பற்றிய சிந்தனையே குழந்தைகள் மனதில் பல மணி நேரமாக நீடித்துக்கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து பயங்கர காட்சிகளும் அவர்களது மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். அது தொடர்ந்து நீடிக்கும்போது ஒருவித குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

    பள்ளிக்கூடத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் முரட்டு தனமாக நடந்துகொள்ளும்போது மனதில் ஒருவித பாதுகாப்பின்மை தோன்றும். அது ஒருவித பயத்தை ஏற்படுத்தி குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இந்த நிலை நீடித்தால் படிப்பில் கவனம் குறையும். மந்தநிலை ஏற்படும். பள்ளிச் செல்ல விருப்பம் குறையும். அதனால் பள்ளியில் நடக்கும் விஷயங்கள் பற்றி குழந்தை களிடம் அடிக்கடி கேட்டு விவாதிக்க வேண்டும்.

    அதிகப்படியான கூட்டத்தைப் பார்க்கும்போதும் குழந்தைகளுக்கு ஒருவித பயம் ஏற்படும். அந்த கூட்டத்திற்கு மத்தியில், ‘நாம் காணாமல் போய்விடுவோமோ’ என்று கவலைகொள்வார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும் விதத்தில் பெற்றோர் பேச வேண்டும். வீட்டு முகவரி, தொலைபேசி எண், அம்மா, அப்பா பெயர் போன்ற முக்கியமானவற்றை அடிக்கடி சொல்ல வைத்து அவர்கள் மனதில் பதிக்க வேண்டும். ‘ஒருவேளை தொலைந்து போய்விட்டால் பயப்படாதே. அதே இடத்தில் நின்று விடு. எங்களைத் தேடி வராதே. நாங்கள் திரும்ப வந்து அழைத்துச் செல்வோம். வெகுநேரமாகிவிட்டால் அங்கு நிற்பவர்களிடம் எங்களது பெயர், செல்போன் எண்ணை கொடுத்து பேசு’ என்று கூறி தைரியப்படுத்த வேண்டும். திரளான கூட்டம், புதுப்புது முகங்கள், குழந்தைகளை பலவாறு சிந்திக்க வைத்து அவர்களை குழப்பிவிடும் என்பதை பெற்றோர் எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள்.

    சில சமயங்களில் குழந்தைகளால், ‘தாங்கள் இதற்காகத்தான் பயப்படுகிறோம்’ என்பதை விளக்கிச் சொல்ல முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் அவர்களிடம் பக்குவமாக பேசி, கேள்விகள் கேட்டு, அதற்கான விடையை சொல்ல வைத்து பயத்தை போக்க வேண்டும். வேண்டாத கனவுகள் கூட அவர்களை மிரள வைக்கும். ‘உண்மையில் அப்படியெல்லாம் நிகழ்ந்து விடுமோ’ என்று பயந்துபோவார்கள். சினிமா, தொலைக்காட்சி சம்பவங்களை உண்மை என்றே நினைத்து கலவரமடைவார்கள். அந்த வயதில் எது உண்மை? எது பொய்? என்பதை பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருக்காது. குறிப்பாக எந்த விஷயம் அவர்களை பயமுறுத்துகிறது என்பதை அவர்களிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டும். சில சமயம் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களை பயமுறுத்தும். பெற்றோர்தான் பக்குவமாக புரியவைத்து பயத்தை போக்கவேண்டும்.

    குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை. அந்த கதைகளுக்கு சுவாரசியம் சேர்ப்பதற்காக சில பொய்களை சேர்க்க வேண்டி இருக்கும். அதுவே அவர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துவிடும். அதில் வரும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே நம்பி விடுவார்கள். அவ்வப்போது கட்டுக்கதை, நிஜவாழ்க்கை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.கட்டுக்கதைகள் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு அல்ல. மிகப்பெரிய உண்மைகளை எளிமையாக அவர்களுக்கு புரியவைப்பதற்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் குழந்தைகளோ, ‘நரி பேசும், காக்கா பாடும்’ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருப்பார்கள். அந்த இடத்தில் நிஜத்தைப் புரியவைக்க வேண்டும்.

    குழப்பமான மனநிலை குழந்தைகளை பலவீனப்படுத்திவிடும். அவர்களுடைய செயல்பாடுகளும் குறைந்து போகும். சோர்வான மனநிலையில், முகவாட்டத்துடன் காணப்படுவார்கள். அது அவர்களுடைய உடல் நலனையும் பாதிக்கும். அவ்வப்போது அவர்களிடம் பேசி தேவையற்ற குழப்பங்களை போக்க வேண்டும். பாசமாக வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு புதிதாக சகோதரனோ, சகோதரியோ பிறக்கும்போது அவர்கள் மீதுதான் பெற்றோரின் கவனம் அதிகம் பதியும். அப்போது ‘நம்மீது முன்பு போல் பாசம் காண்பிக்காமல் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்படும். ‘இனி நாம் இவர்களுக்கு தேவை இல்லையோ’ என்று கூட சில குழந்தைகள் சிந்திக்கும். அதற்கு இடம் கொடுக்காதவாறு அவர்களின் சந்தேகங்களையும், பயங்களையும் போக்க வேண்டும். அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும். அப்போது அவர்கள் மனதில் இருக்கும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் மனதில் ஒருபோதும் தேவையற்ற பயமோ, குழப்பங்களோ இருக்கக்கூடாது.
    குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கண்ட இடங்களில் கையைவைக்க அனுமதித்துவிடக் கூடாது.
    தூய்மையான இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை. அந்த கடமையை அனைவருமே நிறைவேற்றவேண்டும். ஒரே நாளில் இதை நிறைவேற்றிட முடியாது. முதலில் இதை நன்றாக புரிந்துகொண்டு, படிப்படியாக செயல்படுத்த முன்வரவேண்டும். அதன் மூலம் நிச்சயமாக நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

    மனிதர்கள் பயன்படுத்தும் இடங்களை மூன்றாக பிரிக்கலாம். அவை: வீடு, பொதுஇடங்கள், அலுவலகங்கள். இதில் வீட்டை பெரும்பாலும் அனைவருமே தூய்மையாகத்தான் வைத்திருக் கிறார்கள். அலுவலகங்களும் பெரும்பாலும் தூய்மையடைந்துவிடுகின்றன. தூய்மையின்மை அதிகம் தென்படுவது பொதுஇடங்களில்தான்.

    வீட்டைவிட்டு வெளியே செல்லும் மக்கள் அனைவரும் பொதுகழிப்பிடங்களை பயன்படுத்துகிறார்கள். அதனை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கடமையாகும். இதில் மிகுந்த விழிப்புணர்வு அவசியம். விமான நிலையம், ரெயில் நிலையம், திரையரங்கு, பெரிய மால்கள், பூங்காக்கள், சாலையோரம் என்று எல்லா இடங்களிலும் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தங்கள் பங்குக்கு மக்கள் அதை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.

    பெரும்பாலான தொற்று வியாதிகள் பொது கழிப் பறைகளில் இருந்து உருவாகின்றன. பலரும் பயன்படுத்தும் கழிப்பிடங்களில் தொற்று நோய் கிருமிகள் அதிகமாகவே காணப்படும். இது தவிர்க்க முடியாதது. பயன்படுத்திய பின் தண்ணீரை ‘ப்ளஷ்’ செய்துவிட்டு வரவேண்டியது அவசியம். பின்பு கைகளால் கழிப்பறை கதவை திறக்கும் போது கைகளிலும் விரல்களிலும் கிருமிகள் பரவும். கைகளை சோப்பு போட்டு கழுவி துடைத்து சிறிது நேரம் காயவைத்து தூய்மையாக்கிக்கொள்ளவேண்டும்.

    கழிப்பிடம் தானே என்று கண்ட இடத்தில் துப்புவது கூடாது. கைப்பைகளை வெளியில் வைத்துவிட்டு உள்ளே செல்லவேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் பொது கழிப்பிடத்தின் உள்ளே பையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பையை அப்படியே எடுத்துக்கொண்டு போய் சமையல் அறையிலோ, டைனிங் டேபிளிலோ வைத்துவிடக்கூடாது. தகுந்த முறையில் தூய்மை செய்த பின் தான் அதனை பயன்படுத்தவேண்டும்.

    வெகுதூரம் வெளியில் பயணிக்கும்போது கையோடு சானிடரி டிஷ்யூ, ஹேண்ட் வாஷ் போன்றவைகளை கொண்டு செல்லவேண்டும். அவைகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

    குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கண்ட இடங்களில் கையைவைக்க அனுமதித்துவிடக் கூடாது.

    பராமரிப்பு பணியாளர்கள் சுத்தப்படுத்தினாலும், நம் பங்கிற்கு நாமும் சுத்தத்தை பேண முன்வர வேண்டும்.

    தூய்மையான பாரதத்தில் பொதுகழிப்பிட சுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    குப்பை தொட்டியில் போடவேண்டிய பொருட்களை டாய்லெட்டில் போட்டுவிடக் கூடாது.

    அங்கிருக்கும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

    டாய்லெட்டை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பின்பும் தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள்.

    பொதுகழிப்பிடங்களில் உங்கள் ஒவ்வொரு செயல்பாடும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமையட்டும்.
    மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    குழந்தைகளுக்குப் போர்வைகளைப் போர்த்தி கதகதப்பாக தூங்க வைத்தால் அவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். மென்மையான போர்வைகள், மென்மையான க்வில்ட்டுகள் மற்றும் அவற்றில் பல்வேறு விதமான டிசைன்கள் மற்றும் மாடல்களில் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.

    * குழந்தையின் தலை, காது மற்றும் உடம்பையும் சேர்த்து இறுக்கமாகப் போர்த்தி வைக்க போர்வையிலேயே தலையை மூடும் முக்காடு (ஹூடட்) பகுதியானது இணைக்கப்பட்டது போல் வருவது பார்க்க அழகாக இருக்கின்றது. அந்த முக்காட்டில் கரடித்தலை, பான்டா கரடித்தலை, ஆட்டுக்குட்டித்தலை என வருவது குழந்தைகளுக்கு அணிவிக்கும் பொழுது அவை குளிரிலிருந்து பாதுகாப்பதோடு பார்க்கவும் அவ்வளவு அழகாக இருக்கின்றது.

    * நூறு சதவீதம் பருத்தியால் செய்யப்பட்ட குறைந்த எடையுடைய மென்மையான போர்வைகளில் இரண்டு புறமும் வெவ்வேறு டிசைன்கள் கொடுக்கப்பட்டு இருபுறமும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்திக் கொள்வது போல் வந்திருக்கும் போர்வைகள் அட்டகாசம் என்று சொல்லலாம். குழந்தைகளுக்குப் பிடித்தாற் போல் டைனோசர், போக்கிமான், டோரா புஜ்ஜி, பவர் ரேன்ஜர்ஸ் மற்றும் விலங்குகள் பிரிண்ட் செய்யப்பட்டு வரும் போர்வைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் மிகவும் பிடிக்கும்.

    * மிக மிக மென்மையான மிங்க் ரகத்துணிகளால் வடிவமைக்கப்படும் போர்வைக்குள் இரண்டு அடுக்குகளாக வருவதால் குளிர் மற்றும் மழைக் காலத்திற்கு கதகதப்பாக போர்த்திக் கொள்ள ஏதுவானவையாக இருக்கும்.
    குழந்தைகளுக்கு சளி பிரச்சனை இருந்தால் அவற்றை சாதாரணமாக நினைக்கக்கூடாது. குழந்தையை கவனிக்கும்போது நாம் செய்கின்ற சிறுசிறு தவறுகள் குழந்தைக்கும் சளி பிரச்சனை வருவதற்கு நாமே காரணமாகிறோம்.
    குழந்தைகள் படுக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை  தூங்க வைக்கக்கூடாது.

    மழை மற்றும் குளிர் காலத்தில் ஈரக்காற்று படாதவாறு குழந்தையின் உடலையும், காதுகளையும் கம்பளியால் சுற்றி மூடவேண்டும்.
     
    குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் நன்கு கொதிக்க வைத்த ஆறிய தண்ணீரை கொடுக்கவேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க  வேண்டும்.
     
    குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க கூடாது. பாலூட்டும் தாய்மார்களுக்கு முதலில் சளி தொல்லை  ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
     
    தலை குளித்தால் தலை முடியை நன்கு துவட்டிய பிறகே குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைக்கு பாலூட்டும்போது குழந்தைக்கும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கிவிடும்.
     
    பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்ச்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும்.
    தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
    இந்த வருட தீபாவளியை புதுமையாக கொண்டாட, தீ காயம் உண்டாக்காத புஸ்வாணம் அறிமுகமாகி உள்ளது. இதற்கென பிரத்யேக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, இந்த நவீன ரக புஸ்வாணத்தை தயாரித்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையின் போது, புது துணிகளுக்கும், இனிப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்று பட்டாசுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நடுத்தர குடும்பத்தில் கூட பட்டாசு வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குவது உண்டு.

    இந்திய தேவையில் 90 சதவீத பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகள் கடந்த சில மாதங்களாகவே இங்குள்ள பட்டாசு ஆலைகளில் மும் முரமாக தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கத்தை போல எதிர்பார்த்த அளவில் பட்டாசு உற்பத்தி நடைபெறவில்லை என்றாலும், குழந்தைகளையும், இளைஞர் களையும் கவரும் வகையில் பல புதிய ரக பட்டாசுகள் இந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக இரவு நேரம் மட்டும் வெடிக்கப்படும் பேன்சி ரக பட்டாசுகள் பல அளவுகளில், பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. அதே போல் குழந்தைகளை கவரும் வகையில் ஹெலிகாப்டர், கார், சிங்கம், வாத்து, டிரோன், பம்பரம், டிஜிட்டல் கிராக்கர்ஸ் போன்றவையும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான வெடிகளும் பட்டாசு சந்தைகளை அலங்கரித்துள்ளன.

    இதுதொடர்பாக சிவகாசி பட்டாசு உற்பத்தி, விற்பனையாளர்கள் கூறும் போது, “பட்டாசு தொழிலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வந்த போதும், தமிழக அரசு பட்டாசு தொழிலை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

    ஒருநாள் பண்டிகைக்காக சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 8 லட்சம் பேர் வருடம் முழுக்க உழைத்து வரும் நிலையில் அவர்களின் உழைப்பு மக்களை முழுமையாக சென்று சேர வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், பட்டாசு தொழிலை நம்பி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமையும்” என்றனர்.
    இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.
    கண்ணே...மணியே...குலக்கொழுந்தே என்று வாரி அணைத்து முத்தமிட்டு சொர்க்கம் தன் கை அருகே இருப்பதாக பூரித்துத்தான் போவார்கள் பெற்றோர் தங்கள் குழந்தை முகத்தை பார்க்கையில். எதிர்காலத்தில் தனது மகனும், மகளும் சாதனைகள் பல படைத்து நம்மை வெற்றித்தேரில் அழைத்து செல்வார்கள் என்ற எண்ணம் குழந்தையை பெற்ற அத்தனை பெற்றோருக்கும் இருக்கும்.

    பாதையை மாற்றும்

    தத்தி தத்தி நடக்கும் நடையழகு முடிந்து நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் காலம் வந்த போது, நமது குழந்தை இந்த சமுதாயத்தில் இருக்கும் கெட்டபழக்க வழக்கத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூாடாதே என்ற கவலையும் பெற்றோரை வாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது. அவர்களது கவலையை பெருங்கவலையாக்கி விடுகின்றனர் சில இளைஞர்களும் இளம் பெண்களும்.

    எந்த வகையில் வந்தாலும் போதை வஸ்து மனிதனின் மனதை மிருகமாக்கி விடும். சொல்லப்போனால் போகும் பாதையையே மாற்றி விடும். அந்த போதை வஸ்தை தேடி இன்றயை இளைய தலைமுறையினர் சிலர் ஓடிக்கொண்டிருப்பதுதான் சமுதாயத்தின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது.

    இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.

    ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது போதை வஸ்த்துக்கள். இன்று பாமரனைத்தேடி ஓடி வந்து விட்டது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தும் அளவுக்கு நுகர்வு கலாசாரம் வளர்ந்து இருப்பது காலத்தின் கொடுமை. ஆண் என்ன? பெண் என்ன? யார் செய்தாலும் போதை பழக்கம் கேடு தரத்தான் செய்யும்.

    விழாக்களில் போதை விருந்து

    பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஆட்டிப்படைக்கும் இந்த போதை பழக்க வழக்கம் ஒரு சமூக நோயாகவே மாறியிருக்கிறது. கவலையை மறக்கவும், உடல் சோர்வு நீங்கவும் போதை பொருட்களை பயன்படுத்துகிறேன் என்பது தான் போதை அடிமைகள் சொல்லும் காரணம்.

    தற்போதைய கால ஓட்டத்தில் பிறப்பு, இறப்பு, பிறந்தநாள், திருமண நாள், பதவி உயர்வு, திருமணம் விழா, காதுகுத்து விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, திருவிழா, பண்டிகைகள் என எந்த சுக, துக்க நிகழ்வாக இருந்தாலும் அதில் முக்கிய இடம் வகிப்பது மது மற்றும் போதை தரும் வஸ்துகளை பயன்படுத்தும் விருந்தாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், முதுகெலும்பாகவும் திகழக்கூடிய இளைஞர் சமுதாயம் கஞ்சா போன்ற போதை பழக்க வழக்கங்களில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதில் குமரி மாவட்டமும் விதிவிலக்கல்ல.

    தேடி வரும் கஞ்சா

    கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களை குறிவைத்தே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்தான், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சீரழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாயைவிட இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்பனை செய்வதில் அதிக வருவாய் கிடைத்ததாக தெரிகிறது. இளைஞர்கள், மாணவர்களுக்கு கஞ்சா போதை மீது ஏற்பட்ட இனம்புரியாத ஆசையினால் வியாபாரிகள் கேட்ட பணத்தை கொடுத்து கஞ்சாவை வாங்கிச் சென்றதுதான் அதிக வருவாய் அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதனால் தேனி மாவட்டப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும் கஞ்சாவை பெரும் அளவில் வரவழைத்து விற்பனையை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போதை பழக்கத்துக்கு ஆளாகும் இளைஞர்கள் ஆங்காங்கே சிறு, சிறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பு மற்றும் வேலைகள் ஆகியவற்றில் இருந்து தடம்மாறிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

    போலீசாரின் வேட்டை

    இதையறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் ரகசியமாக புலன் விசாரணை மேற்கொண்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை குறிபார்த்து வேட்டையாடினர். அதோடு மட்டுமில்லாமல் கஞ்சா போதையால் தடம் மாறும் இளைஞர்கள், மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் துணையோடு நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சத்தமின்றி மேற்கொண்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப்போல போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன. இதனால் கஞ்சா போதையில் இருந்து மீண்ட மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை 228 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தக்கலை சப்-டிவிஷனில் அருமனை பகுதியில் மட்டும் 400 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் சிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய ஏராளமானோரை கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், மூடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது மாவட்ட காவல்துறை என்பது பெருமை கொள்ளும் விஷயமாகும். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதுதான் மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நம்பிக்கை இருக்கிறது

    இருப்பினும் திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற திரைப்பட பாடலின் வரிகளுக்கு ஏற்ப கஞ்சாவை ருசிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் விழிப்புணர்வு பெற்று அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். பெற்றோரின் இதயத்தை கையில் இருக்கும் கஞ்சா ெகாள்ளியால் சுட்ெடரிப்பதை கைவிட வேண்டும். எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கடந்து செல்ல ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே இந்த சமுதாயத்தின் அக்கறை. இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்தை பயன்படுத்தும் அனைவரும் அந்த தீய பழக்கத்தை கைவிட்டு சமுதாயத்தின் கனவை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருந்தினால் மட்டுமமே எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
    ×