என் மலர்
குழந்தை பராமரிப்பு
- காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும்.
- புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.
காது கேளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும், பெரியவர்களில் 8.5 சதவீதம் பேரும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.
காது கேளாமைக்கு காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வு என்ன? காதை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கோவையில் உள்ள கொங்குநாடு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் எ.அனுபிரியா விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
காது கேளாமைக்கான காரணம்
கேள்வி:- காது கேளாமைக்கான காரணம் என்ன?
பதில்: பொதுவாக வெளி காது, நடு காது, உள் காது அல்லது செவி புலத்தில் ஏதாவது சேதம் ஏற்படுவதன் காரணமாக காது கேளாமை ஏற்படுகிறது. குறிப்பாக கன்டெக்டிவ், சென்சோநியூரல், இவை 2-ம் சேர்ந்து என்று 3 விதமான காது கேளாமை பிரச்சினை ஏற்படுகிறது.
கன்டெக்டிவ் என்பது நடுத்தர மற்றும் வெளிப்புற காதில் ஏற்படும் பிரச்சினையால் வருகிறது. இது சரிசெய்யக்கூடியது. நோய் தொற்றுகள், காதின் மெழுகுகள், காதில் தேவையற்ற வெளிப்பொருட்களை நுழைத்தல், காதில் திரவம் உருவாதல், இஸ்டாசியன் குழாய் செயலிழப்பு, காதில் கட்டிகள், செவிப் பறையில் துளை போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.
சென்சோநியூரல் என்பது உட்புற காதில் ஏற்படும் பிரச்சினைகளால் வருகிறது. இதற்கு முதுமை, தலையில் ஏற்படும் அதிர்ச்சி, ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள், கட்டிகள், மரபணு காரணிகள் மற்றும் குறைபாடுகள், அதிகப்படியான இரைச்சல் ஆகியவை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு மரபணு காரணிகள், காதில் மெழுகுகள், கிருமி தொற்று, நடுத்தர வயதினருக்கு செவிப்பறை துளைகள் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது. முதியோருக்கு கட்டிகள் காரணமாக ஏற்படுகிறது.
பரிசோதனைகள் என்ன?
கேள்வி: காது கேளாமைக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
பதில்: காதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் முதலில் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். எங்களிடம் காதை காட்சிப்படுத்த ஓட்டோஸ்கோப் என்ற கருவி உள்ளது. இதன் மூலம் காதின் மெழுகு, கிருமிகள், செவிப்பறை துளை ஆகியவற்றை எளிதாக கண்டறிய முடியும். டியூனிங்போர்க் என்ற கருவி மூலம் செவித் திறன் இழப்பின் அளவு, அவற்றின் வகையை மருத்துவ ரீதியாக மதிப்பிடலாம். செவித்திறன் இழப்பின் அளவு மற்றும் வகையை உறுதிப்படுத்த தூய தொனி ஒலி அளவீடு செவித்திறன் சோதனை அறிவுறுத்தப்படும்.
சி.டி. ஸ்கேன், டம்போரல் எலும்பு, எம்.ஆர்.ஐ. போன்ற பிற ஆய்வுகள் நோயாளியின் நிலையை பொறுத்து தேவைப்பட்டால் அறிவுறுத்தப்படும். புதிதாக பிறந்த செவித்திறன் ஸ்கிரீனிங் திட்டம் அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு மாத வயதுக்கு முன்பே கேட்கும் பரிசோதனையை செய்யலாம். இதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.
சிகிச்சைக்கான வழிமுறைகள்
கேள்வி: சிகிச்சைக்கான வழிமுறைகள் என்ன?
பதில்: சரியான நேரத்தில் சிகிச்சை செய்தால் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம். காது மெழுகு வெளிப்புற தொற்றுகள் போன்ற சிறிய பிரச்சினைகளை வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கலாம். செவிப்பறை துளைகள், நடுத்தர காதில் திரவம், கட்டிகள் போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். காது துவாரம் காரணமாக ஏதேனும் தொற்று ஏற்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் மூட வேண்டும். செவித்திறன் இழப்பு மீளமுடியாவிட்டால் செவிப்புலன் உதவியை பயன்படுத்தலாம். ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள் நிறுத்தப்பட்டால் செவித்திறன் இழப்பு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பம்
கேள்வி: மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் என்ன?
பதில்: பிறக்கும்போதே காது கேளாத குழந்தைகளுக்கு காக்லியர் இம்பிளான்ட் முறையை பயன்படுத்தலாம். இது ஒரு மின்னணு சாதனம் ஆகும். இதை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி பயன் அடையலாம். இது சேதமடைந்த காது பகுதியை கடந்து செவி வழி நரம்புக்கு சிக்னல்களை கொண்டு செல்கிறது. ஒரு வயதுக்கு முன்பே இதை செய்தால் அந்த குழந்தைகள் மொழி வளர்ச்சிக்கு முன்பே அதிகபட்ச பலனை பெறுவார்கள்.
போதுமான ஒலி- வாய்மொழி, மறுவாழ்வு மூலம் அவர்கள் சாதாரண செவித்திறன் கொண்ட மற்ற நபர்களை போலவே இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். இந்த அறுவை சிகிச்சையை 5 வயது வரை செய்யலாம். இந்த உள்வைப்புகளை இம்பிளான்ட் ஒன்று அல்லது 2 காதுகளுக்கும் வைக்கலாம்.
பிரஸ்பைகசிஸ் கொண்ட பெரியவர்கள் செவிப்புலன் கருவியை காதுக்கு வெளியே பயன்படுத்தலாம். இப்போது மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் வெளிப்புறமாக தெரியாமல் காதிற்கு உள்ள செவிப்புலன் கருவியை வைக்க முடியும். எண்டோஸ்கோப் மூலம் இப்போது நடுத்தர காது அறுவை சிகிச்சையை சிறிய துளை மூலம் செய்யலாம்.
செவிப்புலன் பரிசோதனை
கேள்வி: காது பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் வழக்கமான செவிப்புலன் பரிசோதனையை செய்ய வேண்டும். குடும்பத்தில் காது கேளாமை இருந்தால் சந்ததிகளை இ.என்.டி. மருத்துவ ஆலோசகரிடம் சீக்கிரம் அழைத்து வந்து பரிசோதனை செய்யலாம். சத்தமுள்ள இடத்தில் வேலை செய்யும்போது காது பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தலாம். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
கேள்வி: காதில் செய்யக்கூடாதது என்ன?
பதில்: காதில் எந்த காரணத்தைக்கொண்டும் இயர்பட் பயன்படுத்தகூடாது. காது சொட்டு மருந்தை மருந்தகத்தில் வாங்கி ஆய்வு செய்யாமல் பயன்படுத்தகூடாது. சூடான எண்ணெய்யை காதுக்குள் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சத்தமாக இசையை கேட்பதை தவிர்க்க வேண்டும். காது கேளாமை என்பது முதுமை அடைந்தவர்களுக்கு மட்டும் என்று நாம் நினைக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆட்டிசம் ஒரு நோய் அல்ல குணப்படுத்துவதற்கு.
- சரியான நேரத்தில் கண்டறிந்தால் சரி செய்ய இயலும்.
ஆட்டிசம் குறைப்பாட்டினை சமூக தொடர்புகள் சார்ந்த மற்றும் மொழித் தொடர்பு சார்ந்த குறைபாடுகளாக வரையறுக்கலாம்.
இத்தகைய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, தனக்குத் தேவையானவற்றை முறையாக வாய்வழி கேட்பதிலும், சமூகத்தில் மற்றவர்களிடம் உள்ள தொடர்புகளிலும், பிறர் கட்டளையை இவர்கள் பின்பற்றுவதிலும் சிரமம் இருக்கும்.
அறிகுறிகள்
1. தனது உணவுர்களை அழுகை, முனுமுனுத்தல், கூக்குரல்கள் மூலம் வெளிப்படுத்துதல்
2. வாய்மொழியற்ற பிற உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துதல்
3. இயந்திரக் குரலில் பேசுதல்
4. சமூக தொடர்புகளில் பிரச்சினை மற்றும் மொழித் தொடர்பில் பிரச்சினை.
5. வாய்க்குள் முனுமுனுத்தல் மற்றும் வார்த்தைகள் போன்று ஒலி ஏற்படுத்துதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதித்தல் நல்லது.
ஆட்டிசத்தில் பேச்சுப் பயிற்சியாளின் பங்கு:
1. பயிற்சியின் மூலம் தொடர்புத் திறனை மேம்படுத்துதல்
2. சரளமாக தடையின்றி பேச பயிற்சி அளித்தல்
3. ஒரு வார்த்தை பேசுவதற்கு நாக்கு, மேல்வாய், தாடை மற்றும் உதடுக்கான தொடர்புகளை புரிய வைத்தல் (Aritculaction Skills)
4. உடல் மொழியையும் முக பாவனையும் மேம்படுத்துதல்
5. செய்யும் வேலைகளை குவிந்த கவனத்துடன் செய்யவைப்பது.
6. சமூக தொடர்புகளை மேம்படுத்துவது
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல குணப்படுத்துவதற்கு. இது ஒரு குறைபாடு மட்டுமே. சரியான நேரத்தில் கண்டறிந்தால் சரி செய்ய இயலும்.
உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தயங்காமல் அழையுங்கள்.
இன்ஸ்டா ஹியரிங் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி. செல்: 9789334719.
Mrs. தனலெட்சுமி M.Sc., Aud. (AIISH) (All India Insutitute of Speech & Hearing, Mysore)
- வைட்டமின் டி3 குறைபாட்டை நிவர்த்தி செய்தால், குழந்தை பருவத்திலேயே கிட்டப்பார்வை பாதிப்பை குறைக்க முடியும்.
- குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
குழந்தைகள் தங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. செல்போனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பார்வை குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மட்டும் காரணமில்லை. உடலில் சூரிய கதிர்வீச்சுகள் படாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள் வைட்டமின் டி3 குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் வைட்டமின் டி3 குறைவது கிட்டப்பார்வைக்கு மூலகாரணமாக அமையும் என்று அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
இது தொடர்பான ஆய்வுக்கு 51 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 31 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் 8 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள். ஆய்வின் முடிவில் 38 பேருக்கு வைட்டமின் டி3 அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு கிட்டப்பார்வைக்கு வித்திடும். தினமும் உடலுக்கு தேவையான வைட்டமின் டி3 அளவை பெறுவதற்கு சூரிய ஒளி அவசியமானது. குழந்தைகள் தினமும் குறிப்பிட்ட நேரம் வெளிப்புற விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி3 அளவை சூரியக்கதிர்கள் மூலம் பெற்றுவிடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
''வைட்டமின் டி3 குறைபாட்டை நிவர்த்தி செய்தால், குழந்தை பருவத்திலேயே கிட்டப்பார்வை பாதிப்பை குறைக்க முடியும். பார்வைக்குறைபாடு மட்டுமின்றி பிற உடல் நல சிக்கல்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு வழிவகுக்கும். அதனை தவிர்க்க குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அது விளையாட்டாகவோ, உடற்பயிற்சியாகவோ இருக்கலாம். குழந்தைகள் வெயில் படும்படியான சூழலில் போதுமான நேரத்தை செலவிடுகிறார்களா? என்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்'' என்கிறார், ஐதராபாத்தை சேர்ந்த கண் மருத்துவர் சவுமியா.
- குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள்.
இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே ஒழியக் குறைந்தபாடில்லை. பச்சிளம் குழந்தை முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பலர் இந்த அத்துமீறல்களால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இனி பெற்றோர்கள் விழித்து உஷாராகிவிட வேண்டும். அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று கீழே பார்க்கலாம்.
வீடு சார்ந்த இடத்தில் குழந்தைக்கு எந்த அநீதியும் நிகழாமல் பாதுகாப்பது பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பு. அதே சமயத்தில் குழந்தைகள் எந்தெந்த இடத்திற்குத் தனியாகச் செல்கின்றார்களோ அங்கு எல்லாம் நம்பகத்துக்குரிய குறிப்பிட்ட நபரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரியும்.
உற்சாகம் குறைந்து சோர்வாகக் காணப்படுவார்கள்.
யாருடனும் பேசிப் பழகி, சிரிக்க மாட்டார்கள்.
யாராவது குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவார்கள்.
எப்போதும் தனிமையில் அமர்ந்து ஏதாவது யோசனையில் ஆழ்ந்து இருப்பார்கள்.
படிப்பில் முன்பு இருந்த கவனம் குறைந்து இருக்கும்.
விளையாட்டு,இசை ,நடனம் போன்ற எதிலுமே ஆர்வம் இருக்காது.
சில சமயம் பள்ளிக்குச் செல்ல மறுப்பார்கள்.
சரியாகத் தூங்க மாட்டார்கள். தேவையில்லாத கனவுகள் தோன்றும்.
அவர்கள் தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள். நேரடியாகச் சொல்லத் தயங்குவார்கள்.உதாரணமாகப் படம் வரைந்து வெளிப்படுத்துவார்கள். இல்லை வேறு ஏதாவது குறிப்புத் தெரியும்.
இப்போது இந்த சூழலில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நபர் இந்த தொல்லைக்கு காரணம் என்பதை அறிந்து, அந்த நபரைக் கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நபரின் தொடர்பை முற்றிலுமாக துண்டிக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான கவுன்சிலிங் வழங்க வேண்டும். குழந்தையை மன பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீட்டெடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றைத் தேர்வு செய்து அந்த விசயத்தில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும் இது மாதிரியான சூழல் எந்த வகையிலும் இனிமேல் ஏற்படாதபடி எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நம் கண்மணிகளை நாம்தான் கண் போலப் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிருக்கு மேலான நம் குழந்தைகளின் வாழ்வு வளமாக இருக்க நாம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
- காது கேட்கும் திறன் குழந்தையின் பேச்சுக்கு மிக மிக முக்கியம்.
- குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.
ஐம்புலன்களில் செவிக்கும் மூளைக்கும் வாய்க்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஒரு குழந்தை தெளிவாகக் கேட்டால், அதை மூளை சரியாக கிரகித்தால் எது தெளிவான பேச்சாக வெளியே வரும். காது மந்தமாக இருந்தால் பேச்சில் குறைபாடு இருக்கும்.
ஒரு குழந்தை அம்மா என்ற ஒலியை காதில் உணர்ந்து, அந்த அதிர்வை மூளை வாங்கி, அந்த அதிர்வை தான் முதலில் 'அம்மா' என்று உணர்வை ஏற்படுத்தும். அதன் பின் அதை வார்த்தை வடிவில் அம்மா என்று அழைக்கும்.
அடுத்தது குழந்தையின் மூளையைத் தூண்டி, பேச வைக்க ஆள் இல்லாதது பேச்சுக் குறைபாட்டிற்கு ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் அருகில் அமர்ந்து பேசுவதற்கு அம்மா, அப்பா இருவருக்கும் இப்போது நேரம் இல்லை. தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் அருகில் இல்லை. பிரச்சனைக்கான காரணத்தை சரிவரக் கண்டறிந்தால் தீர்ப்பது சுலபம்.
குழந்தைகள் பேச்சுக் குறைபாட்டிற்கான காரணங்கள்
ஒரு குழந்தையின் மொழித்தொடர்பில் வரும் (Language delay) தாமதம் தான் மொழித்தொடர்பு தாமதம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குழந்தை தனது வயதிற்குத் தகுந்தாற்போல் வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ பேச இயலவில்லை என்றால் குறைபாடு இருக்கின்றது என்று அர்த்தம். குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.
குறைபாட்டிற்கான அறிகுறிகள்:
1. ஓரு குழந்தை 15 மாதத்திற்குள் வாய்க்குள் முணங்கவில்லை என்றால்.
2. 2 வயதிற்குள் சில நூறு வார்த்தைகள் பேசவில்லை என்றால்.
3. சின்ன சின்ன வாக்கியங்கள் 3 வயதிற்குள் பேசவில்லை என்றால்.
4. நீங்கள் கூறும் வார்த்தைகள் /கட்டளை களை பின்பற்ற இயலவில்லை என்றால்.
5. முறையான உச்சரிப்பு இல்லாமை
பேச்சு குறைபாட்டிற்கான காரணங்கள்
1. காது கேளாமை
மேற்கண்ட தென்படின் மிக முக்கியமாக செய்ய வேண்டியது செவித்திறன் பரிசோதனை துல்லியமான காது கேட்கும் திறன் குழந்தையின் பேச்சுக்கு மிக மிக முக்கியம். குழந்தையின் கேட்கும் திறன் BERA, OAE, ASS போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.
கேட்கும் திறனில் நிரந்தரமாக குறைபாடு இருப்பின், சரியான காது கருவிகள் (Hearing Aids) பொருத்துவதன் மூலம் பேச்சுக் குறைபாட்டை சரி ெசய்ய முடியும்.
பிறந்தவுடன் செவித்திறன் பரிசோதனை (New Born Screening) யாருக்கு அவசியம்?
1. எடை குறைந்த பிறப்பு
2. குறை பிரசவக் குழந்தை
3. ரத்த உறவுக்குள் திருமணம் செய்தவர்கள்
4. கருவுற்றிருக்கும் போது மஞ்சள் காமாலை வந்தவர்கள்.
5. பல காரணங்களால் இன்குபேட்டரில் வைக்ப்பட்ட குழந்தை
6. பிறந்தவுடன் அழாத குழந்தைகள்.
7. பரம்பரைக் குறைபாடு உள்ளவர்கள்.
இன்ஸ்டா ஹியரிங் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி. செல்: 9789334719.
Mrs. தனலெட்சுமி M.Sc., Aud. (AIISH) (All India Insutitute of Speech & Hearing, Mysore)
- மஞ்சள் நோய் இரண்டு வகைப்படும்.
- 95% சதவீதம் நோயின்றி வரக்கூடியது.
1) பச்சிளம் குழந்தைகளுக்கான மஞ்சள் நோய் என்றால் என்ன?
பிறந்த குழந்தையின் இரத்தத்தில் பிலிருபின் (bilirubin) அளவு அதிகமாவதால் ஏற்படுகிறது. குழந்தையின் தோல் மஞ்சளாகவும், கண்ணின் வெள்ளைப்பகுதி மஞ்சளாகவும் மாறிவிடும். இது 60 சதவீத நிறைமாத குழந்தை களுக்கும், 80 சதவீத குறைமாத குழந்தைகளுக்கும், குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே வந்து விடுகிறது.
இந்த மஞ்சள் நோய் இரண்டு வகைப்படும். 95% சதவீதம் நோயின்றி வரக்கூடியது. (Physiological Jaundice). 5 சதவீதம் நோயினால் வரக்கூடியது (Pathological Jaundice).
நாம் நோயில்லாமல் சாதாரணமாக வரும் மஞ்சள் பற்றி (Physiological Jaundice) இங்கு பார்ப்போம்.
2. மஞ்சள் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
குழந்தை பிறந்தவுடன் இரத்த சிவப்பணுக்கள் அழிக்கவும்படும், புதிதாக உற்பத்தியும் செய்யப்படும். சிவப்பணுக்கள் வேகமாக அழிக்கப்படும் போது அதிலிருந்து வெளியாகும் பிலிருபின் (bilirubin) இயல்பாக ஈரலுக்கு (liver) சென்று பின் மலத்தின் மூலம் வெளியேறுகிறது.
பெரும்பாலான குழந்தைகளுக்கு ஈரல் (liver) முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இரத்தத்தில் பிலிருபின் அளவு அதிகமாகி குழந்தையின் தோல், கண் வெண்ணிரப்பகுதி மஞ்சளாக மாறுகிறது.
3. பிலிருபின் அளவு இரத்தத் தில் எவ்வளவு இருக்க வேண்டும்?
சாதாரணமாக நிறைமாத குழந்தைகளுக்கு பிறந்த முதல் வாரத்தில் 2 mg / dlஐவிட அதிகமாக இருக்கும். பிறந்த 3 முதல் 5 நாட்களுக்குள் உச்சகட்ட அளவாக 6 to 8 mg / dl வரை சென்று பின் இரண்டு வாரங்களில் தானாக குறைந்துவிடும். குழந்தை பிறந்த முதல் வாரத்தில் பிலிரு பின் அளவு 12 mg/dlஐ தாண்டி விட்டால் இதை குறைக்க தேவையான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.
4) எப்போது மஞ்சள் வியாதிக்கு மருத்துவம் செய்ய வேண்டும்?
மஞ்சள், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் அதிகமாவது. பிலிருபின் 12 mg/dlஐவிட அதிகமாகுதல். இரத்தத்தில் பிலிருபின் குழந்தை பிறந்த 14 நாட்களுக் கம் மேலாக இருத்தல்.
5) மஞ்சள் நோய் கேடு விளைவிக்குமா?
பிலிருபின் அளவு இரத்தத்தில் அதிகமானால் குழந்தை மந்த நிலையில் இருக்கும். செவிப்புலன் பாதிக்கும். மூளை சேதத்திற்கு வழிவகுக்கும்.
6) சிகிச்சை
போட்டோதெரபி (Photo theraphy) தான் முதன்மையான சிகிச்சையாகும். பிலிருபின் மிகவும் அதிகமாகி மூளையை பாதித்தால் குழந்தையின் இரத்தத்தையே மாற்ற வேண்டி வரும். (Exchange transfusion)
7) போட்டோதெரபி என்றால் என்ன?
ஊதா நிற கதிரை உற்பத்தி செய்யும் (420nm to 480nm) ஒரு கருவியில் குழந்தையை படுக்க வைத்து அளிக்கும் சிகிச்சைக்கு போட்டோதெரபி என பெயர். இந்த போட்டோதெரபி இப்போது LEDயாலும் செய்யப்படுகிறது. இந்த ஊதா கதிர்கள் இரத்தத்தில் உள்ள பிலிருபினை லூமிரூபினாக (lumirubin) ஆக மாற்றி நீர் வழியாக வெளியேற்றி விடும்.
Dr. இரா.இளங்கோ M.B.B.S., Dip. CH - Dr. க.ஆனந்தி M.B.B.S., DGO, ஸ்ரீராம் மருத்துவமனை, ஆலங்குளம்
- நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.
- குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.
'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி'
என்கிறார், வள்ளுவர்.
போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.
போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப் பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதைக் காண முடிகிறது.
நீதிமன்றம் தடை
போதைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப் பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை மென்று உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.
சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது
பெங்களூரு எலகங்காவில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேத்தியும், கர்நாடக ஐகோர்ட்டு வக்கீலுமான நாகூர் ரோஜா கூறியதாவது:-
பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டத்தை மீறி அவற்றை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குறைந்தது ஓராண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். இந்த போதைப்பொருள் பயன்பாட்டை சட்டங்களால் மட்டுமே தடுத்து நிறுத்திவிட முடியாது. நாம் மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நான் பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியுள்ளேன். நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். தனிமையில் இருக்கும்போது வேறுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைப்பொருள் போன்ற விஷயங்களுக்கு அடிமையாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. குழந்தைகளை பள்ளி-கல்லூரிகளுக்கு அனுப்பினாலும் நாம் எந்நேரமும் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு நாகூர் ரோஜா கூறினார்.
பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்த விஜயன் கூறுகையில், 'பெங்களூருவில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே நாசமாகிவிடும். போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயன்படுத்துகிறவர்களை காட்டிலும், அதை விற்பனை செய்கிறவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், பயன்பாடு குறைந்துவிடும். இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குழந்தைகளை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் தினசரி என்ன செய்தனர், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார்.
வருத்தமாக இருக்கிறது
இதுபற்றி சிவமொக்காவைச் சேர்ந்த நெடுஞ்சாலை துறை காண்டிராக்டர் சுப்பிரமணி கூறியதாவது:-
பாக்கை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பான் மசாலா, குட்கா போன்ற போதை பாக்குகளை முதலில் ஒருவர் பயன்படுத்தும்போது அது அவருக்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது. பின்னர் அது அவர்களை தனக்கு அடிமையாக்கி விடுகிறது. மதுபானம் வாங்க குறைந்தது ரூ.100 ஆவது வேண்டும். ஆனால் போதை பாக்குகள் 5 மற்றும் 10 ரூபாய்க்கே கிடைக்கிறது. குறிப்பாக தொழிலாளிகள் பலர் அதை ஒரு உணவுப்பொருள் போல பயன்படுத்துகிறார்கள். வேலை நேரத்தில் அதை உபயோகித்துக் கொண்டே பணியில் ஈடுபடுகிறார்கள்.
முதலில் அவர்களுக்கு சுகத்தை கொடுக்கும் இந்த போதை பாக்குகள் பின்னர் அதை பயன்படுத்துவோரின் கண் பார்வை, கல்லீரல் உள்பட உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் செயலிழக்க செய்யும். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் இதை அதிகம் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு போதை பாக்குகளை பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை மத்திய, மாநில அரசுகள் கண்டும், காணாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
யோகா செய்வது அவசியம்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பகுதியைச் சேர்ந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் மூத்த சகோதரி சாரதா கூறியதாவது:-
பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் அனைவரும் உடல் ஆரோக்கியத்துக்கு கவனம் செலுத்த வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நாம் உன்னதமாக செலவிட வேண்டும். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டிய வழிகளை தேட வேண்டும். இளைஞர்கள் தங்கள் சந்தோஷத்துக்காக போதைக்கு அடிமையாகி வீட்டில் இருப்போரின் மகிழ்ச்சியை கெடுத்து விடக்கூடாது.
நமது உடல் கோவிலுக்கு சமமாகும். ஒரு கோவிலை நாம் எவ்வாறு தூய்மையாக வைத்து கொள்கிறோமோ, அதுபோல் நாம் நம் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் அனைவரும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் ஒஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆண்டியப்பன் என்கிற மூர்த்தி கூறியதாவது:-
இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறோம். இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் விவசாயிகள் காவல் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தண்ணீர் பாய்ச்சும் வேலையும் செய்வார்கள். அப்போது தூக்கம் வராமல் இருக்க போதை பாக்குகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிராமத்தில் வசித்து வரும் சில டிரைவர்கள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிகரெட் புகைப்பது மற்றும் போதை பாக்குகளை பயன்படுத்துவது போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி செய்தால் மட்டுமே அவர்களால் நீண்ட நேரம் தூங்காமல் வாகனத்தை ஓட்ட முடியும் என்று கூறுகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் அடிமையாகாமல் இருக்க இரவு நேரத்தில் டீ, காப்பி போன்றவற்றை குடிக்கலாம். அவற்றை குடிப்பதால் உடலுக்கு எந்தவித கோளாறும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் பண்ணூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி கூறுகையில், 'போதை தரும் பாக்குகள், புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றை பயன்படுத்துவோர் கண்ட, கண்ட இடங்களில் உமிழ்நீரை குதப்பி, குதப்பி துப்புகிறார்கள். குறிப்பாக பஸ்கள், ரெயில்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது மற்றவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன என்று பார்த்தால், அரசு தான் இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார், போதை பாக்குகள் மற்றும் புகையிலையை பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தடை விதிக்க வேண்டும்
இளைய சமுதாயத்தினர் போதைப்பொருளால் வாழ்க்கையை தொலைத்து வருவது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், டாக்டருமான பவன்குமார் கூறியதாவது:-
போதை தரும் பாக்குகள், மதுபானம், சிகரெட் என அனைத்து விதமான போதை பொருட்களும் மனிதர்களை அடிமையாக்க கூடும். குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் மட்டும் தான் நேரடியாக கிடைப்பதில்லை. மற்றபடி சிகரெட், மதுபானம், போதை தரும் பாக்குகள் போன்றவை சாதாரணமாக கடைகளில் விற்கப்படுகின்றன. அவை எல்லாம் அரசு அனுமதியோடுதான் விற்கப்படுகின்றன. கஞ்சா போன்ற போதைப்பொருள் மட்டுமே சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் போதை பொருட்களிடம் இருந்து இளைய சமுதாயம் ஒதுங்கி இருக்க வேண்டும். எதிர்கால சிந்தனை, வாழ்க்கை முறை, தங்களது குறிக்கோள்கள் போன்றவற்றை நோக்கி பயணிக்க வேண்டும். கல்வி, உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
புகையிலை, போதை பாக்குகள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும். புற்றுநோய், குடல் பிரச்சினை என பல்வேறு நோய்கள் ஏற்பட போதை பொருட்களே காரணம். போதை பொருட்கள் விற்பனையை அரசு அடியோடு நிறுத்த வேண்டும். அதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இளைய சமுதாயம் அதிலிருந்து மீண்டு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களின் இலவசப் பயண அட்டையை ரத்து செய்யலாம்.
- மாணவர்களுக்கு இலவச பயண சலுகை கொடுப்பது பாராட்டுக்குரியது.
படியில் பயணம், நொடியில் மரணம் என்ற வாசகம் பஸ்களில் இடம்பெற்று இருக்கும். ஏதோ கடமைக்கு எழுதப்பட்ட வாசகம் அல்ல அது. எச்சரிக்கை விடுக்கும் அந்த வாசகத்தை, இளைஞர்கள் எளிதாக எடுத்துக் கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது. இளம் கன்றுகள் பயம் அறியாது என்பது என்னவோ உண்மைதான். அதிலும் படித்தவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு பிள்ளைகளாக நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனை.
சென்னையை பொறுத்தவரையில், மாநகர பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து, ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் இளைஞர்களை நித்தமும் காண முடியும்.
ஒருபுறம் பஸ் பற்றாக்குறையால் இப்படி அவர்கள் செல்வதாகக் கூறினாலும், பெரும்பாலான பஸ்களில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும், படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வழக்கத்தைதான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் சில மாணவர்கள் பஸ் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு காலை தரையில் தேய்த்து 'ஸ்கேட்டிங்' செய்யும் விபரீத விளையாட்டையும் மேற்கொள்கின்றனர்.
சாகச பயணம்
படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால்தான், அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? கதாநாயகன் என்ற மிதப்பில் இவ்வாறு சாகசப் பயணம் செய்கின்றனர்.
அவர்களின் அத்துமீறல்கள் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும்கூட அச்சப்படச் செய்கின்றன.
அதுமட்டுமா? குழுவாக சேர்ந்து பாடுவது, தாளம் போடுவது, பஸ் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போடுவது போன்ற பொறுப்பற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
இதில் அந்த பஸ்சை இயக்கும் டிரைவர், கண்டக்டரின் நிலைதான் பரிதாபம். 'இவர்களிடத்தில் வாக்கப்பட்டு நாங்கள் படும் கஷ்டத்தை என்ன சொல்வது?' என்பதே அவர்களின் வேதனையாக வெளிப்படுகிறது.
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும், அவர்களின் போக்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? அவர்களின் இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்பன பற்றி ஆசிரியர்கள், கல்வியாளர், பஸ் டிரைவரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தண்டனை
பள்ளி ஆசிரியர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், 'இலவச பஸ் பயண அட்டை அரசு வழங்குகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பிரதான பொது போக்குவரத்தாக மாநகர பஸ் இருந்து வருகிறது. சேவைகள் குறைவாக இருக்கும் வழித்தடங்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க முடியாததுதான். ஆனால் அது ஆபத்தான ஒன்று. டிரைவரோ, கண்டக்டரோ, பொது மக்களோ கண்டிக்க முடியாது. போலீசார் அல்லது பள்ளிக்கூட நிர்வாகமோ, போக்குவரத்து கழகங்களோ இவர்களை தடுக்கலாம். தவிர்க்க முடியாமல் பயணிப்பவர்களைத் தவிர, வேண்டுமென்றே படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களின் இலவசப் பயண அட்டையை ரத்து செய்யலாம். பள்ளிகளில் போலீசார் இது பற்றிய விழிப்புணர்வை நேரடியாக வந்து ஏற்படுத்தலாம். அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்காத வகையில் தண்டனைகளை வழங்கலாம்' என்றார்.
கூடுதல் பஸ் வசதி
பஸ் டிரைவர் அசோகன் கூறும்போது, 'நான் 30 ஆண்டுகளாக டிரைவராக இருக்கிறேன். தற்போது சென்னையில் 6 ஆயிரம் பஸ் சேவைகள் வழங்க 'பெர்மிட்' இருக்கிறது. ஆனால் 2 ஆயிரத்துக்கும் குறைவான சேவைகளே வழங்கப்படுகிறது. இதுவும் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம். இதனால் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்கள். என் பணிக் காலத்தில் எவ்வளவோ மாணவர்களைப் பார்த்துவிட்டேன். அவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வரும்போது, அதட்டி உள்ளே வரச்சொல்லுவேன். அவர்கள் இவ்வாறு செய்வதால், அவர்களைத் தண்டிக்கக்கூடாது. அவர்களை சரிசெய்யவேண்டும். இது எங்களால் முடியாது. பள்ளி, கல்லூரி, குடும்பம், போலீசார் இணைந்து செய்தால் சரிசெய்ய முடியும். இவ்வாறு செய்யும் மாணவர்களை பிடித்து, உட்கார வைத்து பேசி, முழுமையான தீர்வுக்கு வரவேண்டும். இது ஒரு புறம் இருந்தாலும், அரசும் பொது மக்களின் வசதிக்காக கூடுதல் பஸ் வசதிகளை வழங்க வேண்டும்' என்றார்.
இலவச பயண அட்டை ரத்து
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், 'மாணவர்களுக்கு இலவச பயண சலுகை கொடுப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அதனை பெற்றுக்கொண்டு படிக்கட்டில் தேவையில்லாமல் தொங்கியபடி செல்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கான இலவச பயண அட்டையை ரத்து செய்ய வேண்டும். படிக்கட்டில் பயணம் செய்ய பஸ் டிரைவர், கண்டக்டர் அனுமதிக்கக்கூடாது. பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் பயணிக்கும் நேரங்களில் கூடுதலாக பஸ் சேவைகளை வழங்கலாம். அவ்வாறு செய்தால், மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். பஸ் படிக்கட்டு பயணம் குறித்த வாசகங்களை பஸ்களில் பெரிய அளவில் இடம்பெறச் செய்யவேண்டும். மற்ற விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட இது அவசியமானது. சமூக வலைதளங்களில் இதுபற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத்தலாம். இதையெல்லாம் செய்தால், படிக்கட்டு பயணம் குறையும்' என்றார்.
கண்டிப்பது சிறந்த வழி
கல்லூரி பேராசிரியை ஜெயந்தி கூறும்போது, 'கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் குழுவாக சேரும்போதுதான் அவர்கள் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். தன்மீது கவன ஈர்ப்பு வர வேண்டும் என்று நினைத்து இதுபோன்ற வீரசெயல்களை செய்கிறார்கள். இது அவர்களை மட்டும் சார்ந்தது அல்ல. அவர்கள் படிக்கும் கல்லூரி, அவர்களின் பெற்றோரையும் மற்றவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்கிறது. நாளைய சமுதாயமாக பார்க்கும் கல்லூரி மாணவர்கள், இந்த செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. படிக்கட்டில் தொங்குவது மட்டுமல்லாமல், பாடல், தாளம் என்ற பெயரில் மற்ற பயணிகளையும் துன்புறுத்துவது சரியாக இல்லை. பொழுதுபோக்கு என்பது மற்றவர்களை துன்புறுத்தாத வகையில் இருப்பதுதான் நல்லது. அளவுக்கு அதிகமாக செல்லும் எந்த செயல்களையும் கண்டிப்பதுதான் சிறந்த வழி. துறை சார்ந்த அதிகாரிகள் கண்டிப்பை கடினமாக்க வேண்டும். தேவையான விழிப்புணர்வு, ஆலோசனையும் அவர்களுக்கு வழங்குவது காலத்தின் கட்டாயம்' என்றார்.
- குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும்.
- குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கான பற்கள் பாதுகாப்பு குறித்து டாக்டர் வினுசியா பாலாஜி கூறுகையில், குழந்தைகள் பிறந்த 6 மாதங்களில் இருந்து பற்கள் வளர தொடங்கிவிடும். சிறு குழந்தைகளுக்கு விரலில் மாட்டிக்கொண்டு பல் துலக்கும் பிரஸ்(பிங்கர் பிரஸ்) மூலம் பல் துலக்க பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும். தூங்கும் முன்பு பால்குடிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் பல் துலக்கிவிட்டு தூங்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சம் ஈர துணியை கொண்டு குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.
முடிந்த வரை குழந்தைகளை வாயு நிரப்பட்ட குளிர்பானங்களை குடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீனிகளான சிப்ஸ் வகைகள், சாக்லேட் உள்ளிட்டவற்றை குறைக்க செய்யலாம். பல் சிகிச்சையை பொறுத்தவரை பெரியவர்களை விட குழந்தைகளுக்கு செய்வது மிகவும் கடினம்.
எனவே குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட, பற்களில் சொத்தை சேர்க்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.
மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம் என்றார்கள்.
- உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள்.
- குழந்தைகள் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள்.
உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் நிச்சயம் கிடைக்கும். தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்பாது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.
எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் அவனை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின் பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.
உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக்
கடைப்பிடியுங்கள்.
உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள் நிறைந்தவை,ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச் சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச்சாப்பிடுவான்.
எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். குழந்தைகள் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட உதவும்.
எப்போதும் பானங்களை உணவோடு கொடுக்காமல், அவன் சாப்பிட்ட பின்னரே கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவான்.
உங்கள் குழந்தை தினமும் சாப்பிடும் நேரத்திற்குச் சரியாகத் தானாக வந்து அமரும் படி அவனைச் சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்துங்கள். இப்படிச் செய்வதால்,அவனுக்கு அந்த நேரம் வந்து விட்டாலே தானாகப் பசி எடுக்கத் தொடங்கி விடும்.அதனால் நன்கு சாப்பிடுவான்.
உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறான் என்றால், பொதுவாகக் காலை நேரங்களில் சரியாகச் சாப்பிட மாட்டான். இதற்கு நேரமின்மை, அவசரம் என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்த ஒரு சூழலிலும் காலை உணவைத் தவிர்க்காமல் அவனை முழுமையாகச் சாப்பிட வைத்துப் பழக்குங்கள். இது மிக முக்கியமான ஒன்று.
இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு நன்கு பசி எடுத்துச் சரியான நேரத்திற்கு முழுமையான உணவைச் சாப்பிடச் செய்ய உதவும் என்று நம்புகின்றோம். மேலும், உணவில் பருப்பு, தயிர், நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரை வகைகள், முளைக் கட்டிய பயிர் வகைகள் என்று சமமாக அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு உணவை குழந்தைகளுக்கு தர முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவும்.
- பிள்ளைகளை ஆளாக்குவதில் பெற்றோரின் தியாகம் அளப்பரியது.
- பெற்றோர் - பிள்ளைகள் உறவு அற்புதமானது; ஆனந்தமானது.
பிள்ளைகளின் வளர்ச்சி பெற்றோரை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள். மகிழ்வெய்துகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதிலும், படிக்க வைப்பதிலும், அவர்களுக்கென்று உழைப்பதிலுமே பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்துவிடுகின்றனர்.
பெற்றோரும் பிள்ளைகளும் இருவேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் வளர்ந்த சூழல் வேறு. பிள்ளைகள் வளர்கின்ற சூழல் வேறு. அன்றைய பொருளாதார நிலை வேறு; இன்றைய பொருளாதார நிலை வேறு. மகன் என்பவன் தன்னுடைய தொடர்ச்சி. இதுதான் ஒவ்வொரு தந்தையின் எண்ணமும். ஆனால் மகனுக்கு இதில் உடன்பாடில்லை. அவன் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுகிறான். மாறுபட்ட ஒரு தனித்தன்மையை அவன் விரும்புகிறான். அதற்காகவே போராடுகிறான். எனவே மோதல் உருவாகிறது.
படிப்பு, வேலை, திருமணம் ஆகியவற்றில் பிள்ளைகளின் கருத்துகளைக் கேட்டறிவது மிக முக்கியம். அவர்களுக்குச் சுதந்திரம் அவசியம். ஆனால், அவர்களின் சிந்தனைகளும் தீர்மானங்களும் மிகச்சரியானவையாய் இருக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது பெற்றோரின் பொறுப்பு.
அவர்கள் எடுக்கின்ற தீர்மானம் அல்லது தேர்வு தவறானதாக இருந்தால், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, சரியான வழிக்கு அவர்களைக் கொண்டு வருவதும் பெற்றோரின் கடமைதான். பிள்ளைகளின் பேச்சை ஒருபோதும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது. எண்ணங்கள் மற்றும் ஆசைகளின் வெளிப்பாடுதான் வார்த்தைகள். அவற்றை அக்கறையுடன் கேட்க வேண்டும். அன்புடன் பேச வேண்டும். பேச்சுவாக்கிலேயே நல்ல விஷயங்களை அவர்கள் மனதில் விதைத்துவிட வேண்டும்.
கனிவான வார்த்தைகளுக்கு மட்டுமே உள்ளங்களை வசீகரிக்கின்ற ஆற்றல் உண்டு. முரட்டுத்தனமும் மூர்க்கக் குணமும் உள்ளங்களை வெல்வதே இல்லை. பெற்றோரையும் பிள்ளைகளையும் இடைவெளியின்றி இணைக்கின்ற பாலம் என்பதே புரிதலுடன்கூடிய அன்புதான். அதற்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்களில் பிள்ளைகளைப் பெரும்பிழையாய் பெற்றோரும், பெற்றோரைப் பெரும்பகையாய்ப் பிள்ளைகளும் பார்ப்பதற்கு என்ன காரணம்? சரியான புரிதல் இல்லை என்பதுதானே!
மகனின் போக்கு தந்தைக்குப் புரியவில்லை. தந்தையின் பேச்சு மகனுக்குப் பிடிக்கவில்லை. முரண்பாடுகளும் மோதல்களும் வலுத்துவிடுகின்றன. ஒருவருக்கொருவர் முகம் கொடுப்பதில்லை. எனவே பேசுகின்ற வாய்ப்பும் பறிபோய்விடுகின்றது. அது மிகமிக ஆபத்தான நிலை. இன்று எத்தனையோ குடும்பங்களில் பெற்றோர்கள் கண்ணீரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்பதே இல்லை. ஒரே வீட்டிற்குள் வெவ்வேறு திசைகளில் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய கொடுமை.
பிள்ளைகளை ஆளாக்குவதில் பெற்றோரின் தியாகம் அளப்பரியது. தங்களை வருத்திக் கொள்கிறார்கள். வியர்வை சிந்துகிறார்கள். அந்த நீரருந்தி முளைத்தெழுந்து வளர்ந்தோங்குகின்ற தருக்கள் நல்ல கனிகளைக் கொடுத்தால், அதுதான் பெற்றோரின் வியர்வைக்குக் கிடைக்கின்ற வெகுமானம். இருந்தும் பெரும்பாலான பிள்ளைகள் ஏன் அதை உணர்வதில்லை. தாய், தந்தையின் தியாகங்களும் கண்ணீரும் அவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது வாழ்க்கையின் அர்த்தமே விளங்க வில்லையா? என்னதான் கோளாறு. இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான பார்வைக் கோளாறுதான்.
பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் அதீத அன்பே பாதகமாகிவிடுவதும் உண்டு. இப்போதெல்லாம் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, அபின், ஹெராயின், பான் மசாலா போன்ற போதைப் பழக்கங்கள் அதிகளவில் பரவிக் கொண்டிருக்கின்றன. எனவே பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்களோ என்ற கவலை அவர்களின் மனதை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. எனவே தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கத் தொடங்குகிறார்கள். அது பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டுகிறது. தங்கள் உரிமைகளில் குறுக்கிடுவதுபோல் கருதுகிறார்கள்.
சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு நற்பண்புகளைப் பழம்போல் ஊட்ட வேண்டும். கொடூரச் சம்பவங்களையும், குடும்பச் சண்டைகளையும் அவர்களிடம் பேசக் கூடாது. மனதை பக்குவப்படுத்தக்கூடிய விஷயங்களைப் பேச வேண்டும். நீதிக் கதைகளை நிறைய சொல்ல வேண்டும். அப்படியெனில், அவர்கள் மனதில் தீய எண்ணங்கள் வேர்விடாது. நற்சீர் பொருந்தியவர்களாய் வளர்வார்கள்.
பிள்ளைகளிடத்தில் பெற்றோரும், பெற்றோரிடத்தில் பிள்ளைகளும் எதையும் சொல்லும் விதத்தில் சொன்னால் பலன் கிடைக்கும். யாராக இருந்தாலும் கோபமூட்டுவதைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், கோபம் தேவையற்ற வார்த்தைகளால் சிதறும். அந்த வார்த்தைகள் அக்கினி போல மனதைச் சுடும். அதனால், குடும்பத்திற்குள்ளேயே வெறுப்பும் பிரிவும் ஏற்படும்.
பெற்றோர் - பிள்ளைகள் உறவு அற்புதமானது; ஆனந்தமானது. வேலை, திருமண வாழ்க்கை என பிள்ளைகள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து செல்ல வேண்டிய காலம் வந்துவிடும். எனவே, கூடி இருக்கின்ற காலத்தைக் கொண்டாடி மகிழலாமே. உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் மற்றவர்கள்முன் மட்டம் தட்டிப் பேசாதீர்கள். அது அவர்களைத் தலைகுனியச் செய்வதுடன், அவர்களுக்குள் எஞ்சியிருக்கும் நம்பிக்கையையும் சாகடித்துவிடும்.
அவர்களின் திறமையைக் கண்டறிந்து பாராட்டுங்கள். அவர்கள் மேலும் மேலும் உயர்வார்கள். அவர்கள் நல்ல மனநிலையுடன் வாழ்வில் முன்னேறுவதற்கு, வீட்டில் இனிமையான சூழல் மிக அவசியம். எதிர்காலத்தைக் குறித்த நேர்மறையானச் சிந்தனைகளை அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருங்கள். அவர்கள் சோர்வடையும் போது, தோள்கொடுத்து ஆதரவாய் தட்டிக் கொடுங்கள். பெற்றோரின் அன்பான தொடுதல், பிள்ளைகளுக்கு மிகப்பெரிய பலத்தையும் தைரியத்தையும் கொடுக்கும்.
வாழ்வின் மதிப்பை உணர்த்துங்கள். உயர்ந்த லட்சியங்களுடன் வளரத் துணைபுரியுங்கள். அப்படியெனில், தீயவர்களுக்கும் தீய பழக்க வழக்கங்களுக்கும் விலகியே இருப்பார்கள். இப்போது பிள்ளைகளின் கைச்செலவிற்கு 'பாக்கெட் மணி' என்னும் பேரில் தாராளமாகப் பணம் கொடுக்கின்றோம். பல இளைஞர்கள் பாதை மாறிப் போவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே, பண விஷயத்தில் கட்டுப்பாடும் கண்டிப்பும் முக்கியம்.
உரிமைகளை வழங்கி, அவர்கள் சரியான பாதையில் பயணிக்க உதவ வேண்டும். அனைத்திற்கும் மேலாக, பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக பெற்றோர் விளங்க வேண்டும். பிள்ளைகள் வளர வளர, அவர்களின் பேச்சில் செயலில் மாற்றங்கள் ஏற்படும். அவற்றை கவனியுங்கள். அந்த மாற்றங்கள் நல்லவையாக இருந்தால், பாராட்டி ஊக்குவியுங்கள். தகாத மாற்றங்களாயின், தகுந்த முறையில் அன்புடன் அறிவுறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.
வெற்றிகளை ரசிப்பதுபோல், தோல்விகளையும் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்துங்கள். தோல்வி என்பது வெற்றிக்கான வழிதானே தவிர, அது வாழ்வின் முடிவல்ல என்பதை பிள்ளைகளின் மனதில் ஆணித்தரமாகப் பதியச் செய்யுங்கள். தோல்விகளை சவால்களாக ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகள்தான் வாழ்வின் அருட்பெருஞ்செல்வம் என்பதை எப்போதும் உங்கள் உள்ளத்தில் வையுங்கள். அன்பான குடும்பத்தைவிடவும் அழகான சொர்க்கம் வேறெங்கும் இல்லை.
- மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது.
- மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது.
ஒரு கட்டிடத்தின் அடித்தளம் வலுவாக இருந்தால் அந்த கட்டிடமும் வலுவானதாக இருக்கும். பலவீனமான அடித்தளம் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை பாதித்துவிடும். அதேபோல் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் மாணவப் பருவமே அவர்களுடைய எதிர்காலத்துக்கான அடித்தளம். அந்த அடித்தளம் நன்றாக அமைந்தால் அந்த மாணவன் வருங்காலத்தில் தன்னுடைய முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும்.
ஆனால் சமீபகாலமாக மாணவர் சமுதாயத்தை பேராபத்து சூழ்ந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. படிக்கிற காலத்திலேயே போதைப்பழக்க வழக்கங்களில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கிற பள்ளி மாணவர்களின் பைகளை சோதித்தால் போதை வஸ்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது மேலும் ஒரு படி மேலே போய் மாணவர்கள் சிலர் போதை மாத்திரைகளை உட்கொள்ளவும், போதை ஊசிகளை செலுத்தி கொள்ளவும் தொடங்கியுள்ளனர்.
மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது. பெற்றோர்கள் இதை உணர்ந்து தங்களது பிள்ளைகளை தற்காக்க விழித்து கொள்ள வேண்டிய காலம் இது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கருமண்டபம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்றதாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, உறையூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போதைமாத்திரை விற்ற அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இந்த சமூகவிரோத கும்பல் கல்லூரி மாணவர்களை இலக்காக வைத்து தங்களது வியாபார சந்தையை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரியில் படிக்கும் ஏதாவது ஒரு மாணவனிடம் நட்பை வளர்த்து கொண்டு அந்த மாணவன் மூலமாக மற்ற மாணவர்களிடம் போதைமாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள். அதற்கான பணத்தை ஆன்லைன் மூலமாக ஒரு குறிப்பட்ட எண்ணுக்கு செலுத்தியபிறகு தான் போதைமாத்திரைகள் அந்த மாணவர்களுக்கு சென்று சேரும்.
ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடுகிறது. ஒருகாலகட்டத்தில் படிக்கிற வயதில் சிகரெட் புகைத்தாலே, மதுகுடித்தாலே மிகப்பெரிய தவறு என்று இருந்த காலம் மாறி, தற்போது போதைமாத்திரை, போதை ஊசி என சர்வ சாதாரணமாக மாணவ சமுதாயத்துக்குள் உட்புகுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை ஒரு கும்பல் பாழ்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாவும் தலையெடுப்பார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.
இத்தகைய சூழலிலும் பெற்றோருக்கு அஞ்சி, ஆசிரிய பெருமக்களுக்கு அஞ்சி படிப்பில் கவனம் செலுத்தி போட்டி மிகுந்த உலகில் சாதிக்க துடிக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மாணவர்களையும் தீய நண்பர்களின் சகவாசம் கெடுத்துவிடுகிறது. மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது. பணத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற சமூகவிரோத கும்பல்களை பொறி வைத்து பிடித்து காவல்துறையினர் தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சுய ஒழுக்கம்
சவுராஷ்டிராதெருவை சேர்ந்த வக்கீல் சுதர்சன்:-
ஒவ்வொரு தனிமனித ஒழுக்கம் என்பது தற்போது உள்ள இளையதலைமுறையினரிடம் கெட்டுப்போய் கிடக்கிறது. போதை மாத்திரைகளை விற்கும் தனிப்பட்ட நபர்களின் சுயலாபத்துக்காக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகிறது. கல்லூரிகளில் நடக்கும் ஆண்டுவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மாணவர்களிடையே போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படித்து, சமூகத்தில் பெரிய அந்தஸ்துக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் மாணவர்களோ பிறந்தநாள் கொண்டாட்டம் என சில தீய நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வ நம்பிக்கையுடன்கூடிய தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பெற்றோர்களுக்கு கவனம் தேவை
எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சமூகஆர்வலர் குமார்:-
முதலில் பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆசிரியர்களும், போலீசாரும் பார்த்து கொள்வார்கள் என்றால் நமக்கான பொறுப்பு என்ன? என்பதை பெற்றோர் உணர வேண்டும். ஒரு மாணவன் தவறான பாதையில் செல்வதற்கு பெற்றோரின் கவனக்குறைவே முக்கிய காரணம். ஒவ்வொரு மாணவனின் பின்னாலும் தனித்தனி போலீஸ் வர முடியாது. பிள்ளைகள் வளர, வளர பெற்றோர், தம்பி, தங்கை பாசம், குடும்ப உறவுகளை மறந்து, கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கை என யோசிக்க தொடங்குகிறார்கள். தீயநண்பர்களுடன் சேர்ந்து அருவருப்பான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பீடி புகைப்பதையே பயந்து, பயந்து செய்து வந்தாா்கள். இப்போது அதையும் தாண்டி போதை மாத்திரை, போதை ஊசி என எந்தெந்த வகையில் எல்லாம் போதை கிடைக்கிறதோ? அதை தேடி சென்று விடுகிறார்கள். பெற்றோர் தட்டிக்கேட்டால் அவர்களை தாக்கும் அளவுக்கு போதை கண்ணை மறைத்துவிடுகிறது.
விளையாட்டின் தனித்தன்மை
முன்னாள் சர்வதேச தடகளவீரர் அண்ணாவி:-
பிள்ளைகளை விளையாட வைத்தால் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டுவிடுவார்கள். விளையாட்டு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர் எப்போதும் தன்னை உடல்ரீதியாக தகுதியாக வைத்து கொள்வார். அது தான் விளையாட்டின் தனித்தன்மை. ஆனால் இப்பேதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட, மதிப்பெண்கள் மீது தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தற்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒரு சில மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து மீண்டும் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டி உள்ளது. தற்போது போதை சாக்லேட் அதிகமாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. மாணவர்கள் விஷயத்தில் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டை ஊக்குவித்தால் போதைப்பழக்கத்தில் இருந்து நிறைய இளைஞர்களை காப்பாற்ற முடியும்.
தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்
திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) ஸ்ரீதேவி:-
போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க அரசு உத்தரவின்பேரில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திடீர் சோதனைகளை நடத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாரத்தான், வாகன பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம். இது தவிர, பள்ளிகளில் மாணவர்களிடம் போதைப்பழக்கம் குறித்த நடவடிக்கை தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த பள்ளிகளில் கமிட்டி ஆரம்பித்து போலீசாருடன் கலந்து ஆலோசிக்கவும் கூறி உள்ளோம்.
போதை மாத்திரைகள் விற்பனை குறித்து தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம். போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தனிப்படை போலீசார் அந்த கும்பலை பிடிக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் மாணவர்களிடம் இதுபோன்ற தீய பழக்கங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க பெற்றோரும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகம் இணைத்து ஒத்துழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






