search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    போதையில் வாழ்வை தொலைக்கும் இளைய சமூகம்
    X

    போதையில் வாழ்வை தொலைக்கும் இளைய சமூகம்

    • நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.
    • குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.

    புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.

    'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

    சான்றோர் முகத்துக் களி'

    என்கிறார், வள்ளுவர்.

    போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.

    போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப் பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதைக் காண முடிகிறது.

    நீதிமன்றம் தடை

    போதைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப் பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை மென்று உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

    பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.

    சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது

    பெங்களூரு எலகங்காவில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேத்தியும், கர்நாடக ஐகோர்ட்டு வக்கீலுமான நாகூர் ரோஜா கூறியதாவது:-

    பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டத்தை மீறி அவற்றை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குறைந்தது ஓராண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். இந்த போதைப்பொருள் பயன்பாட்டை சட்டங்களால் மட்டுமே தடுத்து நிறுத்திவிட முடியாது. நாம் மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நான் பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியுள்ளேன். நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். தனிமையில் இருக்கும்போது வேறுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைப்பொருள் போன்ற விஷயங்களுக்கு அடிமையாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. குழந்தைகளை பள்ளி-கல்லூரிகளுக்கு அனுப்பினாலும் நாம் எந்நேரமும் அவர்களை கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு நாகூர் ரோஜா கூறினார்.

    பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்த விஜயன் கூறுகையில், 'பெங்களூருவில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே நாசமாகிவிடும். போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயன்படுத்துகிறவர்களை காட்டிலும், அதை விற்பனை செய்கிறவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், பயன்பாடு குறைந்துவிடும். இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குழந்தைகளை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் தினசரி என்ன செய்தனர், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார்.

    வருத்தமாக இருக்கிறது

    இதுபற்றி சிவமொக்காவைச் சேர்ந்த நெடுஞ்சாலை துறை காண்டிராக்டர் சுப்பிரமணி கூறியதாவது:-

    பாக்கை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பான் மசாலா, குட்கா போன்ற போதை பாக்குகளை முதலில் ஒருவர் பயன்படுத்தும்போது அது அவருக்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது. பின்னர் அது அவர்களை தனக்கு அடிமையாக்கி விடுகிறது. மதுபானம் வாங்க குறைந்தது ரூ.100 ஆவது வேண்டும். ஆனால் போதை பாக்குகள் 5 மற்றும் 10 ரூபாய்க்கே கிடைக்கிறது. குறிப்பாக தொழிலாளிகள் பலர் அதை ஒரு உணவுப்பொருள் போல பயன்படுத்துகிறார்கள். வேலை நேரத்தில் அதை உபயோகித்துக் கொண்டே பணியில் ஈடுபடுகிறார்கள்.

    முதலில் அவர்களுக்கு சுகத்தை கொடுக்கும் இந்த போதை பாக்குகள் பின்னர் அதை பயன்படுத்துவோரின் கண் பார்வை, கல்லீரல் உள்பட உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் செயலிழக்க செய்யும். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் இதை அதிகம் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு போதை பாக்குகளை பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை மத்திய, மாநில அரசுகள் கண்டும், காணாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    யோகா செய்வது அவசியம்

    சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பகுதியைச் சேர்ந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் மூத்த சகோதரி சாரதா கூறியதாவது:-

    பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் அனைவரும் உடல் ஆரோக்கியத்துக்கு கவனம் செலுத்த வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நாம் உன்னதமாக செலவிட வேண்டும். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டிய வழிகளை தேட வேண்டும். இளைஞர்கள் தங்கள் சந்தோஷத்துக்காக போதைக்கு அடிமையாகி வீட்டில் இருப்போரின் மகிழ்ச்சியை கெடுத்து விடக்கூடாது.

    நமது உடல் கோவிலுக்கு சமமாகும். ஒரு கோவிலை நாம் எவ்வாறு தூய்மையாக வைத்து கொள்கிறோமோ, அதுபோல் நாம் நம் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் அனைவரும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் ஒஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆண்டியப்பன் என்கிற மூர்த்தி கூறியதாவது:-

    இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறோம். இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் விவசாயிகள் காவல் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தண்ணீர் பாய்ச்சும் வேலையும் செய்வார்கள். அப்போது தூக்கம் வராமல் இருக்க போதை பாக்குகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிராமத்தில் வசித்து வரும் சில டிரைவர்கள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிகரெட் புகைப்பது மற்றும் போதை பாக்குகளை பயன்படுத்துவது போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி செய்தால் மட்டுமே அவர்களால் நீண்ட நேரம் தூங்காமல் வாகனத்தை ஓட்ட முடியும் என்று கூறுகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் அடிமையாகாமல் இருக்க இரவு நேரத்தில் டீ, காப்பி போன்றவற்றை குடிக்கலாம். அவற்றை குடிப்பதால் உடலுக்கு எந்தவித கோளாறும் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் பண்ணூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி கூறுகையில், 'போதை தரும் பாக்குகள், புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றை பயன்படுத்துவோர் கண்ட, கண்ட இடங்களில் உமிழ்நீரை குதப்பி, குதப்பி துப்புகிறார்கள். குறிப்பாக பஸ்கள், ரெயில்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது மற்றவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன என்று பார்த்தால், அரசு தான் இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார், போதை பாக்குகள் மற்றும் புகையிலையை பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    தடை விதிக்க வேண்டும்

    இளைய சமுதாயத்தினர் போதைப்பொருளால் வாழ்க்கையை தொலைத்து வருவது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், டாக்டருமான பவன்குமார் கூறியதாவது:-

    போதை தரும் பாக்குகள், மதுபானம், சிகரெட் என அனைத்து விதமான போதை பொருட்களும் மனிதர்களை அடிமையாக்க கூடும். குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் மட்டும் தான் நேரடியாக கிடைப்பதில்லை. மற்றபடி சிகரெட், மதுபானம், போதை தரும் பாக்குகள் போன்றவை சாதாரணமாக கடைகளில் விற்கப்படுகின்றன. அவை எல்லாம் அரசு அனுமதியோடுதான் விற்கப்படுகின்றன. கஞ்சா போன்ற போதைப்பொருள் மட்டுமே சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் போதை பொருட்களிடம் இருந்து இளைய சமுதாயம் ஒதுங்கி இருக்க வேண்டும். எதிர்கால சிந்தனை, வாழ்க்கை முறை, தங்களது குறிக்கோள்கள் போன்றவற்றை நோக்கி பயணிக்க வேண்டும். கல்வி, உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

    புகையிலை, போதை பாக்குகள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும். புற்றுநோய், குடல் பிரச்சினை என பல்வேறு நோய்கள் ஏற்பட போதை பொருட்களே காரணம். போதை பொருட்கள் விற்பனையை அரசு அடியோடு நிறுத்த வேண்டும். அதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இளைய சமுதாயம் அதிலிருந்து மீண்டு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×