என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • இளைய தலைமுறையினர் இடையே தோல்வி பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது.
    • நல்லவற்றை கேட்டு, படித்து, நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இளைய தலைமுறையினர் சிலர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி நேரத்தை தொலைத்துக்கொண்டு இருக்கும் வேளையில், பலர் அவற்றை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி சமூகத்துக்கு உதவி வருகின்றனர்.

    தோல்வியைப் பற்றிய பயம் தான் இன்றைய தலைமுறையின் பலவீனம். ஏனெனில், பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு வெற்றி மட்டுமே பெருமையானது என்று சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையிலேயே வளர்க்கின்றனர். வாழ்க்கையில் தோல்வியும் வரும். அதன் மூலமும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை கற்றுக்கொடுக்க மறந்து விடுகின்றனர்.

    இதன் காரணமாக இளைய தலைமுறையினர் இடையே தோல்வி பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது. அதனால் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். உதாரணமாக, தேர்வில் தோல்வி அடைவதால் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதை சொல்லலாம். இந்த எண்ணத்தை மாற்ற, மாணவர்களின் மன நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இது ஆசிரியர்கள் நினைத்தால் மட்டும் முடியாது. பெற்றோர்களும், பிள்ளைகள் தோல்வி அடையும்போது அவர்களைத் திட்டாமல் தட்டிக்கொடுக்க வேண்டும். முதல் மாணவராகத் தான் வர வேண்டும் என்ற அழுத்தத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாது.

    வேலை தேடுபவர்கள் ஆரம்ப நிலையில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போதே அதில் கண்டிப்பாக தேர்வாகிவிட வேண்டும் என்று எண்ணக்கூடாது. அத்தகைய மனநிலையானது தோல்வியைச் சந்திக்கும்போது மிகுந்த சோர்வைத் தரும். அதற்கு பதிலாக இ்ண்டர்வியூவின் ஒவ்வொரு படிநிலையையும் அறிந்துகொண்டு, அதில் இருந்து தேவையான அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதால், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கான நேரம் குறைகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க நல்லவற்றை கேட்டு, படித்து, நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். சிந்தனைகளை சரியாக செதுக்கினால் அனைவரும் சிற்பமாக ஜொலிக்க முடியும். பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படாமல், மனநலம் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை சீராக வைத்து பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டும். இதைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்.

    • சில அறிகுறிகள் மூலம் கணித்துவிட முடியும்.
    • மலச்சிக்கலும் குழந்தையின் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம்.

    இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களின் துணை இல்லாமல், குழந்தையைத் தனியாக பராமரிக்கும் நிலை பல இளம் தாய்மார்களுக்கு உள்ளது. குழந்தை திடீரெனெ அழும்போது, அதற்கு காரணம் என்ன? என்று தெரியாமல் திணறுபவர்கள் இதில் அதிகம். குழந்தையின் அழுகைக்கு பசி, அசவுகரியம், வயிற்று வலி போன்ற பல காரணம் இருக்கும். இதில் வயிற்று வலி முதன்மையானது. குழந்தைகளின் அழுகை வயிற்று வலியால்தான் என்பதை, சில அறிகுறிகள் மூலம் கணித்துவிட முடியும். அது என்ன என்பதை பார்க்கலாம்.

    குழந்தையின் அழுகை, வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். ஏனெனில், சில நேரங்களில் அழுதாலும் பசியாறிய பிறகு அமைதியாகிவிடுவார்கள். அதனால் அழுகையின் காலத்தைக் கவனியுங்கள். குழந்தைகள் பால் குடித்த உடனே அதை துப்புகிறார்களா, வாந்தி எடுக்கிறார்களா அல்லது பால் குடிக்க மறுக்கிறார்களா என்பதையும் கண்காணியுங்கள். வழக்கத்துக்கு மாறான வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில் குழந்தைகள் மலம் கழிக்கும்போது முகத்தை சுளித்து அழுவார்கள். தசைகளை இறுக்குவார்கள். அசையாமல் இருப்பார்கள். இவையெல்லாம் குழந்தைக்கு வயிற்று வலி இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

    குழந்தையின் வயிற்றை உங்கள் கைகளால் தொட்டுப் பாருங்கள். வயிறு பூப்போன்று 'மெத்'தென்று இருந்தால், வயிறு வலி பிரச்சினை இல்லை என்று சொல்லலாம். வயிறு கடினமாகச் சற்று அழுத்தமாக இருந்தால், அது வயிற்று வலியாக இருக்கலாம். சில நேரங்களில் மலம் கழித்தவுடன் வயிறு இயல்பாக மாறிவிடும். ஆனால், சில சமயங்களில் மலம் கழித்தாலும் குழந்தையின் வயிறு கனமாக, அழுத்தும்போது கடினமாக இருக்கும்.

    இதுவும் வயிற்று வலியின் அறிகுறியாக இருக்கலாம். குழந்தையின் வயிறு பெருத்து இருந்தால், வயிற்றில் வாயு அதிகரித்திருக்கலாம். வாயு பிரச்சினை ஏற்பட்டாலும், அது வயிற்று வலியை உண்டாக்கலாம். மலச்சிக்கலும் குழந்தையின் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம். குழந்தை, பிறந்த சில வாரங்கள் வரை ஒரு நாளுக்கு 12 முறை வரை மலம் கழிக்கலாம்.

    ஆனால், முதல் சிலவாரங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறையும். பிறகு திடப்பொருட்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது தான் மலம் கழிப்பது அதிகரிக்கும். அதனால், குழந்தை மலம் கழிக்கும் முறைகளைக் கண்காணிப்பதன் மூலம், வயிறு வலிக்கு மலச்சிக்கல் காரணமா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

    பவுடர் பால் தரும்போது, சில நேரங்களில் அதை ஏற்றுக்கொள்ளாமல் குழந்தைகள் வயிற்றுக் கோளாறுகளை எதிர்கொள்ளலாம். இணை உணவு கொடுக்கும் போது, அவையும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். அவ்வாறு இருந்தால் வாந்தி போன்ற அறிகுறிகளும் இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தாலே வயிறு வலி என்பதை உணர்ந்துவிடலாம். தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

    • சறுக்கல் என்பது கவனக்குறைவால் ஏற்படுகிறது.
    • தோல்வியால் வெட்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

    எதிர்ப்பு, சவால், இழப்புகளை எதிர்கொண்டு வாழக்கூடிய தைரியத்தை தங்களது குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் போதிக்க வேண்டும். வெற்றி பெறும் வரை பயிற்சி அளிக்க வேண்டும்.

    அறியாமை, பயம், பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் ஆகியவை தான் ஒரு மனிதனை தற்கொலைக்கு தூண்டுகிறது. இது முட்டாள் தனமானது. தற்கொலை ஒரு கோழைத்தனமானது. எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகள் தோல்வி அடைந்தாலும் முயற்சி செய், உன்னால் சாதிக்க முடியும் என்று பெற்றோர் உற்சாகப்படுத்த வேண்டும். எனது தோல்வி ஒரு சறுக்கல்; அது வீழ்ச்சி அல்ல என்றார் ஆபிரகாம் லிங்கன். சறுக்கல் என்பது கவனக்குறைவால் ஏற்படுகிறது. தோல்வியால் வெட்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அதில் இருந்து மீண்டு, வெற்றி என்னும் இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

    எந்த ஒரு பிரச்சனையையும் தங்களிடம் பேச வேண்டும்.பிரச்சனைகள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும் என்றும் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

    • பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள்
    • குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன், டி.வி., கம்ப்யூட்டரை எப்போதும் உற்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள். 3 வயதை தொடாத குழந்தைகூட மொபைல் போனுடன் நேரத்தைக் கழிக்கிறது. நம் முந்தைய தலைமுறையில் இவ்வளவு அதிகமான குழந்தைகள், பார்வைத்திறன் குறைபாட்டால் கண்ணாடி அணியவில்லை. அப்படியென்றால், இப்போது மட்டும் ஏன் இந்த நிலைமை?

    ஸ்மார்ட்போனின் திரைக்கும், அதைப் பார்ப்பவருக்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் தொடர்ந்து நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் விரைவில் களைத்துப்போகிறது. இதனால், நாளடைவில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    இதைத்தவிர கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் 'டோபமைன்' என்ற வேதிப்பொருளை சூரிய ஒளி அதிகமாக சுரக்க வைக்கிறது. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

    சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் 'டி' கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அந்தக்காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், நீண்டநேரம் வீட்டுக்கே வராமல் கூட விளையாடினார்கள். ஆனால், இப்போது அதற்கு நேர் எதிரான நிலை இப்போது உள்ளது.

    எனவே கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    • உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் கொடூரமான நோய்தான் புற்றுநோய்.
    • லுகேமியா எனும் புற்றுநோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

    நமது உடல் உறுப்பில் சிலவகை செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து பெருகி உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் கொடூரமான நோய்தான் புற்றுநோய்.

    இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் பண்பு கொண்டது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகள் பெரியவர்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுகிறது.

    பெரியவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டாலும், லுகேமியா எனும் புற்றுநோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒன்று முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. இது ரத்த அணுக்களின் உற்பத்தியை தடுத்து, ஹீமோகுளோபின் அளவை பெருமளவில் குறைத்து, உடல் நிலையை சீர்குலைக்கிறது.

    இது தவிர மத்திய நரம்பு மண்டலத்தில் கட்டிகள், நியூரோபிளாஸ்டோமா போன்ற பல்வேறு புற்றுநோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் என்பதே பயமுறுத்தும் காரணியாக இருப்பின், அதுவே குழந்தைகளுக்கு ஏற்படும் போது இரட்டிப்பான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 5-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரை பறிக்கும் நோய்களில், புற்றுநோய் 9-வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு தீர்வு காணும் நோக்கத்துடன் உலக சுகாதார நிறுவனமானது புற்றுநோயினால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு புற்றுநோய் குறித்த முழுமையான புரிதல் இல்லாத வயதிலேயே, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றால் புற்றுநோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ந் தேதி (இன்று) சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • பெற்றோர் குழந்தைகளின் பயத்தை போக்க உதவ வேண்டும்.
    • பயத்தினை எப்படி கடந்து வர வேண்டும் என்பதையும் இங்கே காணலாம்.

    வளரும் போது பல புதிய விஷயங்களை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு ஒவ்வொரு வயதிலும் முதன்முதலாக புதிய அனுபவங்களை சந்திக்கும்போது, அவர்கள் மனதில் பயமும், தயக்கமும் உண்டாகும். பெற்றோர் இவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், தங்கள் குழந்தைகளின் பயத்தை போக்க உதவ வேண்டும். குழந்தைகள் எந்தெந்த வயதில் எதற்கு பயப்படுவார்கள் என்பதையும், அந்த பயத்தினை எப்படி கடந்து வர வேண்டும் என்பதையும் இங்கே காணலாம்:

    0 - 2 வயது: பிறந்த குழந்தைகளின் நரம்பு மண்டலம் முழுமையான வளர்ச்சி அடைவதற்கு சிறிது காலம் ஆகும். அதற்கு முன்பு ஏதேனும் பெரிய சத்தம் கேட்டால் அவர்கள் மிகவும் பயப்படுவார்கள். உதாரணத்திற்கு மின்னல், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, ரெயில் சத்தம், பட்டாசு போன்றவற்றுக்கு அஞ்சுவார்கள்.

    3 - 4 வயது: தொடக்கப் பள்ளியில் சேர்க்கும் குழந்தைக்கு தனது பெற்றோரைப் பிரிகிறோம் என்ற பயம் ஏற்படும். இருட்டான அறை, நிழல், தனியாக தூங்குதல், கடுமையான மின்னல் மற்றும் இடி சத்தத்திற்கு மிகவும் பயப்படுவார்கள். சில குழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் விளையாட தயக்கம் காட்டுவார்கள்.

    5 - 7 வயது: பள்ளியில் ஏதேனும் தவறு செய்து ஆசிரியர் கோபமாக பேசினால் மிகவும் வருத்தப்படுவார்கள். எதிர்பாராத வீடு மாற்றம், மருத்துவர் ஊசி போடுதல் போன்றவற்றுக்கு பயப்படுவார்கள். வீட்டில் தனியாக இருக்கும்போது, அவர்களே பல்வேறு விஷயங்களைக் கற்பனை செய்துகொண்டு அஞ்சுவார்கள்.

    8 - 10 வயது: இந்த வயதில் நன்றாக படிக்க வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற பயம் அதிகமாக இருக்கும். ஏதேனும் போட்டியில் கலந்து கொண்டால் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் அதிகமாக இருக்கும். பேய் கதைகளுக்கும், சிலந்தி, கரப்பான்பூச்சி போன்றவற்றுக்கும் பயப்படுவார்கள்.

    10 வயதுக்கு மேல்: தங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படுவார்கள்.தான் என்னவாக ஆக வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனையே அவர்களுக்கு பயமாக மாறிவிடும். சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சுய பாதுகாப்பை நினைத்து வருந்துவார்கள்.

    பயங்களை எதிர்கொள்ளும் வழிகள்: 1) பெற்றோர்களே, குழந்தைகளின் பயத்தைப் போக்க முடியும். குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, அவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் கூற வேண்டும். பயத்தினை எப்படி எதிர்கொண்டு கடந்து வர வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்க வேண்டும். 2) செல்லப்பிராணிகளை குழந்தைகள் எதிர்கொண்டால், பெற்றோர்கள் உடனிருந்து அதனுடன் எப்படி பழக வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். 3) குழந்தைகளுக்கு வெற்றி தோல்வி பற்றி தெளிவு படுத்த வேண்டும். 'எந்த விஷயமாக இருந்தாலும் வெற்றியோ, தோல்வியோ முக்கியமில்லை. அதற்கு நீ எடுக்கும் முயற்சி மட்டுமே முக்கியம்' என்று அவர்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டும்.

    • இந்த வயதில் ஹார்மோன் கோளாறுகளால் இனக்கவர்ச்சி ஏற்படுகிறது.
    • ஒரு சிலருக்கு காதல் வசமாகி விடுகிறது.

    13 முதல் 19 வயது வரையிலான காலகட்டம் தான் 'பதின்ம வயது' என்று தமிழிலும், டீன் ஏஜ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த வயதில் ஹார்மோன் கோளாறுகளால் இனக்கவர்ச்சி ஏற்படுகிறது. அது என்ன என்று புரிவதற்கு ஒரு சிலருக்கு காதல் வசமாகி விடுகிறது. அவர்கள் செய்யும் சாகசங்கள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கிறது.

    பதின்ம வயதில் ஏற்படும் நட்புறவு உடலில் புதிய இறகுகளையும், மனதில் அதுவரை இல்லா ஆனந்தத்தையும் அள்ளி தருகிறது. இதன் பின்விளைவுகளை சிந்திக்க மூளை வேலை செய்வது இல்லை. இதனால் பல நேரங்களில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே அந்த வயதில் நட்பு, தோழமை பாராட்டுவதில் ஆண், பெண் இடையே தெளிந்த நிலைபாடு இருக்க வேண்டும்.

    அப்போது தான் கருத்துவேறுபாடு எழும் போது பிரிதல் இயல்பானதாக அமையும். இல்லை என்றால் காதல் தோல்வி என்ற பெயரில் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதும், காதல் நிறைவேறவில்லை என்றால் ஒருவரின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வழக்குகள் அதிகரிப்பதையும் காண முடிகிறது.

    அது போன்ற விபரீதங்கள் நடப்பதை தடுக்கும் முன்னோட்டமாக தான், உனக்கு இப்ப 18 வயசு. படிக்கிற வயசு. இந்த வயசுல பெரியவங்க சொல்றது எல்லாம் தப்பா தெரியும். நாம என்ன செய்யுறமோ அது தான் கரெட்டா தோணும். ஏன்னா இது ரெண்டும் கெட்டான் வயசு. ஒன்றும் புரியாத வயசு. புத்திசாலிங்க என்ன செய்வாங்கன்னா இந்த வயசுல எந்த பெரிய முடிவும் எடுக்க மாட்டாங்க என்று அண்ணாமலை படத்தில் நடிகர் ரஜினிகாந்த், தனது மகளிடம் பேசுவது போல் ஒரு காட்சி அமைந்து இருக்கும்.

    பதின் பருவத்தில் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை உணர முடியும். இன்னும் சொல்ல போனால் இது அதிகமான குழப்பங்களை பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் கூட உருவாக்கும் ஒரு பருவம் எனலாம். பலவித ஹார்மோன்களை உடல் இந்த பருவத்தில் சுரக்கும். இதன் மூலம் நமது மனமும் மூளையும் அலை பாயும். இந்த மாற்றங்களை ஏற்க முடியாமல் மனமும் உடலும் தடுமாறும். இந்த குழப்பமான பதின் பருவத்து அனுபவம் ஒரு நல்ல ஆடவனை அல்லது பெண்மணியை உருவாக்கும்.

    பதின் பருவம் ஒரு சவாலான பருவம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பெற்றோரின் துணையுடன் மற்றும் புரிதலுடன் இந்த சவாலை எளிதில் சமாளிக்க முடியும். இதன் மூலம் அன்பு வெறுப்பு இரண்டையுமே சம்பாதிக்கும் நிலை வரும் ஆனால் இந்த பருவத்திற்கு பிறகு பெற்றோரும் பிள்ளைகளும் இன்னும் நெருக்கமாக இருப்பதை நிச்சயம் உணர முடியும்.

    • கணிப்பு அறிவியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
    • அனைத்து துறைகளிலும் அவருக்கான வேலைவாய்ப்பு உள்ளது.

    உங்களுடைய பகுப்பாய்வு திறன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து ஒரு புதுமையான வணிகத் தீர்வுகளை கொடுப்பதில் உங்களுக்கு ஆர்வமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் ஒரு அருமையான படிப்பு - கணிப்பு அறிவியல் (Actuarial Science). இதனை 'காப்பீட்டு கணிப்பு அறிவியல்' என்றும் குறிப்பிடுவர்.

    கணிப்பு அறிவியல் (Actuarial Science) என்பது ஒரு வணிகத்தொழிலில் உள்ள எதிர்கால மற்றும் நிச்சயமில்லாத நிதி ஆபத்துகளை கணிதம் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும் ஒரு உன்னதமான தொழில் படிப்பு ஆகும். அதிக ஊதியம் கிடைக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறைய தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் பல்வேறு நிதி பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கின்றன. இதுபோன்ற எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத நிதி ஆபத்துகளைக் கையாள உலகம் முழுவதும் கணிப்பு அறிவியலுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

    மேலும், கொரோனா பெருந்தொற்றால் நிறைய மக்கள் இறந்ததால் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மேல் மக்கள் கவனம் பெருவாரியாக திரும்பியுள்ளது. இதனால், ஆயுள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களிலும் கணிப்பு அறிவியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

    கணிப்பு அறிவியலாளர் பணி என்ன?

    கணிப்பு அறிவியலாளர் வெவ்வேறு விதமான தரவு மற்றும் தகவல்களை கணக்கிட்டு, எதிர்பார்க்காத மற்றும் விரும்பத்தகாத தோல்விகளுக்கான சாத்தியக்கூறுகளை தகர்த்தெடுக்க தேவையான அறிவியல் பூர்வமான அறிவுரைகளை வழங்குவார். நிதி ஆபத்து உள்ள அனைத்து துறைகளிலும் அவருக்கான வேலைவாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், அரசு நிதி துறை.

    நிதி கொள்கைகளை வடிவமைத்தல் மற்றும் போதுமான நிதி இருக்கிறதா என்பதை கண்காணித்தல்.

    காப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை தீர்மானித்தல்.

    இழப்புகளை குறைக்க காப்பீடு அபாயங்களை கண்காணித்தல்.

    பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுவதை கணித்து, காப்பீடு கொள்கைகளை உருவாக்கும்போது இந்த அபாயங்களை இணைத்துக்கொள்ளுதல்.

    நிறுவனத்தின் நிதி திட்டமிடுதலுக்கான அபாயத்தை மதிப்பிடுதல்.

    சேர்க்கை நடைமுறை

    இந்தியாவில் இந்தக் கல்வி கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கணிப்பு அறிவியல் (Actuarial Science) சார்ந்த இளநிலை பட்டப்படிப்பிற்கு இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்சுவாரீஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு மூலம் ACET (Actuarial Common Entrance Test) என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவின் சிறந்த கல்லூரியில் கணிப்பு அறிவியல் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், Institute of Actuaries (IAI) என்ற ஒருங்கிணைந்த அமைப்பில் உறுப்பினராகவும் இருக்க முடியும்.

    பொது நுழைவுத்தேர்வு

    கணிப்பு அறிவியல் கல்விக்கான பொது நுழைவுத்தேர்வு (ACET) ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்தப்படுகிறது.

    10 மற்றும் 12-ம் வகுப்பில் கணித பாடம் படித்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவர்.

    இந்தியாவில் கணிப்பு அறிவியல் கற்பிக்கும் சில கல்லூரிகள்:

    1) இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தா, 2) சேவியர் கல்லூரி, மும்பை, 3) மும்பை பல்கலைக்கழகம், மும்பை, 4) டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி, 5) லயோலா கல்லூரி, சென்னை, 6) மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை, 7) நேஷனல் இன்சூரன்ஸ் அகாடமி, புனே, 8) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி, மும்பை, கான்பூர், சென்னை மற்றும் ரூர்கீ. 9) பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.

    இந்த படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேரும் முன்பு அந்தக்கல்லூரி அரசு அங்கீகாரம் பெற்று இந்த படிப்புகளை வழங்குகிறதா மற்றும் படிப்பதற்கான வசதிகள் போன்றவற்றை மாணவர்கள் விசாரித்து தெரிந்து கொள்வது அவசியம்.

    முக்கிய தேதிகள்

    இந்த ஆண்டு நடைபெறும் கணிப்பு அறிவியல் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான (ACET) முக்கிய தேதிகள் விவரம் வருமாறு:

    விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-2-2023, மாலை 3 மணிக்குள்.

    நுழைவு தேர்வு நாள்: 18-3-2023, (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை)

    தேர்வு முடிவு அறிவிப்பு நாள்: 28-3-2023

    மேலும் கூடுதல் விவரங்களை https://actuariesindia.org என்ற இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    இந்தியாவில் கணிப்பு அறிவியல் பின்வரும் துறைகளில் செயல்படுகிறது

    ஆயுள் காப்பீடு

    பொது காப்பீடு

    மருத்துவ காப்பீடு

    மறுகாப்பீட்டு நிறுவனங்கள்

    ஓய்வூதிய நிதி ஆலோசனை அமைப்பு

    முதலீடுகள்

    அரசாங்க நிதி மேலாண்மை

    கல்விக் குழுமங்கள்

    நிறுவன இடர் மேலாண்மை

    செ. மதுக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ராமநாதபுரம்.

    • சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு மூளை அதிகமாக வேலை செய்யும்.
    • குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், மன அழுத்தம் குறையும்.

    அடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியே. கணிதப் பாடத்தின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக் கணக்குப் போடுவது மூளைக்கு மிக மிக ஏற்றது.

    நினைவாற்றல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு 'ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினைவாற்றல்' என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை! மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்..! இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் காரணங்களை பாருங்களேன். உங்களுக்கே உண்மை விளங்கும்.

    ''ஒரு மாணவனை எடுத்துக் கொள்ளுங்கள். பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கிறான். அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன. ஆனால், தேர்வறையில் இருக்கும்போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச் சென்றபிறகு நினைவிற்கு வந்தால், அதனால் ஏதாவது பலன் இருக்குமா? நிச்சயம் இல்லை. பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள். தேவைப்படும் நேரத்தில் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வருவதே சரியான நினைவாற்றல்.

    மூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது. ஒருவர் நூறாண்டுகள் வாழ்கிறார். இந்த 100 ஆண்டுகளில் ஒவ்வொரு வினாடியிலும் ஒரு சில விஷயங்களை நினைவில் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு விஷயங்களையும் அவர் நினைவில் சேகரித்து வைத்தால்கூட தனது மூளை செயல்திறனில் 10-ல் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறார். அந்தளவுக்கு திறன் வாய்ந்தது மனித மூளை'' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    ''சரி, நினைவாற்றலை எப்படி வளர்ப்பது'' என்பதற்கு, விஞ்ஞானிகள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

    ''உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பது போல மூளைக்கான பயிற்சியும் இருக்கிறது. இதற்கான பயிற்சியைச் செய்யும் போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். நினைவாற்றலையும் மேம்படுத்தலாம். அடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியே. கணிதப் பாடத்தின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக் கணக்குப் போடுவது மூளைக்கு மிக மிக ஏற்றது. அதேபோல ரெயில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட நேர இடைவெளி கடந்ததும் எத்தனை ஸ்டேஷன்கள் கடந் திருக்கிறோம் என்று நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

    சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு மூளை அதிகமாக வேலை செய்யும். மூளையில் இருக்கும் 'நியூரான்கள்' விவரங்களை வெளிக்கொணர வேகமாக ஆர்வம் காட்டும். குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது 'அட்ரினலின்' என்ற ஹார்மோன் சுரக்கும். அது குழந்தைகளின் நினைவாற்றலைக் கெடுக்கும். குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். அதிக புரோட்டீன் உணவுகளும் பயனளிக்கும்'' என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

    • குழந்தைகள் படிப்பு, வேலை காரணமாக பெற்றோர்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது..
    • குழந்தைகள் வீட்டை விட்டு சென்றவுடன் பெற்றோர்களின் மனது வெற்றுக் கூடு போல் ஆகிவிடுகின்றது..

    கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் வரை இருப்பதை பார்க்க முடியும்.. அதன் பிறகு குடும்பத்திற்கு இரண்டு அல்லது ஒரு குழந்தை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.அதேபோல் எனக்கு இருக்கும் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்ளவே ஒரு நாள் முழுவதும் சரியாக இருக்கின்றது என்று பல தாய்மார்கள் கூறுவதைப் பார்க்க முடிகின்றது..

    இதுபோல குழந்தைகளின் மேல் சிறப்பு கவனம் செலுத்தி வரும் தாய்மார்கள் குழந்தைகள் தங்களை விட்டு பிரிந்து படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் என்று தனியாக செல்லும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் "எம்டி நெஸ்ட் ஸிண்ட்ரோம்" அதாவது வெற்றுக் கூடு என்னும் மனதளவிலான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.கூட்டைவிட்டு பறவைகள் பறந்து சென்றவுடன் கூடு எப்படி தனியாக இருக்கிறதோ அதைப்போல வீட்டில் பேசிச் சிரித்து, கொஞ்சி மகிழ்ந்த குழந்தைகள் வீட்டை விட்டு பெற்றோர்களை விட்டு சென்றவுடன் பெற்றோர்களின் மனது வெற்றுக் கூடு போல் ஆகிவிடுகின்றது..

    குழந்தைகளும் வளர்ந்து படிப்பு, வேலை அல்லது திருமணம் காரணமாக பெற்றோர்களை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது..இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளைப் பிரிந்து மனதளவில் அதிகம்பாதிக்கப்படுவது பெற்றோர்களில் தாய்மார்களே என்று சொல்லலாம்.

    நம்முடைய குழந்தைகள் நம்மை விட்டு தனியே சென்று எப்படி வாழ்க்கையை வாழப் போகிறார்கள்? அவர்களை நம்மைப் போல் யார் கவனித்துக் கொள்வார்கள்? அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் செல்வார்களா?சரியான நேரத்திற்கு தங்கும் இடத்திற்கு திரும்பி விட்டார்களா?நாம் இவ்வளவு நேரம் முயற்சி செய்தும் ஏன் இன்னும் தொலைபேசியை எடுக்கவில்லை?நாம் சொல்வதை எங்கே கேட்கிறார்கள்?நமக்கு என்று வாழ்க்கையில் இனி என்ன இருக்கின்றது? இதுபோன்ற பல கேள்விகளும், விரக்தியான எண்ணங்களும் பெண்களுக்கு ஏற்படுகின்றது..

    ஒரு குறிப்பிட்ட வயது வரை நம்மையே சார்ந்திருந்த பிள்ளைகள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம்மைச் சாராது தன்னிச்சையாக முடிவெடுக்கும் பொழுது அதை ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும்.

    ஒரு பெற்றோராக உங்கள் பங்கு மாறிவிட்டது ஆனால், முடிவடைந்து விடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்.அவர்களுடைய எல்லா முடிவுகளையும் அவர்களே தன்னிச்சையாக எடுக்கக்கூடிய வயதை எட்டி விட்டார்கள்..அவரவர்களுக்கு என்று தனிப்பட்ட நேரம் தேவைப்படுகின்றது..நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும் பிள்ளைகளால் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை தெளிவாக சிந்தியுங்கள்.

    • குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும்.
    • மன மற்றும் உடல் நலனை பாதிக்கும்.

    தற்போதைய நவீன வாழ்க்கை முறை காரணமாக பல குழந்தைகள் இன்று உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் காணப்படுகின்றனர். உடல் பருமன் காரணத்தால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    இவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கும் பல நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உடல்பருமனால் ஏற்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு தகுந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை கற்று கொடுப்பது உடல் பருமனை குறைக்க நல்ல வழி.

    அத்தோடு சில குழந்தைகள் இப்போதெல்லாம் வயது மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்பதால், அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாழ்க்கை முறை தேர்வுகள், உளவியல் சிக்கல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பின்னணி உள்ளிட்ட சில காரணங்கள் காணப்படுவதோடு உடல் பருமன் கொண்ட நபர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

    அத்தோடு உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட அதிகம் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட மோசமான உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், மிட்டாய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

    அதிக எடை கொண்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 2 மடங்கு அதிகமாக காணப்படுவதோடு அதிக எடை இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    கழுத்து பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு காரணமாக காற்றுப்பாதைகள் மிகவும் சிறியதாகி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது, குறிப்பாக இரவில். இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், மரணத்திற்கு கூட வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் OSA நிலை இளம் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

    • குழந்தை பிறந்து 6 மாதம் வரையில் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
    • குடற்புழுக்களும் குழந்தைகளுக்கு பிரச்சினையை கொடுக்கக்கூடியது.

    குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பாக, குழந்தைகள் நல டாக்டர் எஸ்.முகுந்தன் கூறியதாவது:-

    நுண்ணூட்டச் சத்து குறைபாடால் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு, குழந்தை பிறந்து 6 மாதம் வரையில் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், கிரைப்வாட்டர், தேன், பசும்பால், பவுடர் பால், வாய் சூப்பான் போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

    அது கேடு விளைவிக்க கூடியது. 6 மாதத்துக்கு பின்னர் 12 மாதங்கள் வரைக்கும் குழந்தைகளுக்கான இணை உணவுகளையும், 2 வயது வரைக்கும் சத்து மாவுக்களையும் தயார் செய்து வழங்கலாம். இவ்வாறு வழங்குவதன் மூலம் குழந்தைகளின் சரியான ஊட்டச்சத்து அளித்து, ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க முடியும்.

    இதில் குடற்புழுக்களும் குழந்தைகளுக்கு பிரச்சினையை கொடுக்கக்கூடியது. காய்கறிகள், பழங்களை சுத்தம் செய்யாமல் சாப்பிடுவது, கடைகளில் தின்பண்டங்கள் அதிகம் சாப்பிடுவதால் குடற்புழுக்கள் அதிகமாக வருகிறது. இதற்கான மாத்திரையை 6 மாதத்துக்கு ஒருமுறை சாப்பிட வேண்டும். அவ்வாறு இருந்தும் பூச்சிகள் வரத்தான் செய்யும். இதற்கு நிரந்தர தீர்வு நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதேபோன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுப்பூசிகள் முக்கியத்துவம் பெறுகிறது. அரசு அளிக்கும் தடுப்பூசிகளை அதற்கென வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×