என் மலர்
குழந்தை பராமரிப்பு

டீன் ஏஜ் வயதும்... விபரீதங்களும்....
- இந்த வயதில் ஹார்மோன் கோளாறுகளால் இனக்கவர்ச்சி ஏற்படுகிறது.
- ஒரு சிலருக்கு காதல் வசமாகி விடுகிறது.
13 முதல் 19 வயது வரையிலான காலகட்டம் தான் 'பதின்ம வயது' என்று தமிழிலும், டீன் ஏஜ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த வயதில் ஹார்மோன் கோளாறுகளால் இனக்கவர்ச்சி ஏற்படுகிறது. அது என்ன என்று புரிவதற்கு ஒரு சிலருக்கு காதல் வசமாகி விடுகிறது. அவர்கள் செய்யும் சாகசங்கள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கிறது.
பதின்ம வயதில் ஏற்படும் நட்புறவு உடலில் புதிய இறகுகளையும், மனதில் அதுவரை இல்லா ஆனந்தத்தையும் அள்ளி தருகிறது. இதன் பின்விளைவுகளை சிந்திக்க மூளை வேலை செய்வது இல்லை. இதனால் பல நேரங்களில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே அந்த வயதில் நட்பு, தோழமை பாராட்டுவதில் ஆண், பெண் இடையே தெளிந்த நிலைபாடு இருக்க வேண்டும்.
அப்போது தான் கருத்துவேறுபாடு எழும் போது பிரிதல் இயல்பானதாக அமையும். இல்லை என்றால் காதல் தோல்வி என்ற பெயரில் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதும், காதல் நிறைவேறவில்லை என்றால் ஒருவரின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வழக்குகள் அதிகரிப்பதையும் காண முடிகிறது.
அது போன்ற விபரீதங்கள் நடப்பதை தடுக்கும் முன்னோட்டமாக தான், உனக்கு இப்ப 18 வயசு. படிக்கிற வயசு. இந்த வயசுல பெரியவங்க சொல்றது எல்லாம் தப்பா தெரியும். நாம என்ன செய்யுறமோ அது தான் கரெட்டா தோணும். ஏன்னா இது ரெண்டும் கெட்டான் வயசு. ஒன்றும் புரியாத வயசு. புத்திசாலிங்க என்ன செய்வாங்கன்னா இந்த வயசுல எந்த பெரிய முடிவும் எடுக்க மாட்டாங்க என்று அண்ணாமலை படத்தில் நடிகர் ரஜினிகாந்த், தனது மகளிடம் பேசுவது போல் ஒரு காட்சி அமைந்து இருக்கும்.
பதின் பருவத்தில் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை உணர முடியும். இன்னும் சொல்ல போனால் இது அதிகமான குழப்பங்களை பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் கூட உருவாக்கும் ஒரு பருவம் எனலாம். பலவித ஹார்மோன்களை உடல் இந்த பருவத்தில் சுரக்கும். இதன் மூலம் நமது மனமும் மூளையும் அலை பாயும். இந்த மாற்றங்களை ஏற்க முடியாமல் மனமும் உடலும் தடுமாறும். இந்த குழப்பமான பதின் பருவத்து அனுபவம் ஒரு நல்ல ஆடவனை அல்லது பெண்மணியை உருவாக்கும்.
பதின் பருவம் ஒரு சவாலான பருவம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. பெற்றோரின் துணையுடன் மற்றும் புரிதலுடன் இந்த சவாலை எளிதில் சமாளிக்க முடியும். இதன் மூலம் அன்பு வெறுப்பு இரண்டையுமே சம்பாதிக்கும் நிலை வரும் ஆனால் இந்த பருவத்திற்கு பிறகு பெற்றோரும் பிள்ளைகளும் இன்னும் நெருக்கமாக இருப்பதை நிச்சயம் உணர முடியும்.






