search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை மாத்திரைகள் புழக்கம்
    X

    மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை மாத்திரைகள் புழக்கம்

    • மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது.
    • மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது.

    ஒரு கட்டிடத்தின் அடித்தளம் வலுவாக இருந்தால் அந்த கட்டிடமும் வலுவானதாக இருக்கும். பலவீனமான அடித்தளம் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை பாதித்துவிடும். அதேபோல் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் மாணவப் பருவமே அவர்களுடைய எதிர்காலத்துக்கான அடித்தளம். அந்த அடித்தளம் நன்றாக அமைந்தால் அந்த மாணவன் வருங்காலத்தில் தன்னுடைய முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும்.

    ஆனால் சமீபகாலமாக மாணவர் சமுதாயத்தை பேராபத்து சூழ்ந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. படிக்கிற காலத்திலேயே போதைப்பழக்க வழக்கங்களில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கிற பள்ளி மாணவர்களின் பைகளை சோதித்தால் போதை வஸ்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது மேலும் ஒரு படி மேலே போய் மாணவர்கள் சிலர் போதை மாத்திரைகளை உட்கொள்ளவும், போதை ஊசிகளை செலுத்தி கொள்ளவும் தொடங்கியுள்ளனர்.

    மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது. பெற்றோர்கள் இதை உணர்ந்து தங்களது பிள்ளைகளை தற்காக்க விழித்து கொள்ள வேண்டிய காலம் இது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கருமண்டபம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்றதாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, உறையூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போதைமாத்திரை விற்ற அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

    போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இந்த சமூகவிரோத கும்பல் கல்லூரி மாணவர்களை இலக்காக வைத்து தங்களது வியாபார சந்தையை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரியில் படிக்கும் ஏதாவது ஒரு மாணவனிடம் நட்பை வளர்த்து கொண்டு அந்த மாணவன் மூலமாக மற்ற மாணவர்களிடம் போதைமாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள். அதற்கான பணத்தை ஆன்லைன் மூலமாக ஒரு குறிப்பட்ட எண்ணுக்கு செலுத்தியபிறகு தான் போதைமாத்திரைகள் அந்த மாணவர்களுக்கு சென்று சேரும்.

    ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடுகிறது. ஒருகாலகட்டத்தில் படிக்கிற வயதில் சிகரெட் புகைத்தாலே, மதுகுடித்தாலே மிகப்பெரிய தவறு என்று இருந்த காலம் மாறி, தற்போது போதைமாத்திரை, போதை ஊசி என சர்வ சாதாரணமாக மாணவ சமுதாயத்துக்குள் உட்புகுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை ஒரு கும்பல் பாழ்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாவும் தலையெடுப்பார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.

    இத்தகைய சூழலிலும் பெற்றோருக்கு அஞ்சி, ஆசிரிய பெருமக்களுக்கு அஞ்சி படிப்பில் கவனம் செலுத்தி போட்டி மிகுந்த உலகில் சாதிக்க துடிக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மாணவர்களையும் தீய நண்பர்களின் சகவாசம் கெடுத்துவிடுகிறது. மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது. பணத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற சமூகவிரோத கும்பல்களை பொறி வைத்து பிடித்து காவல்துறையினர் தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சுய ஒழுக்கம்

    சவுராஷ்டிராதெருவை சேர்ந்த வக்கீல் சுதர்சன்:-

    ஒவ்வொரு தனிமனித ஒழுக்கம் என்பது தற்போது உள்ள இளையதலைமுறையினரிடம் கெட்டுப்போய் கிடக்கிறது. போதை மாத்திரைகளை விற்கும் தனிப்பட்ட நபர்களின் சுயலாபத்துக்காக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகிறது. கல்லூரிகளில் நடக்கும் ஆண்டுவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மாணவர்களிடையே போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படித்து, சமூகத்தில் பெரிய அந்தஸ்துக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் மாணவர்களோ பிறந்தநாள் கொண்டாட்டம் என சில தீய நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வ நம்பிக்கையுடன்கூடிய தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.

    பெற்றோர்களுக்கு கவனம் தேவை

    எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சமூகஆர்வலர் குமார்:-

    முதலில் பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆசிரியர்களும், போலீசாரும் பார்த்து கொள்வார்கள் என்றால் நமக்கான பொறுப்பு என்ன? என்பதை பெற்றோர் உணர வேண்டும். ஒரு மாணவன் தவறான பாதையில் செல்வதற்கு பெற்றோரின் கவனக்குறைவே முக்கிய காரணம். ஒவ்வொரு மாணவனின் பின்னாலும் தனித்தனி போலீஸ் வர முடியாது. பிள்ளைகள் வளர, வளர பெற்றோர், தம்பி, தங்கை பாசம், குடும்ப உறவுகளை மறந்து, கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கை என யோசிக்க தொடங்குகிறார்கள். தீயநண்பர்களுடன் சேர்ந்து அருவருப்பான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பீடி புகைப்பதையே பயந்து, பயந்து செய்து வந்தாா்கள். இப்போது அதையும் தாண்டி போதை மாத்திரை, போதை ஊசி என எந்தெந்த வகையில் எல்லாம் போதை கிடைக்கிறதோ? அதை தேடி சென்று விடுகிறார்கள். பெற்றோர் தட்டிக்கேட்டால் அவர்களை தாக்கும் அளவுக்கு போதை கண்ணை மறைத்துவிடுகிறது.

    விளையாட்டின் தனித்தன்மை

    முன்னாள் சர்வதேச தடகளவீரர் அண்ணாவி:-

    பிள்ளைகளை விளையாட வைத்தால் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டுவிடுவார்கள். விளையாட்டு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர் எப்போதும் தன்னை உடல்ரீதியாக தகுதியாக வைத்து கொள்வார். அது தான் விளையாட்டின் தனித்தன்மை. ஆனால் இப்பேதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட, மதிப்பெண்கள் மீது தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தற்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒரு சில மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து மீண்டும் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டி உள்ளது. தற்போது போதை சாக்லேட் அதிகமாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. மாணவர்கள் விஷயத்தில் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டை ஊக்குவித்தால் போதைப்பழக்கத்தில் இருந்து நிறைய இளைஞர்களை காப்பாற்ற முடியும்.

    தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்

    திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) ஸ்ரீதேவி:-

    போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க அரசு உத்தரவின்பேரில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திடீர் சோதனைகளை நடத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாரத்தான், வாகன பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம். இது தவிர, பள்ளிகளில் மாணவர்களிடம் போதைப்பழக்கம் குறித்த நடவடிக்கை தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த பள்ளிகளில் கமிட்டி ஆரம்பித்து போலீசாருடன் கலந்து ஆலோசிக்கவும் கூறி உள்ளோம்.

    போதை மாத்திரைகள் விற்பனை குறித்து தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம். போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தனிப்படை போலீசார் அந்த கும்பலை பிடிக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் மாணவர்களிடம் இதுபோன்ற தீய பழக்கங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க பெற்றோரும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகம் இணைத்து ஒத்துழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×