என் மலர்
குழந்தை பராமரிப்பு

மாணவர்களே தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள்
- இளைய தலைமுறையினர் இடையே தோல்வி பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது.
- நல்லவற்றை கேட்டு, படித்து, நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இளைய தலைமுறையினர் சிலர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி நேரத்தை தொலைத்துக்கொண்டு இருக்கும் வேளையில், பலர் அவற்றை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி சமூகத்துக்கு உதவி வருகின்றனர்.
தோல்வியைப் பற்றிய பயம் தான் இன்றைய தலைமுறையின் பலவீனம். ஏனெனில், பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு வெற்றி மட்டுமே பெருமையானது என்று சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையிலேயே வளர்க்கின்றனர். வாழ்க்கையில் தோல்வியும் வரும். அதன் மூலமும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை கற்றுக்கொடுக்க மறந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக இளைய தலைமுறையினர் இடையே தோல்வி பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது. அதனால் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். உதாரணமாக, தேர்வில் தோல்வி அடைவதால் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதை சொல்லலாம். இந்த எண்ணத்தை மாற்ற, மாணவர்களின் மன நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இது ஆசிரியர்கள் நினைத்தால் மட்டும் முடியாது. பெற்றோர்களும், பிள்ளைகள் தோல்வி அடையும்போது அவர்களைத் திட்டாமல் தட்டிக்கொடுக்க வேண்டும். முதல் மாணவராகத் தான் வர வேண்டும் என்ற அழுத்தத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாது.
வேலை தேடுபவர்கள் ஆரம்ப நிலையில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போதே அதில் கண்டிப்பாக தேர்வாகிவிட வேண்டும் என்று எண்ணக்கூடாது. அத்தகைய மனநிலையானது தோல்வியைச் சந்திக்கும்போது மிகுந்த சோர்வைத் தரும். அதற்கு பதிலாக இ்ண்டர்வியூவின் ஒவ்வொரு படிநிலையையும் அறிந்துகொண்டு, அதில் இருந்து தேவையான அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதால், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கான நேரம் குறைகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க நல்லவற்றை கேட்டு, படித்து, நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். சிந்தனைகளை சரியாக செதுக்கினால் அனைவரும் சிற்பமாக ஜொலிக்க முடியும். பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படாமல், மனநலம் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை சீராக வைத்து பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டும். இதைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்.






