search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு காது கேளாமைக்கான காரணம் - தீர்வுகள் என்ன?: காது, மூக்கு, தொண்டை நிபுணர் விளக்கம்
    X

    குழந்தைகளுக்கு காது கேளாமைக்கான காரணம் - தீர்வுகள் என்ன?: காது, மூக்கு, தொண்டை நிபுணர் விளக்கம்

    • காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும்.
    • புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

    காது கேளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் காது கேளாமை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளில் 5 சதவீதம் பேரும், பெரியவர்களில் 8.5 சதவீதம் பேரும், மூத்த குடிமக்கள் 50 சதவீதம் பேரும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    காது கேளாமைக்கு காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வு என்ன? காதை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து கோவையில் உள்ள கொங்குநாடு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் எ.அனுபிரியா விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    காது கேளாமைக்கான காரணம்

    கேள்வி:- காது கேளாமைக்கான காரணம் என்ன?

    பதில்: பொதுவாக வெளி காது, நடு காது, உள் காது அல்லது செவி புலத்தில் ஏதாவது சேதம் ஏற்படுவதன் காரணமாக காது கேளாமை ஏற்படுகிறது. குறிப்பாக கன்டெக்டிவ், சென்சோநியூரல், இவை 2-ம் சேர்ந்து என்று 3 விதமான காது கேளாமை பிரச்சினை ஏற்படுகிறது.

    கன்டெக்டிவ் என்பது நடுத்தர மற்றும் வெளிப்புற காதில் ஏற்படும் பிரச்சினையால் வருகிறது. இது சரிசெய்யக்கூடியது. நோய் தொற்றுகள், காதின் மெழுகுகள், காதில் தேவையற்ற வெளிப்பொருட்களை நுழைத்தல், காதில் திரவம் உருவாதல், இஸ்டாசியன் குழாய் செயலிழப்பு, காதில் கட்டிகள், செவிப் பறையில் துளை போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.

    சென்சோநியூரல் என்பது உட்புற காதில் ஏற்படும் பிரச்சினைகளால் வருகிறது. இதற்கு முதுமை, தலையில் ஏற்படும் அதிர்ச்சி, ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள், கட்டிகள், மரபணு காரணிகள் மற்றும் குறைபாடுகள், அதிகப்படியான இரைச்சல் ஆகியவை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு மரபணு காரணிகள், காதில் மெழுகுகள், கிருமி தொற்று, நடுத்தர வயதினருக்கு செவிப்பறை துளைகள் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது. முதியோருக்கு கட்டிகள் காரணமாக ஏற்படுகிறது.

    பரிசோதனைகள் என்ன?

    கேள்வி: காது கேளாமைக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?

    பதில்: காதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் முதலில் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். எங்களிடம் காதை காட்சிப்படுத்த ஓட்டோஸ்கோப் என்ற கருவி உள்ளது. இதன் மூலம் காதின் மெழுகு, கிருமிகள், செவிப்பறை துளை ஆகியவற்றை எளிதாக கண்டறிய முடியும். டியூனிங்போர்க் என்ற கருவி மூலம் செவித் திறன் இழப்பின் அளவு, அவற்றின் வகையை மருத்துவ ரீதியாக மதிப்பிடலாம். செவித்திறன் இழப்பின் அளவு மற்றும் வகையை உறுதிப்படுத்த தூய தொனி ஒலி அளவீடு செவித்திறன் சோதனை அறிவுறுத்தப்படும்.

    சி.டி. ஸ்கேன், டம்போரல் எலும்பு, எம்.ஆர்.ஐ. போன்ற பிற ஆய்வுகள் நோயாளியின் நிலையை பொறுத்து தேவைப்பட்டால் அறிவுறுத்தப்படும். புதிதாக பிறந்த செவித்திறன் ஸ்கிரீனிங் திட்டம் அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு மாத வயதுக்கு முன்பே கேட்கும் பரிசோதனையை செய்யலாம். இதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

    சிகிச்சைக்கான வழிமுறைகள்

    கேள்வி: சிகிச்சைக்கான வழிமுறைகள் என்ன?

    பதில்: சரியான நேரத்தில் சிகிச்சை செய்தால் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம். காது மெழுகு வெளிப்புற தொற்றுகள் போன்ற சிறிய பிரச்சினைகளை வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கலாம். செவிப்பறை துளைகள், நடுத்தர காதில் திரவம், கட்டிகள் போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். காது துவாரம் காரணமாக ஏதேனும் தொற்று ஏற்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் மூட வேண்டும். செவித்திறன் இழப்பு மீளமுடியாவிட்டால் செவிப்புலன் உதவியை பயன்படுத்தலாம். ஓட்டோ-டாக்ஸிக் மருந்துகள் நிறுத்தப்பட்டால் செவித்திறன் இழப்பு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    மேம்பட்ட தொழில்நுட்பம்

    கேள்வி: மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் என்ன?

    பதில்: பிறக்கும்போதே காது கேளாத குழந்தைகளுக்கு காக்லியர் இம்பிளான்ட் முறையை பயன்படுத்தலாம். இது ஒரு மின்னணு சாதனம் ஆகும். இதை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி பயன் அடையலாம். இது சேதமடைந்த காது பகுதியை கடந்து செவி வழி நரம்புக்கு சிக்னல்களை கொண்டு செல்கிறது. ஒரு வயதுக்கு முன்பே இதை செய்தால் அந்த குழந்தைகள் மொழி வளர்ச்சிக்கு முன்பே அதிகபட்ச பலனை பெறுவார்கள்.

    போதுமான ஒலி- வாய்மொழி, மறுவாழ்வு மூலம் அவர்கள் சாதாரண செவித்திறன் கொண்ட மற்ற நபர்களை போலவே இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். இந்த அறுவை சிகிச்சையை 5 வயது வரை செய்யலாம். இந்த உள்வைப்புகளை இம்பிளான்ட் ஒன்று அல்லது 2 காதுகளுக்கும் வைக்கலாம்.

    பிரஸ்பைகசிஸ் கொண்ட பெரியவர்கள் செவிப்புலன் கருவியை காதுக்கு வெளியே பயன்படுத்தலாம். இப்போது மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் வெளிப்புறமாக தெரியாமல் காதிற்கு உள்ள செவிப்புலன் கருவியை வைக்க முடியும். எண்டோஸ்கோப் மூலம் இப்போது நடுத்தர காது அறுவை சிகிச்சையை சிறிய துளை மூலம் செய்யலாம்.

    செவிப்புலன் பரிசோதனை

    கேள்வி: காது பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

    பதில்: காது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இ.என்.டி. டாக்டரை அணுக வேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் வழக்கமான செவிப்புலன் பரிசோதனையை செய்ய வேண்டும். குடும்பத்தில் காது கேளாமை இருந்தால் சந்ததிகளை இ.என்.டி. மருத்துவ ஆலோசகரிடம் சீக்கிரம் அழைத்து வந்து பரிசோதனை செய்யலாம். சத்தமுள்ள இடத்தில் வேலை செய்யும்போது காது பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தலாம். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு செவிப்புலன் பரிசோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

    தவிர்க்க வேண்டும்

    கேள்வி: காதில் செய்யக்கூடாதது என்ன?

    பதில்: காதில் எந்த காரணத்தைக்கொண்டும் இயர்பட் பயன்படுத்தகூடாது. காது சொட்டு மருந்தை மருந்தகத்தில் வாங்கி ஆய்வு செய்யாமல் பயன்படுத்தகூடாது. சூடான எண்ணெய்யை காதுக்குள் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சத்தமாக இசையை கேட்பதை தவிர்க்க வேண்டும். காது கேளாமை என்பது முதுமை அடைந்தவர்களுக்கு மட்டும் என்று நாம் நினைக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×