என் மலர்
குழந்தை பராமரிப்பு
- பிறந்த குழந்தைக்கு முழுமையான ஊட்ட உணவு தாய்ப்பால்.
- 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.
ஐந்து மாதம் நிரம்பிய குழந்தைக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் தான். அது தான் சிறந்ததும்!! பிறந்து 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.பிறந்த குழந்தைக்கு முழுமையான ஊட்ட உணவு தாய்ப்பால். குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
தாய்-குழந்தை இடையே நல்ல பாசப்பிணைப்பை ஏற்படுகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. புத்திக் கூர்மையை உயர்த்தும்.
தாய்ப்பால் ஆன்டிபாடிகளை குழந்தைக்கு வழங்குகிறது. பல நோய்த் தொற்றுகளிலிருந்தும் குழந்தையைப் பாதுகாக்க உதவுகிறது. குழந்தைக்கு ஒவ்வொரு 3 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு மார்பகத்தின் இரு பக்கங்களில் இருந்தும் குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி உணவளிப்பதால் தாய்ப்பால் ஆரோக்கியமானதாகவும், அதிகப்படியான கொழுப்புச் சக்தி இல்லாததாலும் விளங்குகிறது.
முறையான பாதுகாப்பு முறைகள் பின்பற்றிய பிறகு சுகாதாரமான முறையில் பாலூட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அதாவது தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் உடனடி கர்ப்பம் தரிப்பது தவிர்க்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வருவது குறைவு.
தாயின் தேவையற்ற உடல் எடை குறையும். ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் தருவது மிகவும் அவசியம். அதற்குப் பிறகும் கூட பாதுகாப்பான, ஆரோக்கியமான திட உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுப்பதையும் தொடரலாம்.
5 மாதத்திலிருந்து தாய்ப்பாலோடு பசும் பால், ஏதேனும் பழச்சாறு, கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்து எடுத்த சாறு , பருப்பு வேகவைத்து எடுத்த சாறு போன்றவை கொடுக்கலாம்.
6 மாதத்திற்கு பிறகு இட்லி, வேகவைத்து மசித்தகாய்கறிகள்,பழக்கூழ், வாழைப்பழம், வேகவைத்த ஆப்பிள், நன்றாக பிசைந்த பருப்பு சாதம் ஆகியவை தரலாம்.
இதனுடன் சிறிது பட்டர் அல்லது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் சுவையாகவும், குழந்தைக்கு தேவையான கொழுப்புசத்தும் கிடைக்கும். ஆரம்பத்தில் காய்கறிகளாக கேரட், உருளைக்கிழங்கு, கீரையை பயன்படுத்தலாம்.
- ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது.
- குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும்.
குழந்தைகளின் உணவு எனும் போது சத்துக்களைத் தாண்டி ,குழந்தைகளின் எடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது குழந்தைகளுக்கு உணவளிப்பதன் முக்கிய நோக்கம் வளர்ச்சியுடன், அவர்களின் எடையையும் அதிகரிப்பது ஆகும்.
குழந்தைகள் பொதுவாக உணவு சாப்பிட அடம்பிடிப்பதால், அவர்கள் சாப்பிடுவது சிறிய அளவு உணவு என்றாலும் அது சத்து மிக்கதாகவும், குழந்தையின் எடை அதிகரிப்பதாகவும் இருக்கவே தாய்மார்கள் விரும்புகிறார்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளது.. இது ஒரு அதிக கலோரிகளைக் கொண்ட உணவும் ஆகும்.குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும். வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு. அவர்களுக்கு ஒரு தனி பழமாக கொடுக்கலாம். வாழைப்பழத்தை விரும்பாத குழந்தைகளுக்கு பான்கேக் (pan cake) , வாழைப்பழ பணியாரம், வாழைப்பழ கேக் செய்யும் போது அதில் கலந்து கொடுக்கலாம். அல்லது ஏனைய பழங்களுடன் சேர்த்து ஸ்மூதியாகவும் (Smoothie) கொடுக்கலாம். வெளியில் செல்லும் வேளைகளில் கூட, உங்களுடன் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு இலகுவாக கொடுக்கலாம்.
தானியங்களும் பருப்புவகைகளும் (Nuts & Grains)
அவல், கொண்டைக்கடலை, குரக்கன், தினை,சோளம் ,பயறு போன்ற தானிய வகைகள் மற்றும் கச்சான், பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளில் புரதம், மெக்னீசியம், கல்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இந்த வகை தானியங்களில் இறைச்சியிலிருந்து நாம் பெறுவதை விட அதிக புரதத்தை பெறலாம். அதோடு இவை இறைச்சி மற்றும் மீன்களை விடவும் மிகவும் மலிவாக இருப்பது இன்னும் நல்லது. ஆறு மாதத்திலிருந்து, குழந்தையின் உணவில் தானிய வகைகளை கஞ்சியாக ,கூழாக,களியாக சேர்க்கலாம்.
அவகாடோ
அவகாடோ அல்லது ஆனைக்கொய்யா என்பது ஒரு ஆரோக்கியமான பழமாகும். குழந்தைகளின் உணவில் அவகாடோவை சேர்ப்பது உடல் எடையை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும்.இது விட்டமின்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவாகும். இதனால் குழந்தைக்கு உணவு கொடுக்கும் ஆரம்ப நாட்களிலிருந்து கொடுக்கக்கூடிய மிகவும் சத்தான உணவாகும். குழந்தைகளுக்கு இதை நேரடியாகவோ அல்லது அவகாடோ ஜூஸ், அவகாடோ ஸ்மூதியாக தயாரித்துக் கொடுக்கலாம்.
நெய்
சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் வாங்கி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் இந்த சுத்திகரிக்கப்பட்ட நெய் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் ஏற்ற நல்லதொரு சத்தான உணவு. தனியாக மாத்திரமல்லாமல் பிற உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய இது உண்மையில் குழந்தைகளின் உணவிற்கு சேர்க்ககூடிய மிகவும் பயனுள்ள உணவாகும்.
சீஸ்
சீஸ் (பாலாடைக்கட்டி) மிகவும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதாவது சீஸ் என்பது கல்சியம், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது. இதனால் உப்பு சேர்க்காத சீஸ்களை குழந்தைக்குக் கொடுப்பது எடையை அதிகரிக்க உதவும்.
யோகர்ட்
வயது வந்தவர்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை கூட பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சிறந்த உணவு யோகர்ட் ஆகும். யோகர்ட்டில் கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் கல்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்து தேவைக்கும் , எடை அதிகரிப்புக்கும் சரியான வயதில் குழந்தைக்கு தயிரை வழங்கத் தொடங்குவது சிறந்தது. அதோடு வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும். பழங்கள் சேர்க்கப்பட்ட பலவிதமான யோகர்ட்களும் சந்தையில் கிடைக்கிறது.
இருப்பினும், அவற்றை குழந்தைக்கு கொடுப்பதற்கு ,உப்பு மற்றும் சர்க்கரையின் அளவுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அல்லது மருத்துவ ஆலோசனையின்படி பின்பற்றுவது மிகவும் நல்லது. இதைவிட சாதாரண தயிருடன் பழங்களைச் சேர்த்து கொடுக்கலாம். இப்படி நீங்களே வீட்டில் தயாரித்து கொடுப்பது மிக சிறந்தது.
- ஆண் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
- இந்தியாவில் 100-க்கு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது.
ஆட்டிசம் என்பது மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடாகும். இது தமிழில் 'மதி இறுக்கம்' என்றழைக்கப்படுகிறது. ஒரு வயது முதல் 3 வயது குழந்தைகள்தான் பெரும்பாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இந்தியாவில் 100-க்கு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது.
அதுவும் ஆண் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த குறைபாடு உள்ள குழந்தைகளின் பேச்சு, நடத்தை, மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் சில செயல்களை மட்டும் திரும்ப, திரும்ப, செய்துகொண்டிருப்பார்கள். ஆட்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
அதில் 6 மாத குழந்தைக்கு அறிகுறியாக புன்சிரிப்பு இல்லாமல் இருத்தல், மற்றவர்களை கண்ணோடு கண் பார்க்காமல் இருத்தல் இருக்கும் 9 மாத குழந்தைக்கு அக்கம்பக்கத்தில் ஒலிக்கும் சத்தங்களை உணராமை, மற்றவர்களின் முகபாவனைகளை உணராமை போன்றவை இருக்கும். மேலும் தனியாக இருக்க விரும்புவது, பேசுவதில் தாமதம், பேசியதையே திரும்ப பேசுதல், ஒரு செயலை மீண்டும் செய்தல் ஆகியவை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
கருவுற்ற பெண்கள் மன அழுத்தம், தைராய்டு பிரச்சினை, போலிக் அமிலம் குறைவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு வர வாய்ப்புள்ளதாம். ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்துவது சற்று கடினம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் குறைபாட்டை கண்டறிந்து டாக்டரின் வழிகாட்டுதல், தொடர் சிகிச்சைகளால் உடல்நலத்தில் பெரிய முன்னேற்றம் காணலாம். குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டை கண்டறிந்தால் மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களை மிகுந்த அன்போடும், அக்கறையோடும் பெற்றோர் நடத்துவது அவசியம்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி பெற்றோர் நம்பிக்கையுடன் காட்டும் அக்கறையும் குணப்படுத்த வல்லது. இதற்கிடையே பெரும்பாலான மக்களிடையே ஆட்டிசம் குறைபாடு பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் இல்லை. அந்த வகையில் பொதுமக்களிடையே ஆட்டிசம் குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமான இன்று அதனை பற்றி தெரிந்துகொண்டு ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவ முன்வருவோம்.
- தாலாட்டுவதற்கோ, தூங்கவைப்பதற்கோ அல்லது சிலர் கோபத்திலோ குழந்தைகளின் தலையைக் குலுக்குவார்கள்.
- எந்த நிலையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் தலையசைப்பது நல்லதல்ல.
குளித்து முடித்தவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பெரும்பாலானவர்கள் காதுக்குள் சென்றிருக்கும் தண்ணீரை அகற்றத் தலையை வேகமாக அசைத்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள். இப்படிச் செய்வதனால் சிறிய குழந்தைகளின் மூளை பெரிதளவு பாதிப்படையும் என்று அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகம் (Cornell University) மற்றும் வெர்ஜீனியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலையை வேகமாக அசைப்பதனால் பெரியவர்களைவிடக் குழந்தைகளே அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்தப் பிரச்னை இன்றும் தொடர்கிறது. தாலாட்டுவதற்கோ, தூங்கவைப்பதற்கோ அல்லது சிலர் கோபத்திலோ குழந்தைகளின் தலையைக் குலுக்குவார்கள்.
அதுபோன்ற நேரத்தில் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். மெல்லிய தலையுடைய குழந்தைகளின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள், லேசாக அசைத்தாலும் பாதிப்புகள் ஏராளம். அப்படி இருக்கும்போது காதுக்குள் சென்ற நீரை வெளியே எடுக்கத் தலையைச் சற்று கடுமையாக அசைக்கும்போது, ரத்தக் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
காதுக்குள் இருக்கும் குழாய் பகுதி வயதானவர்களுக்கு நீண்டு இருப்பதனால், பெரியவர்களுக்கு அவ்வளவாக பாதிப்புகள் இருக்காது. ஆனாலும், எந்த நிலையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் தலையசைப்பது நல்லதல்ல. மேலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், காதுக்குள் சென்ற நீர் தானாகவே ஆவியாகி வெளியேறிவிடும்.
தலையசைத்து நீரை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். காதுக்குள் செல்லும் நீர் உறுத்துவதால் மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறோம் என்பதை உணர்ந்து குழந்தைகளையும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
- முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.
- காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.
குழந்தைகள் சிறப்பாக வளர பிறந்த முதல் நாளில் இருந்து 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம்.
முதலில் தாய்ப்பால் மட்டுமே போதும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை. வியாதிகளை தடுக்கும் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் மட்டுமே இயற்கையாக உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை மடியில் வைத்து கொடுக்க வேண்டும். பால் கொடுத்த உடனே படுக்க வைக்காமல் 20 நிமிடம் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன்பிறகு மெது, மெதுவாக திட உணவுகளை கொடுக்கலாம். காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.
6 முதல் 8 மாதம் வரை அரிசி கஞ்சி, ராகி கஞ்சி, வேக வைத்த காய்கறி அதாவது வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றை சுழற்சி முறையில் ஊட்டலாம். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றை வேக வைக்காமல் மசித்து மட்டும் கொடுத்தால் போதுமானது. பழச்சாறுகளும் கொடுக்கலாம்.
9 மாதம் முதல் 1 வயது வரை நெய்யுடன் கீரை சேர்த்து பருப்பு சாதம், கீரை சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை கொடுக்கலாம். புரதச்சத்துடைய உணவு அதாவது பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி வகைகளை நன்றாக வேக வைத்து நாளுக்கு ஒரு தடவை ஊட்டலாம். தினமும் 2-3 பேரீச்சம் பழம் தரலாம். இட்லி, இடியாப்பம், வேக வைத்த இறைச்சியின் சாறு, கோழி மற்றும் இறைச்சியால் செய்த சூப், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை கொடுக்கலாம். உணவில் கலோரி அதிகரிக்க சிறிது நெய்யோ, தேங்காய் எண்ணெய்யோ விடலாம்.
ஒரு வயதுக்கு மேல் சராசரி குடும்ப சாப்பாட்டை கொடுக்க ஆரம்பிக்கும் நேரம் என தக்கலை குமார் மருத்துவமனை மணலி குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.கே.சஜித்குமார் தெரிவித்துள்ளார்.
- தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும்.
- படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.
தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.
நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.
மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும். குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.
பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?
திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.
மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.
- படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள்.
- உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம்.
நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல் புரியாமலேயே மனத்தில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆதலால், நினைவில் வைத்துக்கொள்வது எப்போதும் ஒரு பிரச்சினையே அல்ல. வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும், பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. அந்தத் தடையை எப்படி வெல்வது?
படித்தவற்றைச் சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்கு கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்குப் பிடித்த பழங்களையோ, கடலைகளையோ, உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள்.
படிப்பதைவிட மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள். வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது. படிக்கும்போதும், சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றைத் திரும்ப வாசிப்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும்.
படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரிலிருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்கு வந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும். கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களிலிருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன்மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம்.
காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஜாக்கிங்கூடச் செல்லலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது.
- ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது.
உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப் புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள். உலக ஆட்டிசம் தினம், கடந்த 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. ஆட்டிசம் நோயல்ல, மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே.
இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இந்த குறைபாட்டை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம். இந்தியாவில் 20 லட்சம் பேர் இந்த குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.
மேலும் இந்த அளவானது ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. இவர்களுக்கு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள். அதை சிறந்த பயிற்சியின் மூலம் வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் முழு பொறுப்பு.இந்த குழந்தைகளின் பிரதான பிரச்சினை மற்றவர்களோடு பழகுவது தான். மனதளவிலும், உடலளவிலும் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இவர்களால் மேம்பட்டு செயல்பட முடியும். குழந்தை பிறந்தவுடன் ஆட்டிசம் உள்ளதா? என்பதை முகபாவனை உணராமை, சத்தங்களை உணர முடியாமல் இருப்பது, கண்ணோடு கண் பார்க்காமல் இருப்பது, தனியாக இருப்பதை விரும்புதல், சொற்களை திரும்ப திரும்ப பேசுதல், பேசுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியான காரணங்கள் குறைவு தான். சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக் கொள்வது, மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது.
நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி இயல்பான வாழ்க்கையை அளிக்கும் சிகிச்சைகள் உள்ளன. முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதால் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகம் தேவை. இவர் களுக்கென தனி சிறப்பு பள்ளிகள் உள்ளன. அரசின் சார்பில் இவர்களுக்கு அனைத்து தெரபிகளும் வழங்கும் மையங்கள் மருத்துவ கல்லூரிகள் என்ற அளவில் தான் உள்ளது. அரசானது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆட்டிசத்துக்கான சிகிச்சையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் சிகிச்சைகளும் எளிமையாகும், விழிப்புணர்வும் அதிகரிக்கும்.
- குழந்தைகளை குளிப்பாட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
* குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.
* பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.
* குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.
* குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.
* தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.
* வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
* தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
* குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.
* குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.
* குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
குளிர்காலத்தில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்பாஞ்ச் மூலம் உடலை துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை குளிப்பாட்ட வேண்டும் என்று முடிவு செய்தால் சூடான வெந்நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தையின் தோல் சூடான வெந்நீரால் சேதமடையும். எனவே சூடான வெந்நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்ட பயன்படுத்த வேண்டும்
பெரும்பாலும் குழந்தையை குளிர்ந்த தண்ணீரில் குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தால் குழந்தைக்கு சளி காய்ச்சல் உள்பட சில உபாதைகள் வரலாம்.
குழந்தையின் உடல்நிலை பேணுவதற்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் செய்யலாம் குழந்தைகளுக்கான தரமான எண்ணெய் வாங்கி குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்
அதே போல் குழந்தைகளை பாதுகாக்க சரியான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்ததந்த பருவ நிலைக்கு ஏற்ற ஆடைகளையே குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
- மேலே கூறிய இந்த முறைகளை பின்பற்றி பிறந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
- டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை.
- கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
ஏடீஸ் (Aedis) கொசுக் களால் பரப்பப் படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை
டெங்கு காய்ச்சலின் அறி குறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோல் சிவப்பு ஆகுதல் (Skin Rash) சில கடுமையான சந்தர்ப்பங்களில் டெங்கு காய்ச்சல் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு வழிவகுக்கும், இது இரத்தப்போக்கு, குறைந்த அளவிலான இரத்த தட்டுக்கள் மற்றும் அபாயகரமான அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தே கிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவது அவசியம்.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பாதிப் புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முறையை பற்றி கூறுக?
டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதே வைரஸ் பரவாமல் தடுக்க ஒரே வழி
டெங்கு காய்ச்சலைத் தடுக்க சில வழிகள்:
கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றவும், ஏடிஸ் கொசு தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. எனவே பூந்தொட்டிகள் , வாளிகள், தூக்கி எரியக்கூடிய டயர்கள் உட்பட உங்கள் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது அவசியம். கொசு விரட்டியை பயன்படுத்துங்கள். கொசுக்கள் வராமல் இருக்க தோல் மற்றும் ஆடைகளில் கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள். கொசுக் கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீண்ட கை சட்டை மற்றும் பேன்ட்களை அணியுங்கள்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க திரைகளைப் பயன்படுத்தவும். மேலும் கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்போது விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைக்கவும். டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக் சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக்குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட்டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு காய்ச்சல அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.
டெங்குவினால் மூளைக்காச்சல் வருமா?
மிகவும் அரிதாக வரலாம். ஒருசில நேரங்களில் டெங்கு வைரஸ் மூளை நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். அப்படி பாதிப்பிற்கு உள்ளானால் தலைவலி, வாந்தி, மயக்க நிலை மற்றும் வலிப்பு ஏற்படலாம். உடனடி தீர்வு சிகிச்சை செய்வது அவசியம்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவ மனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவ னந்தபுரம் சாலை, பாளை யங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783.
- இப்போதுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை
- குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
இன்றைய வேகமான உலகில் வயதில் பெரியவர்கள் மட்டுமல்லாது வயதில் சிறிய குழந்தைகளும் கொலஸ்ட்ரால் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.முன்னர் இருந்தது போல இப்போதுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, செல்போன் மற்றும் டிவிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.இதுபோன்ற உட்கார்ந்த வாழ்க்கை மற்றும் அதிகப்படியான நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் இன்றைய கால குழந்தைகள் இளம் வயதிலேயே அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர்.உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது இரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக்கை உருவாக்க காரணமாக இருக்கிறது.இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயத்தின் ஆரோக்கியம் மோசமடைகிறது.
உடல் பருமன், ஜீன், மோசமான உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடலில் கொலஸ்டராலின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.பெரும்பாலும் குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்பதால் நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர்கள், பிரஞ்சு ப்ரைஸ் மற்றும் சிப்ஸ் போன்ற எண்ணெயில் வறுத்து பொறித்த உணவு வகைகளை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.இதுதவிர இனிப்பு சுவை அதிகம் நிறைந்த பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள் மற்றும் கேக் போன்ற இனிப்புப் பொருட்களை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது.ஏனெனில் அவற்றில் நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.குழந்தைகளுக்கு கொலஸ்டராலின் அளவை குறைக்க அவர்களை உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும்.தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தையின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.
- கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
சமீபத்தில், தன் மருத்துவமனைக்கு அருகிலிருந்த பள்ளி ஒன்றில் உள்ள மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யச் சென்றிருந்தார் கண் மருத்துவ நண்பர் ஒருவர். அப்போது 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவர், தனது கண் மங்கலாகத் தெரிவதாகவும், தான் அணிந்திருக்கும் கண்ணாடியின் 'பவர்' அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதாகவும், கரும்பலகையில் எதையாவது எழுதி ஆசிரியர் படிக்கச் சொன்னால் கண்ணாடி போட்டாலும் சரியாகத் தெரியவில்லை என்றும் புலம்பியிருக்கிறார்.
அந்த மாணவனின் கண்களைப் பரிசோதித்தபோது அவருக்கு 'கேரட்டோகோனஸ்' (keratoconus) என்ற கருவிழிக் கோணல் பார்வை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக கொலாஜன் கிராஸ் லிங்க் (collagen cross linking) என்ற சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய கருவிழி பாதிப்பு அதிகமாவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும், பக்கத்தில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், நன்றாகப் படிக்காதவர்கள், நோட்டில் அடித்து அடித்து எழுதுபவர்கள் ஆகியோரை அழைத்து வாருங்கள் என்று அந்த மருத்துவர், ஆசிரியர்களிடம் கூறினார். மாணவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவர்களில் பலருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு மாணவன், ஆசிரியர் பாடம் நடத்தும்போது கரும்பலகையில் உள்ள எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லையென்றால் பக்கத்துப் பையனைப் பார்த்து 'காப்பி' அடிப்பான். அப்போது நோட்டில் அடித்து அடித்து எழுதுவான். இப்படி இருந்தால் உடனடியாகக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இப்படியான மாணவர்களைக் காண நேர்ந்தால், உடனே அவர்களைத் திட்டவோ அடிக்கவோ செய்யாமல், ஒவ்வொரு மாணவனையும் கடைசி பெஞ்சில் அமர வைத்து, அதாவது இருபது அடி தூரத்தில் அமரவைத்து ஒரு கண்ணைக் கையால் மூடிக்கொண்டு மற்றொரு கண்ணில் கரும்பலகையில் எழுதுவது தெரிகிறதா என்று ஆசிரியர் பரிசோதிக்க வேண்டும். பெரும்பாலும் வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.
மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதுகுறித்து விளக்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பார்வையைக் கொடுப்பது நம் சமூகக் கடமை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் உணர வேண்டும். நல்ல பார்வையே தொலைநோக்கில் பார்வையைக் கொடுக்கும்!






