என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளுக்கு மில்க்‌ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழத்தை வைத்து சூப்பரான மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாம்பழம் - 2
    குளிர்ந்த பால் - 2 கப்
    வென்னிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்
    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் பால் மற்றும் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து இறக்கி பரிமாறினால், மாம்பழ மில்க் ஷேக் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

    வைட்டமின் ‘ஏ’

    வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

    முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

    வைட்டமின் ‘பி’

    வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

    கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    வைட்டமின் ‘சி’

    வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

    ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    வைட்டமின் ‘டி’

    வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

    போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

    வைட்டமின் ‘ஈ’

    வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.

    கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்
    இரண்டாவது பிரசவம் என்பது முதல் பிரசவத்தை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது என்பதை இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணர வேண்டியது அவசியம்.
    முதல் பிரசவம் என்பது உங்களுக்கு பலவித புதிய அனுபவத்தை கற்றுத்தருவது போல இரண்டாவது பிரசவம் என்பதும் பல்வேறு நிலைகளில் பல புதிய விஷயங்களை கற்றுத்தருகிறது. அவை என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

    உங்களுடைய முதல் பிரசவத்தில் பார்க்கும் புத்தகங்கள், வலைத்தளங்கள் என பலவற்றில் உங்கள் கவனமானது செல்ல, குழந்தை பிறப்பு பற்றிய பல தகவலையும் நீங்கள் தெரிந்துக்கொள்ளக்கூடும். ஆனால், இரண்டாவது பிரசவத்தின் போது இந்த நிலை என்பது குறைகிறது. நீங்கள் உங்களுடைய முதல் குழந்தையை கவனிக்க தொடங்க, இரண்டாவது பிரசவத்தின் போது புத்தகம் படித்து குழந்தைகளை பற்றி தெரிந்துகொள்வது என்பது குறைகிறது. இதற்கு காரணம், முதல் பிரசவத்தில் கிடைக்கும் அனுபவமும் கூட என நாம் சொல்லலாம்.

    முதல் பிரசவத்தில் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்கும் நீங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடவும் செய்வீர்கள். ஓர் உதாரணத்திற்கு, துரித உணவுகள், கறி, அசைவ உணவை தவிர்த்து உங்கள் குழந்தையின் நலன் கருதி ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்ள விரும்புவீர்கள். ஆனால், இரண்டாவது பிரசவம் என வரும்போது உணவு விஷயத்தில் இருக்கக்கூடிய பயம் குறைந்து தேவையானவற்றை தேடி சென்று நாம் சாப்பிட செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.

    முதல் பிரசவம் என்பது நம் வீட்டிற்கு வரப்போகும் குழந்தையை வரவேற்பதில் மிகவும் ஆர்வத்துடன் நாம் இருக்கக்கூடிய ஒன்றாகும். அதனால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதை சொல்வதில் தொடங்கி, குழந்தை பிறந்த செய்தியை தெரிவிப்பது வரை மிகவும் ஸ்பெஷலாக அனைத்தையும் செய்வீர்கள். ஆனால், இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும்போது இவற்றை நாம் செய்ய முன்வருவதில்லை. இது தான் குழந்தையின் பிறப்பின் போது கூட ஒரு சில வீட்டில் தொடர நேர்கிறது.



    முதல் பிரசவத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் பெரிதும் பதட்டத்துடன் பயந்து இருப்பீர்கள். இதற்கு காரணம் ஒரு சில தவறான அறிவுரைகளும் கூட... ஆனால், இரண்டாவது பிரசவத்தின்போது நீங்களே இன்னொருவருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்கு தெளிவுடன் இருப்பீர்கள். அப்படி இருக்க பயம் மட்டும் எப்படி இருக்கும்? அத்துடன் முதல் முறை பிரசவமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான தைரியத்தையும் ஒரு சில பெண்கள் இரண்டாவது பிரசவத்தின்போது தர மறுப்பதில்லை.

    உங்களுடைய முதலாவது பிரசவத்தில் வயிற்றின் அழகில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, நீங்களும் வயிற்றை பிடித்து பார்த்தபடி இருப்பீர்கள். ஆனால், இரண்டாவது பிரசவத்தின்போது இந்த பழக்கம் என்பது உங்களிடம் பெரிதாக தெரியவில்லை.

    முதலாவது பிரசவத்தின்போது உங்கள் குழந்தைக்கான பணிவிடைகளை பார்த்து, பார்த்து செய்வீர்கள். உங்கள் வீட்டிற்கு வரப்போகும் புதுக்குழந்தைக்காக பல வித முன்னேற்பாடுகளை செய்தும் வைத்திருப்பீர்கள். ஆனால் இரண்டாவது பிரசவத்தின் போது இப்படி எந்த ஒரு வரவேற்பும் பெரிதாக தரப்படுவதல்ல.

    இப்படி முதல் பிரசவத்தை விட இரண்டாவது பிரசவம் என்பது மாறி காணப்படுவதால்... உங்கள் குழந்தைகளின் வளர்ப்பு என்பதிலும் ஒரு சில மாற்றத்தை காண முடிகிறது. முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை மேல் அதற்கு பிறகு பாசமாக இருந்தாலும், ஏனோ தெரியவில்லை மேல்காணும் ஒருசில விஷயங்கள் போல பலவும் இரண்டாவது பிரசவத்தில் தொலைந்து போகிறது.
    அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குளை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளன.
    உடலிலேயே அக்குள் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், வியர்வை அதிகம் வெளியேறுவதாலும், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்படியே தேங்கி படிந்து, ஒரு கருப்பு படலமாக உருவாகும். இது அக்குளின் அழகையே பாழாக்கி வெளிக்காட்டும். அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குளை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளன.

    * முதலில் அக்குளில் வளரும் முடியை அகற்ற வேண்டும். அக்குளில் முடி இருந்தால், அதுவே அக்குளை கருமையாக வெளிக்காட்டும். அக்குள் முடியை ஷேவிங் மூலம் நீக்குவதை விட, வேக்சிங் மூலம் அகற்றுவதே மிகவும் சிறந்த வழி.

    * நல்ல தரமான சரும கருமையைப் போக்கும் ஸ்க்ரப் க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். இதனாலும் அக்குள் கருமை நீங்கும். அதிலும் இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

    * தினமும் குளிக்கும் போது அக்குளை நன்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். அப்படி தினமும் ஸ்கரப்பர் பயன்படுத்தும் போது, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் மாய்ஸ்சுரைசரை இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்துவதும் மிகவும் நல்லது.

    * கற்றாழை ஜெல்லை தினமும் அக்குளில் தடவி ஊற வைப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அக்குளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, அக்குளை சுத்தமாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

    * உருளைக்கிழங்கில் உள்ள உட்பொருட்கள் அக்குள் கருமையைப் போக்க வல்லது. அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி, ஒரு துண்டை அக்குளில் தேய்த்து, 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், நல்ல பலன் கிடைக்கும்.

    * முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி இறுக்கமான உடைகளை அணிந்தால், அது அக்குளை மேலும் கருமையாக்கும். ஆகவே சற்று தளர்வான மற்றும் சௌகரியமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

    * தரம் குறைவான அல்லது மிகவும் ஸ்ட்ராங்கான டியோடரண்ட்டுகளை அக்குளில் நேரடியாக பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். இந்த பொருட்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள், அக்குளை கருமையாக்கும். அக்குளில் வியர்வை துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க, டியோடரண்ட்டுகளுக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு எலுமிச்சையை தினமும் அக்குளில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

    * இரவில் உறங்கச் செல்வதற்கு முன் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாடி பட்டர்களைத் தடவி வர, சில நாட்களில் கருமை நிறம் மாறும்.

    * குளித்து முடித்த பிறகு, எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து காட்டன் துணியில் தொட்டு அக்குள் பகுதியை ஸ்கிரப் செய்தால் நாளடைவில் கருமை நீங்கி பளிச்சிடும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்யலாம்
    பாசிப்பருப்பு கொசம்பரி ரெசிபி கர்நாடக மக்களின் புகழ்பெற்ற சாலட் ரெசிபி ஆகும். இது புரோட்டீன்கள் நிறைந்த சாலட் இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசி பருப்பு - 200 கிராம்
    வெள்ளரிக்காய் - பாதி
    கேரட்  - 1
    கிளி மூக்கு மாம்பழம் (நறுக்கியது) - 1/4 கப்
    தேங்காய் துருவல்  - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1
    ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    லெமன் - பாதி
    உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    மாங்காய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பெளலில் ஊற வைத்த பாசி பருப்பை போட்டு அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய், கேரட், மாம்பழம் போன்றவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து கொஞ்சம் லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்

    கடைசியாக கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மறுபடியும் நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பாசிப்பருப்பு கொசம்பரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் இளமையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.
    திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள்.

    எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.

    தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

    தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.

    1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.

    2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.

    3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.

    4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.

    5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.

    6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.

    7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள்.

    அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

    தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.
    கிரெடிட் கார்டை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினால், ஆபத்பாந்தவன் போல அது நமக்குக் கைகொடுக்கும். அதேநேரம், முறையாகப் பயன்படுத்தாவிட்டால் சிரமம்தான்.
    கூப்பிட்டு கொடுக்கிறார்கள் என்பதால் கிரெடிட் கார்டை வாங்கிவிடும் பலரும்கூட அதற்கான கட்டணங்களை அறியாமல் இருக்கிறார்கள்.

    கிரெடிட் கார்டை கட்டுப்பாட்டோடு பயன்படுத்தினால், ஆபத்பாந்தவன் போல அது நமக்குக் கைகொடுக்கும். அதேநேரம், முறையாகப் பயன்படுத்தாவிட்டால் சிரமம்தான்.

    சரி, நீங்கள் கிரெடிட் கார்டை பயன் படுத்துகிறீர்களா? அதற்கான கட்டணங்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

    அந்த விவரம், இதோ...

    சேர்க்கைக் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம்: பெரும்பாலான வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு வழங்குவதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு ஆண்டுக் கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிப்பார்கள். சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் விலக்கு அளித்துவிட்டு இரண்டாம் ஆண்டில் இருந்து கட்டணங்களை விதிக்கும். சில நேரங்களில், வங்கிகள் குறிப்பிடும் வரையறைக்குள் செலவு செய்தால் இதுபோன்ற கட்டணங்களில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படக்கூடும்.

    வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள், நம்முடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை எவ்வித வட்டியும் வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் நம்முடைய கணக்கிலிருந்து நாம் செய்த அதிகப்படியான செலவுத்தொகையை வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும். சில பிரிமியம் கிரெடிட் கார்டுகளை எங்கே உபயோகித்தாலும், எப்போது உபயோகித்தாலும் நிதிசார் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

    பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் நாம் பணம் எடுத்துக்கொள்ளலாம். அவசரத் தேவைக்கு மட்டுமே இவ்வாய்ப்பைப் பயன்படுத்துவது நல்லது. கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் வாங்கும் பொருளுக்கான கடன் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வட்டித்தொகை வசூலிக்கப் படுவதில்லை. ஆனால், இப்படியான வட்டி விலக்குக்கு உட்பட்ட காலத்தில் நாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும். ஏதேனும் அவசரத் தேவைக்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பணம் எடுத்தால், எவ்வளவு விரைவாகத் திரும்பச் செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாகத் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி அதிகமாவதைத் தவிர்க்கலாம்.

    அதிகப்படியான செலவுகளுக்கான கட்டணங்கள்: உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ உங்களுக்கு அபராதக் கட்டணம் விதிக்கப்படும். உதாரணமாக, உங்களுடைய கிரெடிட் கார்டை பயன் படுத்தி ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருக்கையில், நீங்கள் ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்திருந்தால் நீங்கள் செலவு செய்த அதிகப்படியான தொகைக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டி அபராதமாக விதிக்கப்படும். எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் செய்யும் செலவுகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு பெரும் தொகைக்குப் பொருளை வாங்கும்போது பற்றாக்குறையாக உள்ள தொகையை உங்கள் கிரெடிட் கார்டு கணக்குக்கு வங்கியில் டெபாசிட் செய்துவிடுவது நல்லது.

    கால தாமதத்துக்கான கட்டணம்: கிரெடிட் கார்டு மீதான கால தாமதக் கட்டணம் நமக்குப் பலவகையில் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவதாக, கடன் பெறுவதற்கான நம்முடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இரண்டாவதாக, நாம் ஒவ்வொரு முறை தாமதமாகப் பணத்தைச் செலுத்தும் போதும் அதற்குரிய அபராதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். சில வங்கிகள் தாமதக் கட்டணத்தை நிலையான விகிதத்தில் வசூலிக்கின்றன. சில வங்கிகள், செலுத்த வேண்டிய தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. உங்களுடைய கிரெடிட் கார்டு தொகைக்கான மின்னணு பணப் பரிவர்த்தனை (ECS) ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அதற்காகவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு வேளை கிரெடிட் கார்டின் வழியாகச் செலவுசெய்த முழுத் தொகையையும் திரும்பச் செலுத்தமுடியாவிட்டால், குறைந்த அளவு தொகையாவது செலுத்த வேண்டும். அதன்மூலம் அபராதக் கட்டணத்தைத் தவிர்க்கலாம்.

    வெளிநாட்டுப் பரிவர்த்தனைக்கான கட்டணம்: கிரெடிட் கார்டை உபயோகித்து இணையம் வழியாகவோ அல்லது விற்பனை மையம் வழியாகவோ வெளிநாட்டுப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் அதற் கெனத் தனியான கட்டணம் விதிக்கப்படும். வங்கிகளைப் பொறுத்து 1.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளி நாடுகளில் பணம் எடுத்தாலும் தனியாகக் கட்டணம் விதிக்கப்படும். எனவே இதுபோன்ற கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், வெளிநாடு களுக்குச் செல்லும்போது கிரெடிட் கார்டை தவிர்த்து போதுமான பணம் அல்லது டிராவல் கார்டை எடுத்துச் செல்லுவது நல்லது.

    தொகை பரிமாற்றத்துக்கான கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலமாகச் செலுத்தும்போது அதற்கெனத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். உயர் மதிப்புக் கொண்ட கிரெடிட் கார்டுகளுக்கு இத்தகைய கட்டணம் விதிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் மாற்றம் செய்யும் தொகைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் கட்டணம் விதிக்கப்படும். கடன் தொகைக்காக ஒரு கிரெடிட் கார்டில் இருந்து இன்னொரு கிரெடிட் கார்டுக்குப் பணப்பரிமாற்றம் செய்வது கூடுதல் செலவை உண்டாக்கும். எனவே கிரெடிட் கார்டு மீதான கடன் தொகையை உரிய காலத்துக்குள் செலுத்துவதே எப்போதும் நல்லது.
    ஆஸ்துமா என்றால் அஞ்ச வேண்டாம். ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு இலையென்றாலும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழலாம். இந்த ஆஸ்துமா ஏன் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
    இன்று(மே7-ந் தேதி) சர்வதேச ஆஸ்துமா தினம்.

    1956 -ம் வருடம், நவம்பர் மாதம் ஓர் இரவு வேளையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அந்த இளம் மருத்துவன் 82 சக வீரர்களோடு ஒரு சிறிய படகில் பயணிக்கிறான். கடல் இயல்புக்கு மாறாக கொந்தளிக்கிறது. அந்த துரதிர்ஷ்ட வேளையில் அவனை ஆஸ்துமா பாதிக்கிறது. ஆஸ்துமாவை கண்டு அவன் அஞ்சவில்லை. பாசிசத்தை வேரறுக்க செல்லும் வேட்கை அவனுக்கு ‘அட்ரினலின்’ என்ற ஆபத்தான மருந்தை தனக்கு தானே ஊசி மூலம் செலுத்திக்கொண்டு ஒரு மாபெரும் தாக்குதலுக்கு தயாராகிறான். அந்த மருத்துவன் கடந்த நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளன் எர்னஸ்டோ சேகுவாரே. சாதிக்க நினைப்பவர்களுக்கு ஆஸ்துமா தடையில்லை என்பதற்கு மிக சிறந்த உதாரணம் சேகுவாரே.

    இந்த ஆஸ்துமா ஏன் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் செயல்பட பிராணவாயு அவசியம். இந்த பிராணவாயுவை காற்றிலிருந்து பிரித்து ரத்தத்தில் சேர்ப்பது நுரையீரலின் வேலை. வளிமண்டலத்தில் இருக்கும் காற்றை தசைகுழாய்கள் நுரையீரலுக்கு எடுத்து செல்லும். ஒரு மரத்தின் வேர்களை போல் இருக்கும். இந்த தசைகுழாய்களை மூச்சுகுழாய்கள் என்கிறோம். ஆஸ்துமா நோயில் இந்த மூச்சுகுழாய்கள் சுருக்கமடைகிறது. அவற்றின் உட்சுவர் வீக்கமடைகிறது. மூச்சு குழாய்கள் சுருங்கியவுடன் காற்று செல்வது தடைபட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். மரண வாசலில் நிற்பது போன்று நோயாளி உணர்வார்.

    இந்த மூச்சுகுழாய்கள் சுருங்குவதற்கான காரணம் ஒவ்வாமை. அலர்ஜி என்பதை எளிமையாக சொல்ல வேண்டுமானால் பரிட்சியமான பொருட்களுக்கு மூச்சுகுழாய்கள் கொஞ்சம் ‘ஓவர் ரியாக்ட்’ செய்வது என்று சொல்லலாம். ஒரு வீட்டிற்குள் பாம்பு நுழைந்துவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டு அலறுவது இயல்பு. வண்ணத்துப்பூச்சி நுழையும் போதும் இதே அலறலை அவர்கள் மேற்கொண்டால் எத்தனை வினோதமாக அது பார்க்கப்படும். ஏறக்குறைய இதேபோன்ற ஒரு வினோத செயல்பாடு தான் ஆஸ்துமா நோயாளிக்கு மூச்சுகுழாயில் ஏற்படும்.

    சுற்றுப்புறத்திலிருக்கும் தூசு, புழுதி, ஒட்டடை என்று ஏதேனும் ஒன்று மூச்சு குழாய்க்குள் சென்றவுடன் ஏதோ ஆபத்தான எதிரி வந்துவிட்டதைபோல் நினைத்து மூச்சு குழாய்கள் சுருங்கி கொள்ளும். எதிரியை அழிக்க வரும் அணுக்கள் சுரக்கும் வேதிபொருட்களால் அதன் உட்சுவர் வீங்கி கொள்ளும். ஒரு சிறு தூசுக்கு இத்தனை அக்கப்போரா என்று தட்டி கேட்க மரபணுக்கள் பழகி இருக்காது. இந்த ஆஸ்துமா ஏற்படுத்தும் காரணியை மருத்துவ உலகம் ஒவ்வா பொருட்கள்(அலர்ஜன்) என கூறுகிறது. இந்த ஒவ்வா பொருட்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் செல்லப்பிராணியின் ரோமத்திலிருந்து, நீங்கள் விரும்பி அடித்த பெயிண்ட் வரை, உங்கள் தோட்டத்து மலர்களின் மகரந்த துகள்களிலிருந்து, நீங்கள் ஆன்லைனில் வாங்கிய பொருட்கள் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ஒருவருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இன்னொருவருக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே தனக்கு எது அலர்ஜி உண்டு பண்ணுகிறது என்பதை ஆஸ்துமா நோயாளிகள் கண்டறிந்து அதனை தவிர்ப்பதே ஆஸ்துமாவை கட்டுப்படுத்த கூடிய சிறந்த வழி. உலக அளவில் தற்போது ஆஸ்துமா பெருகி வருகிறது.

    சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு முக்கிய காரணியாக இருந்தாலும், வாழ்வியல் மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் நிகழந்துள்ள மாற்றங்களும் முக்கியமாக சொல்லப்படுகிறது. நம் உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் முறைமையை நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பாற்றல் என்று வகைபடுத்தலாம். இவ்விரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சமநிலையில் இருக்கவேண்டும்.

    நம் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து ரோபோக்களை போல மாற்றி வருகிறோம். மண்ணில் விளையாட விடுவதில்லை, வெயிலோ, மழையோ பட அனுமதிப்பதில்லை. ‘சானிடைசர் லோசன்’ கொண்டு பலமுறை கை கழுவ வேண்டும், வெளிநாட்டு பொம்மைகள் மட்டுமே அவர்கள் விளையாட, பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள் மட்டுமே சாப்பிட, இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் தத்து பிள்ளைகளாக அவர்களை மாற்றிவிட்டோம். ‘இன்பெக்‌ஷன்’ ‘இன்பெக்‌ஷன்’ என்று பயமுறுத்தும் டி.வி. விளம்பரங்களுக்கு அடிமையாகிவிட்டோம். விளைவு அவர்கள் இயற்கை தொற்றுக்கு ஆட்படாமல் வளர்கிறார்கள். எனவே மேலே சொன்ன ஒவ்வாமை ஆக்கிரமிப்பு அதிகமாகி வேலை செய்ய தொடங்கி உள்ளது. நம் குழந்தைகள் கொஞ்சம் இயற்கையோடு இணைய செய்வோம். அலர்ஜியிலிருந்து அவர்களை விடுவிப்போம்.

    ஒவ்வா பொருட்கள் ஏற்படுத்திய சுருங்கிய மூச்சுகுழாய்க்குள் சென்றுவரும் காற்று ஒரு வித ஒலி எழுப்பும் (நாதஸ்வரம் போல). இந்த ஒலியை ‘வீசிங்’ என்கிறோம்.

    மருத்துவரின் நோக்கமெல்லாம் சுருங்கிய மூச்சுகுழாய்களை விரித்து விடுவதாக இருக்கும். அதற்கான மருந்துகளையே பரிந்துரைப்பார். இந்த மருந்துகள் நிரந்தரமாக தீர்வு கொடுக்குமா என்றால் இல்லை. மீண்டும் அந்த அலர்ஜன் வரும்போது மூச்சுகுழாய் சுருங்கி கொள்ளும். அப்படி என்றால் என்னதான தீர்வு. ஆஸ்துமாவிற்கான சர்வதேச அமைப்பு சில வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதன்படி ‘இன்ஹேலர்’ மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொண்டால் ஆஸ்துமா பற்றி கவலை இல்லாமல் நிம்மதியாக வாழலாம். ‘இன்ஹேலர்’ மருந்துகள் ஆபத்தானவை, நீண்ட நாட்கள் உபயோகப்படுத்த கூடாது என்ற கூற்று தவறே.

    ஆஸ்துமா என்றால் அஞ்ச வேண்டாம். ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு இலையென்றாலும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழலாம். ஆஸ்துமாவிற்கு நிரந்தர தீர்வு என்று கூறிக்கொண்டு சில நபர்கள் டி.வி.யிலும், பத்திரிகையிலும் விளம்பரம் செய்து ஏமாற்றி வருகிறார்கள். அதிகப்படியான ஸ்டீராய்டு கலவைகளை நோயாளிகளுக்கு அளித்து ஆபத்து ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    வி.பி.துரை, துணை இயக்குனர், மருத்துவ பணிகள் (காசநோய்), கன்னியாகுமரி மாவட்டம்.
    ராஜ்மாவில் இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இன்று ராஜ்மா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    ராஜ்மா - 1 கப்
    நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
    நறுக்கிய தக்காளி - அரை கப்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    தனியாதூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    கல் உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவைக்கு
    சீரகம் - அரை டீஸ்பூன்



    செய்முறை:


    ராஜ்மா என்பது ‘ரெட் கிட்னி பீன்ஸ்’ என்று அழைக்கப்படும் பெரிய வகை பயறு. இதனை 12 மணி மணி நேரம் நீரில் ஊற வைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ப.மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கரம் மசாலா, தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.

    பின்னர் தக்காளியை கொட்டி கிளறவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவை கொட்டி 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.

    ஆரோக்கிய பலன்: இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இதய படபடப்பை சீராக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இந்த தியானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

    1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

    2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள்.

    மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள்.

    இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

    3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

    மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

    4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

    5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

    இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.

    (குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)

    (குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)

    இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.
    பிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.
    பிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.
    குழந்தைக்கு சரியாக பால்கொடுக்கப்படவில்லை என்றால், பால் கட்டிவிடும், பால் சுரப்பதும் குறைய ஆரம்பித்துவிடும். எனவே, இதை சாதரனமாக ஒதுக்கிவிடக்கூடாது.

    இது குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறது. பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும். குழந்தையின் தலை, தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் வாயின் மேல்புறத்தில் மார்பகக்காம்பு படும்படி இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே கடினமாகத் தோன்றும்.

    மாதங்கள் செல்ல செல்ல இது அத்தனை பெரிய சவாலாகத் தோன்றாது. குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும்படியான நிலை அதிகப்படியான பாலை சுரக்க வழிவகுக்கும். குழந்தையின் முழு உடலையும் தாயின் கை தாங்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன. அவை தொட்டில் நிலை, இடைப்பட்ட நிலை, பிடிப்பு நிலை மற்றும் பக்கவாட்டு நிலை. குறுக்காக குழந்தையைப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை. இடைப்பட்ட நிலை என்பது தொட்டில் நிலை போலவே வைத்து இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுப்பது.

    பிடிப்பு நிலை என்பது குழந்தையின் உடலைத் தாயின் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பாலூட்டுவது. பக்கவாட்டு நிலை என்பது தாயும் குழந்தையும் ஒன்றாகப் படுத்துக் கொண்டு பாலூட்டுவது. எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு பால் கொடுத்தால் சவுகரியமாக இருக்கலாம்.

    ஆனால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது சில நேரங்களில் தாயும், குழந்தையும் உறங்கிவிடக்கூடும். இதனால், குழந்தைக்கு பால் மூச்சுக்குழலில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், தொட்டில் நிலை குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த சிலை. 
    சமுதாயத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமல்லாமல் நடுத்தரவர்க்க மக்களாலும் விரும்பி வாங்கப்படும் நகைகள் என்றால் அது பிளாட்டினமாகத்தான் இருக்கும்.
    சமுதாயத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமல்லாமல் நடுத்தரவர்க்க மக்களாலும் விரும்பி வாங்கப்படும் நகைகள் என்றால் அது பிளாட்டினமாகத்தான் இருக்கும். அதிலும் குறிப்பாகத் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் மணமக்கள் பிளாட்டினத்தால் செய்த மோதிரங்களை மணமகன் மணமகளுக்கும், மணமகள் மணமகனுக்கும் மாற்றி அணிந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். பிளாட்டினத்தில் உள்ள வகை வகையான ஆபரணங்களை இனி பார்க்கலாமா?

    மோதிரங்கள்:- பெண்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் மோதிரங்கள் நேர்த்தி மற்றும் ஸ்டைலான தோற்றத்தைத் தருவதாக இருக்கின்றன. ப்ளெயின் வளையங்கள், பிளாட்டினத்தில் வைரக்கற்கள் பதித்து செய்யப்பட்ட வளையல்கள், ஆண் மற்றும் பெண்கள் ஜோடியாக அணிந்து கொள்வது போல் அதாவது ஆணின் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தில் பாதி இதய வடிவமும் பெண்ணின் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தில் பாதி இதய வடிவமும் ஆக மொத்தம் இருவரும் தங்கள் கைகளில் அணிந்து கொண்டு சேர்த்து வைத்துப் பார்த்தால் முழு இதய வடிவம் தெரிவது போலும் அழகழகான டிசைன்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பிளாட்டின மோதிரங்களை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா?

    பெண்களுக்கு மோதிரங்களில் இருக்கும் எண்ணற்ற வகைகளைப் போன்றே ஆண்களுக்கென்று வடிவமைக்கப்பட்டிருக்கும் மோதிரங்களிலும் எண்ணற்ற வகைகள் உள்ளன. பிளாட்டின மோதிரங்களை அணிவதால் கைவிரல்களில் எந்த ஒரு அடையாளமோ அல்லது கோடுகளோ ஏற்படுவதில்லை என்பது மற்றொரு சிறப்பு என்றே சொல்லலாம்.

    நெக்லஸ்கள்:- பிளாட்டின நெக்லஸ்கள் பெரும்பாலும் பார்ட்டி மற்றும் சிறப்பான விழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில் அணிந்து கொள்ள ஏற்றவை என்று சொல்லலாம். இவ்வகை நெக்லஸ்கள் உறுதி, பளபளப்பு மற்றும் பிரதிபலிப்புடன் பெரும்பாலும் நிறமற்ற வைரங்களைக் கொண்டு கண்களைக் கவரும் விதத்தில் மிகவும் நேர்த்தியான மாடல்களில் செய்யப்படுகின்றன. இவ்வகை நெக்லஸ்களை எந்தவொரு இந்திய மற்றும் மேற்கத்திய ஆடை அலங்காரத்துடனும் அணிந்து கொள்ளலாம்.

    காதணிகள்:- மெல்லிய வளைவு வடிவ காதணிகள், செலஸ்டியல் காதணிகள், வைரம் பதித்த இலை போன்ற காதணிகள், ஸ்பைரல் ஸ்டார் காதணிகள், பூ வடிவத்தில் மத்தியில் வைரக்கற்கள் பதித்த காதணிகள், கம்பீரமான ரீகல்ட்ராப் காதணிகள், ஜெரேனியம் காதணிகள், லவ்பேர்ட் காதணிகள், பூங்கொத்து வடிவக் காதணிகள் என்று பிளாட்டினக் காதணி மாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். பிளாட்டினக் காதணிகளை அலுவலகம் செல்லும் பெண்கள் அன்றாடம் அணிந்து செல்வதற்கு மிகவும் விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இவை மயக்கும் விதத்தில் நேர்த்தி மற்றும் ரிச்சான தோற்றத்தைத் தருவதாலேயே பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று சொல்லலாம்.

    ப்ரேஸ்லெட்கள்:- பார்ட்டி, பர்த்டே செலிப்ரேஷன்ஸ் மற்றும் கெட்-டு-கெதர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிளாட்டினக் காதணிகள், மோதிரங்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகள் அணிந்து வந்தாலே ஒரு முழுமையான, நேர்த்தியான கெளரவமான தோற்றத்தைத் தந்து விடுகின்றது என்று சொல்லலாம். வளையல் போல மெல்லிய பிரேஸ்லெட்டுகள் மற்றும் செயின்கள் போன்ற பிரேஸ்லெட்டுகள் என இவை அனைத்துமே மேற்கத்திய ஆடைகளுக்கு மட்டுமல்லாமல் இந்திய ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

    பிளாட்டின மூக்குத்திகளை அணிந்து கொள்வது கல்லூரிப் பெண்களிடையே பெரிதும் பிரபலமாக உள்ளது. பலவித நவரத்தினங்கள் கண்ணுக்கே தெரியாதவாறு மிகச்சிறிய அளவில் பதித்து செய்யப்பட்டிருக்கும் மூக்குத்திகளை கல்லூரிப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதுப் பெண்களும் விரும்பத்தான் செய்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட செயின்கள், கால் கொலுசுகள், அழகிய வளையல்கள், பென்டெண்டுகள், ஆண்களுக்கான பிளாட்டின பிரேஸ்லெட்டுகள் மற்றும் கஃப்லிங்க்ஸ் என்று பலவித மாடல் மற்றும் டிசைன்களில் பிளாட்டின நகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வலம்வர துவங்கி விட்டன.
    ×