என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • சுவை மிகுந்த கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன.
    • மத்தி மீனை அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, ரத்த சர்க்கரை அளவும் குறையும்.

    தற்போது மாரடைப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உள்ளது. மீன்கள் ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், அனைத்து மீன்களும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தாது. சில வகையான மீன்கள்தான் அதை கட்டுப்படுத்தும். அந்த வகையில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பை தடுக்க உதவும் 5 வகை மீன்கள் குறித்து அறிந்துகொள்வோம்...

    சூரை மீன்

    சூரை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள், ரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

    கானாங்கெளுத்தி மீன்

    சுவை மிகுந்த கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகின்றன. உலக அளவில் முக்கியமான மீனாக கருதப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்புக்கு எதிரியாக விளங்குகிறது.



    இறையன் மீன்

    இறையன் மீன் எனப்படும் டிரவுட் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது. எனவே இந்த மீனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    வெங்கணை அல்லது வெங்கணா மீன்

    வெங்கணை அல்லது வெங்கணா எனப்படும் ஹெர்ரிங் மீனில் ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் 2 வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்ற மீன்களை விட அதிகமாக உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. முக்கியமாக இந்த மீனில் வைட்டமின் டியும் அதிகளவில் உள்ளது.

    மத்தி மீன்

    ஏராளமான சத்துகளை உள்ளடக்கிய மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும், இரும்புச் சத்து, செலினியம் போன்ற தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. எனவே மத்தி மீனை அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, ரத்த சர்க்கரை அளவும் குறையும். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    மேற்கூறிய 5 மீன் வகைகளும் குறைந்த கொலஸ்ட்ரால் அளவை கொண்டுள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவது மாரடைப்புடன், பக்கவாதத்தையும் தடுக்கும்.

    • அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன.
    • மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.

    சத்துகள் நிறைந்த பழமாக செவ்வாழைப்பழம் உள்ளது. தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிட்டும். அவை பற்றி பார்ப்போம்...

    தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம். மற்ற பழங்களை விட செவ்வாழையில் குறைவான கலோரி அளவு மற்றும் அதிகமான நார்ச்சத்து காணப்படுவதே காரணமாகும்.

    செவ்வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால், சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.

    அடிக்கடி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன. செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

    ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடியில் பொடுகு நீங்குவதுடன், வறட்சியும் குறைகிறது.

    மலச்சிக்கலைப் போக்குவதில் செவ்வாழைப் பழம் மிகவும் உதவியாக இருக்கிறது. நாள்பட்ட மலச்சிக்கல், மூலத்தை குணப்படுத்த உதவுகிறது. தினமும் மதிய வேளையில் செவ்வாழை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும்.

    புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவும் செவ்வாழைப் பழம் உதவுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில், செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் உதவுகிறது.

    • செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும்.
    • ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது.

    காற்றைத் தவிர வேறு எந்த ஒரு அந்நியப் பொருளும் நமது மூக்குக்குள் நுழைந்தால் நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அந்த மறுப்பின் பிரதிபலிப்பு தான் 'தும்மல்'.


    'அலர்ஜி' அதாவது 'ஒவ்வாமை' தான் தும்மலின் மூலகாரணம் ஆகும். சமையற்கட்டு, வாகனங்கள், தொழிற்சாலைகள், சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, கற்பூரம் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் புகை, வீட்டை சுத்தப்படுத்தும் போது வெளிப்படும் தூசு, குளிர்ந்த தரை, கடும்பனி, குளிர்ந்த காற்று, ஒட்டடை இதுபோக எந்த ஒரு பொருட்களிலிருந்தும் வெளிப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் உள்பட இன்னும் பல விஷயங்களினால் வெளிவரும் தூசி மூக்கில் பட்டதும் தும்மல் ஆரம்பித்துவிடுகிறது.

    பளிச்சென்ற மிகப்பொிய வெளிச்சத்தை திடீரென்று பார்க்கும்போதும், அதிக அளவில் உணவு சாப்பிட்டு வயிறு முழுவதும் நிரம்பியிருந்தாலும் கூட தும்மல் ஏற்படுவதுண்டு.

    செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்கவும். தும்மலை உண்டாக்கும் காரசாரமான உணவுகளையும், மசாலா உணவுகளையும் தவிர்க்கவும்.

    ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ என பதிவு இருக்கிறது. பொதுவாக ஆழ்ந்த தூக்கத்தின்போது தும்மல் வருவதில்லை. சில நோய்களில் அதிகப்படியாக நரம்புகளின் தூண்டுதல் இருந்தால் தூங்குபவர் விழித்துக்கொண்டு தும்முவதும் உண்டு.

    ஒரு முறை தும்மும்போது மூக்கின் 2 துவாரங்களிலிருந்தும் சுமார் 40 ஆயிரம் திரவ நுண்துளிகள் சிதறி வெளியே பரவுவதுண்டு. தும்மும் போது வைரஸ் மற்றும் பாக்டீரியாக் கிருமிகள் வெளிவருவதுண்டு.

    அந்த நேரத்தில் வேறு யாராவது நம் எதிரில் இருந்தால் அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். எனவே தும்மும் போது கர்ச்சீப் அல்லது துண்டு கொண்டு முகத்தை மூடிக்கொள்வது நல்லது.


    பலத்த வேகத்துடன் தும்மும்போது சிலருக்கு இரண்டு காதுகளும் அடைத்துக் கொள்வதுண்டு. சில சமயங்களில் தும்மும் போது காது சவ்வு கிழிந்து போதல், தலைசுற்றல், நுண்ணிய ரத்தக் குழாய்கள் வெடித்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே முடிந்தவரை தும்மலைத் தடுக்கக்கூடாது.

    ஜலதோஷம் வந்தாலே உடனே தும்மலும் வந்துவிடும். தும்மலோடு ஜலதோஷம், மூச்சுத்திணறல், வாந்தி, கண் எரிச்சல், தொண்டை கட்டிக் கொள்ளுதல், காய்ச்சல் முதலியவை இருந்தால் உடனே உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

    உங்களுக்கு எது 'அலர்ஜி' என்பதை ஓரளவு கண்டுபிடிக்க 'ஒவ்வாமை பரிசோதனைகள்' என்று ஒரு பரிசோதனை இருக்கிறது. உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையுடன் அந்தப் பரிசோதனைகளை செய்து அலர்ஜி பொருள் எது என்பதைக் கண்டுபிடித்து அதை அறவே தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

    • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
    • இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

    சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது அத்திப்பழம். ஒரு அத்திப்பழத்தில் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்பு சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.


    அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நார்ச்சத்து ஆகியவை இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தி அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

    அத்திப்பழம் 35 என்ற மிகக்குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாகும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுத்தும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

    இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்கள் வராமலும் தடுக்க துணை புரிகிறது.

    மேலும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் பிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்கின்றன.


    மேலும் ஆன்டி ஆக்சிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலுசேர்க்கிறது.

    சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 அத்திப்பழங்கள் சாப்பிடலாம். ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்னரே அத்திப்பழங்களை சாப்பிடவேண்டும். இத்தகைய நன்மைகள் நிறைந்த அத்திப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் பயமின்றி உட்கொள்ளலாம்.

    • காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.
    • அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது.

    இலை, தழைகளை உண்டு வாழும் விலங்குகள் அவற்றின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களையும் இலை, தழைகளில் இருந்து பெறுகின்றன. மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.

    இதற்கு மாற்றாக, தற்போது உலகின் பல நாடுகளிலும் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' போன்ற வடிவில் உணவாக உட்கொள்ளும் கலாசாரம் பரவி வருகிறது. இதற்கென்று, குறிப்பிட்ட காய்கறிகள், தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து அவை முளை விடும் பருவத்தில் அந்த இளம் தளிர்களை சேகரித்து உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனை 'மைக்ரோ கிரீன்' என்று அழைக்கின்றனர்.

    இது ஏறக்குறைய கோவில் விழாக்களில் சுமந்து செல்லப்படும் முளைப்பாரி வகை தாவர வளர்ப்பு முறை என்று சொல்லலாம். இந்த மைக்ரோ கிரீன் முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்போது அவற்றுக்கு எந்த விதமான பூச்சி மருந்துகளும் பயன்படுத்துவது இல்லை. அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இவை மனித உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இதய நோய், வகை-2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள் மற்றும் உடல் பருமன் போன்றவை வரும் அபாயத்தை மைக்ரோ கிரீன் வகை உணவுகள் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகமாக பசி எடுக்கும்போது நமக்கு பிடித்த ஏதாவது கிடைத்தால் நிறைய சாப்பிடுவோம்.
    • உடல் எடையைக் குறைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.

    உடல் எடையை குறைக்கும் எண்ணத்தோடு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள், இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் உடல் எடையை எளிதாக குறைத்துவிடலாம்.

    தினமும் கீரை சாப்பிடுங்கள்

    அடர் பச்சை நிறங்கள் கொண்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் தினமும் சாப்பிட வேண்டும். அவை நீண்ட நேரம் பசி எடுக்காமலும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும். குறிப்பாக இவற்றில் மிகக் குறைந்த கலோரியும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் இருப்பதால் விரைவில் பசி எடுக்காது. மற்ற எல்லா உணவுகளையும் விட இதில் கலோரி மிக குறைவு.

    புரதங்கள் நிறைந்த ஸ்நாக்ஸ்

    டயட்டில் இருக்கும்போது எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுக்கக் கூடாது என்பதில் மட்டும் அதிகமாக கவனம் செலுத்துவோம். ஆனால் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும் கட்டாயம் புரதங்கள் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.

    நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருப்பதால் அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு இயல்பாகவே குறையும். அதோடு புரதங்கள் அடங்கிய ஸ்நாக்ஸ் சாப்பிடும்போது அவை மிக மெதுவாக ஜீரணமாகும்.

    அதனால் விரைவாக பசி எடுக்காது. குறிப்பாக அரிசி உணவுகள் எடுக்கும் போது ஏற்படும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பிரச்சனை இதில் கிடையாது. அதனால் மக்கானா, நட்ஸ் போன்ற நார்ச்சத்தும் புரதங்களும் கொண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடுங்கள்.

    சாப்பிடும் முன்தண்ணீர் குடிப்பது

    உடல் எடையைக் குறைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அதனால் நாள் முழுக்க தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது நல்லது.

    அதேபோல ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பாகவும் பசி எடுக்கும்போது நிறைய தண்ணீர் குடிப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். சாப்பிடும் முன்பாக தண்ணீர் குடிப்பது நாம் அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும்.

    அதிகமாக பசி எடுக்கும்போது நமக்கு பிடித்த ஏதாவது கிடைத்தால் நிறைய சாப்பிடுவோம். அதுபோன்ற சமயங்களில் உணவு எடுத்துக் கொள்ளும் முன்பு வெதுவெதுப்பான நீரை நிறைய குடியுங்கள். அது நிறைய சாப்பிடுவதை தடுப்பதோடு கொழுப்பை எரிக்கவும் உதவி செய்யும்.



    தாவர அடிப்படையிலான புரதங்கள்

    உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடையைக் குறைப்பதற்கான டயட்டில் புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வலியுறுத்துவார்கள். பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் அதிகமாக புரதங்கள் இருக்கின்றன என்று இறைச்சி, சிக்கன் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்.

    ஆனால் ஆய்வு ஒன்றில், சிவப்பு இறைச்சி மற்றும் பிற மாமிச வகைகளை புரதத்துக்காக எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் தாவர அடிப்படையிலான புரத உணவுகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு வேகமாக எடை குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

    நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறவராக இருந்தாலும் அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் (வாரத்துக்கு மூன்று நாள்) முழுமையான சைவ உணவுக்கு மாறுங்கள். உங்களுடைய எடை குறைப்பில் உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும்.

    உடற்பயிற்சி அவசியம்

    நீங்கள் பின்பற்றும் டயட், எப்படி உங்களுடைய எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுமோ அதேபோன்று, அந்த எடை குறைப்பை சீராக ஊக்குவிப்பதற்கு மிக அவசியமானது தினசரி உடற்பயிற்சி. அதனால் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள்.

    குறைவான கலோரி உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது தசைகள் தளர ஆரம்பிக்கும். அவற்றை தடுத்து தசைகளை வலிமையாக வைத்திருக்க உடற்பயிற்சி மிக அவசியம். மேலும் இது எலும்புகளையும் உறுதியாக வைத்திருக்க உதவும்.

    • புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும்.
    • காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும். அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம்.

    * நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள். பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.

    * அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.



    * ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.

    * நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் 'நகச்சுற்று' போன்ற பிரச்சனைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.

    * 'கியூட்டிக்கிள்' எனப்படும் நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.

    * புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    * ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும். இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வலி லேசாக இல்லாமல், கூர்மையானதாக, தாங்க முடியாத அளவில் இருக்கும்.
    • அஜீரணக் கோளாறானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

    நமது உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று, பித்தப்பை. இது, கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்த பை, கல்லீரல் வெளியிடும் பித்தநீரைச் சேமித்து வைக்கிறது. உணவுகளை செரிப்பதற்கு பித்தநீர் உதவுகிறது. இந்த பித்தநீரில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் பிற பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, அது ஒரு கட்டத்தில் பித்தக்கற்களை உருவாக்குகிறது. இந்த பித்தக்கற்கள் பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தும்போது பித்தப்பை தாக்குதல் ஏற்படுகிறது. பித்தப்பை தாக்குதல், பிலியரி கோலிக் தாக்குதல் எனப்படுகிறது. இது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும்.

    பித்தப்பையில் உள்ள நீர் சரியாக பாயாமல் இருந்தால், அதன் விளைவாக வீக்கமும், கடுமையான வலியும் ஏற்படும்.

    பித்தப்பை தாக்குதல்களால் சந்திக்கும் அசவுகரியம், சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை நீடித்திருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

    சரி, பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என பார்க்கலாம்...

    மேல் வயிற்றுவலி

    பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் முதல் அறிகுறி, வயிற்றுவலிதான். அதுவும் இந்த வலியானது வயிற்றின் மேல்பகுதியில், விலா எலும்புகளுக்கு கீழே ஏற்படும். குறிப்பாக இந்த வலி லேசாக இல்லாமல், கூர்மையானதாக, தாங்க முடியாத அளவில் இருக்கும்.

    வலது தோள்பட்டை, முதுகு வலி

    பித்தப்பையில் பிரச்சனை இருந் தால், வயிற்றுப்பகுதியில் வலி தொடங்கி, அந்த வலி அப்படியே மேல்முதுகு மற்றும் வலது தோள் பட்டை வரை பரவும். இந்த வலி மிகவும் கடுமையானதாக இருக்கும்.

    குமட்டல், வாந்தி

    ஒருவரின் பித்தப்பையில் கற்கள் உருவாகி அதனால் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், அவருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல், குளிர் போன்றவை ஏற்படும். எனவே வயிற்றுவலியுடன் குமட்டல், வாந்தியையும் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    அஜீரணக் கோளாறு, வயிறு வீக்கம்

    அஜீரணக் கோளாறானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதில் ஒன்றுதான் பித்தப்பை பிரச்சனை. ஒருவரது பித்தப்பை சரியாக செயல்படாவிட்டால், அது பல இரைப்பை பிரச்சனைகளை உண்டாக்கும், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.

    மஞ்சள் நிறத்தில் தோல், கண்கள்

    பித்தப்பையில் இருந்து செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த ஓட்டத்தில் பித்தம் படிந்து, அது சருமம் மற்றும் கண்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும். இப்படியான நிலை, பித்தப்பையில் ஏற்பட்டுள்ள கடுமையான பிரச்சனையின் அறிகுறியாகும். இப்படிப்பட்ட அறிகுறி ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    சாம்பல், வெளிர் நிறத்தில் மலம்

    பித்தப்பையில் அடைப்பு ஏற்பட்டு, பித்தநீர் ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, அதன் விளைவாக சாம்பல் அல்லது வெளிர் நிறத்தில் மலம் வெளியேறும்.

    அடர்நிற சிறுநீர்

    பித்தப்பையில் பிரச்சனை இருந்தால், ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிகரித்து, அதன் விளைவாக அடர்நிறத்தில் சிறுநீர் வெளியேறும். அடர்நிற சிறுநீருக்கு பல காரணங்கள் இருந்தாலும், பித்தப்பை தாக்குதல் ஒரு முக்கியமான காரணமாகும்.

    இந்த அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

    • உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
    • வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகி விட்டால், அதனுடன் ஊற வைத்த ரவை சிறிது சேர்த்து விட்டால், இட்லி மிருதுவாகவும், ரவா இட்லி போலவும் இருக்கும்.

    * சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    * கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.

    * அதிரச மாவை கலந்த பின், வரும் கட்டியைத் தட்டை முறுக்கு, தேன்குழல் மாவில் கலந்தால் கர கர, மொறு மொறுவென்று இருக்கும்.

    * பால் காய்ச்சும்போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காலும், மணமாகவும் இருக்கும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

    * உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயைக்காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    * தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

    * வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.

    • குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.
    • காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல.

    காலை நேர பரபரப்புக்கு மத்தியில் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவது பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாகவே இருக்கிறது. அதிலும் வேலைக்குச்செல்லும் பெற்றோர் கடும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இது ஒருபுறமிருக்க காலை வேளையில் குழந்தைகளிடத்தில் கடுமையாக நடந்து கொள்வது மன ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளை எப்படிக் கையாளுவது என்று பார்ப்போம்.

    இன்முகத்துடன் வழி அனுப்புங்கள்

    குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றடைவதற்கு ஆகும் நேரத்தை கணக்கிட்டு 5 நிமிடங்களுக்கு முன்பாகவே வீட்டில் இருந்து புறப்படும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரும் தாமதம் செய்யக்கூடாது.

    அவசர அவசரமாகப் புறப்பட்டுச் செல்வது, இன்று தாமதமாகி விடும் என்று குழந்தைகளிடம் கடிந்து கொள்வது இருவருக்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தக்கூடும்.

    5 நிமிடங்களுக்கு முன்பாக புறப்படும்போது நிதானமாக வழி அனுப்பி வைக்கலாம். அரவணைப்பு, புன்னகையை வெளிப்படுத்தலாம். குழந்தைகளும் ரிலாக்ஸாக, இன்முகத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள்.

    சத்தமிடாதீர்கள்

    குழந்தைகள் சிலர் காலையில் தாமதமாகவே கண் விழிப்பார்கள். பள்ளிக்கூடம் செல்லும் நேரம் நெருங்குவதாக பெற்றோர் எச்சரித்த பிறகுதான் எழுந்திருப்பார்கள். அப்போது பெற்றோர் கடுமையான வார்த்தைகளால் வசை பாடி எழுப்புவது, தண்ணீர் ஊற்றுவது, சத்தமாக திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது குழந்தைகளிடத்தில் மன அழுத்தத்திற்கான சூழலை உருவாக்கும். கவலை, வருத்தத்தை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக நேரமாகிவிட்டது என்பதை மென்மையான அணுகுமுறையால் சுட்டிக்காட்டுவது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் எழும் வழக்கத்தை பின்பற்ற வைப்பது சரியான வழிமுறையாக அமையும். எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் தாமாகவே விழித்தெழும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

    நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறுங்கள்

    குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு வீட்டை விட்டு வெளியேறும்போது திட்டியபடியோ, ஊக்கப்படுத்தாமலோ வழி அனுப்புவது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைக்கும்.

    'இன்றைய நாள் சிறந்த நாளாக அமையட்டும்'. 'உன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்'. 'நீ பொறுப்புணர்வோடு நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன்' என்பன போன்ற வார்த்தைகள் அவர்களின் மன நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள்

    குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. காலை வேளையில் கவலை தோய்ந்த முகத்துடனோ, ஏதேனும் மன குழப்பத்துடனோ இருந்தால் அது பற்றி குழந்தைகளிடம் விசாரித்து அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    அதை விடுத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அன்றைய நாள் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதோடு அல்லாமல் கற்றல் திறனையும் பாதிக்கும். காலையில் எழுந்ததும் குழந்தைகளின் மன நிலையைக் கணித்து அவர்களை வழிநடத்துவது நேர்மறை எண்ணங்களை பின் தொடர செய்யும். கவனமுடன் கற்றலைத் தொடரவும் வழிவகுக்கும்.

    விமர்சனம் செய்யாதீர்கள்

    காலை வேளையில் விமர்சனம் செய்வது, புகார் கூறுவது அவர்களை மன ரீதியாக பலவீனப்படுத்திவிடும். அதற்கு பதிலாக நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவது, நற்சிந்தனைகளைத் தூண்டும். சுயமரியாதை உணர்வுடன் செயல்பட வைக்கும்.

    காலை உணவு அவசியம்

    காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல. அந்த உணவுதான் நாள் முழுவதும் ஆற்றலையும், அறிவுத்திறனையும் தூண்டிவிடக்கூடும்.

    வேலை செய்ய ஊக்கப்படுத்துங்கள்

    ஒரே நேரத்தில் பல வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். ஷூ பாலீஷ் செய்வது, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது, மதிய உணவை பேக்கில் எடுத்து வைப்பது உள்ளிட்ட சின்ன சின்ன வேலைகளைக் குழந்தைகளே செய்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

    இந்த வேலைகளை செய்வதற்கு போதிய அவகாசமும் கொடுங்கள். அதனை தினமும் தவறாமல் பின்பற்ற வையுங்கள். நாளடைவில் அந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

    அத்தியாவசிய பொருட்களை ஞாபகப்படுத்துங்கள்

    குழந்தைகள் பலர் பள்ளிக்கூடம் புறப்படுவதற்கு முன்புதான் அன்றைய நாளின் பாடவேளை அட்டவணைப்படி நோட்டு, புத்தகங்களை அவசர அவசரமாக எடுத்து பேக்கில் வைப்பார்கள்.

    போதிய நேரமில்லாமலும், அவசரத்திலும் சில பொருட்களை மறந்து வீட்டிலேயே வைத்துவிடுவார்கள். அல்லது பள்ளிக்கூடம் செல்லும்போதுதான் அந்த பொருட்களை தேடிக்கொண்டிருப்பார்கள். அது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். அதைப்பார்க்கும்போது பெற்றோர் டென்ஷனாகி குழந்தைகளைக் கடிந்து கொள்வார்கள்.

    கடைசி நேரத்தில் ஏற்படும் இத்தகைய சச்சரவுகளைத் தவிர்க்க முந்தைய நாள் இரவே குழந்தைகளிடத்தில் ஞாபகப்படுத்துங்கள். என்னென்ன பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை முந்தைய நாள் இரவே எடுத்து வைத்துவிட்டால் மறுநாள் டென்ஷன் இன்றி பள்ளிக்கூடம் புறப்பட்டு செல்லலாம்.

    • பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
    • கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * முட்டையை வேக வைத்த பிறகு அதன் ஓடு லேசாக வெடிக்கும் வரை அடித்து சிறிது நேரம் குளிர்ந்த நீரில் மூழ்கடிக்க வேண்டும். அதன் பிறகு, முட்டையை எளிதில் உடைக்க இயலும். முட்டை கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்தால் ஓடு எளிதில் வெளியேற உதவும்.

    * கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, சிறிது எண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். பின்னர், மாவில் மிளகாயை முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். இவ்வாறு செய்தால் பஜ்ஜி மொறுமொறுப்பாக இருக்கும்.

    * வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின், தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும். பஜ்ஜி செய்யும் போது மாவுடன் மைதா சேர்த்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

    * பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.

    * பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.

    * மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காய கட்டியை போட்டு வைத்தால் போதும். நீண்ட நாள் காரம் மணம் மாறாமல் இருக்கும்.

    * வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க முறுமுறுப்பாக இருக்கும். எண்ணெய் தேவை குறைவாகும்.

    * கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * மீன் குழம்பு தயாரிக்கும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சிறிது போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

    * உள்ளங்கையில் சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி தேய்த்து மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை பிடிக்காது.

    * மிளகு ரசத்திற்கு குழைய வைத்து வேக வைத்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    • சூப் சாப்பிடுவது உங்களுக்கு மனநிறைவை அதிகரிக்கும்.
    • சூப் உணவு ஒரு சிலருக்கு வேலை செய்யக்கூடும்.

    உடல் எடையை குறைக்க நிறைய 'டயட்' முறைகள் இருந்தாலும் கூட பெரும்பாலான மக்கள் முன்னெடுத்து வைப்பது 'சூப் டயட்' தான். ஏனெனில் சூப் டயட் தயார் செய்வதற்கும் பின்பற்றுவதற்கும் எளிதான ஒன்று மட்டுமல்ல. ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. அதனால் தான் பிரபலங்கள் முதல் நடுத்தர மக்கள் வரை தங்கள் எடையை குறைக்க இந்த சூப் டயட்டை பின்பற்றுகின்றனர். குறுகிய காலத்தில் வேகமாக எடையை குறைக்க இது சிறந்தது.

    * சூப் டயட்

    இதில் திட உணவுகள் இருக்காது. அதற்கு பதிலாக 7 நாட்கள் தொடங்கி 15 நாட்கள் வரை சூப் வகைகளையே உட்கொள்ள வேண்டியிருக்கும். இது இப்போது டிரெண்டிங்கில் இருந்தாலும், இந்த டயட் 1980-ம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக முட்டைக்கோஸ் சூப் டயட், அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலம். இதை அடிப்படையாக கொண்டு தான் சூப் டயட் பிரபலமாக தொடங்கியது. தற்போது பல்வேறு வகையான சூப் டயட்கள் நடைமுறையில் உள்ளன. கீட்டோ சூப் டயட், சைவ சூப் டயட், பீன் சார்ந்த சூப் டயட் என பல திட்டங்கள் உள்ளன.

    * சூப் டயட்டின் நன்மைகள்

    சூப் சாப்பிடுவது உங்களுக்கு மனநிறைவை அதிகரிக்கும். உங்களை முழுமையாக உணர வைக்கும். தேவையில்லாமல் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள். உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை இது வழங்கும். செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான உறுப்புகளுக்கு அதிக வேலை இருக்காது.

    இது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், சூப் சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அனைத்து சூப் உணவுகளிலும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை. எனவே உங்கள் தேர்வு காய்கறி சூப்பாக இருந்தால் நல்லது. காய்கறி சூப்பில் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அடர்த்தி அதிகம். அதே நேரத்தில் கலோரிகள் குறைவு.



    * எடை இழப்பு எப்படி சாத்தியம்

    நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஒரு சூப் டயட் திட்டத்தை முன்னெடுப்பவர்கள், தினசரி கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதால் அவர்களுக்கு விரைவான எடை இழப்பு சாத்தியமாகும். சூப் உணவு ஒரு சிலருக்கு வேலை செய்யக்கூடும். ஆனால் சிலருக்கு எடையில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவர்களுக்கு ஒரு நீண்ட கால காத்திருப்பு தேவைப்படுகிறது.

    அடிப்படை சூப் டயட்டில் கிரீமி சூப்கள் மற்றும் குழம்பு சார்ந்த சூப்கள் உள்பட எந்த விதமான சூப்களும் அனுமதிக்கப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்படும் சூப்களையும் எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான அடிப்படை சூப் டயட் 7 நாட்கள் வரை நீடிக்கும். மற்றவை இரண்டு வாரங்கள் வரை செல்லலாம். முறையாக பின்பற்றினால் 7 முதல் 10 கிலோ வரை உடல் எடையை இழக்க நேரிடும்.

    * முட்டைக்கோஸ் சூப் டயட்

    முட்டைக்கோஸ் சூப் டயட்டில் முட்டைக்கோஸ் தான் முக்கியமான பொருளாக சேர்க்கப்படுகிறது. இதனுடன் தக்காளி, வெங்காயம், கேரட் அல்லது இறைச்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். குறைந்த கார்போ ஹைட்ரேட் கொண்ட காய்கறிகளையும் சேர்த்து சூப்பை தயாரிக்கலாம். இந்த சூப் டயட்டை 7 நாட்கள் வரை பின்பற்றி கிட்டத்தட்ட 4.5 கிலோ வரை குறைக்க முடியும் என்கிறார்கள், நிபுணர்கள். இது பிரபலமான சூப் டயட் என்பது குறிப்பிடத்தக்கது. இது கலோரி குறைந்த டயட். இந்த டயட் எடுக்கும் போது வாழைப்பழம் போன்ற கலோரி அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    * சேக்ரட் ஹார்ட் டயட்

    சேக்ரட் ஹார்ட் டயட்டை மேற்கொள்பவர்கள் இறைச்சி, பச்சை பீன்ஸ், செலரி, தக்காளி, வெங்காயம் மற்றும் கேரட் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப்பை உட்கொள்கிறார்கள். இந்த டயட்டை எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரைச்சத்து நிறைந்த உணவுகளை எடுப்பதை குறைக்க வேண்டும். உதாரணமாக, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சில நாட்களில் மட்டுமே சாப்பிட முடியும். இந்த டயட்டை பின்பற்றி வந்தால் 7 நாட்களில் 8 கிலோ வரை எடையை இழக்க நேரிடும். இருப்பினும் இந்த விதமான விரைவான எடை இழப்பு ஆபத்தானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * பீன் சூப் டயட்

    இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் காளான்கள், மிளகாய், துண்டுகளாக்கப்பட்ட தக்காளி, பிண்டோ பீன்ஸ், குடை மிளகாய் மற்றும் செலரி உள்ளிட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பை உட்கொள்கிறார்கள். இதை தயாரிப்பது கொஞ்சம் சிக்கலானது. இந்த திட்டத்தை பின்பற்றும்போது, மக்கள் தினமும் இரண்டு முறை பீன் சூப்பை பிரதான உணவாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே மாதிரி இந்த டயட்டை பின்பற்றும் போது ஏராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    உலர்ந்த பழம், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் அவகோடா பழங்களை தவிர்க்க அல்லது குறைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் எண்ணெய் இல்லாத மற்றும் தாவர அடிப்படையிலான பிற உணவுகளை உட்கொள்ளலாம். இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் ஒரே வாரத்தில் 4 முதல் 7 கிலோ வரை எடையை குறைக்க முடியுமாம்.

    *சூப் டயட்டில் என்ன சாப்பிட வேண்டும்?

    இறைச்சி, காய்கறி, மீன், பச்சை காய்கறிகளான பச்சை பீன்ஸ், செலரி மற்றும் தக்காளி.

    * என்ன சாப்பிட கூடாது?

    ஐஸ்கிரீம், வேகவைத்த பொருட்கள் மற்றும் சாக்லெட் போன்ற இனிப்பு உணவுகள், சிப்ஸ், நொறுக்கு தீனிகள், வெண்ணெய், கிரீம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. பொதுவாக எல்லா சூப் டயட்டிலும் அடிப்படையாக கோழி கறி, காய்கறிகள் மற்றும் ஆட்டு இறைச்சியை பயன்படுத்துகின்றனர். இவை எல்லாம் குறைந்த ரத்த சர்க்கரை அளவைக் கொண்டவை.

    ×