என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீளமான நகம்"

    • புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும்.
    • காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும். அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம்.

    * நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள். பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.

    * அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.



    * ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.

    * நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் 'நகச்சுற்று' போன்ற பிரச்சனைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.

    * 'கியூட்டிக்கிள்' எனப்படும் நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.

    * புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

    * ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும். இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

    நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவில் இன்று நகம் வெட்டுகிறார். #ShridharChillal
    நியூயார்க்:

    மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

    இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.

    உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.


    இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார்.

    அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ ( Ripley's Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிபரப்பி வருகிறது.

    ’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து  வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.

    ஆசையாசையாக கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுபார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.

    இதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் நகரை வந்தடைந்துள்ள ஸ்ரீதர் சில்லால், இன்று (புதன்கிழமை) பல கேமராக்கள் முன்னிலையில் தனது 66 ஆண்டு ‘நகதவத்தை’ துறக்கிறார். #ShridharChillal #longestfingernails #GuinnessRecord #Ripley'sBelieveItorNot
    ×