என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை கோஸ், சிவப்பு கோஸ் - தலா 100 கிராம்
    வெங்காயம் - ஒன்று
    தயிர் - ஒரு கப்
    தேன் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    கடுகு பேஸ்ட் அல்லது கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப     

    செய்முறை:

    பச்சை கோஸ், சிவப்பு கோஸ், வெங்காயம் ஆகிய காய்கறிகளை நன்றாகக் கழுவி துடைத்து, நீள நீளமாக மெல்லிய குச்சியைப் போல நறுக்கவும்.

    கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும்.

    தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும்.

    வடிகட்டிய தயிருடன் தேன், உப்பு, கடுகு பேஸ்ட் (அ) பொடி, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகிவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் டிரெஸ்ஸிங் தயார்.

    நறுக்கிய காய்கறிகளை ஒரு பெரிய பவுலில் போடவும். இதனுடன் டிரெஸ்ஸிங்கை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டைகோஸ் தயிர் சாலட் ரெடி.
    புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது.
    இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது இதுதான். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது, ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றாகும். இந்த வகை வைரஸில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் இருந்தாலும், அதில் ஒருசில நோய்களை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் மூலமும் இந்த தொற்று உருவாகும்.

    குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.

    தடுக்கும் வழி

    புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.

    இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.

    ஐந்து வருடத்திற்குள் இத்தகைய புற்றுநோய் வருமா என்பதை கண்டறிய நவீன பரிசோதனை முறை உள்ளது. அதன் பெயர்: எச்.பி.வி. டி.ஐ.வி.ஏ. இது தவிர பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்துகொள்ளலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த இரு பரிசோதனைகளையும் செய்துகொள்வது நல்லது. விரைவாக இந்த நோயை கண்டறிந்தால் மட்டுமே எளிதாக குணமடைய முடியும்.
    விவாகரத்தாகிவிட்ட பின்பு, நடந்து முடிந்த விஷயங்களையே மீண்டும் நினைத்து வருந்திக்கொண்டிருக்க கூடாது. புதிய விஷயங்களில் கவனத்தை செலுத்தவேண்டும்.
    தேடிக் கண்டுபிடித்து பல்வேறு விதங்களில் பல மாதங்கள் விசாரித்து மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்கிறார்கள். ஏகப்பட்ட அலைச்சல், கடும் உழைப்பு, கணக்கற்ற பணத்தை செலவு செய்துதான் மணவிழாவில் அவர்களை கணவன்-மனைவியாக இணைத்துவைக்கிறார்கள். இதில் பெண்களை மட்டும் எடுத்துக்கொண்டால் ஏகப்பட்ட கனவுகளோடுதான் புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்துவைக்கிறார்கள். கணவரோடு கல்யாண வாழ்க்கையை தொடங்கும் பலரது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தாலும் ஒருசில பெண்களின் வாழ்க்கை திசைமாறி விவாகரத்தை நோக்கி சென்றுவிடுகிறது.

    ‘வேறு வழியே இல்லை.. விவாகரத்து மட்டுமே தீர்வு' என்று நினைக்கும் பெண்கள், சில முக்கியமான விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். அவைகளை நன்றாக புரிந்து தெளிவுபெற்ற பின்புதான் பெண்கள் விவாகரத்து பற்றிய முடிவுக்கு வரவேண்டும்.

    விவாகரத்து செய்துகொண்ட பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். கணவரால் ஏற்பட்ட துக்கம், துரோகம், ஏமாற்றம், அலைச்சல் போன்றவைகளை அவர்கள் கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில மாதங்களாகும். அப்போது அவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். உணர்ச்சிவசப்படுவார்கள். வன்மம், குற்ற உணர்ச்சி போன்றவைகள் தலைதூக்கும். இவைகளை எல்லாம் நீங்களும் எதிர்கொண்டு படிப்படியாக அதில் இருந்து மீண்டு வெளிவரவேண்டியதிருக்கும்.

    விவாகரத்தாகிவிட்ட பின்பு, நடந்து முடிந்த விஷயங்களையே மீண்டும் நினைத்து வருந்திக்கொண்டிருக்க கூடாது. புதிய விஷயங்களில் கவனத்தை செலுத்தவேண்டும். பழையதை மறந்து, புதியதை நோக்கி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை நகர்த்திச்செல்ல தயாராக இருக்கவேண்டும்.

    குழந்தை இல்லாத பெண்களுக்கு அதிக மனஉளைச்சல் ஏற்படாது. குழந்தைகள் இருந்து பெற்றோர் பிரியும்போது, அவைகள் பெரிதும் பாதிக்கப்படும். இருவரது அரவணைப்பிலும் இணைந்து வளர்ந்த குழந்தைகள், பெற்றோர் ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்துபோவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.

    விவாகரத்து செய்துகொள்வதற்கு முன்பு இருவரும் இணைந்து குழந்தைகளிடம் பக்குவமாக பேச வேண்டும். ‘உங்களின் அனைத்து தேவைகளையும் நாங்கள் நிறைவேற்றிவைப்போம். எங்கள் பிரிவை நினைத்து நீங்கள் கலங்க வேண்டியதில்லை’ என்று கூறி, குழந்தைகளுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கவேண்டும். வார்த்தைகளோடு அதை விட்டுவிடாமல் செயலிலும் காட்டவேண்டும்.

    விவாகரத்து ஆகும்போது அனைத்து குழந்தைகளுமே தாயின் அரவணைப்பை நாடித்தான் வருவார்கள். தாயின் பராமரிப்பில்தான் அவை வளரவும் விரும்பும். ஆனால் விவாகரத்துக்கு பின்பு குழந்தைகளிடம் தனது செல்வாக்கை நிரூபித்து அவைகளை தன் பக்கம் இழுக்க கணவர் முயற்சிக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது என்ன செய்யவேண்டும் என்பதை விவாகரத்துக்கு முன்பே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

    திறமை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறமுடியும். கணவரோடு வாழ்ந்தது வரை உங்கள் திறமைகள் முடக்கப்பட்டிருக்கலாம். விவாகரத்துக்கு தயாராகும்போது முதலில் உங்கள் திறமைகளை எல்லாம் புத்தாக்கம் செய்யவேண்டும். புதுவேகத்தில் அந்த திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த திட்டமிடவேண்டும். கூடுதலாக கற்று, வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் தன்னம்பிக்கையையும் கொண்டிருக்கவேண்டும்.

    பெண்கள் விவாகரத்து செய்துகொண்டதும் சிலர் தேடிவந்து ஆறுதல் சொல்வார்கள். உதவுவதாக உறுதிகொடுப்பார்கள். அப்படிப்பட்ட அனுதாப கூட்டத்திற்குள் ஒருபோதும் பெண்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. அனுதாபத்திற்குள் சிக்கிக்கொண்டால் அதிலே மூழ்கி விடுவீர்கள். மற்றவர்கள் காட்டும் அனுதாபம் சிறிது காலத்திற்குதான் கைகொடுக்கும். அதனால் தொடக்கத்தில் இருந்தே மற்றவர்கள் உங்கள் மீது அனுதாபம் காட்ட இடம்கொடுத்து விடக்கூடாது. அடுத்தவர்கள் கொடுக்கும் ஆலோசனையை கேட்டு விவாகரத்துக்கான முடிவை எடுத்துவிடாதீர்கள்.

    ஒரு பெண் விவாகரத்து பெறும்போது அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். கணவனும்- மனைவியும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம். ஒருவேளை தவறு பெண்கள் பக்கமே இருக்கலாம். அப்படி தவறு உங்கள் பக்கம் இருந்தால் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் செய்த தவறை தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. தவறுகளை திருத்திக்கொண்டால்தான் வாழ்க்கையில் சரியான பாதையில் பணிக்கமுடியும்.

    விவாகரத்து செய்த பெண்கள் பலர் வாழ்க்கையில் தோற்றுப்போயிருக்கலாம். அதையே நீங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் வாழ்க்கையும் அதுபோல் ஆகிவிடும் என்று பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ முன்வரவேண்டும். அதே நேரத்தில் முடிந்த அளவு விவாகரத்து செய்யாமல் பொருந்தி வாழ முயற்சிக்க வேண்டும்.
    ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம்.
    கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் தலைதூக்குவது தவிர்க்கமுடியாதது. ஏனெனில் நீர்ச்சத்துதான் சரும பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கோடையில் நிலவும் வெப்ப தாக்கத்தின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமமும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக சிவத்தல், எரிச்சல், தடிப்புகள் போன்ற பிரச்சினைகளை சருமம் எதிர்கொள்ள நேரிடும்.

    இந்த பிரச்சினைக்கு ‘ரோஸ் வாட்டர்’ எனப்படும் ரோஜா நீர் தீர்வு தரும். ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள்:

    ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை பாதுகாக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு தண்ணீர் பருகுவது அவசியம் என்றாலும் சருமத்தின் உள் அடுக்குகளை நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு அது போதுமானதல்ல. ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம். அது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுவதுடன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் அளிக்கும்.

    ரோஸ் வாட்டர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. சரும எரிச்சல், தடிப்புகளை போக்கக்கூடியது. கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு ரோஸ் வாட்டர் நிவாரணம் தரும். காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை முக்கி கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம். வெண் படல அழற்சி, உலர்ந்த கண், கண்புரை போன்ற பிற கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டரில் கிருமி நாசினி பண்புகளும் உள்ளன. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற பிற காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும். சரும திசுக்களை மீண்டும் உருவாக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரின் வாசம் மனநிலையை மேம்படுத்த உதவும். நன்றாக தூங்கவும் உதவும். ஒப்பனையை நீக்கிய பிறகு ரோஸ் வாட்டரை உபயோகிக்கலாம். அது சருமத்தை குளிர்விக்க துணைபுரியும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தின் பி.எச். சமநிலையை பராமரிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும்.
    அடிக்கடி உணர்ச்சிவசப்படும் ஒருவரை நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தால், ஒருவேளை நீங்கள் பிரிந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அப்போது எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
    காதலித்துக் கொண்டிருக்கும் பெண்களும் சில கேள்விகளுக்கு கட்டாயம் விடை காணவேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நீங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இளைஞர்களை சந்தித்திருப்பீர்கள். அப்படி இருக்கும்போது `குறிப்பிட்ட அந்த இளைஞர் மீது மட்டும் உங்களுக்கு காதல் வர என்ன காரணம்?'- என்ற கேள்விக்கு முதலில் விடைகாணுங்கள். அதாவது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை மாற்றுவதுபோல் மாற்றக்கூடியதல்ல காதல் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். பொழுதுபோக்குக்காக காதலித்துக்கொண்டிருந்தால் அதனால் உருவாகும் ஆபத்தை நீங்கள் சந்திக்கவேண்டியதாகி விடும். அடிக்கடி உணர்ச்சிவசப்படும் ஒருவரை நீங்கள் காதலித்துக்கொண்டிருந்தால், ஒருவேளை நீங்கள் பிரிந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அப்போது எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    `காதலிக்கும் அந்த நபர்தான் உங்கள் உயிர், உலகம். அவர் இல்லாவிட்டால் தன்னால் வாழவே முடியாது' என்ற நிலையில் ஒருபோதும் இருந்துகொண்டிருக்காதீர்கள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதை நிரூபிக்கும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் கண்மூடித்தனமாக யாரையும் காதலித்து விடாதீர்கள். தெளிவான சிந்தனை கலந்த பார்வையோடு உங்கள் காதலரை ஆய்வுசெய்யுங்கள்.

    காதலரை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் அதே நேரத்தில் உங்கள் இயல்பான சுபாவம் எப்படிப்பட்டது என்பதையும் அவருக்கு உணர்த்திவிடுங்கள். இயற்கையான உங்கள் குணாதிசயத்தை மறைத்துக்கொண்டு அவரது எதிர்பார்ப்புக்கு தக்கபடி உங்களை மாற்றி பழகிக்கொண்டிருப்பது குறுகிய கால காதல் பயணத்திற்கே கைகொடுக்கும். காதலுக்காக உங்கள் தனித்துவத்தை இழக்க ஒருபோதும் சம்மதித்துவிடக்கூடாது.

    காதலுக்கும்-காமத்திற்கும் உள்ள வேறுபாட்டை பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இளமை முறுக்கில் ஆண்கள் காதலில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிப்பார்கள். கீழ்ப்படுத்தவும் முயற்சிப்பார்கள். அப்போதெல்லாம் பெண்கள் விட்டுக்கொடுப்பவர்களாகவும், ஆணுக்கு அனுசரித்துப்போகிறவர்களாகவும் மாறிவிடக்கூடாது. அது சரியான காதலுக்கு பொருத்தமானதல்ல.

    பெண்ணும், ஆணும் காதலிக்கும்போது ஒரு சில விஷயங்களில் `முடியவே முடியாது' என்று சொல்லவேண்டியிருக்கும். `நோ' சொல்லவேண்டிய அந்த விஷயங்களுக்கு `நோ' சொல்வதுதான் பெண்களுக்கு பெருமை. எத்தனை உதாரணங்களை சொன்னாலும் உங்கள் மனசாட்சி தவறு என்று சொல்வது, தவறான செயல்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அன்பின் பெயரில் நடக்கும் அத்துமீறல் எந்த வடிவில் வந்தாலும் அதற்கு இடம்கொடுத்துவிடக்கூடாது.

    `அவர் சிறிது காலம் என் பின்னாலே நடந்தார். நான் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சொன்னார். அதனால் நான் அவரை தற்போது காதலித்துக்கொண்டிருக்கிறேன்' என்று நீங்கள் சொன்னால், தவறான காதலரை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எமோஷனல் பிளாக்மெயிலிங் செய்து கட்டாயமாக காதலிக்கவைப்பவர்களிடம் இருந்து அகன்றுவிடுங்கள். அவர்கள் உங்களிடம் ஒவ்வொரு முறையும் காரியம் சாதிக்கவும் தற்கொலை நாடகமாடுவார்கள்.
    பழங்களின் நிறத்திற்கும், அவைகள் தரும் பலன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் நிறத்திலான பழங்கள் அதிக சத்துக்களும், சக்தியும் தருவனவாக இருக்கின்றன.
    பழங்களின் நிறத்திற்கும், அவைகள் தரும் பலன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் நிறத்திலான பழங்கள் அதிக சத்துக்களும், சக்தியும் தருவனவாக இருக்கின்றன. அவைகள் பார்க்கவும் அழகாக இருக்கும். மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் பற்றிய விவரம்!

    எலுமிச்சை வகைகள்: ஆரஞ்ச், சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவைகள் எலுமிச்சை பழ வகைகளை சேர்ந்தவை. இவைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. அதனால் இவை நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இந்த பழங்களில் சோடியம், மெக்னீஷியம், காப்பர், சல்பர், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் இருக்கின்றன. இவைகளில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் இவைகளை சாப்பிட்டால் மலச்சிக்கலும் தோன்றாது. வயிற்றுப்புண்களும் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், அஜீரண கோளாறு போன்றவைகளும் சரியாகும். சருமம், முடி வளர்ச்சி, பற்களின் ஆரோக்கியம் போன்றவைகளுக்கும் இந்த வகை பழங்கள் துணை புரிகின்றன. ஆரஞ்சு பழத்தில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

    மாம்பழம்: வைட்டமின் - ஏ இதில் பெருமளவு உள்ளது. வைட்டமின் -சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. கரோட்டினாய்டு போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள் இருப்பதால் புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. மாம்பழத்தில் இருக்கும் நார்ச்சத்துகள் செரிமானத் திறனை மேம்படுத்தும்.

    பப்பாளி: உடலுக்கு தேவையான பெருமளவு சத்துக்கள் இதில் இருக்கின்றன. வைட்டமின், நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. என்சைம்களும் இதில் உள்ளன. கலோரி இதில் குறைவாக இருப்பது கூடுதல் சிறப்பு. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்க இதனை அதிகம் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் இளமைக்கு உத்திரவாதம் தருபவை. சரும சுருக்கங்களை போக்கி இளமையை பாதுகாக்கும். சருமத்திற்கு அதிக பொலிவையும் தரும். பப்பாளி பழத்தில் இருக்கும் பாபெயின், கைமோபாபெயின் போன்ற என்சைம்கள் எலும்புகளுக்கு பலத்தை தருகின்றன. எலும்பு அடர்த்தி குறைபாட்டிற்கும் தீர்வாக அமைகின்றன. மூட்டு நோய்கள் இருப்பவர்களும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.

    மஞ்சள் பூசணி: பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ,சி,ஈ போன்றவை இதில் நிறைந்திருக்கிறது. இதன் விதையில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் பாற்றிஆசிட் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. இதயநோயாளிகளும் பூசணி விதையை சுவைக்கலாம். உடல் எடையை குறைக்கவும் இது உதவும். பூசணியில் இருக்கும் மாக்னீஷியமும், பொட்டாசியமும் கூட இதயத்திற்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் இது துணைபுரியும். இதில் இருக்கும் செரட்டோனினுக்கு மனநலனை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது.

    சோளம்: இது ருசியோடு சத்துக்களும் நிறைந்தது. கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கரோட்டினாய்டுகள், லுயூட்டின், சியாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள் சோளத்தில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் பி 12, போலிக் ஆசிட், இரும்பு போன்றவை உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் தரும்.

    வாழைப்பழம்: பொட்டாசியம், சிங்க், மக்னீஷியம் மற்றும் பல வகையான வைட்டமின்கள் இதில் உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் பி 6 இளமையை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மன மகிழ்ச்சியை உருவாக்கவும் இது உதவும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, கொழுப்பையும் கட்டுப்படுத்தும். வயிறு, ஈரல் போன்றவைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் வாழைப்பழம் முன்னிலை வகிக்கிறது.

    அன்னாசிபழம்: இதில் இரும்பு, புரோட்டின், கால்சியம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் - சி போன்றவை உள்ளன. அன்னாசி பழத்தில் இருக்கும் புரோமிலின் என்ற என்சைம் ஜீரணத்திற்கு துணைபுரிகிறது. அத்தோடு வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் போன்றவை பார்வைத்திறனை மேம்படுத்தும் சக்தி கொண்டது. இயற்கை சர்க்கரையும், சத்துக்களும் இதில் இருப்பதால் அன்னாசி பழம் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
    பொரி விளங்காய் உருண்டை புரோட்டீன் நிறைந்தது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    புழுங்கலரிசி - 200 கிராம்
    பச்சை பயறு - 100 கிராம்
    கோதுமை - 100 கிராம்
    வறுத்த வேர்க்கடலை (தோல நீக்கியது) - 1 கப்
    பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
    லவங்கம் - 7
    சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்
    தேங்காய் - சிறிதளவு (துருவி (அ) நறுக்கி நெய்யில் வதக்கியது)
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    பாகு வெல்லம் - 400 கிராம்
    நெய் - சிறிதளவு

    செய்முறை:
     
    புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மாவாக்கவும்.

    பச்சை பயறு, கோதுமையை சிவக்க வறுத்து மாவாக்கவும்.

    இந்த மாவுகளுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, வதக்கிய தேங்காய், லவங்கம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பாகுக்கு விடுவதைக் காட்டிலும் ஒரு கொதி அதிகமாக வர விட்டு, நெய் சேர்க்கவும்.

    பிறகு, மாவுக் கலவையில் கொட்டி, நன்கு பிரட்டவும்.

    கையில் அரிசி மாவு தொட்டு, மாவுக் கலவையை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இந்த பொரி விளங்காய் உருண்டை ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
     
    மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, தேவையான புரோட்டீன் நிறைந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச்சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்சனைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
    குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பாலியல் செயல்பாடுகளுக்காக கடத்துவது, பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவது போன்றவைகளையும் செய்கிறார்கள்.
    வீடுகள் தோறும் சிறுமிகள் ஐந்து மணி நேரம் வரை `ஆன்லைன்' வகுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள். அம்மாவோ, அப்பாவோ குறைந்தது எட்டு மணி நேரம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகமே இணையதளத்தில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாம் சரிதான்! ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு இணையதளத்தில் இருக்கும் ஆபத்துகள் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

    தங்களது குழந்தைகளுக்கு, நேரடியாக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி எல்லா அம்மாக்களும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் இணையதள டிஜிட்டல் பிளாட்பாமில் பாலியல் வன்முறையாளர்கள் சிறுமிகளை எப்படி அணுகி வசீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றி இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களும் நடத்தப்படுவதில்லை. ஆனால் உலக அளவில் இது மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

    சைல்டு க்ரூமிங் என்றால் என்ன?

    சிறுமிகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பாலியல்ரீதியாக வக்கிரமாக பயன்படுத்தும் எண்ணத்தோடு அணுகுகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதில் குழந்தைகளிடம் வக்கிரத்தை அரங்கேற்றுகிறவர்களும், அவர்களது அறியாமையை பயன்படுத்தி தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறவர்களும் இரைதேடும் வல்லூறுகள் போல் செயல்படுகிறார்கள். அவர்கள் மிகுந்த புத்திசாலித்தனமாக களமிறங்குகிறார்கள். முதலில் குழந்தைகளிடமும், பின்பு அவர்களது குடும்பத்தினரிடமும் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துகொள்கிறார்கள். நம்பிக்கையை பெற்ற பின்புதான் அவர்கள் மனதில் இருக்கும் கொடூர எண்ணங்கள் வெளிப்பட தொடங்கும். தங்கள் வக்கிர எண்ணத்திற்கு இசையும் அளவுக்கு குழந்தைகளை அவர்கள் வசப்படுத்தும் விதத்தைதான் `க்ரூமிங்' என்கிறார்கள்.

    குழந்தைகள் எங்கெல்லாம் அதிகமாக புழங்குகிறார்களோ அங்கெல்லாம் பாலியல் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். கொரோனாவுக்கு பிறகு இன்டர்நெட்டிலும், ஆன்லைன் பிளாட்பாம்களிலும் குழந்தைகள் குவிந்ததால் அந்த கட்டமைப்புகளை நோக்கி அவர்கள் இரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முகத்தை காட்டாமலே ஆன்லைனில் இரை பிடிப்பது அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து விடுகிறது.

    இந்த ஆன்லைன் குற்றவாளிகள் எந்த வயதாக இருந்தாலும், எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை இரையாக்க முயற்சிக்கிறார்கள். பள்ளிகள், மத அமைப்புகளை சேர்ந்த குழந்தைகளையும் `க்ரூமிங்' செய்கிறார்கள். தங்களது எல்லாவிதமான விருப்பங்களுக்கும் உடன்படும் அளவுக்கு குழந்தைகளை வளைத்தெடுப்பார்கள். அதை குழந்தைகளால் உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு உணர்வுபூர்வமாக செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

    அதற்காக நண்பர், ஆலோசகர், உறவினர், குரு, பயிற்சியாளர் போன்ற எந்த வேட மணியவும் அவர்கள் தயாராவார்கள். தேவைப்பட்டால் காதலர் என்ற போர்வையிலும் களம்காண்பார்கள். சில மாதங்களிலே இவர்களது அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றும் அளவுக்கு குழந்தைகளை மூளைச் சலவை செய்துவிடுவார்கள். தங்களுடனான உறவை ரகசியமாக வைத் திருக்க வலியுறுத்துவார்கள். அதற்காக கொலை மிரட்டல் விடுக்கவும் தயங்கமாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்களுடனான உறவை தொடருவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடுவார்கள்.

    குழந்தைகளை க்ரூமிங் செய்வதில் அவர்கள் அவசரம் காட்டுவதில்லை. பல மாதங்களாக நிதானித்து படிப்படியாக அதனை செய்கிறார்கள். பல்வேறு ஆன்லைன் பிளாட்பாம்களில் அவர்கள் உலா வருகிறார்கள். சோஷியல் மீடியா, பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்ஆப் போன்ற இன்டர்நெட் மெசேஜிங் ஆப்கள் மற்றும் ஆன்லைன் கேம் போன்றவைகளில் பொழுதைக் கழிக்கும் சிறுமிகளுக்கு அவர்கள் வலைவீசுகிறார்கள்.

    அந்த சிறுமிகளின் விருப்பங்கள், செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் போன்றவைகளை தொடர்ந்து கண்காணித்து, கிரிமினல்கள் அவர்களை அணுகுகிறார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிவைக்கவும் செய்வார்கள். முதலில் அவர்கள் சிறுமிகளின் பிரச்சினைகளை கேட்டறிவார்கள். பின்பு உதவி செய்ய முன்வருவார்கள். இதுதான் பெரும்பாலும் அவர்களது தொடக்க கால நடவடிக்கையாக இருக்கும்.

    சிறுமிகளின் நம்பிக்கையை பெறுவதே அவர்களது முதல் நோக்கம். தங்களது நம்பிக்கைக்குரியவர் களாக அவர்களை கருத தொடங்கியதும், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் ரகசியங் களைகூட அவர்களிடம் பகிர்ந்து விடுவார்கள். காலப்போக்கில் சிலர் அந்த சிறுமிகளை போதைப் பொருள் பழக்கத்திற்கு உட்படுத்துவார்கள். மிரட்டியோ அல்லது விரும்பிய பரிசுகளை வழங்கியோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது அல்லது தங்கள் விரும்பிய காரியங்களை செய்ய தூண்டுவது அந்த கிரிமினல்களின் அடுத்தகட்ட செயலாக இருக்கும்.

    அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு மட்டும் குழந்தைகளை பயன்படுத்துவதில்லை. குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பாலியல் செயல்பாடுகளுக்காக கடத்துவது, பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவது போன்றவைகளையும் செய்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் `சைபர்- செக்ஸ் டிராபிக்கிங்' என்ற குற்றச்செயல் புதிதாக உருவாகியிருக்கிறது. க்ரூமிங் செய்யப்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, அதனை படம்பிடித்து இணைய தளத்திலோ, இதர டிஜிட்டல் முறைகளிலோ வெளிக்கொண்டு வந்து காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது இந்த கிரிமினல்களின் நடைமுறையாகும். பணம் மட்டுமே இவர்களது நோக்கமாக இருக்கும். உலகம் முழுவதும் இத்தகைய வீடியோக்களை பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை யாகும்.

    இவர்களிடம் சிக்கிக்கொள்ளும் சிறுமிகள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பம், பாலியல் தொடர்புடைய நோய்கள், குற்றஉணர்ச்சி, அதிக பதற்றம், போதைப் பொருட்கள் பயன்பாடு, மனஅழுத்தம், தற்கொலை எண்ணம், எதிர்காலத்தை பற்றிய பயம் போன்றவைகள் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு ஏற்படலாம்.
    சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் (ஞாபகமறதி) நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
    ‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.

    60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

    இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.

    பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.

    பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

    பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார்.

    பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

    மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.

    ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.
    மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்.
    மகிழ்ச்சியான வாழ்க்கைத் துணை அமைந்தால் அவர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, துணையின் ஆரோக்கியத்திலும், ஆயுளிலும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக சைக்காலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், “மகிழ்ச்சியான வாழ்க்கை துணையுடன் பயணிப்பது நீண்ட கால திருமண பந்தத்தில் இணைந்திருக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 4,400 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். உடல் ரீதியான செயல்பாடுகள், உடல் நலம், பாலினம், வயது, கல்வி, வருவாய், வாழ்க்கை திருப்தி உள்பட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆய்வு செய்ததில் 16 சதவீதம் பேர் இறந்திருக்கிறார்கள்.

    வயது முதிர்வு, குறைந்த பொருளாதார நிலை, குறைந்த உடல் உழைப்பு, மோசமான உடல் ஆரோக்கியம் போன்றவை இறப்புக்கு காரணமாக இருந்திருக்கின்றன. உறவில் திருப்தி இல்லாத நிலை, வாழ்க்கையில் திருப்தியின்மை போன்ற காரணங்களும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.

    இதன் மூலம் மகிழ்ச்சியான துணை இருந்தால் இறப்பும் தள்ளிப்போகும், ஆயுள் கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    காதல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது எனக்கு தெரியும். காதல் தோல்விக்காக உயிரை விடுவது, மனஅழுத்தத்திற்கு உள்ளாவது, வேதனையில் முடங்கிக்கிடப்பது எல்லாம் அறியாமை.
    காதலில் ஏற்படும் வெற்றியும், தோல்வியும் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. காதலில் வெல்லும்போது அவன் குடும்ப கடமைகளையும், சமூக பொறுப்புகளையும் நிறைவேற்றுகிறான். காதலில் தோற்கும்போது அத்தகைய கடமைகளை மறப்பதோடு, தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் சிலர் முன்வந்து விடுகிறார்கள். ஒரு சிலரோ தன்னை புறக்கணித்த காதலியை (அல்லது காதலனை) பழிவாங்கவேண்டும் என்றும் துடிக்கிறார்கள்.

    கல்வியும், நாகரிகமும் வளர்ந்து வரும் இந்த யுகத்தில் காதல் ஜோடிகள் முரட்டுத்தனமான முடிவுகள் எடுப்பதை கைவிட்டுவிடவேண்டும். காதலர்களின் பெரும்பாலான தற்கொலைகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை பழிவாங்கவே செய்துகொள்ளப்படுவதாக கூறப்படு கிறது. ஆனால் நிஜத்தில் தற்கொலை மூலம் யாரையும் பழிவாங்க முடியாது. உண்மையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் பெற்றோர்கள்தான் சொல்லமுடியாத வேதனைக்கும், பழி பாவத்திற்கும் உள்ளாகிறார்கள். தற்கொலை செய்துகொள்கிறவர்கள் தங்கள் பெற்றோருக்கு தாங்கமுடியாத தண்டனையை கொடுத்துவிடுகிறார்கள்.

    ரவீந்தரும், ரக்‌ஷனாவும் ஒரே கல்லூரியில் படித்தார்கள். நட்பில் ஆரம்பித்து காதலர்களாக மாறினார்கள். அவர்களின் காதல் பயணம் தொடர்ந்துகொண்டிருக்க, திடீரென்று ரவீந்தரின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. அவளை புறக்கணிக்கத் தொடங்கினான். அதோடு அவளை வெறுப்படைய செய்யும் விதத்தில் வேறு சில பெண்களோடு ஊர் சுற்றினான். எரிச்சலோடு அவள், அவனிடம் இதுபற்றி கேட்டபோது ‘இது என் சொந்த விஷயம். இதில் நீ தலையிடக்கூடாது’ என்று எச்சரிக்கும் விதத்தில் பேசினான். மனம் உடைந்த ரக்‌ஷனா, ‘அப்படியானால் நீ என்னை காதலித்தது பொய்யா?’ என்று கேட்டாள். ‘நீதான் என் வருங்கால மனைவி. அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் நான் உன்னிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது. நான் பல பெண்களோடு பேசுவேன். பழகுவேன். அதில் நீ தலையிடக்கூடாது’ என்றான்.

    ரவீந்தரின் இந்த சித்தாந்தம் அவளுக்கு பிடிக்கவில்லை. சற்று யோசித்தவள் ‘இன்றோடு நம் காதலை முடித்துக்கொள்வோம்’ என்றாள். அவனும் சரி என்றான்.

    அவள் ரவீந்தரை தீவிரமாக காதலித்தாள் என்பது அவளது தோழிகள் சிலருக்கு தெரியும். காதல் முறிந்துபோனதும் அவள், தப்பான முடிவு ஏதாவது எடுத்துவிடுவாளோ என்று அந்த தோழிகள் அஞ்சினார்கள். ஆனால் ரக்‌ஷனா தெளிவாக இருந்தாள்.

    காதல் மட்டும் வாழ்க்கை இல்லை என்பது எனக்கு தெரியும். காதல் தோல்விக்காக உயிரை விடுவது, மனஅழுத்தத்திற்கு உள்ளாவது, வேதனையில் முடங்கிக்கிடப்பது எல்லாம் அறியாமை. அவனை நான் மனப்பூர்வமாகத்தான் காதலித்தேன். அவனும் என்னை காதலித்தான். என்னை அவனுக்கு ஒருவேளை பிடிக்காமல் போயிருக்கலாம். அதை எப்படி சொல்வது என்று தெரியாமல், மற்ற பெண்களோடு பழகுவது மூலம் எனக்கு அதை புரியவைத்தான். நானும் புரிந்து கொண்டேன். அவன் நமக்கு சரிப்படமாட்டான் என்பது புரிந்துவிட்டது. சுமுகமாக பிரிந்து விட்டோம். என் வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் வேலையை அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

    காதலில் இருந்து விடுபட்டுவிட்டதற்காக நாங்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்ட விரும்ப வில்லை. அவன்தான் காரணம் என்று நான் ஒரு குறை சொன்னால், அவன் என்னைப் பற்றி ஒன்பது குறை சொல்வான். அதுவே தொடர்ந்தால் எங்கள் நட்பு வட்டத்தாலும், சமூகத்தாலும் நாங்கள் தூற்றப்படுவோம். அதனால் அவனை நான் குறை சொல்லவிரும்பவில்லை என்பதை என் தோழிகள் மூலம் அவனுக்கு கூறிவிட்டேன். அவனும் பதிலுக்கு நாகரிகமாக நடந்துகொள்வதாக உறுதி அளித்திருக்கிறான். காதல் தோல்வி எனக்கு பல பாடங்களை கற்றுத்தந்திருக்கின்றன’ என்று அவள் தெளிவாக தன் தோழிகளிடம் சொன்னாள்.

    அவளது அந்த முடிவை பார்த்த ரவீந்தரே வியந்து போனான். அவர்கள் காதலில் தோல்வியடைந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் நட்பு ரீதியாக மட்டும் நலம் விசாரித்துக் கொள்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வெவ்வேறு வாழ்க்கைத் துணையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    “வாழ்க்கையில் காதல் வரும், போகும். காதல் என்பது மட்டும் வாழ்க்கையில்லை” என்ற அவர்களது யதார்த்த கருத்துக்கு அவர்களது நண்பர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
    குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில் சாப்பிடும் பொருட்கள் மற்றும் உணவில் தண்ணீர் கலந்திருப்பதை உணராமல் நிறைய பேர் தண்ணீரை அதிகமாக உட்கொள்கிறார்கள்.
    மனித உடலில் 80 சதவீதம் நீர் சூழ்ந்துள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும், செல் திசுக்களும் சரியாக செயல்படுவதற்கு உதவுகிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானதாகிறது. தினமும் குறைந்தபட்சம் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில் சாப்பிடும் பொருட்கள் மற்றும் உணவில் தண்ணீர் கலந்திருப்பதை உணராமல் நிறைய பேர் தண்ணீரை அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் அதிக நீரிழப்பு ஏற்படக்கூடும். பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதிக அளவு தண்ணீர் பருகுகிறீர்கள் என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.

    1.சிறுநீரின் நிறம்: நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்களா? என்பதை கண்டறியும் சிறந்த வழிகளுள் ஒன்று, சிறுநீரின் நிறத்தை கண்காணிப்பதாகும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது மோசமான அறிகுறியாகும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருகிவர வேண்டும். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவதே சரியானது. அது உடலில் நீர்ச்சத்து உகந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டும். ஆனால் சிறுநீர் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம். அதாவது தண்ணீர் உட்கொள்ளும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகும்போது இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும்.

    2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்: தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கும் அவஸ்தையை அனுபவிக்க நேரிடும். ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம். ஆனால் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் உடலுக்கு தேவையானதை விட அதிகமாக தண்ணீர் பருகுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    3. சோர்வு: அதிகமாக தண்ணீர் பருகினால் ‘ஹைபோநெட்ரீமியா’ பிரச்சினை ஏற்படும். இது ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். மேலும் அதிக படியான நீரிழப்பு ஏற்படுவதையும் வெளிக்காட்டும். அதிக அளவு நீர் பருகும்போது உடல் ஆற்றல் திறன் குறையும். மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகளும் தலைதூக்கும்.

    4. பாதங்கள், கைகள், உதடுகளில் வீக்கம்: உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க நீர் உதவுகிறது. எலக்ட்ரோலைட்டுகள்தான் உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்த உதவுகின்றன. தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது, ​​இந்த சமநிலை மாறுபடும். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளும்போது கைகள், கால்கள் அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்படலாம். ஹைபோநெட்ரீமியா பாதிப்பையும் உணரலாம்.

    5. தலைவலி, குமட்டல்: உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள சோடியம் அளவை குறைத்து, ஹைபோநெட்ரீமியா நிலைக்கு வழிவகுப்பதோடு மூளை செயல்திறனில் குறைபாடு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக தலைவலியை புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் அது அதிக நீரிழப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

    6. தசை பலவீனம்: அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறையும் போது, ​​உடல் சமநிலை மாறுபடும். உடல் சோர்வை அனுபவிப்பதுடன் கை, கால்களில் நடுக்கம் மற்றும் வலியை உணரலாம். தசை பிடிப்பும் உண்டாகலாம். இதுவும் அதிகப்படியான நீரிழப்பின் அறிகுறியாகும். பெண்கள் உடலில் நீர்ச்சத்தை பேணுவது அவசியமானது. அதேவேளையில் எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
    ×