என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இரண்டாவது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் காலைநேர சோர்வு ஏற்படும். வாந்தி, வயிற்றுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்றவை தோன்றும்.
    இரண்டாவது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் காலைநேர சோர்வு ஏற்படும். வாந்தி, வயிற்றுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்றவை தோன்றும்.

    இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகளின் மீது வெறுப்பும், சில உணவுகளின் மீது ஈர்ப்பும் ஏற்படும். வாந்தியால் சிலருக்கு உடல் எடை குறையும். உடல்எடை சிலருக்கு அதிகரிக்கவும் செய்யும்.

    தலைவலி அவ்வப்போது தோன்றும்.

    மார்பகங்களின் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

    கர்ப்பிணிகளில் சிலரது சருமம் நன்றாக ஜொலிக்கும். சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றலாம்.

    ஆறாவது வாரம் ஆகும்போது சிசுவின் இதயத் துடிப்பை கண்டறியலாம். அப்போது 140-150 என்ற கணக்கில் இதயத்துடிப்பு இருந்துகொண்டிருக்கும். சிசுவில் ரத்த ஓட்டம் தொடங்கும். நரம்புகள் வளரும்.

    எட்டு வாரங்கள் ஆகும்போது சிசு ஆரஞ்சு பழ அளவில் வளர்ந்திருக்கும். சிசுவின் மூளை, நரம்பு மண்டலம், இதய தசைகள், எலும்புகள் உருவாகத் தொடங்கும்.

    இரண்டு மாதம் கொண்ட சிசு 2.5 செ.மீ. நீளமாக இருக்கும்.

    இந்த இரண்டாம் மாதத்தில்தான் பெரும்பாலானவர்கள் தாங்கள் கர்ப்பமாகியிருப்பதை உணர்கிறார்கள். இந்த காலகட்டத்தில் ‘எக்டோபிக் பிரெக்னன்சி’ என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. கருப் பைக்கு வெளியே கரு வளருவதே இந்த பாதிப்பு. இதில் 50 சதவீதம் அளவுக்கு ‘டியூபல் பிரெக்னன்சி’ உருவாகிறது. அதாவது கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்துவிடும்.

    அப்போது கரு வளர்ச்சியால் கருக்குழாய் வெடித்துவிட்டால் ரத்தப்போக்கு, அதிக வயிற்று வலி, ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து நினைவிழப்பு உருவாகுதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணியை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்காவிட்டால் இறப்புகூட ஏற்படலாம்.

    இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்கவேண்டும். அலட்சியத்தால் ஒருவேளை கரு கலையும் சூழல் உருவாகும். இரண்டாம் மாதத்தில்தான் பெரும்பாலானவர்கள் அபார்ஷனால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணிகள் பயணம் மேற்கொள்ளலாம்தான். ஆனால் சோர்வுதரக்கூடிய, உடலை குலுக்கக்கூடிய பயணம் மேற்கொள்ளக்கூடாது. இருசக்கர வாகன பயணம், ஆட்டோ பயணங்களை தவிர்த்துவிடலாம். பாதுகாப்பான முறையில் நீண்ட தூர பயணம் மேற்கொண்டாலும் இடைஇடையே ஓய்வு மிக அவசியம்.

    ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், அதனை நிறுத்தவேண்டியதில்லை. ஆனால் ஜிம் பயிற்சியாளரிடம் தான் கர்ப்பிணி என்பதை கூறிவிடவேண்டும். ஏற்கனவே அபார்ஷன் ஆகியிருந்தால் ஜிம் பயிற்சிக்கு செல்லாமல் தினமும் சிறிது நேரம் நடந்தால்போதும்.

    கர்ப்பத்தின் இரண்டாவது மாதத்தில் இடைவெளிவிட்டு அவ்வப்போது குறைந்த அளவில் சாப்பிடவேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். உடலுக்கு தினமும் 5 மி.கி. போலிக் ஆசிட் தேவை. மார்னிங் சிக்னெஸ், வாந்தி போன்றவை இருந்தால் இஞ்சியை பயன்படுத்தலாம்.
    சருமத்தின் மற்ற பகுதிகளைவிட முகம் சற்று மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். ஒரு சில வீட்டு உபயோகப் பொருட்களை சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தக் கூடாது. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
    ஊடரங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே சரும பராமரிப்பு வழிமுறைகளை கையாளுகிறார்கள். ‘பேஸ் பேக்’, ‘பேஸ் கிரப்’ என சருமத்திற்கு உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து பயன் படுத்தவும் செய்கிறார்கள். ஒருசில வீட்டு உபயோகப் பொருட்களை சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தக் கூடாது. அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். சருமத்தின் மற்ற பகுதிகளைவிட முகம் சற்று மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். அதற்கு பொருத்தமான பொருட்களைத்தான் உபயோகப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் எரிச்சல், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

    முகத்திற்கு ‘ஸ்க்ரப்’களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவைதான் முகத்திற்கு பொருத்த மானது. வீட்டிலேயே ‘ஸ்கிரப்’ தயாரிப்பதாக இருந்தால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பொருட் களை ஒன்றாக கலக்கக்கூடாது. அவை மென்மையான முகத்தை பாழாக்கிவிடும். வீட்டில் தயாரிக்கும் ‘ஸ்கிரப்பில்’ பயன்படுத்தக் கூடாத நான்கு பொருட்கள் குறித்து பார்ப்போம்.

    எலுமிச்சை: பெரும்பாலானோர் முக அழகை பராமரிப்பதற்காக தயாரிக்கும் ஸ்கிரப்பில் எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள். அது சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் எலுமிச்சை பழம் அமிலத்தன்மை அதிகம் கொண்டது. மேலும் முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்யை குறைத்து எரிச்சலை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் காயங்களை உண்டாக்கிவிடும். சருமத்தில் நேரடியாக சூரிய ஒளி படும்போது பக்கவிளைவுகளும் ஏற்படலாம். அதனால் எலுமிச்சை சாறை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதனுடன் அதே அளவுக்கு தண்ணீர் கலந்துதான் பயன்படுத்த வேண்டும்.

    சர்க்கரை: நிறைய பேர் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு சர்க்கரையை பயன்படுத்துவார்கள். சர்க்கரை கட்டிகளின் விளிப்பு பகுதி கூர்மையாக இருக்கும். மேலும் சர்க்கரை துகள்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் முகம் போன்ற மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு தீங்குதான் விளைவிக்கும். மெலானின் அதிகமாக உற்பத்தி யாவதற்கு வழிவகுக்கும். அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக சர்க்கரையுடன் எலுமிச்சையை மட்டும் ஒன்றாக கலந்து உபயோகிக்கக்கூடாது.

    காபி கொட்டை: காபி கொட்டை களை அரைத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் நேரடியாக உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் காபி கொட்டையில் இருக் கும் மூலக்கூறுகள், அவற்றின் விளிம்புகள் கடினமானவை. அவற்றை முகத்தில் தடவும்போது வெட்டுக்காயங்கள் ஏற்பட வழி வகுக்கும். சருமத்தில் திட்டுகள் தோன்றக்கூடும். நிறமிழப்பு பிரச்சினையை எதிர் கொள்ளவும் கூடும். காபி பவுடரை பயன்படுத்துவதுதான் நல்லது. டீ இலை களையும் பயன்படுத்தலாம். காபி கொட்டையுடன் ஒப்பிடும் போது அது சருமத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தாது.

    எண்ணெய் வகைகள்: வீட்டிலேயே ‘பேஸ் கிரப்’ செய்வதற்கு பெப்பர் மிண்ட் அல்லது லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இருப்பினும் சிலவகை எண்ணெய்கள் மாறுபட்ட மணம், தன்மையை கொண்டிருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். தடிப்புகள் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது. ஆதலால் எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் பண்புகளை அறிந்து கொள்வது அவசியமானது.
    கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி எளிமையாக செய்யக்கூடியது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பருப்பு கீரை  - 1 கட்டு
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    அரிசி - 1 1/2 கப்
    பருப்பு - 1 கப்
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 டம்ளர்

    செய்முறை

    தக்காளி, ப.மிளகாய், வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

    அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.

    இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.

    இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பருப்பு கீரை கிச்சடி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை நாம் எவ்வளவுதான் அன்பாக கவனித்துக் கொண்டாலும், அவைகளோடு சேர்ந்து விளையாடினாலும், குழந்தைகள் தங்களைப் போன்ற குழந்தைகளோடு விளையாடுவதைத்தான் பெரிதும் விரும்புகின்றன.
    பொம்மைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் சில உண்மைகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

    குழந்தைகளை நாம் எவ்வளவுதான் அன்பாக கவனித்துக் கொண்டாலும், அவைகளோடு சேர்ந்து விளையாடினாலும், குழந்தைகள் தங்களைப் போன்ற குழந்தைகளோடு விளையாடுவதைத்தான் பெரிதும் விரும்புகின்றன. உடன் விளையாட குழந்தைகள் இல்லாத நேரத்தில் அந்த இடத்தை ‘டெடிபியர்’ போன்ற பொம்மைகள் பூர்த்தி செய்கின்றன.

    அத்தகைய பொம்மைகள் எங்கிருந்தாலும் அவை குழந்தைகளை அப்படியே ஈர்த்துவிடும். அந்த பொம்மைகளை வாங்கித்தரும்படி கேட்பார் கள். வாங்கிக்கொடுத்துவிட்டால், அதனோடு இரண்டறக்கலந்து விளையாடத் தொடங்கி விடுவார்கள். அவற்றோடு பேசுவார்கள். விளை யாடுவார்கள். கட்டளையிடுவார்கள்.

    மென்மையான பொம்மைகளை குழந்தைகள் தங்கள் நண்பர்களாக கருதுவது இயற்கையாகவே நடக்கும் விஷயமாகும். டெடிபியர் குட்டிக்கரடி பொம்மைகள் மனிதர்களைப் போல மென்மையாக இருப்பதால், அதை உயிருள்ள மனிதர்களாக பாவித்து குழந்தைகள் விளையாடுகிறார்கள். அவர்கள் மனதிலும் அது ஒரு பொம்மை என்ற எண்ணம் மாறி ஒரு சக நண்பர் என்ற உணர்வு பதிவாகிவிடும்.

    குழந்தைகள் கையில் ஒரு பொம்மையிருந்தால், அவைகள் தனிமையை உணர்வதில்லை. தங்க ளோடு தங்களுக்கு பிடித்தமான நண்பர் இருப்பது போல் குழந்தைகள் உணர்கின்றன. குழந்தைகளை முதலில் மழலையர் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்போதுதான் குழந்தைகள் முதல்முறையாக பெற்றோரை பிரியும். அந்த பிரிவு தெரியாமல் இருக்கவும், தைரியமாக பிரிந்திருக்கவும் அப்போது குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப் பார்கள். அந்த பயிற்சியில் முக்கிய பங்காற்றுவது பொம்மைகள்தான். அப்போது அவர்கள் முன்னால் எத்தனை விளையாட்டு பொருட்களை கொட்டி னாலும் அவைகள் பொம்மைகளைத்தான் தேர்வு செய்யும். அது தனிமையை விரட்டுவதோடு, பாதுகாப்பையும் அளிக்கின்றன. அதோடு தன் கையில் கிடைப்பதை தூக்கி எறியவும், உடைத்து பார்க்கவும் குழந்தைகள் விரும்பும். பொம்மைகள் குழந்தைகளின் வேகம், முரட்டுத்தனம் போன்ற அனைத்துக்கும் ஈடுகொடுத்து அவர்களது மனநிலையை மேம்படுத்துகின்றன.

    பொம்மைகள் மூலம் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரலாம். அடம்பிடிக்கும் குழந்தைகளை பொம்மைகளால் இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும். ‘நீ சீக்கிரம் பால் குடிச்சிடு. நீ பால் குடித்தால் உன் பொம்மை சந்தோஷப்படும். விரைவாக குளிச்சி, டிரஸ் பண்ணிக்கோ! நீ சுத்தமாக இருந்தால்தான் உன் பொம்மைக்கு பிடிக்கும்’ என்றெல்லாம் கூறி, குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுவரலாம்.

    பாதுகாப்பான, மென்மையான பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகளை அந்த பொம்மைகளோடு விளையாடவைக்க வேண்டும். அவர்கள் கற்பனைக்கேற்ப பொம்மைக்கு அண்ணன், தம்பி, பிரெண்ட் என்று பெயர் வைத்து விளை யாடுவார்கள். சில நேரம் பொம்மைகளை குழந்தைகளாகவும் அவர்களை அம்மாவாகவும் நினைத்து பொம்மைகளை மிரட்டுவார்கள். சாப்பிட வலியுறுத்துவார்கள்.

    அப்படி குழந்தைகள், பொம்மையிடம் சாப்பாடு பற்றி பேசத்தொடங்கிவிட்டால் சாப்பாட்டின் அருமை அந்த குழந்தைக்கு புரிந்துவிட்டது என்று அர்த்தம்.

    குழந்தைகளின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திடீரென்று அழும், சிடுசிடுப்பாகும், கோபப்படும். அதற்கான காரணம் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அது போன்ற நேரங் களில் குழந்தைக்கும் நமக்கும் இடையே இந்த பொம்மைகள் செயல்பட்டு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துவிடும். தான் ஏன் கோபப்பட்டேன் என்பதை அதனோடு பேசும்விதமாக குழந்தைகள் வெளிப்படுத்துவார்கள். பொம்மைகளிடம் மனம்விட்டு பேசுவதால் குழந்தைகள் மனது லேசாகி விடும். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் விலகும்.

    குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங் களை தங்கள் வயது குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளும். தனது தோழிக்கான இடத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அதனிடம் தனது மனதில் இருப்பவைகளை வெளிப்படுத்தும். பள்ளியில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்கள், பெற்றோர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை எல்லாம் பொம்மைகளிடம் பேசும். அப்போது பெற்றோர் கவனித்தால், தவறுகளை திருத்தலாம். உச்சரிப்புகளை சரிசெய்யலாம். பள்ளியில் கற்றுத்தந்த ரைம்ஸ்களை பொம்மைகளுக்கு கற்றுத்தரச் சொல்லுங்கள். குழந்தைகள் பாட முயற்சிக்கும்போது வார்த்தைகளை எடுத்துக் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். இவ்வாறு செய்தால் குழந்தைகளிடம் பேச்சுத்திறன் வளரும். பொம்மைகளோடு பேசி, விளையாடும் குழந்தைகள் விரைவாகவே நன்றாக பேச தொடங்கிவிடும்.

    குழந்தைகளிடம் பகிர்ந்தளிக்கும் தன்மை வளர வேண்டும். அந்த நல்ல வழக்கத்தை பொம்மைகள் மூலம் ஏற்படுத்தலாம். தான் சாப்பிடும் பொருளை பொம்மைக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிடு என்று கூறி, பகிர்ந்து உண்ணும் பக்குவத்தை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும்.

    தற்போது பெரும்பாலான வீடுகளில் ஒரே குழந்தைதான் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால்தான் பகிர்ந்து உண்ணும் பழக்கம் அவைகளுக்கு ஏற்படும். அந்த பண்பை பொம்மைகள் மூலம் ஏற்படுத்த லாம்.

    சாதாரணமாகவே பொம்மைகளை பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளவும் செய்யும். தவறி கீழே விழுந்து விட்டால் பதறி துடித்து அதை எடுத்து சமாதானப் படுத்தும் இயல்பும் குழந்தைகளிடம் உண்டு. இப்படி கவனிப்பு, உபசரிப்பு, பகிர்வு போன்ற பண்புகளை பொம்மைகள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
    பெண்கள் சமையல் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பது எரிபொருளை சேமிக்க உதவும். அதற்கான சில குறிப்புகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.
    ஊரடங்கு காலகட்டம் குடும்பத்தலைவிகளை ஓய்வில்லாமல் சமையல் பணியில் ஈடுபட வைத்துவிட்டது. அதன் காரணமாக கியாஸ் சிலிண்டர்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இரண்டு மாதங்களை தாண்டியும் கியாஸ் சிலிண்டர் காலியாகாமல் சமைத்துக்கொண்டிருந்தவர்கள் ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே அடுத்த கியாஸ் சிலிண்டரை தயாராக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. சமையல் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பது எரிபொருளை சேமிக்க உதவும். அதற்கான சில குறிப்புகள்:

    சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளிவரும் தீச்சுடர் பாத்திரத்தின் அடிப்பகுதியில் மட்டும்தான் பரவ வேண்டும். பாத்திரத்தின் நான்கு பக்கங்களின் விளிம்புகளிலும் தீச் சுடர் பரவி மேல் நோக்கி எரியக் கூடாது. அது கியாஸ் விரைவாக காலியாவதற்கு வழிவகுக்கும். அத்து டன் அதிக வெப்பம் வெளியாகி சமையலுக்கும் இடையூறை ஏற்படுத் தும்.

    பர்னரில் இருந்து வெளிப்படும் தீச்சுடர் நீல நிறத்தில் எரிவதுதான் நல்லது. தொடர்ந்து சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் சுடர் வெளிப்பட்டால் அந்த கியாஸ் சமையலுக்கு முழுமை யாக உதவாது. கியாஸ் வீணாகுவதற் கான வாய்ப்பாக அமையும். பர்னரை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால் இத்தகைய அறிகுறிகள் வெளிப் படும்.

    சமைப்பதற்கு தேவையான பொருட் களை தயாராக வைத்துவிட்டுத்தான் அடுப்பை ஆன் செய்ய வேண்டும். நறுக்கிய பொருட்கள், மசாலா பொருட்களை அருகில் எடுத்து வைத்துவிட்டு சமையலை தொடங்க வேண்டும். அப்படி செய்தால் தேவை யில்லாமல் எரிபொருள் வீணாவது தவிர்க்கப்படும்.

    அடுப்பில் பாத்திரங்களை திறந்த நிலையில் வைத்துக்கொண்டு சமைப் பதை தவிர்ப்பது நல்லது. திறந் திருக்கும் பாத்திரங்களில் இருந்து வெப்பம் விரைவாக வெளியேறும். மூடிவைக்கும்போது வெப்பம் வெளி யேறாமல் நீராவி உருவாகி காய்கறி களை வேகமாக வேகவைக்க உதவும். சமைக்கும் நேரமும் குறையும். கியாஸும் மிச்சமாகும்.

    தண்ணீரை கொதிக்கவைக்கும் போதும், சமைக்கும்போதும் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணக்கிட வேண் டும். மறுமுறை சமைக்கும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சமையல் வேலையை முடிக்க இது உதவும். அதை கருத்தில் கொள்ளாமல் நீர் கொதித்து ஆவியாகிக் கொண்டிருந் தால் கியாஸ் வீணாகும்.

    அடுப்பில் வைப்பதற்கு முன்பு பாத்திரங்கள் நன்றாக உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும். உள்பகுதியிலும், அடிப்பகுதியில் நீர்த்துளிகளை கொண்ட பாத்திரங்கள் அதனை ஆவி யாக்குவதற்கு அதிக எரி பொருளை அபகரித்துவிடும்.

    அடுப்பில் வைக்கும் பாத்திரம் நன்றாக சூடேறியதும் தீச்சுடரின் வீரியத்தை குறைத்துவிட வேண் டும். அதுபோல் கொதிக்க தொடங்கியதும் தீச்சுடரை குறைத்துவைத்துவிட வேண் டும். அதை விடுத்து தீச்சுடரை முழுமையாக எரியவிட்டு அதிக வெப்பநிலையில் சமைப்பது சமைக்கும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் களை சிதைத்துவிடும்.

    சாதத்தை வேகவைப்பதற்கு பாத்திரங்களை பயன்படுத்தலாம். மற்ற சமையல் வேலைகளுக்கு பிரஷர் குக்கரை உபயோகிக்கலாம். பாத்திரத் தில் திறந்த நிலையில் சமைப்பதுடன் ஒப்பிடும்போது குக்கரில் அழுத்தப் பட்ட நீராவி, உணவை வேகமாக சமைக்க உதவும். மேலும் உணவு நீண்ட நேரம் சூடாகவும் இருக்கும்.

    அடிக்கடி சமைப்பது கியாஸ் விரயத்திற்கு வழிவகுக்கும். திட்ட மிட்டு சமையல் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

    சமையல் வேலை முடிந்ததும் சிலிண் டரை ஆப் செய்துவிட வேண்டும். பர்னர், சிலிண்டர் டியூப் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    கர்ப்ப காலத்தின் முதல் காலகட்டத்தில் பெரிய அளவில் கர்ப்பிணியின் உடலில் மாற்றங்கள் உருவாகாது என்றாலும், சிசு நான்கு வாரத்தை அடைந்துவிடும்போது குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படலாம்.
    கர்ப்ப காலத்தின் முதல் மாதம் மிகவும் கவனிக்கத்தகுந்தது. வழக்கமான மாதவிலக்கு நின்றுபோகும் இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் கர்ப்பிணியின் உடலில் மாற்றங்கள் உருவாகாது என்றாலும், சிசு நான்கு வாரத்தை அடைந்துவிடும்போது குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படலாம்.

    மாதவிலக்கின் முதல் நாள் முதல் கர்ப்பகாலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதல் மாதம் என்பது, மாத விலக்கு சுழற்சியின் முதல் நாளில் இருந்து 28-வது நாள் வரையிலான காலகட்டமாகும். சிசு வளர்ச்சி நான்கு வாரங்களை எட்டும்போது கர்ப்பிணியின் மார்பகங்கள் அதிக அளவில் மென்மையாகும்.

    மார்பு காம்புகளை சுற்றி கறுப்பு நிறம் தோன்றும். கருப்பை வளரத் தொடங்குவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வுதோன்றும். எச்.சி.ஜி. ஹார்மோன் சுரக்கும் அளவு அதிகரிப்பதால் குமட்டல், வாந்தி, சோர்வு, தலைச்சுற்றல், மார்பகங் களில் வலி போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

    கருவாக்கம் முதலில் கருக்குழாய்களில் நடக்கும். கரு, ஆறு நாட்கள் ஆன பின்பு கருப்பையை அடைந்து, கருப்பை சுவர்களில் பற்றிப்பிடித்துக்கொள்ளும்.

    சிசு கருப்பையை பற்றி பிடிக்கும்போது சிறிதளவு ரத்தப்போக்கு ஏற்படும். இதை பெரும்பாலான கர்ப்பிணிகள் மாதவிலக்கு என்று தவறாக புரிந்துகொள்வார்கள்.

    இந்த காலகட்டத்தில் சிசுவின் திசுக்கள் பல்கி பெருகிக்கொண்டிருக்கும். வெளிப்பகுதி திசுக்கள் நஞ்சுக்கொடியாக உருவாகும். அதில் இருந்து எச்.சி.ஜி. ஹார்மோன் உருவாகி ரத்தத்தில் கலக்கும். பிரசவம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆனதும் அதன் சுரப்பு அடியோடு நின்றுபோகும்.

    முதல் மாதத்தில் வயிற்று வலி, தலைசுற்றல், அதிக வாந்தி, ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் உடனடியாக அவசர நிலைகருதி டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

    கருத்தரித்து 10-12 நாட்கள் ஆகிவிட்டால், சிறுநீரில் எச்.சி.ஜி. ஹார்மோன் அளவை கணக்கிட்டு கர்ப்பத்தை உறுதி செய்யலாம். மாதவிலக்கு கோளாறு இருப்பவர்கள் அல்டரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் சிசுவின் சரியான வளர்ச்சியை கண்டறிய முடியும்.

    கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களும், கர்ப்பத்தின் இறுதி மூன்று மாதங்களும் தாம்பத்ய உறவை தவிர்ப்பது நல்லது.

    இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும். எடையை தூக்குவது போன்ற கடினமான வேலைகளையும், அதுபோன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் செய்யக்கூடாது. எளிதான உடற்பயிற்சிகளை பாதுகாப்பான முறைகளில் செய்துவரவேண்டும்.

    ஒன்றாம் மாதம் பாலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். அந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது அதிக பலன்தரும். கீரைகள், முளைவிட்ட பயறு வகைகளில் பாலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. தவிடு நீக்காத ரொட்டி, சிட்ரஸ் சத்து அடங்கிய பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளையும் சாப்பிட்டு வரலாம்.

    நான்காவது வாரத்தின் இறுதியில் சிசுவின் முகத்திற்கு வடிவம் கிடைக்கத் தொடங்கும். கண்கள் உருவாகத் தோன்றும். கழுத்து வடிவங்கொள்ளும். ரத்த தமனிகளும் தோன்றும்.

    காது இரைச்சலுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை தற்காலிக காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம்.
    காதுக்குள் இரைச்சல் ஏற்படுவதற்கான காரணம் காதிலும் இருக்கலாம். உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம். சில மனநோயாளிகள்கூட காதில் இரைச்சலும் குரலும் கேட்பதாக கூறுவார்கள். காதிலுள்ள எலும்புகள், காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு, மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும். காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, குக்கர் விசில் அடிப்பது போன்றோ, புயல் மாதிரி பேரிரைச்சலோ கேட்பதாக இருந்தால் அந்த நபருக்கு ‘காது இரைச்சல்’ இருப்பதாக அர்த்தம்.

    இந்த இரைச்சலின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு இரைச்சல் தொடர்ச்சியாக கேட்கும். இன்னொருவருக்கு விட்டுவிட்டு கேட்கும். ஒரு சிலருக்கு இரைச்சல் தாங்கமுடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும். சுற்றுப்புறம் அமைதியாக இருந்தால், காதுக்குள் இரைச்சல் அதிகமாகக் கேட்கும். குறிப்பாக, இரவில் இது அதிகம் தொல்லை தரும். உறக்கம் வராது. மனக்குழப்பத்துக்கு அடிபோடும். நினைவாற்றல் குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும். உடல் சோர்வாக இருக்கும்.

    காது இரைச்சலுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றை தற்காலிக காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம். காதுமடலை சேர்த்து சிறு துவாரமாக காதுக்குள் செல்கிற வெளிக்காதுக்குழலில், இயற்கையாக சுரக்கிற மெழுகு உருண்டு திரண்டு கட்டியாகி காதை அடைத்துக்கொண்டால் அல்லது அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக்கொண்டால், காளான் தொற்று ஏற்பட்டால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். இவையெல்லாமே தற்காலிகமாகக் காது இரைச்சலை உண்டாக்குபவை.

    காதில் உள்ள அழுக்கை அயல் பொருளை அகற்றிவிட்டால் அல்லது காளான் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவிட்டால் காது இரைச்சலில் இருந்து விடைபெறலாம். ஜலதோஷம் பிடித்தால்கூட சில நேரங்களில் தற்காலிகமாக காது இரைச்சல் உண்டாகும். அதேநேரத்தில் சில காரணங்களால் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும். முதுமை இதற்கு முக்கியக் காரணம். வயதாக வயதாக நடுக் காது எலும்புகள், காக்ளியா எனும் நத்தை எலும்பு மற்றும் காது நரம்பிழைகள் சிதைவடைவதால் காதுக்குள் இரைச்சல் தொடங்குவது வழக்கம். காதுக்கு போகும் ரத்தம் முதுமையில் குறைவதாலும் காதில் இரைச்சல் ஏற்படுவது உண்டு.

    வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கிற செவிப்பறையில் துளை விழுந்துவிட்டால், காது இரைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுபோன்று நடுக்காதுக்குள் நீர் கோத்துக்கொண்டால், சீழ் பிடித்துவிட்டால் காது இரைச்சல் ஏற்படும். நடுக்காதில்தான் நம் உடலிலேயே மிகச் சிறிய எலும்புகளான சுத்தி, பட்டடை, அங்கவடி எலும்புகள் உள்ளன. இவற்றில் ‘எலும்பு முடக்கம்’ எனும் நோய் தாக்கும்போது, எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்கு செல்வது தடைபடும். அப்போது காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும். அடுத்து, தொண்டையையும் காதையும் இணைக்கிற ‘காது- மூக்கு -தொண்டைக்குழாய்’ அழற்சி அடைந்து, வீங்கிக் கொண்டாலும் காது இரைச்சலுக்கு வழி அமைக்கும். காதில் அடிபட்டாலும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.
    காரணம் ஏதும் இல்லாவிட்டாலும், மனம் எப்போதும் கவலையிலேயே மூழ்கியிருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால், நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
    காரணம் ஏதும் இல்லாவிட்டாலும், மனம் எப்போதும் கவலையிலேயே மூழ்கியிருக்கும்.

    முன்பு விரும்பிச் செய்த செயல்களில்கூட தற்போது ஈடுபாடு இல்லாமல் போவது.

    அளவிட முடியாத சோர்வு. எப்போதும் தூங்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது.

    வழக்கத்தைவிட வெகு சீக்கிரம் தூக்கத்தில் இருந்து விழித்துவிடுவது.

    தூக்கமில்லாமல் அவதிப்படுவது.

    பசியின்மை, பிடித்தமான உணவுகளைக்கூட வேண்டாம் என்று புறக்கணிப்பது.

    அளவிட முடியாத துக்கத்தில் சிக்கித் தவிப்பது.

    பெரும் இழப்புகளால் திடீரென்று பாதிக்கப்படுவது.

    சிந்தனை, செயல், ஈடுபாடு போன்ற அனைத்தும் மெல்ல மெல்ல குறைவது.

    அலட்சியம், அஜாக்கிரதை உணர்வு அதிகரித்து, எதிலும் கவனமின்றி காணப்படுவது.

    எதிர்காலத்தை பற்றிய பயம். தன்னை பலரும் புறக்கணிக்கிறார்கள் என்ற கவலை. தன்னால் இந்த நிலையில் இருந்து மீண்டுவர முடியாது என்ற அவ நம்பிக்கை உருவாகுவது.

    அளவிட முடியாத தாழ்வு மனப்பான்மை.

    தன்னை மதிக்காதவர்கள் மீது அதீத கோபம். அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற சிந்தனை உருவாகுதல்.

    மேற்கண்டவைகளில் பாதிக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
    நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 6,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - சிறிதளவு. 

    செய்முறை:

    பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

    இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

    தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

    உடலுக்கும் மிகவும் நல்லது இந்த நெல்லிக்காய் சட்னி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால் மென்மை தன்மையை இழந்துவிடும். கைகளை பராமரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
    கொரோனா நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, சீரான இடைவெளியில் கைகளை கழுவுவது அவசியம். அப்படி கைகளை கழுவுவது நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கு உதவும். அதேவேளையில் தொடர்ந்து கைகளை கழுவும்போது உள்ளங்கை பகுதி உலர்ந்து போய்விடக்கூடும். கைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால் மென்மை தன்மையை இழந்துவிடும். கைகளை பராமரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

    கைகளை சோப்பு கொண்டு தேய்த்து 20 வினாடிகள் கழுவுவது, வைரஸ் பரவாமல் தடுக்க உதவும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. நிறைய பேர் வெது வெதுப்பான சுடுநீர் கொண்டு கைகளை கழுவினால் கிருமிகள் இறந்துவிடும் என்று கருதுகிறார்கள். அது சரியல்ல.. வெதுவெதுப்பான நீர், கைகளின் உள்ள ஈரப்பதத்தை இழக்க வைத்துவிடும். சாதாரண நீரைக் கொண்டு கைகளை கழுவுவதுதான் நல்லது.

    கைகளை கழுவுவதற்கு ஈரப்பதத்தை தக்கவைக்கும் தரம் கொண்ட சோப்பை பயன்படுத்துங்கள். இத்தகைய சோப்புகள் கைகளில் எண்ணெய் அல்லது கிரீம் போன்ற நுரைகளை வெளிப்படுத்தி கைகளுக்கு ஈரப்பதத்தையும், மென்மையையும் தரும். ஆனால் சாதாரண சோப்புகள் கைகளை உலரவைத்துவிடும். பொதுவாக கிளிசரின், லானோலின் போன்றவை ஈரப்பதமூட்டும் தன்மை கொண்ட சோப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய மாஸ்சரைஸிங் சோப் இல்லையென்றால் திரவ வகை சோப்புகளை பயன்படுத்தலாம்.

    கைகளை கழுவிய பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம். கழுவிய கைகளை துடைத்ததும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தாவிட்டால், உள்ளங்கை பகுதி ஈரப்பதத்தை இழக்க தொடங்கி வறண்டு போய் விடும். கைகளில் ஓரிரு துளிகள் ஊற்றி தேய்த்தாலே உடனே உலர்ந்து ஈரப்பதத்தை தக்கவைக்கும் திரவ நிலை மாஸ்சரைசர்கள் இருக்கின்றன. அவை கைகளுக்கு நல்ல ஈரப் பதத்தை அளிக்கும்.

    கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சானிடைசரை பயன்படுத்தலாம். ஆனால் சாப்பிடுவதற்கு முன்பு, கழிவறைக்கு சென்றுவந்த பின்பு, மண், தூசுகள் படிந்து கைகள் அழுக்கான பின்பு போன்ற சூழ் நிலைகளில் சானிடைசரை பயன்படுத்துவது சரியாக இருக்காது. அப்போது சோப்பை பயன்படுத்துவதுதான் நல்லது. கைகளை நன்றாக சுத்தமாக கழுவிய பிறகுதான் சானிடைசரை பயன்படுத்தலாம்.

    அடிக்கடி கைகளை கழுவுவதை தவிர்க்க நினைப்பவர்கள் கையுறைகளை பயன்படுத்தலாம். ஆனால் கையுறைகளை அணிவதற்கு முன்பு கைகளை நீரில் ஐந்து நிமிடம் முக்கிவைக்க வேண்டும். பின்பு துணியையோ, டிஸ்யூ பேப்பரையோ பயன்படுத்தி நன்றாக துடைத்து கைகளை உலரவிட வேண்டும். பின்பு கைகளில் மாஸ்சரைசரை தடவிவிட்டு அதன்பிறகு கையுறைகளை அணிவதுதான் சரியான வழிமுறையாகும். ஒரே கையுறையை இரண்டு மணி நேஇரத்திற்கு மேல் அணிவது நல்லதல்ல.

    கைகளை கழுவுவதோடு சரியான முறையில் கைகளை உலர்த்துவதும் முக்கியம். சிலர் கைகளை உலர வைப்பதற்கு ‘ஹேண்ட் டிரையரை’ பயன்படுத்துவார்கள். அதனால் கைகள் விரைவில் உலர்ந்து போய் விடும். கைகள் உலராமல் இருப்பதற்கு அதற்கான கிரீம்களை தடவ வேண்டும். அதன் பிறகு டிஸ்யூ பேப்பர் பயன்படுத்தி கைகளை துடைப்பது நல்லது.
    வீட்டுக்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள், பொழுதுபோக்குக்காக செல்போன்களையே நோண்டி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனமகிழ்ச்சிக்காக பழமை வாய்ந்த பல்லாங்குழியை விளையாடலாம்.
    வீட்டுக்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள், பொழுதுபோக்குக்காக செல்போன்களையே நோண்டி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனமகிழ்ச்சிக்காக பழமை வாய்ந்த பல்லாங்குழியை விளையாடலாம்.

    பல்லாங்குழி விளையாட்டு 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆனால் பெரும்பாலும் பெண்கள்தான் அதிகம் விளையாடுகின்றனர். பல்லாங்குழி மரப் பலகை, உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்டு இருக்கும். பழங்காலத்தில் பாறைகளிலும், தரைகளிலும் குழிகள் பறித்து பல்லாங்குழி விளையாடி உள்ளனர்.

    இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்...

    இது 2 பேர் விளையாடும் விளையாட்டு. பல்லாங்குழியில் மொத்தம் 14 குழிகள் இருக்கும். ஒருவருக்கு 7 குழிகள் என்று பிரித்து எதிரெதிரே அமர்ந்து ஆடுவார்கள். இந்த ஆட்டத்திற்கு புளியங்கொட்டை அல்லது ஏதேனும் விதைகளை காய்களாகக் கொண்டு விளையாடுவார்கள். ஒரு குழிக்கு 5 காய்கள் வீதம் நிரப்பி வைப்பார்கள்.

    முதலில் ஆட்டத்தை தொடங்குபவர் தன் பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு குழியில் இருந்து காய்களை எடுத்து வலது புறமாக அடுத்தடுத்த குழிகளில் குழிக்கு ஒரு காய் வீதம் போடுவார். கையில் இருக்கும் காய்கள் முடிந்ததும், அடுத்தக் குழியில் இருக்கும் காய்களை எடுத்து தொடர்ந்து அடுத் தடுத்த குழிகளில் போட்டுக்கொண்டே வருவார். கையில் எடுத்த காய்கள் முடிந்து, அடுத்தக் குழியில் காய்கள் எதுவும் இல்லை என்றால், அதற்கு அடுத்தக் குழியில் இருப்பதை சொத்தாக எடுத்துக் கொள்வார். காலியான குழிக்கு அடுத்தக் குழியும் காலியாகவே இருந்தால் எதுவும் கிடைக்காது. பின்னர் எதிரே இருப்பவர் ஆட்டத்தை தொடர்வார்.

    இவ்வாறு மாறிமாறி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, இடையிடையே வெற்றுக் குழியில் ஒவ்வொரு காயாக விழுந்து, 4 காய்கள் சேர்ந்தால் அந்த குழிக்குரியவர் அதனை ‘பசு’ என்று கூறி எடுத்துக் கொள்வார். சொத்து, பசு என்று எடுத்தபடியே, பல்லாங்குழியில் இருக்கும் காய்கள் காலியானதும், இருவரும் தங்களில் இருக்கும் காய்களை கொண்டு மீண்டும் குழிகளை நிரப்புவர். அப்போது ஒருவரிடம் அதிக காய்களும், இன்னொருவரிடம் குறைவான காய்களும் இருக்கும். 15 காய்கள் குறைவாக கிடைத்தது என்றால் தன்னுடைய பகுதியில் 3 குழிகளை தக்கம் என்ற பெயரில் காலியாக விட்டு விட்டு, மற்ற குழிகளில் காய்களை நிரப்பி ஆட்டத்தை தொடர்வார். தக்கம் என்ற குழியில் எதிரே விளையாடுபவர் காய்களை போட மாட்டார்.

    ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது, அவர் கையில் எஞ்சி இருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய 5 கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒரு காயை இட்டு ஆட்டம் தொடரும். அதற்கு ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் நிர்கதியாகி நிற்கின்றபோது தான் ஆட்டம் முற்றுப் பெறுகிறது.

    இந்த ஆட்டத்தின் மூலம் நினைவாற்றல் பெருகும். மனதை ஒருநிலைப்படுத்த முடியும். மனதில் இருக்கும் கவலைகள் மறந்து மகிழ்ச்சி பொங்கும். விரல்களால் தொடர்ந்து விளையாடும் பொழுது இரத்த ஓட்டம் அதி கரித்து, உடலும் உற்சாகமாக இருக்கும். தொடர்ந்து விளையாடும்போது பொழுது போவதே தெரியாது. உறவுகளையும் மேம்படுத்தும்.
    அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கு அதிகமான பயன்பாடு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
    ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணியும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களை குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கு அதிகமான பயன்பாடு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையை தாண்டும்போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும் என்றும் கூறுகிறார்கள். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபி அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான். எலும்பின் உறுதிக்கு துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அளவுக்கதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகவும் டீ அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் இந்தப் பானங்களை எப்படித் தவிர்ப்பது? அவற்றின் துணை இல்லாமல் இருக்க முடியாதே என்று பலர் கவலைப்படலாம்.

    காபியோ, டீயோ அளவுக்கு அதிகமாக குடிப்பதை கூடியவரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்துதான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற சர்க்கரை வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
    ×