என் மலர்
ஆரோக்கியம்
காலை உணவு ஹெல்தியாக இருந்தால்தான் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இயங்க முடியும். இன்று சத்தான ஓட்ஸ் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1/2 கப்
முட்டை - 2
தக்காளி - சிறியது 1
வெங்காயம் - சிறியது 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கேரட் - சிறியது 1
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக்கொள்ளுங்கள்.
முட்டையை உடைத்து வெள்ளையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பவுலில் அரைத்த ஓட்ஸுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இறுதியாக உப்பு, முட்டை வெள்ளையை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
தோசை கல் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்துவிட்டு தோசைபோல் ஊற்றவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான ஓட்ஸ் வெஜிடபிள் ஆம்லெட் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
பெற்றோரின் கடமை பிள்ளைகளுக்கு சோறு போட்டு வளர்ப்பது, படிக்க வைப்பது, நல்ல உடை வாங்கிக் கொடுப்பது, பாதுகாப்பதோடு முடிந்துவிடுவதில்லை. புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
டீன்ஏஜ் பருவம் தனக்குள்ளே ஈகோவை வளர்த்துக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் பருவம். பெற்றோர் சொல்லை மீறிப் பார்ப்போமே என்று தோன்றும். மொத்தத்தில் ‘பெற்றோர்கள்தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கு முதல் எதிரி’ என்று நினைக்கும் பருவம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது இமாலய சாதனை. அதை செவ் வனே செய்து முடிக்க பெற்றோர் பெரும் முயற்சி எடுக்கவேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
ராகவ் பள்ளியில் முதல் மாணவன். அது அவனது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் கல்லூரியில் அந்த புத்திசாலித்தனம் எடுபடவில்லை. நாளுக்கு நாள் படிப்பில் பின்தங்கினான், ஆனால் படிக்கும் நேரம் குறையவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தான். பெற்றோர் குழம்பினர். கல்லூரியில் போய் விசாரித்தும் பார்த்தார்கள். தன் மகன்மேல் எந்தக் குறையுமில்லை. பிறகு அவனுடைய புத்தக பையை சோதனை போட்டபோதுதான் உண்மை புரிந்தது. அத்தனையும் கவர்ச்சி நிறைந்த ஆபாச புத்தகங்கள். தினமும் அதைத்தான் அவன் பார்த்து, படித்துக் கொண்டிருந்திருக்கிறான்.
அதை படித்து எப்படி கல்லூரியில் மார்க் வாங்க முடியும்? என்று வருந்திய பெற்றோர், குடும்பநல மருத்துவர் உதவி யுடன் கவுன்சலிங் செய்து புரிய வைத்து, படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி திசை திருப்பிவிட்டனர்.
இன்று ராகவ் பிரபலமான பொறியாளர். உயரமான கட்டிடத்தில் நின்று கடந்த காலத்தை நினைக்கும்போது அவனுக்கே அது ஆச்சரிய அனுபவமாக இருக்கிறது.
மனீஷாவின் வயது 45. வெளிநாட்டில் வசிக்கிறாள். அலுவலகத்தில் பெரிய பதவி. கைநிறைய சம்பாதிக்கிறாள். வசதியான வாழ்க்கை. தன் ஒரே மகளை கல்லூரிக்கு அனுப்பும்போது ‘ஒழுங்காக படி. காதலில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்காதே’ என்று அறிவுரை கூறிவைத்தாள். இப்படி மகளுக்கு அறிவுரை கூற காரணம், அவளுக்கு டீன்ஏஜில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்!
மகளுக்கு அறிவுரை கூறும் இவள், கல்லூரியில் படிக்கும்போது ஊரே பயப்படும் ஒரு ரவுடியை காதலித்து, பெற்றோரை கதற வைத்தவள். பெற்றோரை தூக்கி எறிந்துவிட்டு ரவுடியோடு ஓட நினைத்ததை இன்று நினைத்தாலும் அவள் உடல் நடுங்குகிறது.
சினிமாப் படங்களில் வருவதுபோல் ‘நான் திருமணம் செய்துக் கொண்டு அவரை திருத்திவிடுவேன்’ என்று பெற்றோரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த சூழலில் ஒருநாள், அவன் எதிரிகளால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டான். அதன் பின்பு வந்த செய்திகள்தான், அவன் மகாகொடூரன் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
பின்பு மகள் அந்த ஊரிலே இருந்தால் அவள் மனநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த பெற்றோர், அவளுக்காக இன்னொரு ஊருக்கு குடிபெயர்ந்து போய்விட்டார்கள். சில ஆண்டுகளில் அவளுக்கு திருமணம் நடந்தது. கணவரோடு வெளிநாட்டிற்கு போய் வசித்தாள்.
இப்போது கல்லூரிக்கு செல்லும் தனது மகளுக்கு அவள் அறிவுரை கூறும்போது, இவளுக்காக அம்மா-அப்பா நடத்திய போராட்டம், கதறல், அறிவுரை, தியாகம் எல்லாம் ஒன்றன்பின்ஒன்றாக நினைவுக்கு வந்தது. அவளை பொத்திப் பொத்தி காப்பாற்றி கரை சேர்த்து விட்டார்கள். இன்று தன் மகள் டீன்ஏஜில் இருக்கும்போது இவளும், தன் தாயைப்போல் பதற்றம் அடைகிறாள்.
டீன்ஏஜ் என்பது ஒரு மேஜிக் பருவம். காதல் கண்ணை மறைக்கும். அப்போது அறிவு மங்கும். கடந்து வந்த பிறகு தான் விழவிருந்த அதலபாதாளத்தின் அளவு தெரியும்.
பிள்ளைகள் டீன்ஏஜ் பருவத்தை அடையும்போதுதான் பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகமாகிறது. பொறுமையும் அவசியமாகிறது.
பக்குவப்பட்ட அறிவு நம்மை வழிநடத்தும். பக்குவப்படாத செயல்கள் நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்!
பரிசு பொருட்கள் வாங்க செல்லும்போது மணமக்களையும் கூடவே அழைத்து சென்று பிரியமான பொருட்களை தேர்வு செய்ய வைத்து வாங்கிக்கொடுப்பதும் வழக்கத்தில் இருக்கிறது.
பரிசு கொடுக்கும் பழக்கம் நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. பரிசு கொடுப்பது, உணர்வுபூர்வமானது. அதில் திருமணப்பரிசு என்றும், எப்போதும் நினைவில் நிலைத்திருக்கும் பொக்கிஷம். அதனால்தான் திருமணப் பரிசு கொடுப்பதற்கு எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தான் கொடுக்கும் பரிசு மறக்க முடியாததாக அமைய வேண்டும் என்றும் மெனக்கெடுகிறார்கள். தற்போது பரிசு கொடுப்பதிலும் புதுமைகள் புகுந்து கொண்டிருக்கின்றன.
இப்போது மணமக்களுக்கு பிடித்தமானது எது என்பதை அறிந்து அதை வாங்கி பரிசாக கொடுப்பது அதிகரித்து வருகிறது. பரிசு பொருட்கள் வாங்க செல்லும்போது மணமக்களையும் கூடவே அழைத்து சென்று பிரியமான பொருட்களை தேர்வு செய்ய வைத்து வாங்கிக்கொடுப்பதும் வழக்கத்தில் இருக்கிறது.
சிலர் தாங்கள் இவ்வளவு தொகையை திருமண அன்பளிப்பாக கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். அந்த தொகைக்குள் உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதுமாதிரியான பரிசு பொருட்கள் மணமகன், மணமகளின் மனதுக்கு பிடித்தமானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அப் போதே அவர்களது வீட்டை சென்றடைந்துவிடுகிறது. அதனால் பார்சலை தூக்கி செல்லும் சுமை பரிசளிப்பவருக்கு குறைந்து விடு கிறது.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான புதுமணத்தம்பதிகள் வெளியூரில் குடித்தனம் மேற்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம், அங்கு தேவைப்படும் பொருட்கள் போன்ற விஷயங்களை கேட்டறிந்து அதற்கேற்ப பரிசு பொருட்களை முடிவு செய்பவர்களும் உண்டு.
பெரிய வணிக நிறுவனங்களில் ‘கிப்ட் வவுச்சர்’ வழங்கும் வழக்கம் இருக்கிறது. மணமக்களுக்கு பரிசளிக்கும் தொகையை கிப்ட் வவுச்சராக வாங்கி கொடுத்து விட்டால் போதும். கல்யாண பரபரப்பு முடிந்த பிறகு நிதானமாக அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள்.
நிறையபேர் திருமண அன்பளிப்பை பணமாகவே கொடுக்கிறார்கள். அதுவும் மணமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
திருமண பரிசு பொருட்களில் கண்ணாடி கலைப்பொருட்களும் இடம்பிடிக்கின்றன. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அவைகளை பாதுகாப்பாக கொடுப்பதற்கும் மெனக்கெட வேண்டியிருக்கும். பரிசு பொருட்கள் சென்டிமெண்ட் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுவதால் வாங்குபவர்களும், பெறுபவர்களும் அதனை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே கண்ணாடி பரிசு பொருட்கள் தேர்வில் கவனம் தேவை.
பரிசாக ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரிசு பொருட்களை தேர்வு செய்யக்கூடாது. பரிசினை பெறுபவர் என்னென்றும் நினைத்து பார்க்கும் அளவிற்கு அது அமைந்திருக்க வேண்டும்.
புதுமண தம்பதிகள் ‘ஹனிமூன்’ பயணம் மேற்கொள்ளும்போது நிறைய தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கும். எந்த இடத்திற்கு பயணம் செய்ய போகிறார்கள், அங்கு அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு பயண ஏற்பாட்டுக்கு உதவி புரிந்து அவர்களுடைய ஹனிமூன் பயணத்தை இனிமையாக்கலாம். பயண டிக்கெட், தங்கும் வசதி போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கலாம்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயணங்களையும் பயன்படுத்த வேண்டாம். உருளைக்கிழங்கை கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.
ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், தண்ணீர், இரசாயணம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் உடைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயணங்களையும் பயன்படுத்த வேண்டாம். இயற்கை பூக்கள், காய்கறிகள் கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.
1. உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு.
2. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
3. உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும்.
4. கூந்தலில் அதிகபடியான எண்ணெய் இருந்தாலும் கூந்தல் உடையும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.
5. ஸ்கால்ப் வறண்டு போனால் பொடுகு தொந்தரவு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி குறைந்துவிடும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும்.
6. முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.
இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.
இந்தியாவில் 10 பெண்களில் ஆறு பேருக்கு ரத்த சோகை ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரபலமான மருத்துவ மையம் சார்பில் 36 நகரங்களை சேர்ந்த 17 லட்சம் பெண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் மும்பையைச் சேர்ந்த பெண்கள் 11 லட்சத்து 41 ஆயிரத்து 600 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
பொதுவாக 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள்தான் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் அந்த வயதுக்குட்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு காலம் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சோம்பல், உடல் சோர்வு, சருமம் மற்றும் கண்கள் வெளிர் நிறத்துக்கு மாறுதல் போன்ற ரத்தசோகைக்கான அறிகுறிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவில் 10 பெண்களில் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது ரத்த சோகைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாகும்.
20 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் 65 சதவீத பேர் இரும்புச்சத்து குறை பாடு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதாவது ஆய்வுக்குட்டப்பட்ட 17 லட்சம் பெண்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இரும்புச்சத்து குறை பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
“இரும்புச்சத்து குறைபாடுதான் ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க உணவு பொருட்களை கூடுதலாக உணவில் சேர்ப்பதன் மூலம் இந்த குறைபாட்டை போக்கலாம். ஆனால் இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.
படித்த இளம் பெண்கள் கூட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பு விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். குழந்தை பருவத்தில் அழுக்கு படிந்த பொருட்களை சாப்பிடுவது, வளர்ந்து ஆளான பிறகும் கூட களிமண் போன்ற மண் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது கூட ரத்தசோகைக்கு காரணமாக இருக்கிறது. ரத்தசோகை குணமானவுடன் இந்த சுபாவம் மறைந்துவிடும்.
ரத்தப்போக்கும், இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மையை உடல் இழப்பதும் ரத்தசோகைக்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும் ரத்தசோகைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார், டாக்டர் நிகாலி.
80 வயதுக்குட்பட்ட பெண்களில் 73 சதவீதம் பேர் ரத்தசோகை பாதிப்பு கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் 10 வயதுக்குட்பட்ட 40 சதவீத சிறுமிகள் ரத்தசோகை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
நிறைய காபி குடிப்பவர்கள் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும். ஆனால் எலும்பு பலவீனமாக இருப்பதாக கருதுபவர்கள் காபி அதிகம் பருகுவதை பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை.
காலையில் காபி பருகினால்தான் நிறைய பேருக்கு உற்சாகமே பிறக்கும். காபியில் இருக்கும் காபின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதேவேளையில் காபி பருகுவதில் ஏராளமான நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்றில் காபிக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காபி குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவாக இருப்பதாகவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பதற்கு தவறாமல் காபி பருக வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
564 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் காபி பருகாதவர்களை விட, தொடர்ந்து காபி பருகுபவர்களின் எலும்புகள் வலுவாகவும், எலும்பு நிறை அடர்த்தி அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க டாக்டர் சாட் டீல், “மூன்று வளர்சிதை மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக காபி பருகிக்கொண்டிருப்பவர்களின் எலும்பு அடர்த்தி அதிகரித்து இருக்கிறது. மேலும் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயமும் குறைவாக இருக்கிறது” என்கிறார்.
ஒரு நபர் எவ்வளவு காபி பருகுகிறாரோ அந்த அளவுக்கு கால்சியம் வெளியேற்றப்படுவதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எலும்புகளின் முக்கியமான கனிமமாக இருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் சம நிலையில் வைத்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அதேவேளையில் எலும்பு நிறை அடர்த்தி குறைவாக உள்ளவர்கள், கால்சியம் வெளியேற்ற அளவை சரிபார்ப்பதற்கு சோதனை செய்ய வேண்டும் என்றும் டீல் அறிவுறுத்துகிறார்.
மேலும், “நிறைய காபி குடிப்பவர்கள் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும். ஆனால் எலும்பு பலவீனமாக இருப்பதாக கருதுபவர்கள் காபி அதிகம் பருகுவதை பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. காபியில் உள்ள குறிப்பிட்ட வளர்சிதை மாற்றங்களை அடையாளம் காண்பதன் மூலம் சாத்தியமான நன்மை கிடைக்கும். எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் புதிய மருந்துகளை உருவாக்குவதற்கு அடித்தளமாகவும் அமையும். நிறைய காபி பருகி, அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி” என்கிறார்.
உருளைக்கிழங்கில் வறுவல், சிப்ஸ், போண்டா என பல ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில், எளிமையான முறையில் வீட்டிலேயே உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பால் - 1 டம்ளர்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க:
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பால் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வேகவைக்கவும்.
பிறகு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி கொள்ளவும்.
இதனிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் மைதா மாவு, பால், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து, அதை அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்கவும்.
பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியான பிறகு கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். ஆனால் எந்த வயதில் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
தாய்மார்களில் பலர், ‘15 வயதைக் கடந்த பின்பும் தங்கள் பிள்ளைகள் தனியறையில் தூங்குவதில்லை. இரவில் தங்களுடனே படுக்கையை பகிர்ந்து கொள்கின்றன’ என்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை எந்த வயதில் தனி அறையில் தூங்க வைப்பது? என்றும் கேட்கிறார்கள்.
குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப்பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரலை கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ’குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்தபட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.
குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்க வைக்கும் எண்ணத்துக்கும் வந்து விடுகிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது.
ஆனால் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
நான்கு, ஐந்து வயதுகளில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்த வயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
7,8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.
இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன பேய் கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.
இப்போது ஸ்மார்ட் போன் தொந்தரவு வந்துவிட்டதால், தங்கள் பிள்ளைகளை தனியறையில் தூங்கவைத்தால் திசைமாறிபோய் விடுவார்களோ என்று பெற்றோர் அஞ்சுகிறார்கள். ஆனாலும் சரியான கண்காணிப்போடு 15 வயதுகளில் பிள்ளைகளை தனியாக தூங்கவைப்பதே நல்லது.
அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் சமையலறைகளில் வைக்கப்படும் நவீன புகை போக்கிகளையே ‘சிம்னிகள்’ என்று அழைக்கிறார்கள்.
பழைய கால வீடுகள் எல்லாவற்றிலுமே சமையறைகளில் புகை போக்கிகள் இருப்பதை பார்க்க முடியும். இப்போது அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் சமையலறைகளில் வைக்கப்படும் நவீன புகை போக்கிகளையே ‘சிம்னிகள்’ என்று அழைக்கிறார்கள்.
வெப்பம், புகை, உணவு நாற்றங்கள், நெடிகள் மற்றும் காற்றில் பரவும் கிரீஸ் ஆகியவற்றை சிம்னியின் உள்ளேயிருக்கும் விசிறி மற்றும் வடிகட்டியை (பில்டர்) பயன்படுத்தி பிரித்தெடுப்பதை சிம்னியின் செயல்பாடு என்று சொல்லலாம்.
சிம்னிகளில் “வால் மெளவுன்டட் சிம்னி” என்பது சமையலறையில் அடுப்பிற்கு மேலே சுவற்றில் பொருத்தப்படும் சிம்னியாகும். “ஐலேண்ட் சிம்னி” என்பது சில வீடுகளில் சமையறையின் மையத்தில் சமையல் மேடையானது அமைக்கப்பட்டு அதன் மேல் அடுப்பானது பொருத்தப்பட்டிருக்கும். அடுப்பிற்கு மேலே தொங்கியபடி அமைக்கப்படும் சிம்னிகளை “ஐலேண்ட் சிம்னிகள்” என்று அழைக்கிறார்கள்.
“பில்ட் இன் சிம்னி” என்பது சமையலறை சுவற்றில் செய்யப்பட்டிருக்கும் மரக்கேபினட்டினுள் உள்ளிருக்குமாறு அடுப்பிற்கு மேலே அமைக்கப்படுவதாகும். சில வீடுகளில் இடவசதிக்கேற்ப அடுப்பானது சமையலறைகளின் மூலையில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் அடுப்பிற்கு மேலே மூலைகளில் பொருத்தப்படும் சிம்னிகள் “கார்னர் சிம்னி” என்று அழைக்கப்படுகின்றன.
* சிம்னிகளின் வடிவமைப்பு உபயோகப்படுத்தப்டும் பெருள் மற்றும் வடிகட்டுதல் செயல்முறையை பொறுத்து, சிம்னி வடிகட்டிகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை கேசட் பில்டர், பேபில் பில்டர்(இந்திய உணவுக்கு சிறந்தது), கார்பன் பில்டர்களாகும்.
* ஆட்டோ கிளீன் சிம்னி: பெயருக்கு தகுந்தாற்போல் அதன் உடல் பாகங்களை சுத்தமாக பராமரிக்கும் திறன் கொண்டவை இவை. இதனுள்ளே இருக்கும் ஒரு கிண்ணம் போன்ற அமைப்பில் இந்த சிம்னிகள் சமைக்கும் போது காற்றிலிருக்கும் எண்ணெய் துகள்களை சேகரிக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் எண்ணெய் கிண்ணத்தை மாதமொரு முறை தனியே கழற்றி சுத்தப்படுத்துவதால் சிம்னியை சுத்தம் செய்வது மிக எளிதான வேலையாகி விடுகின்றது. இவ்வாறு செய்வதால் சிம்னியின் உறிஞ்சும் சக்தி மேம்பட்டு புகைபோக்கி நீண்ட காலங்கள் உழைக்கின்றது.
* சமையலறை சிம்னிகளின் வடிவமைப்பானது கன்வெக்ஸனல் மற்றும் கன்டெம்ப்ரரி என அதன் தோற்றத்தை பொறுத்து இரண்டு வகைகளாக உள்ளன.
சிம்னிகளை பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
* சமையலறை டைல்ஸ்களை பாதுகாப்பதில் சிம்னிகள் பெருமளவில் உதவுகின்றன. நம்முடைய சமையலில் எண்ணெயானது அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றது. இந்த எண்ணெயானது தரையில் தெறித்து ஏற்படும் அழுக்கு, பிசுபிசுப்பு மற்றும் சமையலறை சுவற்றில் ஏற்படும் கறைகள், சமையலறை கேபினட்டுகளை காப்பாற்றுவதில் சிம்னிகள் பெரும்பங்காற்றுகின்றன.
* சிம்னிகள் பொருத்தாத சமையலறைகளின் சுவற்றின் பெயிண்டானது சமைக்கும்போது ஏற்படும் புகை மற்றும் எண்ணெய் துகள்களால் நிறம் மாறி அழுக்காகவும், பிசுபிசுப்பாகவும் இருப்பதை பார்க்க முடியும். மேலும், மாடுலர் கிச்சன், கேபினட்டுகளை அதிக செலவு செய்து அமைத்துவிட்டு அவற்றை பிசுபிசுப்பாகவும், அழுக்காகவும் வைத்திருப்பது சரியா? சிம்னிகளானது பொருத்தப்படும் போது அவைச சைமயலறைச் சுவர்கள் மற்றும் கேபினட்டுகளை புகை மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பிலிருந்து காப்பாற்றுகின்றன.
* சமையலறையில் மீன், நண்டு போன்றவற்றை சமைக்கும்போது அதன் வாசனையானது வீடு முழுவதும் கட்டாயம் பரவும். இந்த வாசனை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. நல்ல வாசனையோ அல்லது கெட்ட வாசனையோ சிம்னியிலிருக்கும் பட்டனை இயக்கினால் நொடிகளில் வாசனை போய்விடும். சில சமயங்களில் சில உணவு பொருட்களை சமைத்த வாசனையானது நீண்ட நேரம் வரை சமையலறையிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். இதற்கும் சிம்னி பட்டனை ஒரு கிளிக் செய்து வாசனைக்கு குட்பை சொல்லுங்கள்.
* நாம் உணவில் மசாலா பொருட்களை அதிக அளவில் சேர்த்து கொள்கிறோம் என்பதை மறுக்க முடியாது. சமையலில் பயன்படுத்தப்படும் கருப்பு மிளகு, சிவப்பு மிளகாய் போன்றவை வலுவான நறுமணம் கொண்டவை. இவை பயன்படுத்தப்படும்போது வீட்டினுள்ளே இருப்பவர்கள் தும்மாமல் இருக்க முடியாது. இது போன்ற சமயங்களில் சிம்னியை இயக்கினால் அவை சமைக்கும்போது ஏற்படும் நெடியை உறிஞ்சி நம்மை தும்மலில் இருந்து காப்பதோடு சமைக்கும் பகுதியில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவாமலும் தடுக்கும்.
* நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்றமுள்ள சமையலறை சிம்னிகள் உங்கள் சமையலறையை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நம் வீட்டு சமையலறையின் அளவு, வசதி ஆகியவற்றிற்கு ஏற்ப சிம்னிகளை தேர்வு செய்து பொருத்தி கொள்வது இல்லத்தரசிகளின் விருப்பத்தை கருத்தில் கொண்டு சிம்னிகளை வாங்குவதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
* சமையறையை சுத்தம் செய்வதில் பாதி வேலையை இந்த சிம்னிகள் குறைக்கின்றன. சிறிய அளவிலான வீடானாலும், பெரிய வீடானாலும் ஒவ்வொரு வீட்டின் சமையலறைக்கும் சிம்னிகள் அவசியம்தான்
* சிம்னிகளை சுத்தம் செய்ய தொழில்நுட்ப வல்லுநர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். வருடத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது சுத்தம் செய்தால் அவை நீண்ட நாட்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உழைக்கும்.
ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய பேஸ் பேக்குகளை தெரிந்து கொள்வோம்.
சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.
தேவையானவை:
ரோஜா – 3
தயிர்- கால் கப்
ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
செய்முறை:
ரோஜா இதழ்களை தயிருடன் கலந்து மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதனுடன் ஆலிவ் ஆயிலைக் கலந்து நன்கு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் ரோஜாப்பூ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ரோஜாப் பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து முகத்தினை நன்கு கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில்தான் குழந்தைகளின் ஆரோக்கியமே இருக்கிறது.
“கர்ப்பிணிப் பெண்கள் தங்களது உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில்தான் குழந்தைகளின் ஆரோக்கியமே இருக்கிறது, என்பதை நினைவில் கொண்டு, கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம். இந்த கலோரிகளை நல்ல சத்து நிறைந்த உணவுகள் மூலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிகவும் தேவை. கால்சியம் சத்தை போதிய அளவு கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் குழந்தை பிறந்த பிறகு அதனுடைய எலும்பு மிகவும் பலவீனமாக இருக்கும்.
ஒரு சராசரி பெண்ணுக்குத் தேவையான இரும்புச்சத்து அளவை விட 2 மடங்கு இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்ணுக்கு தேவைப்படும். இந்த இரும்புச்சத்தே கருவறையில் உள்ள குழந்தைக்குப் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது.இந்த சத்துக் குறைபாடு ஏற்படும் பட்சத்தில் குழந்தை குறை மாதத்தில் பிறந்து விடும்.சரியான உடல் எடை இருக்காது. மேலும் தாய்க்குப் பிரசவத்திற்குப் பிறகு மன அழுத்தம் ஏற்படும்.
தினமும் பால், ஒரு கீரை வகை, பழங்கள், என சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவியாக இருக்கும். மேலும், குழந்தைப் பிறப்புக்கு பிறகு நிறைய பெண்களுக்கு முடி கொட்டுகிறது, தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை, எப்போதும் சோர்வாகவே உள்ளது போன்ற பிரச்னைகளோடு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் எந்த வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
கேப்ஃபைன் நிறைந்த உணவுகள்,எண்ணெயில் பொரித்த உணவுகள் ,துரித உணவுகள், அதிக காரத்தன்மை வாய்ந்த உணவுகள் , சாக்லேட் ,வெள்ளை சர்க்கரையால் தயாரித்த இனிப்பு வகைகள், மிகவும் சூடு தன்மை வாய்ந்த உணவுப் பொருட்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகள்,மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஆகக் கர்ப்பிணி பெண்கள் அளவான அளவில் தானிய வகைகள், வாழைப் பழம், மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்கள், கீரைகள், சர்க்கரைவள்ளி கிழங்கு, கொட்டைகள், முட்டை, இறைச்சி , பால் முதலான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கர்ப்பிணிகளும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
இவற்றையெல்லாம் தடுக்க மகப்பேறின் போதே முன் எச்சரிக்கையோடு உணவுகள் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான குழந்தைக்கு அம்மாவாக திகழலாம்.
பிறந்து முதல் 28 நாள்கள் வரையான குழந்தையை பச்சிளம் குழந்தை என்கிறோம். இந்த 28 நாள்களுக்குள் நடக்கும் போராட்டங்களின் வெற்றியில்தான் ஒவ்வொரு சிசுவும் தன் அடுத்த குழந்தைப் பருவ நிலைக்குச் செல்கிறது.
பிறந்து முதல் 28 நாள்கள் வரையான குழந்தையை பச்சிளம் குழந்தை என்கிறோம். இந்த 28 நாள்களுக்குள் நடக்கும் போராட்டங்களின் வெற்றியில்தான் ஒவ்வொரு சிசுவும் தன் அடுத்த குழந்தைப் பருவ நிலைக்குச் செல்கிறது.
தாயின் கருவறையில் கருவாகும் அனைத்துக் குழந்தைகளையும் 37 வாரங்கள் வரை கவனமாகக் காப்பாற்றி, பின்னர் 37-லிருந்து 40 வாரங்களுக்குள் முழுமை அடைந்த நிறைமாதக் குழந்தையாகப் பிறந்திட உதவ வேண்டும். அப்படிப் பிறக்கவிருக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் கருவறைக்கு உள்ளேயும், பிறந்த பின்னரும், பெரும் சவால்கள் காத்திருக்கும்.
கருவறைத் தொற்றுகள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் பாதித்த தாய்மார்கள், குறைமாதப் பிரசவம், பிரசவ நேர உபாதைகள், சிசு பிறந்ததும் நடந்திடும் முதல் சுவாசக் கோளாறுகள், பிறந்த பின்னர் வந்திடும் சிசுத் தொற்றுநோய்கள் எனப் பல உயிர் போராட்டங்களுக்கு இடையேதான் பிறக்கும் பல குழந்தைகள் ஜீவிக்கத் தொடங்குகின்றன.
1. தாய் கருவறைத் தொற்றுகள் - முறையான மாதாந்தர மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தடுக்கலாம்.
2. கர்ப்பகால சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் என்பது சில தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்னை. இவற்றுக்குத் தக்க நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து ஆலோசனை பெற்று வந்தால், கருவிலிருக்கும் குழந்தைக்குப் பாதிப்புகள் பெரிதாய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
3. பிறந்ததும் அழாத, மூச்சுவிடாத குழந்தை அதனால் ஏற்படும் மிகப்பெரும் உயிர் அபாயத்துக்கு, ஒவ்வொரு பிரசவத்திலும் அதிலும் முக்கியமாகப் பக்கவிளைவுகள் எதிர்பார்க்கப்படும் பிரசவங்களுக்கு, சிசு மருத்துவம் பயின்ற, அனுபவம் பெற்ற சிறப்பு பச்சிளங்குழந்தை மருத்துவர் கொண்டு பிரசவம் பார்த்தல் நலம். பிறந்து 10 நிமிடங்களுக்குள் இத்தகைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தற்கால நவீன மருத்துவ யுக்திகள் கொண்டு குழந்தையைப் பாதிப்புகள் இன்றி பாதுகாப்பாக மீட்க முடியும்.
4. சிசு உயிர் காக்கும் அனைத்து வசதிகள்கொண்ட மருத்துவமனைக்குத் துரிதமாகக் கொண்டு சென்று, பிரசவம் பார்த்து, சிசு தீவிர சிகிச்சை மையத்தின் உயர் பாதுகாப்பில் பராமரித்து, குறைமாதக் குழந்தைகளைக்கூட நவீன விஞ்ஞான மருத்துவத்தின் தொடர் வளர்ச்சியால் எளிதாய் காப்பாற்றிட முடியும்.
5. சிசு அபாய தொற்றுகளுள், குழந்தை பிறந்த முதல் 28 நாள்களில் சிசுக்களுக்கு ஏற்படும் தொற்றுகள் மிக மோசமானவை. அவற்றை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான மருத்துவ சிகிச்சைகள் மூலம் அந்தக் குழந்தைகளையும் பெரும் பாதிப்புகளின்றிக் காப்பாற்ற முடியும்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான சிசு மருத்துவ வசதிகள் கொண்ட, நிறைவான சிசு உயர்சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனையில், கைதேர்ந்த மகப்பேறு மருத்துவர் மேற்பார்வையில், முறையாகப் பயின்ற சிசு மருத்துவர் உதவியுடன் பிறப்பது... குழந்தைக்கும் அதன் பாதுகாப்புக்கும் நல்லது.






