search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரத்தசோகை
    X
    ரத்தசோகை

    பெண்களிடம் அதிகரிக்கும் ரத்தசோகையும்... காரணமும்...

    இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.
    இந்தியாவில் 10 பெண்களில் ஆறு பேருக்கு ரத்த சோகை ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரபலமான மருத்துவ மையம் சார்பில் 36 நகரங்களை சேர்ந்த 17 லட்சம் பெண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் மும்பையைச் சேர்ந்த பெண்கள் 11 லட்சத்து 41 ஆயிரத்து 600 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

    பொதுவாக 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள்தான் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் அந்த வயதுக்குட்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு காலம் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    சோம்பல், உடல் சோர்வு, சருமம் மற்றும் கண்கள் வெளிர் நிறத்துக்கு மாறுதல் போன்ற ரத்தசோகைக்கான அறிகுறிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவில் 10 பெண்களில் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது ரத்த சோகைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாகும்.

    20 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் 65 சதவீத பேர் இரும்புச்சத்து குறை பாடு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதாவது ஆய்வுக்குட்டப்பட்ட 17 லட்சம் பெண்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இரும்புச்சத்து குறை பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    “இரும்புச்சத்து குறைபாடுதான் ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க உணவு பொருட்களை கூடுதலாக உணவில் சேர்ப்பதன் மூலம் இந்த குறைபாட்டை போக்கலாம். ஆனால் இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.

    படித்த இளம் பெண்கள் கூட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பு விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். குழந்தை பருவத்தில் அழுக்கு படிந்த பொருட்களை சாப்பிடுவது, வளர்ந்து ஆளான பிறகும் கூட களிமண் போன்ற மண் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது கூட ரத்தசோகைக்கு காரணமாக இருக்கிறது. ரத்தசோகை குணமானவுடன் இந்த சுபாவம் மறைந்துவிடும்.

    ரத்தப்போக்கும், இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மையை உடல் இழப்பதும் ரத்தசோகைக்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும் ரத்தசோகைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார், டாக்டர் நிகாலி.

    80 வயதுக்குட்பட்ட பெண்களில் 73 சதவீதம் பேர் ரத்தசோகை பாதிப்பு கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் 10 வயதுக்குட்பட்ட 40 சதவீத சிறுமிகள் ரத்தசோகை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
    Next Story
    ×