என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த 17-ந் தேதி முதல் நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு தீபாராதனை, சமய சொற்பொழிவு, காலை, இரவு நேரங்களில் வாகன பவனி ஆகியவை நடந்தது.

    நேற்று 9-ம் நாள் திருவிழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம் பார்க்க எழுருந்தருளினார். காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை தேரோட்டம் நடந்தது. முன்னதாக சுவாமி தேரில் எழுந்தருளியதும் தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    நான்கு ரதவீதிகளிலும் தேர் இழுத்து வரப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து சென்றது. தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தேரோட்டத்தைக் காண வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சமய சொற்பொழிவு நடந்தது. இரவு 10 மணிக்கு தேரடி திடலில் சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவர்ண நிகழ்ச்சி நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 10-ம் நாள் திருவிழா நடக்கிறது.மாலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆறாட்டுத்துறைக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வாகன வீதி உலாவும், சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆறாட்டுத்துறையில் இருந்து மேளதாளங்களுடன் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    மாசி மகத்தை முன்னிட்டு நாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
    மாசி மகத்தை முன்னிட்டு கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறுவது வழக்கம். எண்ணற்ற பக்தர்கள் புனிதத் தீர்த்தங்களில் நீராடி, இறைவனின் தரிசனம் கண்டு மகிழ்வார்கள். மாசி மாத பௌர்ணமியுடன், மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளே ‘மாசி மகம்’ ஆகும்.

    நாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில்தான் கோயில்கள் அனைத்திலிருந்தும் தெய்வத் திருவுருவங்கள் வீதியுலாவாகப் புறப்பட்டு, புனித நதிக்கரைகள், தீர்த்தக் குளங்கள், கடல் என்று பல இடங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    மகாவிஷ்ணு, உமாமகேசுவரர் மற்றும் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உகந்த தினம் மாசி மகமாகும். அதனால் விரதமிருந்து, நீர்நிலைகளில் நீராடி மூன்று தெய்வங்களையும் வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், மக நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.

    இந்தப் பித்ருதேவாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியைத் தருகிறார். இதனால் மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடி ‘பிதுர் மகா ஸ்நானம்’ செய்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தமாகி அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மாசி மகத்தில் நீர்நிலைகளில் நீராடி சிவபெருமான், விஷ்ணு, முருகன் மற்றும் பித்ருக்களை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகி நாமும் நம் சந்ததியினரும் சகல செல்வங்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது ஐதீகம்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாணவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு அறம்வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் அம்மனுக்கு திருநீராட்டு வைபவம் நடந்தது. பின்னர், அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆஸ்ராமம் கிராமத்திற்கு எடுத்து வந்து ஆஸ்ராமம் சோழன் திட்டை அணைக்கட்டு கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மதியம் திருக்கல்யாண வைபவம் சாப்பாடு நடைபெற்றது.

    மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்தப் பல்லக்கில் பூமாலை, தோரணம் கட்டி மேளதாளம் முழங்க ஆஸ்ராமம் கிராமத்திலிருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூமாலை, திருமண பட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலயசாமி கோவிலை வந்தடைந்தனர்.

    இரவு 8 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருட வாகனத்தில் திருமால் வீற்றிருக்க, அவரது முன்னிலையில் தாணுமாலயசாமி கையிலுள்ள திருமாங்கல்யம் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்பட்டது.

    திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலைச்சுருள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகளான உமா மகேஸ்வர் மற்றும் திருமால், அம்பாள் வீதி உலா நடந்தது.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் இந்திரன் தேர் என்ற சப்பர தேரில் ரத உற்சவம் நடக்கிறது. இரவு ஆறாட்டு விழாவுடன் திருக்கல்யாண விழா நிறைவு பெறுகிறது.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு மாசி மகப்பெருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழா நாட்களில் தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) தீர்த்தவாரியும், 4-ந் தேதி இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    கும்பகோணத்தி்ல் 5 கோவில்களின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கும்பகோணம் மகாமககுளத்தில் ஆண்டு தோறும் மாசிமகவிழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமகாமகமும் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கும்பகோணம் பகுதியில் உள்ள 6 சிவன் கோவில்களில் கடந்த 17-ந்தேதியும், வைணவ கோவில்களில் 18-ந்தேதியும் கொடியேற்றத்துடன் மாசிமக விழா நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து ஓலை சப்பரமும், திருக்கல்யாண வைபவமும் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று மகாமக குளத்தை சுற்றியுள்ள கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர் ஆகிய கோவில்களின் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளும் ஒரே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த கோவில்களின் தேரோட்டம் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் நடந்தது. இதேபோல் ஆதிகும்பேஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய கோவில்களின் தேரோட்டம் அந்தந்த கோவில்களின் வீதிகளில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    மாசிமக தீர்த்தவாரியின் போது கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்தார்.
    கும்பகோணம் :

    தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் மகாமக குளக்கரையில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாசிமக விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மகாமககுளத்தில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோ‌ஷத்துடன் தரிசனம் செய்தனர்
    புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.

    மேலும் முருகன் அருண கிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சித்தி வழங்கிய இடமாகவும் திகழ்ந்து வருகிறது. ஏராளமான சித்தர்களும் இங்கு வசித்துள்ளனர். வசிஷ்டரின் மனைவி அருந்ததி முருகனுக்கு பாலூட்ட மறுத்ததால் வசிஷ்டரால் சபிக்கப்பட்டார். இதனை கண்டு வருந்திய முருகப்பெருமான் வசிஷ்டரை சபித்தார்.

    இந்த இருவரும் விராலிமலை முருகனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர். சூரபத்மனை பெற்றெடுத்த பாவம் நீங்கும் பொருட்டு காசியப்ப முனிவரும், தன தந்தையாகிய நான்முகனை தண்டித்த தற்காக சிவநிந்தனை செய்த பாவம் போக்க நாரத முனிவரும் இந்த முருகனை வழிபட்டு விமோசனம் பெற்றார்.

    இந்த கோவிலில் காசியப்ப நாதர், வசிஷ்டர், அருந்ததி ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் உள்ளன. கடை சியாக இங்கு கடந்த 3.5.2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த திருப் பணிக்குழு மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டது.

    இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்ட விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.

    கடந்த 22-ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், விமான கலசங்கள் பிரதிஷ்டை, முதற்கால யாக பூஜையும், 23-ந்தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, மீன லக்னத் தில் முருகப் பெருமானுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

    நேற்று (24-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு பரிவார யாகம், 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி கடம் புறப்பாடு, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பரிவார மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு ஆச்சார்ய விசே‌ஷ சந்தி, பாவனாபிஷேகம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தன.

    இன்று (25-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி பின்னர் தொடர்ந்து நாடீ சந்தானம், ஸ்பர்சாஹூதி, 7.30 மணிக்கு பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கிரஹப்ரீதி, கடம் புறப்பாடும், காலை 8.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி விமான ராஜகோபுர கலச மகா கும்பாபிஷேகமும், காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி மூலவர் மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அப்போது கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோ‌ஷத்துடன் முருகனை வழிபட்டனர்.
    பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை ‘மாசி மகம்’ என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த விழா கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாதங்களில் மகம் நட்சத்திரம் வரும்பொழுது நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகும். அன்றைய தினம், குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும்.

    அந்த அற்புதமான திருநாள் 27.2.2021 அன்று (சனிக்கிழமை) வருகின்றது.

    26.2.2021 (வெள்ளிக்கிழமை) மதியம் 11.58 மணிக்கு மேல் மகம் நட்சத்திரம் வருகிறது.

    மறுநாள் (27.2.2021) மதியம் 11.33 மணி வரை உள்ளது. மலை வலம் வருவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெற இயலும்.

    மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.

    ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள்.

    அந்த தெய்வக் குழந்தைக்கு ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

    மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்’ என்றும், ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

    இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

    இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.

    ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது.

    அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.

    விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், ‘இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

    சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.
    பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.
    மூலவர்     –     பள்ளி கொண்ட பெருமாள்
    தாயார்     –     ரங்கநாயகி
    பழமை     –     500-1000 வருடங்களுக்கு முன்
    ஊர்     –     பள்ளி கொண்டான்
    மாவட்டம்     –     வேலூர்
    மாநிலம்     –     தமிழ்நாடு

    மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.

    இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் “க்ஷீரநதி” என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.

    தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், இராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன. பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் “பாலாறு” என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.

    இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.

    இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை.

    அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் “சோட்டா ரங்கநாதர்” எனப்படுகிறார்.

    திருவிழா:

    சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.

    வேண்டுகோள்:

    தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்:

    பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

    அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்,
    பள்ளிகொண்டான் – 635 809.
    வேலூர் மாவட்டம்

    +91- 94439 89668, 94436 86869.
    பெருவயல் ரணபலி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவில் பச்சை சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் மாசி மகத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் ரணபலி முருகன், வள்ளி-தெய்வானையுடன் அன்ன வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், மயில் வாகனம், புஷ்ப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பச்சை சாத்துதல் சிவப்பு சாத்துதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

    தொடர்ந்து மறுதினம் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.
    தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்று வருகின்றன.

    திருவிழாவின் 9-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருள்கிறார்கள். காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் சுவாமி தேரும், பின்னர் உலகம்மன் தேரும் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றது.

    தேரோட்டத்திற்காக தேர்கள் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) முடிவடைகிறது.
    சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பிரதோஷத்தையொட்டி அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது.

    கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு, முககவசம் அணிந்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. .

    இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டது.
    ×