என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.
    இந்துக்களின் முக்கிய விசே‌ஷ நாட்களில் ஆடிஅமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற வைமுக்கியமானது ஆகும். இந்தவிஷேசநாட்களில் இந்துக்கள்அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துஉள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை, தைஅமாவாசை, மற்றும் மகாளயஅமாவாசை போன்ற விஷேச நாட்களில் இந்துக்கள்ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடி தங்களதுமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கன்னியா குமரி கடற்கரைக்கு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடலில் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தை அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக் கப்பட்டது. இதனால் தை அமாவாசையான இன்று அதிகாலையில்இருந்தே கன்னியாகுமரி கடலில் புனித நீராட பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணிச ங்கமம்பகுதியில்உள்ள கடலில் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் புனித நீராட தொடங்கினார்கள். இதில்திரளான பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில்உள்ள 16 கால் மண்டபத்தை சுற்றி அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

    அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும்கடலில் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள். பின்னர் கடற்கரையில்உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில்நிலையசந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ளசர்க்கரதீர்த்த காசிவிசாலாட்சிசமேத காசிவிஸ்வநாதர் கோவில் ஆகியகோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்பட்டது. தை அமாவாசையை யொட்டிஇந்த கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விசே‌ஷ பூஜைகள் நடந்தது.கொரோனாவிதிமுறைகளுக்குஉட்பட்டு பக்தர்கள்கோவில்களுக்கு சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சென்றுவழிபட்டனர்.

    தை அமாவாசையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஇருந்தனர்.
    சிறப்பு வாய்ந்த இந்த ஆலய பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை, வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
    வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ளது, சஞ்சீவிராயர் மலை. இங்கு மிகவும் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புவாக இருப்பதால், இந்த ஆலயம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலை மீது அமைந்த இந்த ஆலயத்தை அடைய, 520 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். பழங்காலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சிலை, சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது.

    ஆனந்த நிலையம் என்ற சிறிய கருவறையில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவர் எதிரே பெரிய திருவடியான கருட பகவான் வீற்றிருக்கிறார். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பழமையான கொடிமரமும், அதற்கு அருகில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதியும் உள்ளது.

    கோவில் வரலாறு

    இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக, இலங்கை அரசனான ராவணனுடன் யுத்தம் செய்தார், ராமபிரான். அனுமன் தலைமையிலான வானர சேனைகளும் ராமருடன் சேர்ந்து ராவணப் படைக்கு எதிராகப் போரிட்டனர். போரின் ஒரு கட்டத்தில் ராவணனின் மகன் இந்திரஜித் விட்ட நாகாஸ்திரத்தின் தாக்கத்தால், லட்சுமணன் மற்றும் வானர சேனைகள் பலரும் மூர்ச்சையடைந்தனர்.

    இதையடுத்து சுகேசன் என்ற வைத்தியர் போர் முனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர், அனைவரது மயக்கமும் தெளிய வேண்டுமானால், இமயத்தில் இருக்கும் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகளை பறித்துவர வேண்டும் என்றார். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கு, அனுமனை பணித்தார், ராமபிரான். தன் பிரபுவின் கட்டளை வந்தவுடனேயே இமயம் நோக்கி புயலென பறந்தார், அனுமன். அங்கு சென்றதும், மூலிகைகள் எவை எவை என்று அறிந்து பறிப்பதற்கு நேரமில்லாததால், சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார். அப்படி அனுமன் வரும் வழியில் சில இடங்களில் சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு துண்டுகள் கீழே விழுந்து குன்றுகளாக மாறின. அவை அனைத்துமே புகழ்பெற்ற திருத்தலங்களாகவும் விளங்குகின்றன. அப்படி சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த சிறு பகுதியே, பிரம்மபுரத்தில் உள்ள சஞ்சீவிராயர் மலையாகும்.

    இந்த மலையின் அடிவாரமான பிரம்மபுரத்தில், ஆயர் குலத்தைச் சேர்ந்த சனந்தன் என்ற சிறுவனின் குடும்பமும் வசித்து வந்தது. சனந்தன் தினமும், பசுக்களை ஓட்டிக்கொண்டு சஞ்சீவிராயர் மலைக்குச் செல்வான். அங்கு பசுக்களை மேயவிட்டு, பாதுகாப்பாக மாலையில் வீடு வந்து சேர்வான்.

    ஒரு நாள் முதல் தார பிள்ளையான சனந்தனை தனியாக விட்டு விட்டு, அவரது தந்தையும், சித்தியும் திருமலைக்கு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் சென்றனர். யாத்திரை முடிந்து திரும்பியதும், வெங்கடேசப் பெருமாளின் பெருமைகளை தனது மகனிடம் கூறினார், சனந்தனின் தந்தை. இதையடுத்து வெங்கடேசப் பெருமாளின் மீது சனந்தனுக்கு மானசீக ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை தினமும் மனதால் நினைத்து வழிபட்டு வந்தான்.

    ஏழுமலையானும் தன்னைப்போலவே சிறுவனாக இருப்பான். அவனுக்கும் பசி எடுக்கும் என்று எண்ணம் கொண்ட சனந்தன், சஞ்சீவிராயர் மலையில் மாடுகளை மேய்க்கும் போது, பாலும், அன்னமும் எடுத்து தனியாக வைத்திருப்பான். எப்போதாவது வெங்கடேசப் பெருமாள் வந்தால், அவரது பசியை ஆற்ற இது உதவும் என்று அவன் நினைத்தான்.

    மலையில் தவம் செய்து வந்த முனிவர் ஒருவர், சிறுவனின் இந்த தினசரி நடவடிக்கையை கண்டு ஆச்சரியம் கொண்டார். அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்.. இங்கே தினமும் பால், அன்னத்துடன் யாருக்காக காத்திருக்கிறாய்” என்று கேட்டார்.

    அதற்கு சனந்தன், “ஐயா.. நான் திருமலை வெங்கடேசப் பெருமாளை காண்பதற்காக காத்திருக்கிறேன். அவர் திருமலையில் ஒரு புற்றுக்குள் மறைந்து இருந்து பாலை பருகினாராம். அவர் இவ்வழியாக பசியுடன் வந்தால் அவரின் பசியாற்றுவதற்காக இவற்றை வைத்திருக்கிறேன்” என்றான்.

    அறியாமை என்றாலும், சிறுவனின் பக்தி முனிவரை மலைக்க வைத்தது. அவர், “குழந்தாய் இப்பிறவியில் அவதரித்த மற்றொரு பிரகலாதன் நீ. நிச்சயம் வெங்கடேசப் பெருமாள் உனக்கு தரிசனம் தருவார். ஆனால் அதற்கு உன்னை உருக்கி தவம் செய்ய வேண்டும்” என ஆசி கூறிச் சென்றார்.

    அவரது வார்த்தையை கேட்ட சனந்தன் அன்று முதல், நீர் ஆகாரம் கூட எடுத்துக் கொள்ளாமல் திருமலை வெங்கடேசப் பெருமாளை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினான். 6 நாட்கள் இவ்வாறு கழிந்தது. ஏழாம் நாளில், சனந்தனின் பசியற்ற தவநிலை அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் பாறை மீது மோதி ரத்தவெள்ளத்தில் தரையில் வீழ்ந்தான்.

    சிறு பிள்ளையான சனந்தனின் பக்தியால் மகிழ்ந்த திருமலை வெங்கடேசப் பெருமாள், திருப்பதி திருமலை ஆனந்த நிலையத்தில் இருந்து, சஞ்சீவிராயர் மலைக்கு வந்தார். சனந்தனின் முன்பாக ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சியளித்தார். அந்த பிரகாசமான ஜோதியைக் கண்டு, சனந்தன் மீண்டும் மயங்கினான். இதையடுத்து வெங்கடேசப் பெருமாள், தன்னை ஒரு மானிடச் சிறுவனாக மாற்றிக்கொண்டு, மயக்கத்தில் இருந்த சனந்தனை எழுப்பினார். “சனந்தா.. நான்தான் சீனிவாசன் வந்திருக்கிறேன். பசிக்கிறது பால் கொடு” என்று கேட்டார்.

    அதைக் கேட்டதும் கண்விழித்த சனந்தன் பரவச நிலையை அடைந்தான். உடனே தன்னிடம் இருந்த பாலையும், அன்னத்தையும் வெங்கடேசப் பெருமாளிடம் கொடுத்தான். அதை வெங்கடேசப் பெருமாள் மனித ரூபமாகவே உண்டு மகிழ்ந்தார். சிறிதுநேரம் சனந்தனுடன் விளையாடினார். அந்தி சாயும் நேரம் வந்ததும், “சனந்தா.. நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது. உன்னுடன் விளையாடிய நான் சிறியவனின் உருவத்திலேயே, இங்கே வீற்றிருந்து பக்தர்களை காப்பேன். இந்த தலம், திருமலையைப் போன்று புகழ்பெறும்” என்று கூறி மறைந்தார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலய பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை, வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த ஆலயம் வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    அம்மா மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக் கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
    அமாவாசை தினங்களில் முன்னோர் வழிபாடு செய்வது மரபாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் திரளும் பொது மக்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து, பிண்டம் கரைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருடமண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    இதற்கான ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர்.

    முன்னதாக புரோகிதர்கள் முன்னோர்களின் பெயர்களை படித்து வேதங்கள் ஓதி இந்த வழிபாட்டை நடத்தினர். தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணியாமலேயே வந்திருந்தனர். இருந்த போதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டே இருந்தனர்.

    தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் பக்தர்கள் புனித நீராடினர். சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் நீராடினர்.

    காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அம்மா மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக் கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    இதேபோல் முசிறி காவிரிக்கரை, புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில் பல்லவன் குளம், அறந்தாங்கி அருகே மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இன்று தை அமாவாசையையொட்டி ஆறுகள், கடற்கரைகள், கோவில் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டனர்.
    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் செய்வார்கள்.

    அமாவாசை நாட்களில் புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள்ளும், தண்ணீரும் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்த்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்று தை அமாவாசையையொட்டி ஆறுகள், கடற்கரைகள், கோவில் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டனர்.

    நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களிலும் ஏராள மான பொதுமக்கள் நீர் நிலை களில் திரண்டு தர்ப்பணம் கொடுத் தனர். இதனால் கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படித்துறையில் வழக்கமாக பொதுமக்கள் ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை அங்கு அனுமதி வழஙக்கப்படவில்லை. இதனால் அதன் பின்புறம் உள்ள அய்யா கோவில் முன்பு அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று காலை முதலே பாபநாசம் அய்யா கோவில் முன்பு இருந்து ஆரம்பித்து தாமிரபரணி ஆற்றங்கரை யோரம் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி, டவுன் குறுக்குத்துறை, வண்ணார் பேட்டை பேராட்சி அம்மன் கோவில், ஏரல், புன்னக் காயல் வரை மொத்தம் உள்ள 64 தீர்த்த கட்டங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங் கரையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மோட் டார் சைக்கிள்கள், கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதன் காரணமாக குறுக்குத்துறை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவில் பொதுமக்கள் திரண்ட தால் நீண்ட வரிசை யில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    அங்கு எள், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப் பட்டது. பூஜைகள் செய்தபின்னர் தாமிரபரணி ஆற்றில் இறங்கி எள்ளை நீரில் கரைத்துவிட்டு குளித்தனர். சிவனடியார்கள் திரண்டு சங்கொலி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே தர்ப்பணம் கொடுக்க திரண்டனர். சமூக இடைவெளியுடன் அவர்கள் நின்று தர்ப்பணம் கொடுத்தனர்.

    மாநகர பகுதியில் தெர்மல் நகர் கடற்கரையிலும், அதனை சுற்றி உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். கடலில் குளித்து வழிபாடு நடத்தினர்.

    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையிலும் பொதுமக்கள் கார்களில் காலை முதல் திரண்டு தர்ப்பணம் செய்தனர்.

    எள்ளும், நீரும் இறைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஆற்றில் குளித்துவிட்டு அருணாசல சுவாமி கோவிலில் சுவாமி கும்பிட்டு சென்றனர். இதேபோல் பழைய காயல் சங்குதுவாரம் பகுதியிலும் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையும் விதமாக பொதுமக்கள் தர்ப் பணம் கொடுத்து சென்றனர்.

    தென்காசி மாவட்டத் திலும் குற்றாலம் மெயினருவி பகுதியில் பொதுமக்கள் காலையிலேயே திரண்டு அருவிக்கரைகளில் வைத்து தர்ப்பணம் கொடுத்துவிட்டு அருவிகளில் குளித்து சென்றனர். பின்னர் குற்றால நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர்.

    இதேபோல் பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலும் பொதுமக்கள் இன்று தர்ப்பணம் செய்தனர்.
    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கூடுதுறையில் பவானி ஆறு, காவிரி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி கலப்பதாக ஐதீகம்.

    எனவே 3 நதிகள் சங்க மிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசிர்வாதங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதனால் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கூடுதுறையில் புனித நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் வழி காட்டு வழிமுறைகளை கடை பிடித்து வழிபாட்டு தலங்கள் திறக்கவும், நீர் நிலைகளில் புனித நீராடவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் பவானி கூடுதுறையில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து கூடுதுறையில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத் தனர்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். காலை நேரத்தில் குறைந்த அளவே பக்தர்கள் வந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல பவானி கூடுதுறையில் கூட்டம் அலை மோதியது.

    இதையொட்டி நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கைகளில் சானிடைவர் மூலம் கைகள் கழுவிய பிறகே அனு மதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர்.

    மேலும் புனித நீராடிய பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி மற்றும் சித்தோடு போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே இருந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

    இதேபோல் கொடு முடிக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். மேலும் பலர் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.
    2 ஆண்டுகளுக்கு பிறகு அக்னி தீர்த்த கடலில் நீராடி தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
    தென்னகத்து காசி என்ற ழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    அன்றைய நாளில் அக்னி தீர்த்த கடலில் நீராடி தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.இதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் அரசு உத்தரவுப்படி கோவில்களில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசே‌ஷ நாட்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரத்திலும் இந்த தடை காரணமாக பக்தர்கள் மேற்கண்ட நாட்களில் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா விதிகள் 90 சதவீதம் தளர்த்தப்பட்டுள்ளதால் கோவில்களில் தரிசனம் செய்யவும், புனித தீர்த்தங்களில் நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ரெயில், பஸ், வேன், கார்களில் ராமேசுவரத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    தை அமாவாசையான இன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்தனர். தொடர்ந்து ராம நாதசுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்குள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிய பின்பு சுவாமி-அம்பாளை தரிசித்தனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நகர் பகுதி முழுவதும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் தமிழகத்தில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

    சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு கேட்டு உத்தரவு வந்த பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

    அடுத்த பொருள் பக்தரின் கனவில் தோன்றும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு தினமும் பூஜை செய்யப்படும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப்பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி முதல் நிறைபடி நெல் வைத்து பூைஜ செய்யப்பட்டு வந்தது.

    தற்போது கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் ஆகிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது பற்றி பக்தர்கள் தரப்பில் கூறியதாவது:-

    சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். தற்போது கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் வைத்து பூஜை செய்யப்படுவதால் ஏதோ பெரும் ஆபத்திலிருந்து சிவன்மலை சுப்பிரமணியசாமி அனைவரையும் காப்பாற்றுவார் என இதன் மூலம் உணர்த்துகிறது. எனினும் இதனுடைய நன்மைகள், தீமைகள் வரும் காலங்களில் தெரியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது.
    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சாமி சப்பரத்தில் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பகப்பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி ஆகியவை நடக்கிறது. 2-ந்தேதி (புதன்கிழமை) தை அமாவாசை நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடல், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலய தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்துள்ளார்.
    தை அமாவாசையான இன்று (திங்கட்கிழமை) புதுவை காந்திவீதியில் உள்ள திரிபுர சுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    புதுச்சேரி சிறுதொண்ட நாயனார் திருத்தொண்டு சபையின் சார்பாக ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு அபிராமி அந்தாதி விழா நடைபெறும்.

    அதன்படி தை அமாவாசையான இன்று (திங்கட்கிழமை) புதுவை காந்திவீதியில் உள்ள திரிபுர சுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு காசி விசாலாட்சி சன்னதியில் அபிராமி அந்தாதி பாராயணமும், நிலவொளி காட்டி அருளிய ஐதீக தரிசனமும் நடைபெறுகிறது.
    இந்த ஆண்டு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கியபோதும் பாபநாசம் கோவில் முன்பு உள்ள சுவாமி மண்டபம் படித்துறை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    தை அமாவாசை நாளை வருகிறது. ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பாபநாசம் கோவில் முன்பு படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கியபோதும் கோவில் முன்பு உள்ள சுவாமி மண்டபம் படித்துறை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை எனவும், அதற்கு பதிலாக முக்கூடல் ஆறு மற்றும் பாபநாசம் கோவிலுக்கு தென்புறம் உள்ள அய்யா கோவில் முன்பும் தர்ப்பணம் கொடுத்து கொள்ளலாம் எனவும், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் பாபநாசம் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரதம் இருக்கும் இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
    இன்று தை அமாவாசை தினமாகும். இன்றைய தினம் ஏராமானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் அளிக்கின்றனர். அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும் அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது.

    நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

    தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கருப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.

    பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

    முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோரை வழிபட்ட பிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தை அமாவாசை விழா வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தன்று தை அமாவாசை விழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தை அமாவாசை விழா வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீ பலிபூஜை, நைவேத்திய பூஜை, உச்சிகால பூஜை ஆகியவை நடைபெறும். அதன் பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    தை அமாவாசையையொட்டி பக்தர்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செலுத்துவார்கள். இதற்காக அதிகாலை 4 மணியில் இருந்தே கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேதமந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள். அதன்பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவிலில் இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், பின்னர் அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    ×