என் மலர்
சினிமா செய்திகள்
- 'மாமன்னன்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமைக்கான குரலை உயரப் பறக்க விடுகிறான் மாமன்னன்..! எப்போதும் போல மாரி செல்வராஜ் கலை நோக்கத்திற்கு கைத்தட்டலும் அன்பும். திரை சபைக்கு இந்த சபாநாயகரை அழைத்து வந்ததற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
- அருள்நிதி நடிப்பில் மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஜூன் 26-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தை பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பி-யுமான தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார். அதில், "கழுவேத்தி_மூர்க்கனைக் கண்டேன். இயக்குனர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன். சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகாரவெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பவன். சட்டம்-ஒழுங்கு எனும் பெயரால் எப்போதுமே ஆதிக்க வெறியர்களைக் பாதுகாக்கும் காக்கி அதிகாரிகளால் களப்பலி ஆனவன்.
'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குனர் கௌதமராஜூக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு காமெடியான புரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
- இப்படத்தின் டப்பிங் பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மாமன்னன் திரைப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.
- இதற்கு பதிலளித்து உதயநிதி பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் பட குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பா. இரஞ்சித் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏ க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக கட்சியில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், `மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குனர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். `பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதாக தகவல் பரவியது.
- தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது என்று விளக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது அது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கையில் , தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளை கூறியுள்ளனர். இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். இதை விடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’.
- இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. சலார் படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சலார் படத்தின் டீசர் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் ஜூலை 6ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சலார் பட டீசரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இதன் டீசர் விடியற்காலையில் வெளியாவதால் அதிர்ச்சியில் உள்ளனர்.
- ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் "லால்சலாம்" படத்தில் ரஜினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் "லால்சலாம்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நல்லாம்பாளையம், சத்திரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் திருவண்ணாமலையிலேயே தங்கி இருந்து நடித்து வருகிறார்.

படப்பிடிப்பிற்கு இடையே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ரஜினி சாமி தரிசனம் செய்தார் இந்நிலையில் நடிகர் ரஜினியை தி.மு.க. மூத்த அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளருமான அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசினார். அப்போது ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை அமைச்சர் எ.வ.வேலு பரிசளித்தார்.
- சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் மிஷ்கின் மேடையில் வரும் பொழுது ரசிகர்கள் லியோ லியோ என்று ஆரவாரம் செய்தனர். அப்போது மிஷ்கின் பேசியதாவது, லியோ-னா சிங்கம்.. விஜய் எப்போமே சிங்கம் தான். விஜய் ஒரு பெரிய குழந்தை. 21 வருஷத்துக்கு முன்னாடி நான் விஜய்யோட யூத் படத்துல வேலை செஞ்சேன். அப்போ எப்படி என்கிட்ட பேசினாரோ, இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அதே அன்போடு தான் பேசுறார் என்றார்.
மாவீரன் திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
- விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு உடனான படத்தை நிறைவு செய்துவிட்டு 2025 ஆம் ஆண்டு முழுவதும், மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், விஜய் கவனம் செலுத்தப் போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாக உள்ளதகவும் கூறப்படுகிறது.
- 'ஜூலாய்', 'S/O சத்தியமூர்த்தி' மற்றும் 'அலா வைகுண்டபுரமுலு' படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் அல்லு அர்ஜுன் இணைந்துள்ளார்.
- இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 'ஜூலாய்', 'S/O சத்தியமூர்த்தி' மற்றும் 'அலா வைகுண்டபுரமுலு' படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் இணைந்துள்ளார். இதனை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் இதுவரை பார்த்திராத காட்சியைக் (Never before seen Visual Spectacle) கொண்டு வர இந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது. இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் பேனர், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் உடன் தயாரிக்கிறது.

இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் பிற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
- இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் "ஜிகர்தண்டா". சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில், தியேட்டரில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






