என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி முதலிடத்தில் உள்ளது.


    இந்நிலையில், 'மாமன்னன்' திரைப்படம் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் பார்ட்டிக்கு தாமதமாக வந்துள்ளேன். மாமன்னன் மிகவும் சிறந்த திரைப்படம். படக்குழுவினர் அனைவரும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரகுமான், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.




    • பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் 'சுழல்'.
    • இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

    விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    அதாவது, புஷ்கர் - காயத்ரி 'சுழல்' இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகை தமன்னா தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரிஸ் 2-வில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


    இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகளும் லிப் லாக் காட்சிகளிலும் விஜய் வர்மாவுடன நெருக்கமாக நடித்தார். தமன்னா-விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


    இந்நிலையில், நடிகை தமன்னா, விஜய்யுடன் 'சுறா' படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "சுறா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஆனால் அதில் என்னுடைய நடிப்பு மிகவும் மோசமாக இருக்கும். இனிமேல் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக சொல்கிறேன். 'சுறா' படப்பிடிப்பின்போதே எனக்குத் தெரியும், அது வொர்க்அவுட் ஆகாது என்று. நிறைய படங்களில் நமக்கே தெரியும் இது சரிவராது என்று ஆனால் நடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம். நாங்கள் ஒப்புகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் பலரின் பொருளாதாரம் உள்ளிட்டவை சம்பந்தபட்டிருக்கிறது. ஆகவே, கமிட்டாகிவிட்டால் அதில் நடித்தாகவேண்டும். அது வேலையின் ஒரு பகுதி" என்று கூறினார்.

    • நடிகர் கவின் நடிப்பில் வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான 'லிஃப்ட்', 'டாடா' போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


    இவர் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெருமளவில் உயர்ந்துள்ளது.


    இந்த நிலையில் இவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 -ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    • நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    ஜெயிலர் போஸ்டர்

    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.




    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

    கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின்னர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார்.



    இப்படத்தை பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் பெற்று வந்தார். ஆனால், திடீரென்று இயக்குனர் மாரிசெல்வராஜ் இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை தொடங்கினார்.


    இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1990-காலக்கட்டத்தில் உருவாகும் இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'.
    • இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார்.

    'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


    'ஹரா' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் கதாநாயகனாக நடித்த 'தாதா 87' திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.



    'ஹரா' படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, "93 வயதில் இந்தளவு உற்சாகத்துடன் நடிக்கும் நடிகர் வேறெங்காவது இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் 'ஹரா' படத்தில் சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார்" என்று தெரிவித்தார்.


    தொடர்ந்து பேசிய அவர், "டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார். அவரது காட்சிகளை எந்த வித சோர்வோ தாமதமோ இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் நடித்து கொடுத்தார். அவருக்கும், அவரது மகள் திருமதி சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி," என்று கூறினார்.

    'ஹரா' திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'.
    • இப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'சர்தார்'. இதில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.



    'சர்தார்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வரை வசூலை குவித்தது. இந்நிலையில், 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது.
    • பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார்.

    நடிகர் பவன் கல்யாண் நடித்த 'ப்ரோ' சினிமா கடந்த 28-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், உலகம் முழுவதும் வெளியாகும் எங்கள் திரைப்படத்தில் மதிப்பிற்குரிய ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் உடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.


    மேலும் ஜெகன்மோகன் ரெட்டியை விட பவன் கல்யாண் விருப்பமான தலைவர் என ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். இதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் வரவேற்பு அளித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது இன்னும் நீக்கப்படவில்லை அதனை உடனடியாக நீக்க வேண்டுமென அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் இடம் பெற்றுள்ளார். அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நடிகை ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். போர் தொழில் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் நடந்து வருகிறது.
    • விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது.

    நடிகர் விஜய் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

    அதுமட்டுமின்றி அவர்கள் மத்தியில் பேசும் போது, ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.

    இவ்வாறு விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் அரசியல் கட்சியில் உள்ளது போல் வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணியினர் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந்தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. 6-ந்தேதி கேரள நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    வருகிற சனிக்கிழமை இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட உதவிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீமான் தலைமையில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில், சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை வகித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது" என காட்டமாக விமர்சித்திருந்தார்.


    சீமான்

    இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீமானின் இந்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் ராஜ் கிரண் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...


    ராஜ்கிரண் பதிவு

    "இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×