93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் சாருஹாசன்

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'.இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார்.
சாருஹாசன் -மோகன்
சாருஹாசன் -மோகன்
Published on

'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

'ஹரா' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் கதாநாயகனாக நடித்த 'தாதா 87' திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

'ஹரா' படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, "93 வயதில் இந்தளவு உற்சாகத்துடன் நடிக்கும் நடிகர் வேறெங்காவது இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் 'ஹரா' படத்தில் சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார். அவரது காட்சிகளை எந்த வித சோர்வோ தாமதமோ இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் நடித்து கொடுத்தார். அவருக்கும், அவரது மகள் திருமதி சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி," என்று கூறினார்.

'ஹரா' திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com