என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

    உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இதற்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது உயரிய விருதாக விளங்கி வருகிறது. ஆஸ்கர் விருது போன்று ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளில் சாதனை படைத்த படங்களுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு 'Hollywood Foreign Press Association' சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


    இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஒப்பன்ஹெய்மர்' திரைப்படத்துக்கு சிறந்த

    திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.

    கோல்டன் குளோப் விருது முழு பட்டியல்:

    சிறந்த திரைப்படம் - ஒப்பன்ஹெய்மர்

    சிறந்த இயக்குனர் - கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)

    சிறந்த நடிகை - லிலி கிளாட்ஸ்டோன் (ஒப்பன்ஹெய்மர்)

    சிறந்த நடிகர் - சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)

    சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) - புவர் திங்ஸ்

    சிறந்த திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்

    சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

    சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) - பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்)

    சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)

    சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)

    சிறந்த டிவி தொடர் (டிராமா) - சக்ஸசன்

    சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்/ காமெடி) - தி பியர்

    சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) - லுட்விக் யோரன்ஸோன் (ஒப்பன்ஹெய்மர்)

    சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) - அனாடமி ஆஃப் எ ஃபால்

    சிறந்த பாடல் - 'வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?' (பார்பி - பில்லீ எலீஷ்)

    சிறந்த அனிமேஷன் படம் - 'தி பாய் அண்ட் தி ஹெரோன்

    சிறந்த வசூல் சாதனை படம் - பார்பி

    • பத்மஸ்ரீ ஜாவெத் 5 முறை தேசிய விருதுகளை வென்றவர்
    • ஆணாதிக்க காட்சியமைப்புகள் அதிகம் இருந்தும் அனிமல் வெற்றி பெற்றது

    இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).

    5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

    தற்போது 78 வயதாகும் ஜாவெத், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம், தனது கருத்துக்களை கூற தயங்காதவர்.

    மகாராஷ்டிரா மாநில அவுரங்கபாத் நகரில் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜாவெத்திடம் தற்கால திரைப்படங்களின் தரம் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

    படங்களின் வெற்றிக்கும் தரத்திற்கும் ரசிகர்கள்தான் பொறுப்பு. தற்காலத்தில் வெற்றி பெறும் படங்களின் தரம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது.

    எந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

    அப்போதுதான் எந்த வகையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என கலைஞர்கள் முயற்சி செய்வார்கள். படங்களில் வரும் தார்மீக எல்லைக்குட்பட்ட விஷயங்களை தீர்மானிக்கும் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது.

    இவ்வாறு ஜாவெத் கூறினார்.

    கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகி இந்தியா மற்றும் உலகெங்கும் வெளியான, "அனிமல்" இந்தி படம் உலகெங்கும் வசூலை அள்ளி குவித்தது. ஆனால், வன்முறை காட்சிகளும், ஆணாதிக்க காட்சியமைப்புகளும் அதில் அதிகம் இடம் பெற்றிருந்தது.

    பல எதிர்மறை விமர்சனங்களையும் மீறி அனிமல் வெற்றி பெற்றது.

    இப்பின்னணியில், திரைப்பட ரசிகர்களை குறித்த ஜாவெத் அக்தரின் கருத்து பார்க்கப்படுகிறது.

    • லால் சலாம் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
    • படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

    படத்தின் டிரெய்லரில் கூட கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுப்பதையும், அப்போது ரஜினிகாந்த் அறிமுகமாகி 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க. குழந்தைகள் மனசுல கூட விஷத்தை விதைச்சிருக்கீங்க. தப்பா போகுது' என்று ஆவேசமாக பேசும் வசனம் கவனம் ஈர்த்தது.

    படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

    இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி, 'லால் சலாம்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    மேலும் ரஜினிகாந்துடன், கபில்தேவ் இருக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா - சமந்தா நடிப்பில் பிசியாகி விட்டனர்.
    • உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.

    நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியாக திகழ்ந்த நாக சைதன்யா - சமந்தா ஜோடி, கடந்த 2021-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

    விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா - சமந்தா நடிப்பில் பிசியாகி விட்டனர். மயோசிடிஸ் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வரும் சமந்தா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.

    இந்தநிலையில் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷோபிதாவிடம், 'நாக சைதன்யாவுக்கும், உங்களுக்கும் காதலாமே...' என்று கேட்கப்பட்டது. இதற்கு ஷோபிதா பதிலளிக்கையில், "உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.

    நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்'', என்று காட்டமாக பதிலளித்தார்.

    • கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார்.
    • பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

    சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார். ஆனால் சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை. அவரை அரசியல் எடுத்துக்கொண்டது. எழுத்து, பேச்சில் வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர். எழுத்து இல்லையென்றால் மதம், புராணம், வரலாறு, விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசு என எதுவும் இல்லை. இயற்கை கொடுத்த சக்தி எழுத்து. அவரது வசனத்தில் நான் நடிக்கவே பயந்த காலம் உண்டு.

    மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர்., சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நடிகர்களாக்கினார். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் படங்கள் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் இறுதிகாலம் வரை எளிமையாக வாழ்ந்தார். அவரை போல மு.க.ஸ்டாலினும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.

    தன்னை விமர்சனம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் கலைஞர். தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிகையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கலைஞர். அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி, பொதுக்கூட்டத்தில் அவரை விமர்சனம் செய்த கட்சிக்காரரை கண்டித்து அடக்கியவர் எம்.ஜி.ஆர். கடவுள் நம்பிக்கைக்காரரான ஆன்மீகவாதி சத்ய சாய்பாபா, கலைஞரை வீடு தேடி சென்று சந்தித்து பேசினார்.

    எல்லாவற்றையும் விட தேர்தலின்போது இரட்டை இலைக்கு ஒரு முன்னணி நடிகர் ஓட்டு போட்டார். ஆனால் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டது தெரிந்தும் அவரது புதிய படத்தை பார்க்க கலைஞர் அவருக்கு அழைப்பு விடுத்தார். குளிர் ஜுரம் என்று சொல்லியும் அந்த நடிகரை கட்டாயமாக அழைத்து படத்தைப் பார்த்தார். அந்த நடிகர் நான்தான். சூரியன் பக்கத்தில் அமர்ந்தால் குளிர் ஜுரம் போய்விடும் என்று நகைச்சுவையாக அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம் என்று பேசினார்.

    • தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் 'கலைஞர் 100' விழாவில் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்
    • கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது என கமல்ஹாசன் புகழாரம்

    மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திரளான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, ரஜினி காந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்சியில் , மிசா காட்சிகளை கலைஞராக தம்பி ராமையாவும், ஸ்டாலினாக விதார்த்தும் நடித்த காட்சிகளை கண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் கண் கலங்கினார்.

    இந்நிகழ்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சிறுவயதில் என்னுடைய அக்காக்கள் எனக்கு தலை சீவி விடும்போது கலைஞர் மாதிரி நடு வகுடு எடுத்து சீவி விடுங்கள் என்பேன். எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார்

    தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, அரசியலில் பல மாற்றங்கள் கொண்டுவந்த போது சினிமாவையும் ஒருசேர கொண்டுவந்தவர் கலைஞர் என கூறினார். "பராசக்தி படத்தில் நீ வேணும் என்றால் ஆட்சிக்கு வந்து மாத்திகாட்டேன் என எழுதி இருப்பார். அதேபோல் முதலமைச்சராக அமர்ந்து தான் எழுதியதை செய்துகாட்டியவர் கலைஞர்" என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டினார்.

    • கலைஞர் 100 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
    • திரைத்துறை மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், " ஒரு படத்தின் பூஜைக்காக பத்திரிகை வைக்க கலைஞர் வீட்டிற்கு சென்றேன். அப்போது கலைஞர் கருணாநிதி என்னை 'வாங்க மன்மத ராசா' என அழைத்தார். நம்ம பாட்டை இவர் கேடடிருக்காரான்னு ஆச்சரியமா இருந்தது."

     


    "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அசுரன் படம் பார்த்துவிட்டு என்னை தொடர்புகொண்டு வாழ்த்தினார். அப்போது அவர், பிரதர் நான் ஸ்டாலின் பேசறேன் என கூறினார். இன்றைக்கு நமது முதலமைச்சர் எளிதில் அணுகும்படியாக இருக்கிறார். மக்களின் முதலமைச்சராக உள்ளார். கலைஞர் அவர்கள் மறைந்து விட்டார் என யாராவது பேசினால்தான் அவர் மறைந்து விட்டார் என மனதிற்குள் தோன்றுகின்றது," என தெரிவித்தார்.

    • கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • அரசியல் தலைவர்களும் கலைஞர் 100 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில், "கலைஞர் 100" என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.


     

    அதன்படி கடந்த மாதம் 24-ம் தேதி கலைஞர் 100 நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், புயல் மற்றும் கனமழை காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 6) கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சி நடைபெறுகிறது.




    கோலாகலமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நடிகர்களை பொருத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ், அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாஸ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும், ஆந்திர மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜாவும் கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். திரைத்துறை மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கலைஞர் 100 நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

    • இந்த படத்தை புச்சி பாபு இயக்குகிறார்.
    • ஆர்.சி. 16 படத்திற்கான புதிய அப்டேட் வெளியானது.

    தெலுங்கு நடிகர் ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக ஆர்.சி. 16 என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை புச்சி பாபு இயக்குகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன.

     


    இந்த நிலையில், ஆர்.சி. 16 படத்திற்கான புதிய அப்டேட்-ஐ படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி ராம் சரண் நடிப்பில் உருவாகும் 16-வது படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று (ஜனவரி 6) ஏ.ஆர். ரகுமான் பிறந்தநாள் என்பதால், இந்த அறிவிப்புடன் ஆர்.சி. 16 படக்குழு ஏ.ஆர். ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. 



    • எல்.ஐ.சி. என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு.
    • தங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும் விதமாக இந்த படத்தின் தலைப்பு இடம்பெற்றுள்ளது.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.


    இந்நிலையில், 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. நிறுவனம் சார்பில் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸில், எல்.ஐ.சி. என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.


    மேலும், தங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும் விதமாக இந்த படத்தின் தலைப்பு இடம்பெற்றுள்ளது என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்த நோட்டீஸை பெற்றுக் கொண்ட 7 நாட்களுக்குள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும், வேறு பெயரை சூட்ட வேண்டும் இல்லை என்றால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் 7 மொழிகளில் 145-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.

    இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழிகளில் 145-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அட்கன் சட்கன், 99 சாங்க்ஸ், லே மஸ்க் ஆகிய படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அடுத்ததாக அயலான், லால் சலாம், தக் லைஃப் போன்ற படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கடந்த வருடம் எனக்கு ஒரு சிறந்த பயணமாக இருந்தது. உங்களுடன் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது கனவு நனவான தருணம். இன்னும் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.ரகுமான்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    ×