எனது கனவு நனவான தருணம்- ஏ.ஆர்.ரகுமானுக்கு மாரிசெல்வராஜ் வாழ்த்து
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.
இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழிகளில் 145-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அட்கன் சட்கன், 99 சாங்க்ஸ், லே மஸ்க் ஆகிய படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அடுத்ததாக அயலான், லால் சலாம், தக் லைஃப் போன்ற படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கடந்த வருடம் எனக்கு ஒரு சிறந்த பயணமாக இருந்தது. உங்களுடன் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது, எனது கனவு நனவான தருணம். இன்னும் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.ரகுமான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

