என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா படத்தில் யூடியூப்பில் மிகவும் பிரபலமானவர் நடிக்க இருக்கிறார். #DhruvVikram #AdithyaVarma
    துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடித்த `வர்மா’ படம், இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.

    அதை தொடர்ந்து படத்தை `ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார்.



    பிரிட்டிஷ் இந்திய மாடல் அழகி பனிதா சந்து துருவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். படத்தில் நடிகை கதாபாத்திரத்திலேயே பிரியா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதாபாத்திரத்தில் `மீசைய முறுக்கு’, `கோலமாவு கோகிலா’ படங்களில் நடித்த யூடியூப் பிரபலம் அன்புதாசன் நடிக்கிறார். ஆன்லைனில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட இவர், அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
    பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

    மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் ட்விட்டிலிருப்பதாவது,

    "பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்... நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.



    இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.

    ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்." என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா, நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். #Oviya #90ML #TNPolitical
    ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர் சில ஆபாச வசனங்களை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகவும் எதிர்ப்புகள் தோன்றின. பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை கெடுத்துக்கொண்டார் என்று விமர்சனங்கள் பரவின. 

    இதுபற்றி ஓவியாவிடம் கேட்டோம். ’சமூகத்தில் இருப்பவர்களின் பிரதிபலிப்பு தான் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள். படத்தில் நடிப்பதற்கும் தனிப்பட்ட ஒருவரின் தன்மைக்கும் தொடர்பு இல்லை.



    தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பார்கள். பின்னர் அதையே வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பார்கள். இது சினிமா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க தொடங்குங்கள். என்னை ஓவியாவாக பாருங்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
    தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள். 

    அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.



    கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

    அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange

    கே.சி.சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஜூலை காற்றில்' படத்தின் முன்னோட்டம். #JulyKaatril #AnanthNag
    காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரித்துள்ள படம் `ஜூலை காற்றில்'.

    அனந்த் நாக் நாயகனாகவும், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நாயகிகளாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சதீஷ், பலோமா மொனப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தொகுப்பு - சேவியர் எட்வெர்ட்ஸ், இசை - ஜோஸ்வா ஸ்ரீதர், படத்தொகுப்பு - அணுசரண், கலை - ஜெகுமார், பாடல்கள் - நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோகிணி, சௌந்தரராஜன், நடனம் - ஸ்ரீசெல்வி, நிர்வாக தயாரிப்பு - எம்.செந்தில், தயாரிப்பு மேற்பார்வை - வல்லம் டி.வெங்கடேஷ், தயாரிப்பு - சரவணன் பழனியப்பன், எழுத்து, இயக்கம் - கே.சி.சுந்தரம்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.சி.சுந்தரம் பேசுகையில்,

    “ நான் இன்சினியரிங் முடித்துவிட்டு, இயக்குனர் ஜீவாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன், அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். காதல் படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரின் ரசிகன் ஆகிவிட்டேன். இந்த கதையை முதலில் அவரிடம் சொல்லி பாடலைக் கேட்டபோது, 5 அற்புதமான மெட்டுகளை நமக்காக அமைத்துக் கொடுத்தார். இந்தப் படத்தின் ஆல்பம் ஹிட்டாகும் என்று நம்புகிறேன். இந்த படம் சினிமா ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றார்.

    படம் வருகிற மார்ச் 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #JulyKaatril #AnanthNag #AnjuKurian #SamyukthaMenon

    ஜூலை காற்றில் டிரைலர்:

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் `இந்தியன் 2' படம் பணப் பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் - ‌ஷங்கர் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக தன் மகனையே கொல்லும் சுதந்திர போராட்ட வீரராக நடித்து இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இதன் 2-ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர்.

    இந்தியன் 2 என தலைப்பிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பட பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே இல்லாமல் நிற்கிறது.

    படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப்போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக பொருந்தவில்லை என்கிறார்கள். அவருக்கு மேக்கப்பினால் அலர்ஜியாகி உள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

    மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கு, தயாரிப்பு நிறுவனம் பணத்தை தயார் செய்துவருகிறது. அந்த நிறுவனம் சீனாவில் வெளியிடும் 2.0 படம் வெளியானால் நல்ல பலன் தரும் என்று காத்திருக்கிறார்கள்.



    மீண்டும் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களிடம் தேதிகள் வாங்க வேண்டும். தற்போதைக்கு தேர்தல் முடியும் வரை கமல், தன் அரசியல் பயணத்தில் பிசியாகி உள்ளார். இதனால், தேர்தல் முடிந்து கமல் மீண்டும் நடிக்க திரும்ப வேண்டும். அதற்குள் அவரும், தன் உடலை ‘இந்தியன்2’ படத்துக்காக மாற்ற வேண்டும்.

    இந்த தகவல்களை எல்லாம் வைத்து படக்குழுவிடம் விசாரித்தால், “எவ்வித பிரச்சினையுமே இல்லையே. மீண்டும் விரைவில் தொடங்குவோம்“ என்கிறார்கள்.

    படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட வி‌ஷயங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை. #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar

    அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sethupathi2 #VijaySethupathi
    வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

    அடுத்து சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்ட நாள் முதல் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதுபோல் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்தும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆலோசித்து வருகிறார். அஜித்குமாரும், வெங்கட் பிரபுவும் இதுகுறித்து நேரிலும் சந்தித்து பேசி உள்ளனர்.



    இந்த நிலையில் கடந்த 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அருண்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வருவார். இரண்டாம் பாகத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார்.

    இதற்கிடையே அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சிந்துபாத் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியாகிய இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. #Sethupathi2 #VijaySethupathi #RamyaNambeesan #SuArunKumar

    பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
    பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ’பொள்ளாச்சி சம்பவத்தால் அதிர்ச்சியாகியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல். அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


    நடிகரும் இசைஅமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டரில் ‘இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
    மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

    பாடகி சின்மயி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிறுமி ஒருவரைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற வீடியோக்களை பகிராதீர்கள். கோபத்தை வரவழைக்க இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம். கோரமான மக்கள்” என பதிவிட்டுள்ளார். 

    இயக்குனர் கரு.பழனியப்பன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‘பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரம்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை’’ என்று கூறியுள்ளார்.


    பா.ஜனதாவில் உள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘பொள்ளாச்சி சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி எந்த அரசியல் பின்னணியை சேர்ந்தவராய் இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

    பாலியல் குற்றங்கள் அரசியல் அல்ல. இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள். இது தனிநபரின் குற்றம். அந்த நபருக்கு உட்சபட்ச தண்டனை கொடுங்கள். குற்றத்தை ஆதரித்தவர்களையும் தண்டியுங்கள்’’.


    சைக்கோ போல சிந்திக்கும் ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. எந்த பணக்கார வீட்டு பையனோ, அரசியல் பின்னணி இருப்பவனோ, குடிகாரனோ, ஏழையோ, யாருக்கும் இந்த குற்றத்தில் இருந்து மன்னிப்பு இருக்கக் கூடாது. எந்த சாக்கும் சொல்லப்படக்கூடாது. இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

    தண்டனை இரண்டு மடங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பெயரைப் பயன்படுத்தியோ, வேறெந்த வழியிலும் அவர்கள் தப்பித்து விடக்கூடாது. பொறுத்தது போதும். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என எல்லா ஆட்சியிலும் நீண்ட காலமாக பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறன. எந்த அரசியல் கட்சி என்பதல்ல. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் சட்டம் மிகவும் கண்டிப்பாக இருந்தது என்பதுதான் உண்மை.

    ஏனென்றால் அவர் ஒரு பெண். பெண்மை எப்போதுமே மதிப்பு வாய்ந்தது. ஆண்கள் பதவி, பணம், காதல், ஆதரவு என எதை வைத்தும் பொய் சொல்லி அப்பாவிப் பெண்களை ஏமாற்றலாம். இந்த சம்பவத்தில் நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது’.

    இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். #PollachiRapists #PollachiAssaultCase

    சாச்சி இயக்கத்தில் வைபவ் - பல்லக் லால்வானி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு `சிக்ஸர்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #Sixer #Vaibhav #PalakLalwani
    `மேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் `பேட்ட' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்ததாக `ஆர்.கே.நகர்', `காட்டேரி' ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன.

    இந்த நிலையில், வைபவின் அடுத்த படத்திற்கு `சிக்ஸர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.

    சிக்ஸர் தான் தலைப்பு என்றாலும் இந்த படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது என்று தயாரிப்பாளர்கள் கூறினர்.

    ஜிப்ரான் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். #Sixer #Vaibhav #PalakLalwani

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை தமிழ் புத்தாண்டுக்கு பிறகு, தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #K13 #Arulnidhi
    அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பரத் கூறுகையில், "ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

    சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath #AdhikRavichandran

    கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் புதிய படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். #Sivakarthikeyan
    கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இளம் இசையமைப்பாளர் ஷபீர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

    எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம்" என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.

    இசையமைப்பாளர் ஷபீர் கூறும்போது, "துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ச்சிகள் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது" என்றார்.



    சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த 'தயாரிப்பு எண் 2' படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல யூடியூப் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
    ×