search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பொள்ளாச்சி பாலியல் கொடுமை - திரையுலகப் பிரபலங்கள் கண்டனம்
    X

    பொள்ளாச்சி பாலியல் கொடுமை - திரையுலகப் பிரபலங்கள் கண்டனம்

    பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists
    பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ’பொள்ளாச்சி சம்பவத்தால் அதிர்ச்சியாகியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல். அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


    நடிகரும் இசைஅமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டரில் ‘இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
    மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

    பாடகி சின்மயி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிறுமி ஒருவரைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போன்ற வீடியோக்களை பகிராதீர்கள். கோபத்தை வரவழைக்க இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம். கோரமான மக்கள்” என பதிவிட்டுள்ளார். 

    இயக்குனர் கரு.பழனியப்பன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‘பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரம்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண் பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை’’ என்று கூறியுள்ளார்.


    பா.ஜனதாவில் உள்ள காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ‘‘பொள்ளாச்சி சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்புணர்வு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி எந்த அரசியல் பின்னணியை சேர்ந்தவராய் இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

    பாலியல் குற்றங்கள் அரசியல் அல்ல. இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தாதீர்கள். இது தனிநபரின் குற்றம். அந்த நபருக்கு உட்சபட்ச தண்டனை கொடுங்கள். குற்றத்தை ஆதரித்தவர்களையும் தண்டியுங்கள்’’.


    சைக்கோ போல சிந்திக்கும் ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கிறது. எந்த பணக்கார வீட்டு பையனோ, அரசியல் பின்னணி இருப்பவனோ, குடிகாரனோ, ஏழையோ, யாருக்கும் இந்த குற்றத்தில் இருந்து மன்னிப்பு இருக்கக் கூடாது. எந்த சாக்கும் சொல்லப்படக்கூடாது. இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

    தண்டனை இரண்டு மடங்கு அளிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் பெயரைப் பயன்படுத்தியோ, வேறெந்த வழியிலும் அவர்கள் தப்பித்து விடக்கூடாது. பொறுத்தது போதும். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக என எல்லா ஆட்சியிலும் நீண்ட காலமாக பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறன. எந்த அரசியல் கட்சி என்பதல்ல. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் சட்டம் மிகவும் கண்டிப்பாக இருந்தது என்பதுதான் உண்மை.

    ஏனென்றால் அவர் ஒரு பெண். பெண்மை எப்போதுமே மதிப்பு வாய்ந்தது. ஆண்கள் பதவி, பணம், காதல், ஆதரவு என எதை வைத்தும் பொய் சொல்லி அப்பாவிப் பெண்களை ஏமாற்றலாம். இந்த சம்பவத்தில் நிறைய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது’.

    இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். #PollachiRapists #PollachiAssaultCase

    Next Story
    ×