என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மாரி 2 படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை, துரை செந்தில் இயக்கும் பட்டாஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார், காலா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். 

    ஆர்டிகில் 15 பட போஸ்டர்

    மேலும் வடசென்னை 2, செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஆர்டிகில் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தனுஷ் இதில் நடிப்பாரா? இல்லை தயாரிப்பாரா? என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கோவையில் நடைபெற்று வரும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தின் முதல் சுற்று முடிவு வெளியாகியுள்ளது.
    நடிகர் அஜித் நடிப்புத்துறை மட்டுமல்லாது கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருபவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக செயல்பட்டார்.

    தற்போது தனது கவனத்தை துப்பாக்கி சுடுதல் பக்கம் திருப்பியுள்ளார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. 

    போட்டி முடிவு படிவம்

    இதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

    முதல் சுற்றில் 71 புள்ளிகள், இரண்டாம் சுற்றில் 79 புள்ளிகள், மூன்றாம் சுற்றில் 83 புள்ளிகள், நான்காம் சுற்றில் 81 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்று போட்டிக்கு அஜித்குமார் தகுதிபெற்றுள்ளார். இறுதிச்சுற்று வரும் சனிக்கிழமை நடக்க இருக்கிறது.
    இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளிவந்தன. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

    இந்த நிலையில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கின்றனர். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார்.

    முத்தையா முரளிதரன்

    இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும்” என்றார். முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளது.

    இதுபோல் சமூக வலைத்தளத்திலும் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்த்து வருகிறார்கள்.
    விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் சச்சின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

    எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் முதன்முறையாக தயாரிக்கிறது. அதேபோல் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார்.

    முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி

    இந்நிலையில், இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஒருசில காட்சியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் கமல் தோற்றத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கமல்ஹாசன் நடித்து வசூல் குவித்த இந்தியன் படத்தின் 2-ம் பாகம் பட வேலைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பே கமலின் வயதான தோற்றத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பை நடத்தினர். படமாக்கிய காட்சிகளை பார்த்தபோது அந்த தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

    அதன்பிறகு படத்தின் பட்ஜெட் தொடர்பாக தயாரிப்பு தரப்புக்கும் ஷங்கருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். கமல்ஹாசனின் வயதான தோற்றத்தையும் மீண்டும் மாற்றி உள்ளனர். 

    ஷங்கர்

    கடந்த சில நாட்களாக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து இந்த வயதான தோற்றத்தை உருவாக்கியதாகவும், புதிய தோற்றத்தில் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் திருப்தியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த தோற்றத்தை வெளியிட உள்ளனர்.

    முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் வயதான இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். படத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

    சித்தார்த், வித்யுத், நெடுமுடி, டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர் ஐதராபாத்தில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்.
    கதாநாயகர்கள் படங்கள் அளவுக்கு தனது படமும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
    ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'ராட்சசி' படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் 'ஜாக்பாட்' படம் திரைக்கு வருகிறது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி வருமாறு:- 'ஜாக்பாட்' படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளேன். இது நகைச்சுவை படம் போல் தெரியும். அதற்கு பின்னால் கதையும் இருக்கும். 

    பெரிய கதாநாயகனுக்கு படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் இந்த படத்திலும் நிறைய இருக்கிறது. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வருகிறேன். நம் கையில் காசு நிறைய வந்தா நிச்சயமா அதை திருப்பி மற்றவங்களுக்கும் கொடுக்கணும். அதுதான் 'ஜாக்பாட்' படத்தின் முக்கியமான கரு. பல இளம் இயக்குனர்கள் எனக்காகவே கதைகளை எழுதுகிறார்கள். அது சந்தோஷமா இருக்கு. ஆனால் ரசிகர்கள் கதாநாயகிகள் படங்களுக்கு பெரிய ‘ஓபனிங்’ கொடுப்பதில்லை. 

    சூர்யா, ஜோதிகா

    அதுதான் கஷ்டமா இருக்கு. பெரிய ஹீரோக்கள் படம்னா போகிறார்கள். ஹீரோயின் படங்களையும் வரவேற்க வேண்டும். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் பெண்கள் படத்திற்கும் இசையமைக்க வேண்டும். 'ராட்சசி' படத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தது. உண்மையைத் தான் படத்தில் காட்டியுள்ளர்கள் என்று பலர் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்லை. பயம் இருந்தால் படமே நடிக்க மாட்டேனே?

    'ராட்சசி' படத்துக்கு பிறகு சிலர் ஈரோட்டில் ஒரு அரசு பள்ளிக்கு பஸ் கொடுத்துள்ளனர். சிலர் பள்ளிக்கு நிதி வழங்கி உள்ளனர். இதுதான் பெரிய பாராட்டு. நான் படம் இயக்க மாட்டேன். என் லட்சியம் என்னவென்றால் கதாநாயகர்கள் படங்கள் அளவுக்கு எனது படம் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும்.” இவ்வாறு ஜோதிகா கூறினார்.
    சத்ய சிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் கழுகு 2 படத்தின் விமர்சனம்.
    கொடைக்கானலில் எஸ்டேட் முதலாளியிடம் உதவியாளராக வேலை பார்க்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அந்த பகுதியில் செந்நாய்கள் கூட்டமாக வந்து எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களை கடித்துக் கொல்வதால், மக்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை.  இம்மாதிரியான சூழ்நிலையில் செந்நாய்கள் தாக்குதலை கட்டுப்படுத்த வேட்டை ஆட்களை பணியமர்த்த முடிவு செய்கின்றனர். இதற்காக வேட்டை ஆட்களை தேடி தேனிக்கு செல்கிறார் எம் எஸ் பாஸ்கர். 

    செல்லும் வழியில் கிருஷ்ணா, காளி வெங்கட் இருவரும் துப்பாக்கியுடன் ஓடுவதைப் பார்த்த எம்எஸ் பாஸ்கர் இவர்கள் இருவரும் பெரிய வேட்டைக்காரர்கள் என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் திருடர்கள் என்பதும், போலீஸ் துப்பாக்கியை திருடிவிட்டு ஓடுவதும் அவருக்கு தெரியாது.

    கழுகு 2

    அவர்களிடம் சென்று தங்குமிடம், சாப்பாடு, நல்ல சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அழைக்கிறார் எம்எஸ் பாஸ்கர். அவர்களும் போலீசிடம் இருந்து தப்பிக்க இதுவே நல்ல வழி என்று திருடிய துப்பாக்கியோடு வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் இருவரும் வேட்டைகாரர்கள் என நம்பி, அப்பகுதி மக்களும் வேலைக்கு வருகிறார்கள். எம்எஸ் பாஸ்கரின் மகள் பிந்து மாதவியும் அங்கு வேலைக்கு வருகிறார்.

    ஒரு கட்டத்தில் பிந்து மாதவி செந்நாய்களிடம் தனியாக மாட்டிக் கொள்கிறார். துப்பாக்கியால் சுடவே தெரியாத கிருஷ்ணா ஒருவழியாக செந்நாயை கொன்று பிந்து மாதவியை காப்பாற்றுகிறார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கு எம் எஸ் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது ஒருபுறம் நடக்க, ஏதாவது பெரிய திருட்டு செய்துவிட்டு நாயகியுடன் சந்தோஷமாக வாழலாம் என்று திட்டம் தீட்டுகிறார் கிருஷ்ணா. இறுதியில் நாயகன் திருடி செட்டில் ஆனாரா? நாயகியுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கழுகு 2

    படத்தின் நாயகனாக நடித்த கிருஷ்ணா, கழுகு முதல் பாகத்தில் பார்த்த அதே தோற்றத்தோடு தோன்றி நடிப்பில் மிளிர்கிறார். காதல், நட்பு, ஆக்‌ஷன் என அனைத்திலும் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா. நாயகி பிந்துமாதவி, காட்சிகளுக்கு அழகாக வந்து, தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகவே தென்படுகிறார். 

    கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கழுகு படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதை அமைக்கப்படவில்லை. முழுமையாக வேறு கதைகளத்தில் படத்தை நகர்த்தியுள்ளார். திரைக்கதையில் ஒருசில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. படம் முழுவதும் அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளது. காட்டின் எழில்மிகு அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.

    கழுகு 2

    படம்முழுக்க கிருஷ்ணாவுடன் பயணிக்கும் காளி வெங்கட் தனது டைமிங் காமெடி மூலம் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவே வருகிறார். அதுவும் ரசிக்கும்படியாகவே இருந்தது. எம்.எஸ். பாஸ்கர் எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். யுவன்சங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனால் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும் படத்தோடு ஒன்றி போகிறது. கொடைக்கானலின் அழகை தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ராஜா பட்டாச்சாரி. 

    மொத்தத்தில் ‘கழுகு 2’ கரடுமுரடான மலை பயணம்.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தில், தனது ஷூட்டிங்கை முடித்து விட்டதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
    'பரியேறும் பெருமாள்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு கதிர், விஜய்யுடன் இணைந்து 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



    இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் மனது பேச விரும்புவதை இந்த புகைப்படம் பேசும். 'பிகில்' படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். விஜய் அண்ணா, உங்கள் அரவணைப்பு எனக்கு மகிழ்ச்சி உணர்வையும், முடிவற்ற அன்பையும் எனக்கு அளித்தது. சிறப்பான தருணங்களுக்கு நன்றி. இதனை உண்மையாக்கிய அட்லி அண்ணாக்கு நன்றி’ என்று கூறியிருக்கிறார். 
    தமிழ்ப்படம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    சிவா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தமிழ்ப்படம் 2’. சி.எஸ்.அமுதன் இயக்கிய இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார். பல படங்களை கலாய்த்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது சிவா நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘சுமோ’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    சுமோ படத்தின் போஸ்டர்

    சுமோ படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஹூசிமின் இயக்கும் இப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை சிவாவே எழுதியிருக்கிறார்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படுவதற்கு அவரின் தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி இந்தியிலும் முன்னணி நடிகையாக விளங்கினார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஜான்வி, குஷி என 2 மகள்கள். கடந்த ஆண்டு துபாயில் நடந்த விபத்தில் ஸ்ரீதேவி காலமானார்.

    போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் நடிகையானார். அந்த படத்தின் கதாநாயகனான இஷான் கட்டாரும் (நடிகர் சாகித் கபூரின் தம்பி), ஜான்வியும் காதலிப்பதாக செய்தி பரவியது. இஷான், ஜான்வி காதலுக்கு போனி கபூர் சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    நடிகை ஜான்வி

    இது குறித்து போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இஷானும், ஜான்வியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அதனால் அவர்கள் நண்பர்களாகி இருக்கக்கூடும். நான் என் மகளையும், அவர் இஷானுடன் நட்பில் இருப்பதையும் மதிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    இஷான் கட்டார் அடிக்கடி ஜான்வியின் வீட்டிற்கு செல்கிறார் என்றும், அதை போனி கபூர் கண்டுகொள்வது இல்லை என்றும் கூறப்பட்டது. இது குறித்து போனிகபூருக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது:-

    ‘தடக் படம் ரிலீசான பிறகு இஷான் ஒரு முறை கூட ஜான்வியின் வீட்டிற்கு வந்தது இல்லை. அவர்களுக்கு இடையே நட்பை தாண்டி எதுவும் இல்லை’ என்றார்.
    காமெடி நடிகராக இருந்து தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தற்போது ஒரு படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்க இருக்கிறார்.
    நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால், இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூலையும் பெற்றது. 

    இந்நிலையில் இதன் அடுத்த பாகமான 'தில்லுக்கு துட்டு 3'-ஐ 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சந்தானம் இப்போது யோகி பாபுவுடன் இணைந்து டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு படத்தையும் தயாரிக்க உள்ளார். முந்தைய பாகங்களை இயக்கிய ராம் பாலாவே இப்படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தில்லுக்கு துட்டு 2 படத்தில் சந்தானம்

    இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
    சில நாட்களாக நடந்து வரும் அஜித், விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்டு வந்த மோதல், தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று ஒருவருக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.
    அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’, விஜய்யின் ‘பிகில்’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்கள் இடையே தற்போது கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

    விஜய் ரசிகர்கள் அஜித் படத்துக்கு எதிராகவும், அஜித் ரசிகர்கள் விஜய் படத்துக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இவர்கள் மோதிக்கொள்வது கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். 

    இந்த நிலையில் அஜித் ரசிகர் உமாசங்கர் என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் ரோஷன் என்பவரிடம் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    விஜய், அஜித்

    இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரோஷன், உமா சங்கரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக்கொண்டு சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமாசங்கர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், ரோஷனை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஷன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×