என் மலர்
சினிமா செய்திகள்
காமெடி நடிகராக இருந்து தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தற்போது ஒரு படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால், இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூலையும் பெற்றது.
இந்நிலையில் இதன் அடுத்த பாகமான 'தில்லுக்கு துட்டு 3'-ஐ 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சந்தானம் இப்போது யோகி பாபுவுடன் இணைந்து டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு படத்தையும் தயாரிக்க உள்ளார். முந்தைய பாகங்களை இயக்கிய ராம் பாலாவே இப்படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களாக நடந்து வரும் அஜித், விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்டு வந்த மோதல், தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று ஒருவருக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.
அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’, விஜய்யின் ‘பிகில்’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்கள் இடையே தற்போது கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.
விஜய் ரசிகர்கள் அஜித் படத்துக்கு எதிராகவும், அஜித் ரசிகர்கள் விஜய் படத்துக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இவர்கள் மோதிக்கொள்வது கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அஜித் ரசிகர் உமாசங்கர் என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் ரோஷன் என்பவரிடம் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரோஷன், உமா சங்கரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக்கொண்டு சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமாசங்கர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், ரோஷனை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஷன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மகாபாரதத்தில் இடம் பெறும் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படத்தில் அர்ஜூன் மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருஷேத்திரம்'. விருஷபாத்ரி புரொடக்ஷன் தயாரிப்பில், உலகளவில் 3டி முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'துப்பாக்கி', 'தெறி' மற்றும் 'கபாலி' போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தமிழில் வெளியிடுகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பீஷ்மராக அம்பரிஷ், துரியோதனாக தர்ஷன், கர்ணனாக அர்ஜூன், கிருஷ்ணராக வி.ரவிச்சந்தர், அர்ஜூனனாக சோனு சூட், சகுனியாக ரவி சங்கர், சையியாவாக ராக்லைன் வெங்கடேஷ், திரவுபதியாக சினேகா என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து உள்ளார்கள்.

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்டு மாதம் இந்த படத்தை திரையிட திட்டமிட்டு உள்ளனர்.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக மலையாள நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள பிகில் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா, ராசிகண்ணா ஆகிய இரு நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. தற்போது இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறும்படங்கள் மூலம் பிரபலமாகி தற்போது மலையாளத் திரையுலகில் பிசியாக அந்தோணி வர்கீஸ் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டிலிருந்து பலரும் வந்துகொண்டிருக்க விஜய்க்கு மலையாளத்திலிருந்து வில்லனை இறக்கியுள்ளனர். லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கிவருகிறார்.
ரஜினி, கமல், விஜய் படங்களில் பாடிய பிரபல பாடகர் உதித் நாராயணுக்கு மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பீகாரை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயண். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
சங்கர் இயக்கிய காதலன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் உதித் நாராயண். தொடர்ந்து ரஜினியின் முத்து, சிவாஜி, கமலின் காதலா காதலா, அன்பே சிவம், விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மதுர, ஷாஜஹான், பகவதி, திருமலை, கில்லி, சிவகாசி, குருவி, தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். ரன் படத்தில் அவர் பாடிய காதல் பிசாசே பாடல் மிகவும் பிரபலமானது.
அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உதித் நாராயண் இது குறித்து மும்பை அம்போலி பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது:-

‘ஏதோ தெரியாத புதிய எண்ணில் இருந்து யாரோ ஒரு மாதமாக மிரட்டல் விடுக்கிறார். அது யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விசாரணையில் திருட்டு போன செல்போனில் இருந்து உதித் நாராயணுக்கு மிரட்டல் கால்கள் வந்தது தெரிய வந்தது.
அந்த செல்போன் எண் உதித் நாராயணின் பாதுகாவலரின் பெயரில் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது ஒரு மாதத்திற்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தன் செல்போன் திருடு போனதாக கூறினார்.
மிரட்டல் அழைப்புகளை அடுத்து உதித் நாராயண் வீடு இருக்கும் பகுதியை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தை ராணா டகுபதி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.
எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் முதன்முறையாக தயாரிக்கிறது. தற்போது தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார்.

தற்போது படக்குழு படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. 2020-ம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம், விஜய் சந்தர் இயக்கும் சங்கத் தமிழன், மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24ஆம் புலிகேசி படம் கைவிடப்பட்டதாகவும், ஷங்கருக்கு இதற்கான நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார்.

இதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் நடிக்க பட அதிபர் சங்கம் தடை விதித்தது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்து ஷங்கரின் நஷ்டத்தை ஈடுகட்டுவதாக வடிவேல் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இதைத்தொடர்ந்து வடிவேல் மீதான தடை நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 24-ம் புலிகேசி படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாறன் இயக்கத்தில் ஆதிக் மாறன், ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா, நடிப்பில் உருவாகும் ’பச்சை விளக்கு’ படத்தின் முன்னோட்டம்.
சிவாஜி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் பச்சை விளக்கு. இதே தலைப்பில் ஒரு படம் உருவாகி உள்ளது. டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம், ‘பச்சை விளக்கு’. விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை விளக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், டாக்டர் மாறன்.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் ஆதிக் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ் தீஷா, தாரா ஆகியோருடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
தமிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டாரான அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்துக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை:
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தாலும், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு மற்றும் சமையல் என பல்வேறு துறைகளில் அஜித் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் அஜித் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த யூஏஈ மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.
இதையடுத்து சமீப காலமாக அஜித் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் 2019ம் ஆண்டுக்கான மாநில துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதன்படியே அஜித் சென்னை ரைபில் கிளப் சார்பில் 25 மீட்டர் பிரிவில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்டார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தாலும், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு மற்றும் சமையல் என பல்வேறு துறைகளில் அஜித் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் அஜித் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த யூஏஈ மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.
இதையடுத்து சமீப காலமாக அஜித் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் 2019ம் ஆண்டுக்கான மாநில துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதன்படியே அஜித் சென்னை ரைபில் கிளப் சார்பில் 25 மீட்டர் பிரிவில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்டார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தொரட்டி பட நடிகை சத்தியகலா, தான் மாயமாகவில்லை, வீட்டில் தான் உள்ளேன் என போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் ஷமன் மித்ரு. இவர் தொரட்டி என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். இந்த படத்தில் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த சத்திய கலா (26) என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 2-ந் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் பட தயாரிப்பாளர் ஷமன் மித்ரு பட ரிலீஸ் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அதில் நடிகை சத்தியகலா கலந்து கொள்ளவில்லை. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி போலீசாருக்கு கடந்த 25-ந் தேதி ஷமன் மித்ரு தபால் மூலம் புகார் அனுப்பினார். இதனை தொடர்ந்து கடந்த 29-ந் தேதி பொள்ளாச்சி போலீசார் புகார் மனு சி.எஸ்.ஆர். வழங்கி சத்திய கலா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சத்திய கலாவின் பெற்றோர் எங்கள் மகள் இங்கு தான் உள்ளார். அவர் எங்கும் மாயமாகவில்லை என தெரிவித்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷமன் மித்ரு சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்டு உள்ள சத்திய கலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தந்தையின் கட்டுப்பாட்டில் தானே நடிகை உள்ளார். அவரை மீட்க கோரி மனுதாரர் எப்படி வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பினர். பின்னர் சத்திய கலா தற்போது எங்கே உள்ளார்? என்று போலீஸ் தரப்பில் வருகிற 5-ந் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து பொள்ளாச்சி போலீசார் நடிகை வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகை சத்திய கலா வீட்டில் தான் இருந்தார். அவர் போலீசாரிடம், ”நான் மாயமாகவில்லை. எனது வீட்டில் தான் உள்ளேன். கருத்து வேறுபாடு காரணமாக தான் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு செல்லவில்லை” என பதில் அளித்தார்.
நடிகையின் விளக்கத்தை பொள்ளாச்சி போலீசார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். சம்பளம் தொடர்பாக நடிகைக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை இருந்து வருவதாகவும், அதனால் தான் நடிகை சத்திய கலா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் இசை அமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 8-ம்தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது AK 60 என்று தற்காலிமாக பெயர் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஏ.ஆர்.ரகுமானை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிந்து 37 நாட்கள் ஆகியும் இதுவரை ஓட்டுகள் எண்ணப்படவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் நாசர், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. மொத்தம் 1,604 பேர் ஓட்டுபோட்டனர். தபால் வாக்கு சீட்டுகள் தாமதமாக சென்றதால் வெளியூர்களில் இருந்த ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களிக்க இயலவில்லை.
தேர்தலை எதிர்த்து 62 உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்ததால் ஓட்டுகளை எண்ணுவதை கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதனால் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தல் முடிந்து 37 நாட்களாகியும் இதுவரை ஓட்டுகள் எண்ணப்படவில்லை.

இதனால் நடிகர் சங்க பணிகள் முடங்கி உள்ளன. சம்பள பிரச்சினை குறித்து நடிகர், நடிகைகளால் சங்கத்தில் புகார் அளிக்க முடியவில்லை என்று மூத்த நடிகர் ஒருவர் கூறினார். நடிகர் சங்க கட்டிட வேலையிலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஓட்டு பெட்டிகளை வைத்துள்ள வங்கிக்கு ஏற்கனவே 15 நாட்களுக்கு ரூ.50 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது ஓட்டுகளை எண்ணுவது பற்றிய முடிவை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுகள் எண்ணப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதும் உடனடியாக பொதுக்குழு கூட்டப்படும். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.






