என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஓட்டுக்கள் எண்ணாமல் இருப்பதால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கியுள்ளது.
நாசர், விஷாலின் பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதிய தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ந்தேதி நடத்தப்பட்டு கோர்ட்டு உத்தரவினால் 2 மாதங்களாக ஓட்டுகளை எண்ணாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கி உள்ளன.
4 மாடியில் தயாராகும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு ஏற்கனவே ரூ.30 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர். தற்போது 4-வது மாடியில் மேற்கூரை அமைக்கும் பணியும் உள்பூச்சு மற்றும் உள் அலங்கார வேலைகளும் பாக்கி உள்ளன. இவற்றுக்கு மேலும் ரூ.15 கோடி வரை தேவைப்படும் என்கின்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றதும் நட்சத்திர கலைவிழா நடத்தி கட்டிட பணிக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவோம் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ஏற்கனவே வங்கி இருப்பில் இருந்த தொகை செலவாகி விட்டதால், கட்டிட பணியை தொடர பணம் இல்லை என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மூத்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் சுமார் 600 பேருக்கு மாதம்தோறும் பென்சன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்க தற்போது பணம் இல்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் வைபவ், பல்லக் லல்வாணி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிக்சர்’ படத்தின் முன்னோட்டம்.
வால்மேட் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஶ்ரீதர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சிக்சர்’. வைபவ் கதைநாயகானக நடித்திருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லல்வாணி நாயகியாக நடிக்கிறார். ராதாரவி, சதீஷ், ராமர், இளவரசு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஏ.ஜே, ஶ்ரீரன்சனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை பிஜி.முத்தையா கையாள, ஜோமின் படத்தொகுப்பு செய்துள்ளார். இரவு நேரங்களில் கண் தெரியாத இளைஞனின் வாழ்வை காமெடியாக சொல்லும் திரைக்கதையில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 30ல் ரிலீஸாக உள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது.
தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி இப்படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என்று பெயர் வைத்து டைட்டில் புரமோ வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகையர் திலகம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படம் உருவாகி வருவதால் படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கைதி’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த அம்மு அபிராமி, அடுத்ததாக காட்டுவாசி பெண்ணாக நடித்து வருகிறார்.
ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அம்மு அபிராமி. அடுத்து தனுசுடன் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து வினோத் கிஷன் ஜோடியாக அடவி என்ற படத்தில் நடித்துள்ளார்.
வினோத் கிஷன் நான் மகான் அல்ல படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர். திருடா திருடி, ஆழ்வார், கிங் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரமேஷ்.ஜி எழுதி இயக்குகிறார். ஸ்ரீகிருஷ் பிக்சர்ஸ் சார்பாக சாம்பசிவம் தயாரிக்கிறார். படம் பற்றி ரமேஷ்.ஜி கூறியதாவது:-

‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும் அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வத்தை படத்தின் திருப்புமுனைக்கு பயன்படுத்தியுள்ளோம். சரத் ஜடா இசையமைத்துள்ளார்’. இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், தெலுங்கில் பிரபல நடிகருக்கு ஜோடியாக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அவரை தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகப்படுத்த கடந்த சில வருடமாக இயக்குனர்கள் பலரும் முயன்றனர். ஆனால் இந்தி படத்தில் மட்டுமே அறிமுகமாவேன் என்ற அவர், அதேபோல் அங்கு தடக் படம் மூலம் நடிகை ஆனார்.
அதற்கு பிறகு எதிர்பார்த்த வகையில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. மீண்டும் ஒரு இந்தி படத்திலேயே அவர் நடித்து வருகிறார். இதனால் தென்னிந்திய சினிமாவிலும் கால் பதிக்க அவர் காத்திருக்கிறார். ஆனால் பெரிய படமாக இருந்தால் மட்டுமே நடிப்பது என்றும் அவர் முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தனக்கு பிடித்த நடிகர் என ஜான்வி கூறியிருந்தார். டியர் காம்ரேட் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை புரி ஜெகன்னாத் இயக்குகிறார். இந்த படத்தை புரி ஜெகன்னாத்தின் காதலியும் நடிகையுமான சார்மி தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சு நடக்கிறது.
விஜய் தேவரகொண்டா படம் என்பதால் இதில் ஜான்வி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ். சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். பல கதைகளை எழுதியுள்ளேன். கடந்த 2014-2016-ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன். அதில், பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார்.
இந்த கதையை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினேன். அவர் கதையை கேட்டு மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அவருக்கு நேரம் இல்லை என்பதால், திரையுலகில் உயர்ந்த இடத்துக்கு வருவாய் என்று என்னை வாழ்த்தினார்.
இதன்பின்னர் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இந்த கதையை விரிவாக கூறினேன். அவர் கதையை நன்றாக உள் வாங்கிக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

இந்த நிலையில், என்னுடைய சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான விளம்பரம் டி.வி. சேனல்களில் அண்மையில் வெளியானது.
அதில் நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடு குறித்தும், விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளிக்கிறார். என்னுடைய கதையை தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த காப்பான் படத்தை இம்மாதம் (ஆகஸ்டு) இறுதி நாளில் வெளியிட உள்ளனர். எனவே, காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் மணிவாசகம் ஆஜராகி வாதிட்டார். எதிர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஹேமா சீனிவாசன், சங்கர் கிருஷ்ணமூர்த்தி, இந்த படம் ஆகஸ்டு மாதம் வெளியாகவில்லை.
செப்டம்பர் 20-ந்தேதி தான் படம் வெளியாக உள்ளது. அதனால், இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டாம்’ என்று வாதிட்டனர்.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா, எல்லைகளை தாண்டிவிட்டது என்று கூறியிருக்கிறார்.
காஜல் அகர்வால் அடுத்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் நடித்துவருகிறார். ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படங்கள் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘’இந்தியன் 2’வுக்காக செப்டம்பரில் என் பகுதி படப்பிடிப்பு இருக்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். படத்துக்காக களரி பயிற்சியைத் தொடர வேண்டும். குதிரை ஏற்றமும் கற்று வருகிறேன். இதில் நான் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹாலிவுட் படமாக இருந்தாலும் நிறைய இந்தியத்தன்மை அதில் இருக்கும்.

சர்வதேச அளவில் எல்லோரையும் சென்றடையும். சகோதரர்களுக்குள் நடக்கும் இந்தக் கதை நிஜமாக நடந்தது. இந்தப் படம் மாண்டரின், காண்டனீஸ், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. மாநில மொழிகள் என்கிற வரையறைகளை, எல்லைகளை எல்லாம் சினிமா தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன்.
இணையத்தின் வளர்ச்சியால் எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கின்றனர். ஒரு படத்தின் கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் மொழி இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. சத்தீஸ்கரில் கூட என் படம் பார்த்து பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய்யும், விஜய் சேதுபதியும் தீபாவளி தினத்தில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்து மோத இருக்கிறார்கள்.
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.
விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் கதை சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். சித்தார்த், ரகுல்பிரித் சிங், பிரியா பவானிசங்கர், வித்யூத் ஜமால் ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்தியன்-2 படத்தின் கதை கசிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.
சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர் யூடியூப் சேனலில் அரசியல்வாதிகள் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. வெளிநாட்டில் இருக்கும் வயதான கமல்ஹாசன் அந்த யூடியூப் சேனலை பார்த்து கொதிக்கிறார்.

ஊழல் அரசியல்வாதிகளை களையெடுக்கும் நோக்கோடு விமானம் ஏறி சென்னைக்கு வருகிறார். இறந்துபோன மனைவியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சித்தார்த்தை சந்திக்கிறார். அவரிடம் இருந்து ஊழல் செய்து சொத்து குவித்த அரசியல்வாதிகள் பட்டியலை பெறுகிறார்.
பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார். அவருக்கு சித்தார்த்தும் வர்ம கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கிறார்கள். அரசியல்வாதிகள் வர்மகலையால் கொல்லப்படுவதை பார்த்து போலீசார் அதிர்கிறார்கள். கமலை பிடிக்க வலை விரிக்கிறார்கள். அவர் சிக்கினாரா? என்பது கிளைமாக்ஸ்.
இந்த கதை வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இது இந்தியன்-2 கதைதானா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
புவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் முன்னோட்டம்.
'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் புவன் நல்லான். இவர் அடுத்ததாக 'ஜாம்பி' என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தை 'எஸ்3' பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமாரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ பேபி’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ தெலுங்கு ரீமேக்கில் மட்டுமே நடித்து வந்தார். வேறு எந்தவொரு புதிய படத்திலுமே அவர் ஒப்பந்தமாகவில்லை.
இது குறித்து விசாரித்த போது, அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது தெரிந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் சென்னையில் தான் நடைபெற்று வருகிறது.

இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். மேலும், ‘96’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பையும்
எப்போதோ முடித்துவிட்டாராம் சமந்தா. இந்த வெப் சீரிஸ் தனக்கு புதியதோர் பரிமாணத்தைக் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன்
இருக்கிறார். ஆகையால் வெப் சீரிஸ் பணிகளை முடித்துவிட்டுத் தான் புதிய படத்துக்கான கதை கேட்கும் பணிகளைத் தொடங்கவுள்ளார்.






