என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கைதி படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 

    ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கைதி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. 

    கைதி பட போஸ்டர்

    ஏற்கனவே, தீபாவளிக்கு விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் பிகில் படம் ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்திற்கு போட்டியாக கைதி படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நயன்தாரா விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் அடுத்து ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. 

    ‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாரா படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். மிலிந்த் ராவ் 7 ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை இயக்கினார். 2010-ல் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது. 

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    அதன் பிறகு சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகிய ‘அவள்’ என்னும் திகில் திரைப்படத்தை இயக்கினார் மிலிந்த் ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை கலக்கி வரும் நடிகை ரம்யா பாண்டியன், அழைப்பு வந்தால் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயார் என தெரிவித்துள்ளார்.
    ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. போட்டோ ஷூட் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் பேட்டியளித்துள்ளார். 

    அதில் கூறியிருப்பதாவது:- ’நான் அதிகம் புடவையில் போட்டோஷுட் செய்தது இல்லை. இப்போதுதான் செய்து இருக்கிறேன். ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன். ஒரு வித்தியாசம் காட்டத் தான் இந்த போட்டோ ஷுட் செய்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. 

    ரம்யா பாண்டியன்

    பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்தால் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அந்நிகழ்ச்சியில் ஷெரின், தர்‌ஷன் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர். விரைவில் எனது அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். 5-ம் வகுப்பில் தனக்கு முதல் காதல் புரபோஷல் வந்ததாக தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன், இதுவரை யாரும் என்னிடம் நேரில் காதல் சொன்னதில்லை என்றார்.
    இந்தியில் முன்னணி நடிகையாக விளங்கும் வித்யா பாலன், தமிழில் நடிக்காததற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    இந்தியில் முன்னணி நடிகையாக விளங்குபவர் வித்யா பாலன். தென் இந்திய நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தி டர்ட்டி பிக்சரில்’ நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து இருந்தார். அவரது இந்தி படமான மி‌ஷன் மங்களும் கடந்த 15-ந்தேதி வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில் ஒரு பேட்டியில், தன்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் வித்யா பாலன். வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தொடக்கத்தில் நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். சில நாட்கள் அந்த படத்தில் நடிக்கவும் செய்தேன். திடீரென ஒரு நாள் அந்த படத்தில் இருந்து என்னை தூக்கிவிட்டனர்.

    இதனால் நானும் எனது பெற்றோரும் கவலை அடைந்தோம். தயாரிப்பாளரிடம் சென்று என்னை நீக்கியதற்கான காரணத்தை கேட்டோம். படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எனது பெற்றோரிடம் காண்பித்து ‘உங்கள் மகள் ஹீரோயின் மாதிரியா இருக்கிறாள்’ என கேட்டார். மேலும் என்னை ஹீரோயினாக போடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், இயக்குனரின் கட்டாயத்தால் தான் என்னை ஹீரோயினான ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் கூறினார்.

    வித்யாபாலன்

    இதை கேட்டதும் என்னை மிகவும் அசிங்கமானவளாக நான் உணர்ந்தேன். பல மாதங்கள் கண்ணாடி பார்க்காமல் இருந்தேன். அந்த தயாரிப்பாளரை நான் எனது வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன். இன்று நான் எப்படி இருக்கிறேனோ, அதை நேசிக்கிறேன். இதேபோல் மற்றொரு தமிழ் படத்தில் நடித்த அனுபவமும் உண்டு. இப்போது இருப்பது போல் எல்லாம் அப்போது வசதிகள் கிடையாது. 

    ஒருவர் போன் மூலம் என்னை தன்னுடைய படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். ஒரு நாள் தான் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அவர் என்னிடம் நடந்து கொண்டவிதம் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அந்த பட தயாரிப்பாளர் என்னைச் சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். 

    ஆனால் அவர் ‘நிறைய பேச வேண்டும். தனியறைக்கு போவோம்‘ என்று தனியறைக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். அறைக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன். வெறும் ஐந்து நிமிடத்தில் கிளம்பி சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதற்காக அவர்கள் எனக்கு வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பினார்கள்.

    இவ்வாறு வித்யா பாலன் கூறியுள்ளார்.
    சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “சாஹோ” படத்தின் முன்னோட்டம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் “சாஹோ”. இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஸ்ரொப், நெய்ல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணீலா கிஷோர், பிரகாஷ் பெலாவாடி, எவெலின் ஷர்மா, சுப்ரீத் லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டின்னு ஆனந்த் மாறும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    பிரபாஸ்


    கென்னி பாட்ஸ், பெங் ழங், திலிப் சுப்புராயன், ஸ்டன்ட் சில்வா, பாப் பிரவுன் மற்றும் ராம்-லக்ஷ்மன் இப்படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிடிங் செய்துள்ளார். சாபு சீரில் தயாரிப்பு மேற்பார்வை பார்த்துள்ளார்.  கமலக்கண்ணன் விஷுவல் எபக்ட்ஸ் செய்துள்ளார். வைபாவி மெர்ச்சன்ட் மற்றும் ராஜு சுந்தரம் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

    இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சுஜீத் அவர்கள். பிரம்மாண்டமான பொருட்செலவில் “சாஹோ” படத்தை யு.வி.கிரியேஷன்ஸ் சார்பாக வம்ஷி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.
    நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி படங்களை இயக்கிய ரமணா சந்திரசேகர், தன்னிடம் போக்குவரத்து போலீசார் தரக்குறைவாக பேசியதாக புகார் கூறியுள்ளார்.
    நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரமணா சந்திரசேகர். போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகநூலில் ரமணா கூறியிருப்பதாவது:-

    ‘கண்ணியம் மிக்க காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. பல நேர்மையான மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருங்கிய நட்பும் உண்டு.

    ஆனால் இன்று நான் சந்தித்த உதவி ஆய்வாளர்கள் இருவர் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருத தகுதியற்றவர்கள்.

    நான், என் மனைவி, மகளுடன் காரில் சென்ற போது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை அபராதம் விதித்துக் கொண்டிருந்தது. சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை அங்கிருந்த காவலர் வழிமறித்து நிறுத்தச்சொல்லி விதியை மீறி திரும்பியதாக அபராதம் கட்ட சொன்னார்.

    விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசென்சை காண்பிக்கச்சொல்லி அபராதம் விதித்துக் கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.

    அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.

    போக்குவரத்து போலீசார்

    அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    கேன்சரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல் துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் பேசியது வேதனைக் குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட...

    அதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் ராமரிடம், பாதியிலேயே சாவப் போறவனயெல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன் என்றார். இன்னொரு உதவி ஆய்வாளர் உண்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.

    அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக் கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசன்ஸ் அந்த கண்ணிய மற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயன்றேன். என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போக வேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூறினாள். மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்.

    ஆனால் அந்த குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன் படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்தார். என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராதத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள்.

    அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தால் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.

    அரசாங்கத்தின் விதி முறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதாபி மானமற்ற மோசமான செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை.

    குறிப்பாக கேன்சர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவார் என்றால் சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது. உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொண்டிருக்கும் எங்களைப்போன்ற கேன்சர் போராளிகளிள் யாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை.

    ஆனால், இவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. பாதியில் சாகப்போகிறவன் என்று கண்ணியமில்லாத வார்தைகளில் சராசரி மனிதர்களிடம் அதிகாரத்திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம். செய்வார்களா...?

    இவ்வாறு டைரக்டர் ரமணா தனது பதிவில் கூறியுள்ளார். காவல் துறையினரின் படங்களையும் அதில் வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடையே இன்று காலை போக்குவரத்து போலீசார் சார்பில் உதவி கமி‌ஷனர் ஒருவரும், பெண் போலீஸ் ஒருவரும் டைரக்டர் ரமணாவை சந்தித்து நடந்த சம்பவங்களை விசாரித்ததாகவும் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
    ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக நடிகை நிலா வீடியோ வெளியிட்டு புகார் கூறியுள்ளார்.
    அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிலா. தனது நிஜப்பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் இந்தியில் நடித்து வருகிறார். மீரா சோப்ரா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார்.

    மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிவதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

    அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில் புழு ஒன்று நெளிந்து செல்வதும் வீடியோவில் தெரிகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில்தான் இப்படி புழுக்கள் நெளிவதாக மீரா சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

    நடிகை நிலா

    அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தபோது அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

    இதுபோன்ற ஓட்டல்களில் தங்கி அதிக கட்டணத்தை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் புழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக இந்த ஓட்டலில் தங்கியிருக்கிறேன். இங்கு வந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லை. அதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    இலியானாவும் அவரது காதலர் ஆண்ட்ரூவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி இருப்பதால் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாகவும் சுற்றி வந்தார்கள்.

    இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இலியானா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு ஆண்ட்ரூவ் தவறாமல் வந்து விடுவார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. 

    இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் பெரும்பாலானவை ஆண்ட்ரூவால் கிளிக் செய்யப்பட்டவையாகும். மேலும் இலியானா அடிக்கடி தனது தலைப்புகள் மூலம் அவரை 'கணவன்' என்று குறிப்பிட்டு வந்தார்.

    இலியானா, ஆண்ட்ரூ

    இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.
    தமிழில் ஐ, 2.0 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை எமி ஜாக்சன், தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று கூறியிருக்கிறார்.
    மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்திருந்தார்.

    அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    எமி கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் அரை நிர்வாணம், யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

    தற்போது எமி தனக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று எமி ஜாக்சன் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.
    தமிழ், தெலுங்கி, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தினார்கள் என்றார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தியில் கவனம் செலுத்துகிறார். அமிதாப்பச்சனுடன் நடித்து வசூல் குவித்த ‘பிங்க்’ தமிழில் அஜித்குமார் நடிக்க ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

    “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் 2, 3 தென்னிந்திய மொழி படங்களில் நடித்தேன். அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. உடனே என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி விட்டனர். எனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவமாக அதை பார்க்கிறேன். கதை எழுதியது நான் இல்லை. படம் எடுத்ததும் நான் இல்லை. ஆனாலும் படம் ஓடாததற்கு என்மீது பழி போட்டனர்.

    டாப்சி

    நான் நடித்து ஓடாத அந்த 3 படங்களிலும் மூன்று பாடல்கள் நாலைந்து காட்சிகளில்தான் நடித்து இருந்தேன். பெரிய தயாரிப்பாளர் பெரிய இயக்குனர் என்ற காரணத்தினால் அந்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படங்களில் நடித்தது எனது தவறுதான். ஆனால் படங்கள் ஓடாததற்கு காரணம் நான் என்று பழியை என் மீது சுமத்தியது சரியல்ல.

    இந்தியில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு போனேன். அங்கு என்னை ஆறாவது வரிசையில் உட்கார வைத்தனர். முன் வரிசையில் உட்கார அருகதை எனக்கு இல்லை என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை. ஒரு இந்தி படத்தில் நடித்தபோது நீதான் மோசமான தேர்வு என்று இயக்குனர் திட்டினார். இதுதான் எனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள்.”

    இவ்வாறு டாப்சி கூறினார்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற தலைப்பை மாற்ற மாட்டேன் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
    இந்தியில் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கண்சிமிட்டல் பிரபலமான பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் பிரியா வாரியர் தன்னை ஸ்ரீதேவி என்று அறிமுகப்படுத்துகிறார். சிகரெட் பிடிக்கிறார். மது அருந்துகிறார். குளியல் தொட்டியில் ஒரு பெண் பிணமாக கிடப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது.

    நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையையும் துபாய் ஓட்டலில் குளியல் தொட்டியில் அவர் மரணம் அடைந்த சம்பவத்தையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினருக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் நோட்டீசு அனுப்பி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனை ஏற்க படக்குழுவினர் மறுத்து விட்டனர்.

    ஸ்ரீதேவி பங்களா

    படத்தின் இயக்குனர் பிரசாந்த் மாம்புலி கூறும்போது, “ஒரு நடிகை லண்டனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் அவருக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது கதை. படத்தை பார்த்த பிறகு ஸ்ரீதேவி கதையா இல்லையா என்பதை முடிவு செய்யட்டும். தலைப்பை மாற்ற மாட்டேன்” என்றார்.

    படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில் படத்தை தடை செய்யும்படி கோர்ட்டில் வழக்கு தொடர போனிகபூர் முடிவு செய்து இருக்கிறார். இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர்வார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
    அரசியல் கட்சி ஒன்றில் சேரப்போவதாக கூறப்பட்ட நிலையில், தான் எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
    மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் ராஷ்டிரீய சமாஜ் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் அந்த கட்சியின் தலைவரும், மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை மந்திரியுமான மகாதேவ் ஜன்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் நடக்க உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் வழங்கும்படி பா.ஜனதாவிடம் கேட்கப்பட்டு உள்ளது.

    மேலும் ராஷ்டிரிய சமாஜ் கட்சியை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ம் தேதி எங்கள் கட்சியில் இணைவார்” என்று தெரிவித்தார்.

    சஞ்சய் தத்

    ஆனால் இந்த தகவலை சஞ்சய் தத் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன். மகாதேவ் ஜன்கர் எனது அன்பு நண்பர் மற்றும் என்னுடைய சகோதரர் போன்றவர். அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.
    ×