என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு அவரது தாய் ஷோபா எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமா இயக்குனராகவும், தாய் ஷோபா சந்திரசேகர் பாடகியாகவும் உள்ளனர். விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- "ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானு கோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.

நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசை போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது. அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில், இயங்குகையில் என் ஆழ்மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.
நீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெரு வெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்?
சுருங்கக்கூறின் எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்...”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுசி ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் உருவாகி வரும் 'தேடு' படத்தின் முன்னோட்டம்.
கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படம் 'தேடு'. சஞ்சய் கதாநாயகனாக நடிக்க, 'உறுதிகொள், வீராபுரம்' ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சிவகாசி முருகேசன், விஜய் டிவி 'கலக்கப் போவது யாரு' புகழ் பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பை கவனிக்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத டி.ஜே.கோபிநாத் இசையமைத்துள்ளார்.

மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்பி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் கிளைமாக்சை படக்குழு திடீரென மாற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.வி. சிந்துவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அருந்ததி, ஒஸ்தி, தேவி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி. சிந்துவின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு ‘சிந்து’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசி வருகிறார்கள். அவர் சம்மதிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதையை ஏற்கனவே தயார் செய்து விட்டனர். இப்போது பி.வி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் கிளைமாக்சை மாற்றுகின்றனர்.
இதுகுறித்து சோனுசூட் கூறும்போது, “சிந்துவின் வாழ்க்கை கதையின் திரைக்கதை வசனத்தை ஏற்கனவே எழுதி முடித்து விட்டோம். இப்போது உலக சாம்பியன் பட்டத்தை சிந்து வென்று இருப்பதால், ஏற்கனவே வைத்திருந்த கிளைமாக்சை மாற்றி புதிய கிளைமாக்ஸ் வைக்க இருக்கிறோம். சிந்து வாழ்க்கையை படமாக்குவது சவால் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மீண்டும் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.
ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளிவந்தன. இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்து காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட்டனர்.

இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி ஜெய்ப்பூரில் உள்ள பின்க் நகரில் தற்போது நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் கார் அருகே நிற்கிறார். அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் 2 வாரங்கள் இதே ஊரில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது. அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பளித்துள்ளார்.

ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டலின் பாடும் திறனை உலகறியச் செய்த ஹிமேஷ் ரேஷ்மியாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ஹிமேஷ் ரேஷ்மியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ரனு மண்டலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்துள்ளதாகவும், மேலும் அவர் அடுத்ததாக நடித்துவரும் தபங் 3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தனது 64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை அணுகியதாக கூறப்படுகிறது.

எனினும் கால்சீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக "பேட்ட" திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் 460 படங்கள் திரைக்கு வராமலேயே இருப்பதாக இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கே.மகேந்திரன் இயக்கத்தில் அபிஷேக், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ள படம் ‘தண்டகன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘சினிமா ஆளுமையுள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிட கூடாது. தமிழ் சினிமாவில் 460 படங்கள் திரைக்கு வராமலேயே இருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கில் பணம் தேங்கியுள்ளது. சினிமாவில் அதிக வருமானம் பெறக்கூடிய கதாநாயகர்கள் ஒன்றுபட்டு திரைத்துறையை காக்க முன்வர வேண்டும்’ என்று கூறினார்.
சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் கூறும்போது, ‘ அரசு தலையிட்டு சிறிய முதலீட்டு படங்களுக்கு 100 திரையரங்குகளை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 1000 பேரோடு சேர்ந்து ஊர்வலமாக சென்று அரசுக்கு மனு அளிக்க உள்ளோம்’ என்று கூறினார்.
மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதை பிரபல நடிகர் உறுதி செய்துள்ளார்.
செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் மலையாள தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர் இதனை உறுதி செய்தார்.
கவுஷிக் ராமலிங்கம் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஜீ.வி.பிரகாஷ், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஐங்கரன், சிவப்பு மஞ்சள் பச்சை, 100 சதவீதம் காதல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. மேலும் அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் என கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ள ஜீ.வி.பிரகாஷ், புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பெயர் சூட்டப்படாத இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ.வி.பிரகாஷூடன் ‘செம’ ’எனக்கு இன்னோரு பெயர் இருக்கு’, 'குப்பத்து ராஜா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த கவுஷிக் ராமலிங்கம் இயக்கும் இப்படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்,’ ’றெக்க,’ ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை. படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீராமிதுன் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற இவர் மீது அழகிப் போட்டியை நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீராமிதுன், பின்னர் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்படி பல்வேறு பிரச்சினைகளில் பேசப்படும் நபராக மாறிய மீராமிதுன், நண்பர் ஒருவருடன் போனில் பேசிய ஆடீயோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், தொழில் அதிபருமான எழும்பூரைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீனை கொலை செய்யும் எண்ணத்தில் அவர் பேசுவது போன்ற பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன. ஜோ மைக்கேலின் கை, கால்களை உடைத்து 6 மாதம் படுத்த படுக்கையாக இருக்க வைத்து விடுவோமா? இல்லை கொலை செய்து விடுவோமா? என்று தனது நண்பரிடம் மீராமிதுன் போனில் கேட்கும் இந்த ஆடியோவே இப்போது அவருக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

மீரா மிதுனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட ஜோ மைக்கேல் பிரவீன் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் “ஈவன் மேனேஜ்மெண்ட்” என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 14-ந்தேதி இவரது அலுவலகத்துக்கு சென்ற மீராமிதுனின் மானேஜர் வெங்கட் சி.டி. ஒன்றை கொடுத்துள்ளார். அதில் மீராமிதுன், வெங்கட், டோனி தினேஷ் ஆகியோரிடம் பேசும் விவரங்கள் இடம் பெற்றுள்ளது. ஜோ மைக்கேலின் உயிருக்கு சேதம் விளைவிக்காமல், கை, கால்களை உடைக்க வேண்டும் என்று பேசும் மீராமிதுன், ஜோ மைக்கேலின் தாய், மனைவி, பிள்ளைகளை கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற பேச்சும் சி.டி.யில் இடம் பெற்றுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்தே ஜோ மைக்கேல் கடந்த 16-ந்தேதி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்துள்ளார். மீராமிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி போலீஸ் கூறும்போது, “கொலை மிரட்டல் புகாரின் பேரில் சம்மன் அனுப்பி மீராமிதுனிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதன் பிறகே அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்” என்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கைதி படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கைதி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

ஏற்கனவே, தீபாவளிக்கு விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் பிகில் படம் ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்திற்கு போட்டியாக கைதி படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் அடுத்து ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாரா படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். மிலிந்த் ராவ் 7 ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை இயக்கினார். 2010-ல் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது.

அதன் பிறகு சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகிய ‘அவள்’ என்னும் திகில் திரைப்படத்தை இயக்கினார் மிலிந்த் ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






