என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாகவும், அதனை கவுதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்தி படமான 'அந்தாதுன்' திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. இந்த படம் 'தி பியானோ டியூனர்' என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாகும். 

    விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

    பிரசாந்த், கவுதம் மேனன், ஆயுஷ்மன் குரானா

    இந்த நிலையில், இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் தியாகராஜன், அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் என தெரிவித்திருந்தார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அண்ணன் சத்தியநாராயணாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
    நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் பெயர் சத்தியநாராயணா. இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியநாராயணாவுக்கு மூட்டு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு அவருக்கு டாக்டர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார். இந்த நிலையில் அண்ணன் சத்தியநாராயணாவை பார்க்க நேற்று நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்தார். பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவர் தனது அண்ணன் சத்தியநாராயணாவை பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    சத்தியநாராயணாவிடம் நலம் விசாரித்த ரஜினி

    முன்னதாக, மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஊழியர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் அவருடன் சேர்ந்து ‘செல்பி’ எடுக்க முயன்றனர். பலர் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இதனால் அவர்களுக்குள் லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாவலர்கள், நடிகர் ரஜினிகாந்தை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது.
    அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது. 

    தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். 

    வாஜ்பாய்

    இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடக்கிறது. வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’, கார்த்தியின் ‘கைதி’ படங்கள் வெளியாவது உறுதியானதால், பிகில் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது.



    இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தீபாவளி தினத்தில் ‘பிகில்’ திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
    அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
    தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

    தனுஷ் பேசும்போது, ‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. நான் நடிப்பதற்கு வெற்றிமாறன் நிறைய கண்டெண்ட் கொடுப்பார். 

    இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது. வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. 

    அசுரன் படக்குழுவினர்

    கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி பிரகாஷோடு வேலை பார்ப்பது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். 
    வடசென்னை படம் தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் அசுரன் தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும். வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது" என்றார்.
    அமேசான் காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், காடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நடிகை சிம்ரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காட்டு பகுதிக்குள் மட்டும் 9 நாடுகள் அடங்கியிருக்கிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நடிகை சிம்ரன் இதுகுறித்து கவலை தெரிவித்திருக்கிறார். 

    அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பூமிப்பந்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதை உடனே அணைக்க வேண்டும். பூமிப்பந்தை காப்பாற்ற நம்மால் வேறென்ன செய்ய முடியும். உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.

    சிம்ரன்

    ஆனால் அந்த காடு தீப்பற்றி எரிவதுபற்றி எந்த ஊடகமும் வெளிப்படுத்த வில்லை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் விதம் இந்த தகவலை எடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இது மிக முக்கிய விஷயம். ஆரோக்கியமாகவும், பொறுப்புடனும் வாழ வேண்டியது அவசியம்’ என குறிப்பிட்டுள்ளார்.
    பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளிவந்திருக்கும் அபிராமி, அஜித்திடம் மறுபடியும் பேச முடியுமா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
    அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இதில் முக்கியமான வேடத்தில் அபிராமி நடித்திருந்தார். படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். 

    தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர் அபிராமி நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு தளத்தில் அஜித் உடனான அனுபவங்களையும் கூறியுள்ளார். 

    அஜித், அபிராமி

    அவர் கூறியிருப்பதாவது: ‘படப்பிடிப்பில் எங்களின் முழு கவனமும் அஜித் மீதே இருக்கும். அவர் அதை பார்த்து விடுவார். பேசும் போதே அடிக்கடி ஜி ஜி என்று சொல்லுவார். எதற்கு ஜின்னு சொல்றீங்க. பேசாம அபிராமின்னு கூப்பிடுங்கன்னு சொன்னேன்.

    அதற்கு அவரோ, மரியாதை எல்லாருக்கும் கொடுக்கணும் என்று சொல்வார். அஜித்திடம் மறுபடியும் பேச முடியுமா என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.
    தெலுங்கில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்.
    ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் வரிசை கட்டி வந்தன. பின்னர் அது குறைந்தது. பாகுபலி பட வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உருவாகி இருக்கிறது. பெரிய செலவில் இந்த படங்கள் உருவாகின்றன.

    அந்த வகையில் 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதிஷ் திவாரி - ரவி, உதய்வார் இணைந்து இயக்குகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மூன்று மொழியை சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

    நயன்தாரா, தீபிகா படுகோனே

    ராமர் மற்றும் சீதை வேடங்களில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும். ஹிருத்திக் ஒப்புக்கொள்ளாவிட்டால் ராமர் வேடத்துக்கு பிரபாசை நடிக்க வைக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

    ஏற்கனவே தெலுங்கில் உருவான ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நயன்தாரா சீதை வேடம் ஏற்று நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது தீபிகா சீதையாக நடிக்க இருக்கிறார்.
    இந்தி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.
    இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவரை ஒரு பாடலில் நடிக்க பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திற்காக கேட்டு இருக்கிறார்கள். இந்த பாடலில் படுகவர்ச்சியாக ஜாக்குலின் நடிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

    இதற்கு சம்மதிக்க ஜாக்குலின் பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். சாஹோவில் பிரபாசுடன் பேட் பாய் எனத்தொடங்கும் பாடலில் ஜாக்குலின் நடித்திருக்கிறார். இந்த பாடல் காட்சிக்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

    பிரபாஸ், ஜாக்குலின்

    இந்தி சினிமா வியாபாரத்தை குறி வைத்தே இதில் ஒரு பாடலுக்கு ஜாக்குலினை நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
    யோகிபாபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பப்பி படத்தின் தயாரிப்பாளருக்கு நித்யானந்தா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    யோகி பாபு நடிக்கும் படம் பப்பி. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் படத்துடன் இணைந்து நித்யானந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இதற்கு சிவசேனா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா அமைப்பின், மாநில துணைச் செயலாளர் செல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நித்யானந்தா சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கு வக்கீல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நித்யானந்தாவை ஆபாச நடிகருடன் இணைத்து சித்தரித்திருப்பது அவரது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. தயாரிப்பாளர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். 

    பப்பி பட போஸ்டர்

    நித்யானந்தா உலகம் முழுவதும் அறியப்பட்ட ஆன்மீக குரு, அவரது யூடியூப் தளத்தில் 53 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். 27 உலக மொழிகளில் 300க்கும் அதிகமான புத்தகங்களை எழுதி உள்ளார்.

    தணிக்கைத் துறை விதிகளின்படி ஒருவரை பற்றி காட்சிகள் வைக்கும் போது அது குறித்து சம்பந்தப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்தோ தடையில்லா சான்றிதழ் வாங்கவேண்டும். ஆனால் அப்படியான எந்த சான்றிதழும் நித்யானந்தா தரப்பில் வழங்கப்படவில்லை.” இவ்வாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    சமூகத்தில் இத்தனை ஆண்டுகாலமாக நித்யானந்தா கட்டியமைத்த அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் படக்குழு செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வில்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சினிமாவை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது, அவை வெறும் கற்பனையே என மாணவிகளுக்கு திரிஷா அறிவுரை வழங்கினார்.
    நடிகை திரிஷா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு திரிஷா பதில் அளித்தார். 

    அவர் கூறியதாவது:- பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    திரிஷா

    2014-ம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிராக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்ற கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கோமாளி படத்திற்குப் பிறகு தனது 25ஆவது படத்தில் ஜெயம் ரவி லக்‌ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நித்தி அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தில் டி இமான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் தனது 26ஆவது படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். 

    டாப்சி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி இணைந்துள்ளார். ஏற்கெனவே பல விளம்பர படங்களில் நடித்துள்ள அவர், இந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

    எல்நாஸ் நொரோஷி, ஜெயம் ரவி

    தற்போது முதன்முறையாக தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. ரகுமான் பங்கேற்பது உறுதியானால் அவரது இசையில் ஜெயம் ரவி நடிக்கும் முதல் படம் இதுவாக அமையும்.
    ×