என் மலர்
சினிமா செய்திகள்
அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி இருவரையும் என் உடலில் இருந்து பிரிக்க முடியாது என்று நடிகர் பிரபாஸ் பேட்டியில் கூறியிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படம் மூலம் உலகளவில் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் தற்போது ‘சாஹோ’ திரைப்படம் உருவாகியுள்ளது.
'சாஹோ' படத்தின் விளம்பரத்துக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் பிரபாஸ். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் பாகுபலி 3 சாத்தியமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரபாஸ், "ராஜமவுலி 3-வது பாகம் எடுக்க நினைத்தால் அதற்கு அவர் ஆர்வத்துடன் செயல்படுவார். அவர் என்னிடம் இதுவரை 6 கதைகளைத் தான் கூறியுள்ளார். அப்படியென்றால் அவரிடம் 10-14 கதைகள் இருக்கும். ஐந்து வருடங்களாக ஒரு கதையை மனதில் வைத்திருந்தார் என்பது தெரியும். ஆனால் பாகுபலி 3, சாத்தியமா, இல்லையா? என்று தெரியாது. அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி கதாபாத்திரங்களை என் உடலில் இருந்து பிரிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நடித்த நிகிஷா படேல், தற்போது நீச்சலுடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்த நிகிஷா படேலுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் பாண்டிமுனி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குனருடன், நிகிஷா பங்கேற்றார். ஆனால் திடீர் என்று அந்த படத்தில் இருந்து நிகிஷா நீக்கப்பட்டார். புதிய படம் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிகிஷா, சமூகவலைதளங்களில் அதற்கான வலை வீசி வருகிறார்.

மும்பை வீட்டில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த நிகிஷா துருக்கி சென்றுள்ளார். கடற்கரை பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து என்னைப் பார் என் அழகைப்பார் என்று கமென்ட் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் கமென்ட் போட்டு வருகின்றனர். சினிமாவில் உங்களை மீண்டும் எப்போது பார்ப்பது என்று பலர் கேட்டிருக்கின்றனர்.

வைபவ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சிக்சர்’ படத்தின் தயாரிப்பாளருக்கு நடிகர் கவுண்டமணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வைபவ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சிக்சர்’. அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ள இப்படத்தை டிரெண்ட் ஆர்ட்ஸ், வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார்கள். பல்லக் லால்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் வைபவ் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை காமெடியாக உருவாக்கி இருக்கிறார்கள். இதே போல் கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி ‘சின்னதம்பி’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்சர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்குமார், தன்னுடைய மகள் அனோஷ்காவிற்காக திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அஜித்தின் கதாபாத்திரம் அவரது மகள் அனோஷ்காவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இனிமேல் பெண்களுக்கு எதிராக ஒரு கேலி, கிண்டல் காட்சிகூட தனது படங்களில் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் அஜித்.
மேலும், சமீபத்தில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படமும் பெண்கள் மத்தியில் தனக்கு மிகவும் நற்பெயரை உண்டாக்கியிருப்பதை அறிந்திருக்கிறார் அஜித். ஆகையால், பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல் காட்சிகள் வேண்டாம் என்பதை தன் இயக்குநர்களிடம் கறாராகவே கூறிவிடுகிறார் அஜித்.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காகத் தயாராகி வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வழக்கமாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ கெட்டப்பில் வரும் அஜித், இந்த படத்தில் முழுக்க இளமைத் தோற்றத்தோடு வர இருக்கிறார். இது அவரது ரசிகர்களை இன்னும் கொண்டாட வைக்கும் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.
மொழி மாறினாலும் நடிப்பு மாறாது, தன் காதல் நடிப்பு மீதானது என தனுஷின் பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.
‘அசுரன்’ படத்தை முடித்துவிட்டு, துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சில நாட்களுக்கு முன்பு, பாண்டிச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 'கொடி' படத்துக்குப் பிறகு இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ்.
வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்துக்குப் பிறகு 'பட்டாஸ்' படத்தில் நடித்துள்ளார் மெஹ்ரீன். இறுதி கட்ட பணிகள் முடித்து, டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதில் தனுஷுடன் நடித்தது குறித்து மெஹ்ரீனிடம் கேட்ட போது, "நிறைய அனுபவம் உள்ள நடிகர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. தனுஷ் அருமையான நடிகர். எந்தவிதமான காட்சியானாலும், ஒரே டேக்கில் நடித்துவிடுகிறார். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன். எனக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாது.
அதனால், வசனங்களை மனப்பாடம் செய்துதான் பேசுகிறேன். என் காதல் நடிப்பு மீதானது. மொழி மாறினாலும் நடிப்பு மாறாது. எந்த மொழியில் நடிப்பதும் எனக்குப் பிடிக்கும். நடிகர்கள் அந்தந்த மொழிகளைக் கற்பது அவசியம். தெலுங்கு கற்றுள்ளேன். தமிழில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், விரைவில் தமிழும் கற்பேன்’’ என்று தெரிவித்தார்.
வெங்கி நிலா இயக்கத்தில் ரத்தன் மௌலி, மஞ்சு தீக்ஷித் நடிப்பில் உருவாகி வரும் ‘மல்லி’ படத்தின் முன்னோட்டம்.
முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “. வெங்கி நிலா இயக்கும் இப்படத்தில் ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மேலும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வில்லனாக ஜெ.வி.ஆர் நடித்துள்ளார்.
தாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பஷீர் இசையமைத்துள்ளார். சிதம்பரநாதன், பாண்டிதுரை ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பி.எஸ்.வாசு எடிட்டிங்கை கவனிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள்.அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.

மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? - எப்படி? - அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவு பதில் சொல்லும்.
முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாச கோணத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. மல்லி விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது” என்றார்
அசுரன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், பல தயாரிப்பாளர்கள் சம்பளமே தராமல் ஏமாற்றுவதாக கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் படம் ’அசுரன்’. கலைப் புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது தனுஷ் அளித்த பேட்டி வருமாறு:- தயாரிப்பாளர் தாணு சார் கிட்ட, ‘வெற்றிதான் இந்தப் படத்தை இயக்கப்போறார்’னு சொன்னதும், அவர் கதைகூட கேட்காமல் ஓகே சொல்லிட்டார்.

இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவே பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பிக்கும் முன்பே தாணு சார் எனக்கு முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார். அந்த நேரத்தில் அது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதற்கு என்றைக்குமே நான் நன்றியோடு இருப்பேன். படம் கண்டிப்பாக வந்து பல அதிசயங்கள் செய்யும் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் விளங்கிய கலைஞானத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் ரூ.1 கோடியில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் விளங்கியவர் கலைஞானம். கலைஞானத்துக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் பிரபலமான நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகுமார் பேசியபோது, கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, ’அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு பாருங்கள். 10 நாட்களுக்குள் பணத்தை தருகிறேன்’ என்று கூறினார்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை தேடிப்பிடித்ததகாவும், ரஜினி மொத்த பணத்தையும் அளித்து அந்த வீட்டை கலைஞானத்துக்கு பெற்று கொடுத்துள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் விசாரித்தால் வீடு தேடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வருகிறது. ரஜினி இந்த வீட்டுக்காக 1 கோடி ரூபாய் கூட கொடுக்க தயார் என்று கூறியதாகவும் சொல்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கலைஞானம் கூறுகையில், ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பரந்த மனதை வெளிப்படுத்துகின்றது, என்று பாராட்டினார்.
ஏற்கனவே ரஜினி நடித்து பெரிய வசூலை பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் தன் லாபத்தில் ஒரு பங்கை கலைஞானத்துக்கு அளித்து அவரது வாழ்வை சரிவிலிருந்து மீட்டார். அந்த படத்தில் வந்த லாபத்தை நலிவடைந்த 7 சினிமா பிரபலங்களுக்கு பிரித்து அளித்தார்.
செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடயே பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னை நம்புங்கள் அடுத்தது வெறித்தனம் பாடல் தான். இந்த செப்டம்பர் மாதம் முழுவதுமே பிகில் அப்டேட் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும்“ என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாகவும், அதனை கவுதம் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்தி படமான 'அந்தாதுன்' திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. இந்த படம் 'தி பியானோ டியூனர்' என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாகும்.
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் தியாகராஜன், அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் என தெரிவித்திருந்தார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அண்ணன் சத்தியநாராயணாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் பெயர் சத்தியநாராயணா. இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியநாராயணாவுக்கு மூட்டு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார். இந்த நிலையில் அண்ணன் சத்தியநாராயணாவை பார்க்க நேற்று நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்தார். பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவர் தனது அண்ணன் சத்தியநாராயணாவை பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

முன்னதாக, மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஊழியர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் அவருடன் சேர்ந்து ‘செல்பி’ எடுக்க முயன்றனர். பலர் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இதனால் அவர்களுக்குள் லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாவலர்கள், நடிகர் ரஜினிகாந்தை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது.
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது.
தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடக்கிறது. வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






