என் மலர்
சினிமா செய்திகள்
வாமனன் படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியா ஆனந்த், தற்போது எப்படி பட்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
வாமனன் படம் மூலம் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். ஆதித்ய வர்மா மற்றும் சுமோ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சென்னை படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் கொசுவலை போன்ற உடை அணிந்து ஓவர் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ``ஏனோதானோனு நிறைய படங்கள் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. எது வொர்க் அவுட் ஆகும் ஆகாதுனு என்னால கணிக்க முடியுது. ஆரம்ப காலங்களில் சில காரணங்களுக்காக எனக்கு வரும் எல்லா படங்களுக்கும் ஓகே சொல்லியிருக்கேன்.

நான் எவ்ளோ இடைவெளி விட்டு படம் பண்ணாலும் மக்கள் என்னை என்கரேஜ் பண்றாங்க. அதை `எல்.கே.ஜி’ படத்துல உணர்ந்தேன். ரெண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்ல `எல்.கே.ஜி’ படத்துல நடிச்சேன். அதுக்கு எனக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து தியேட்டர்ல கண்கலங்கிட்டேன். நிறைய பெரிய நடிகர்கள் கூட நடிச்சாத்தான் இந்த மாதிரி ரெஸ்பான்ஸ் இருக்கும். ஆனா,
எனக்கு அது எதுவும் இல்லாமல் இந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது ரொம்ப சந்தோசம். அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணாதான் ஹீரோயின்னு கிடையாது. பேமிலி ஆடியன்சுக்குப் பிடிக்கிற மாதிரி தரமான படங்கள்ல மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றார்.
சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குற்றாலீஸ்வரன், நடிகர் அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.
குற்றால ரமேஷ் என்கிற குற்றாலீஸ்வரன் இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.
தற்போது நடிகர் அஜித்குமாரை சந்தித்துள்ள குற்றாலீஸ்வரன், “தலயுடன் நம்பமுடியாத ஒரு மாலை. நான் உங்கள் பெரிய ரசிகன் என்று தல சொல்லும்போது, இந்த மனிதனின் எளிமை என்னை அசரடித்துவிட்டது. விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்“ என்று குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
இதனால், அஜித்குமார் குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டுத்துறை சம்பந்தமாக ஏதோ பயிற்சி மையம் அல்லது திட்டத்தைத் தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழில் பல படங்களில் நடித்து வரும் அபி சரவணன், மலேசியாவில் நடந்த விழாவில் சிறந்த சமூக சேவை நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார்.
பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராக இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டார் அபி சரவணன்.
மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில், தனது நண்பர்களுடனும் மற்றும் அசாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனது சொந்த செலவில் அபி சரவணன் வழங்கினார்.

இந்நிகழ்விற்காக தற்போது மலேசியாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அபி சரவணனுக்கு சிறந்த சமூக சேவை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 130 விருதுகளில் இந்தியாவில் இருந்து 6 விருதுகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒருவராக அபி சரவணனுக்கு கிடைத்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஜய் நடிப்பில் தற்போது ‘பிகில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. அட்லீ இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தை அடுத்து ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்கள்.

தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஏப்ரம் 2020ல் படத்தை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
பக்ரீத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில், தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி என்று விக்ராந்த் கூறியிருக்கிறார்.
நடிகர் விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்திருந்தார். மேலும் பேபி ஸ்ருதிகா, ரோகித் பதாக், மோக்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். முருகராஜ் தயாரித்திருந்த இப்படத்தை ஜெகதீசன் சுபு இயக்கியுள்ளார்.
மனிதர்களுக்கும், விலங்குகளும் இடையே இருக்கும் பாசத்தை உணர்த்தும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஒட்டகத்தை மையமாக வைத்து வெளியான முதல் படம் இது.
#bakrid#gratitudeforever thanks to each and everyone from the bottom of my heart. #blessed#cantaskformore 🙏🏻🙏🏻 pic.twitter.com/xCbHyNtK3N
— Vikranth Santhosh (@vikranth_offl) August 25, 2019
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக படத்தை பார்த்த அனைவரும் விக்ராந்தை நடிப்பை பற்றி பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விக்ராந்த், ‘பக்ரீத் படத்திற்கு பத்திரிகையாளர்கள், மக்கள் என அனைவரும் என்னையும் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி. மேலும் மேலும் முயற்சி செய்வதற்கும், முன்னாடி செல்வதற்கான தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்தத்துக்கு நன்றி’ என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் மீது போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகி வருகிறது. இப்படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
கே.பி.செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார்.

இயக்குனர் அட்லீயின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி.பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள். இயக்குனர் அட்லீயின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.
வழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.
2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடயே கடன் பிரச்சனை தீர்ந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 6-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ரிலீசாக உள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் சைரா நரசிம்மா ரெட்டி படம் அக்டோபர் 2ந்தேதி ரிலீசாகிறது. சுதந்திர போராட்ட வீரரின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் குறிப்பிட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார்.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் அனுஷ்கா வருகிறார். படத்தின் கதைப்படி அவர் ஜான்சி ராணி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில் ஜான்சி ராணியின் வேடம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சிரஞ்சீவிக்கு உதவும் வேடத்தில் அனுஷ்கா வருகிறாராம்.
மோத்தி.பா இயக்கத்தில் விக்கி ஆத்தியா, வைசாக், ஹரிணி நடிப்பில் உருவாகி இருக்கும் “கோலா“ படத்தின் முன்னோட்டம்.
மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் “கோலா“. மோத்தி.பா இயக்கியுள்ள இப்படத்தில் விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ஹரிணி நடித்துள்ளார். மேலும் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தான லக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கமில் ஜே.அலெக்ஸ்; இசை - கண்மணி ராஜா; பின்னணி இசை - எஸ்.எம்.பிரஷாந்த்; பாடல்கள் - காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா; கலை - ராம்ஜி; எடிட்டிங் - தீபக்; நடனம் - ராதிகா; தயாரிப்பு மேற்பார்வை - லினா மோத்தி, எம்.எல்.பிஸ்மி; தயாரிப்பு - மோத்தி முகமது; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மோத்தி.பா.

படம் பற்றி மோத்தி.பா கூறியதாவது:- போதை இந்த ரெண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு பணக்கார போதை, அதிகார போதை, பெண் போதை, மது போதை, கடைசியாக புகழ் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ் போதைக்கு ஆசைப்படுகிறான்.
அதை அனுபவிக்கவும் செய்கிறான்.உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தை தேடிச்சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். இவ்வாறு அவர் கூறினார்.
புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது என படவிழாவில் பாக்யராஜ் பேசினார்.
மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கோலா'. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், கஞ்சா அடிப்பவர்களை நடுரோட்டில் வச்சு வெட்டணும் என்று கூறினார்.
இதையடுத்து இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், “நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லா வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ருனு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன்.

லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே, ஆனால் இப்படி இருக்கோமே என்று, அன்று தான் தோன்றியது. புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி, கிஷோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மெய் படத்தின் விமர்சனம்.
நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார். தந்தையின் நண்பரான ஜார்ஜ் வீட்டில் தங்கி அவரது மெடிக்கல் ஷாப்பில் உதவியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மெடிக்கல் ரெப். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஐஸ்வர்யா விபத்தில் அடிபட்ட சார்லியை காப்பாற்ற நிக்கி காரில் பயணிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாகிறது.
இன்னொரு பக்கம் உடல் உறுப்புகளுக்காக நபர்களை கடத்தி கொல்லும் மாபியா செயல்படுகிறது. சார்லியின் மகள் மர்மமான முறையில் காணாமல் போகிறார். நிக்கியின் நண்பரை கொல்லும் அந்த மருத்துவ மாபியா அந்த பழியை நிக்கி மீது போடுகிறது. இந்த மர்மங்களின் பின்னணியை நிக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. அன்றாடம் நாம் படிக்கும், கடந்துசெல்லும் மருத்துவ குற்ற சம்பவங்களை இணைத்து விறுவிறுப்பான படத்தை இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கொடுத்துள்ளார்.

நிக்கி சுந்தரம் தானே தயாரிப்பாளராக இருந்தாலும் கூட தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து சபாஷ் வாங்குகிறார். படத்தின் எந்த காட்சியிலும் அவர் நாயகனாக தெரியாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே தெரிகிறார். கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாநாயகர்கள் வரிசையில் இணைந்த நிக்கி சுந்தரத்துக்கு பாராட்டுகள். அமெரிக்காவில் இருந்து வந்து இந்தியாவின் நிலையை பார்த்து வருத்தப்படும்போதும், தன்மீது விழுந்த பழியை துடைக்கவும் நண்பனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும்போதும் கவர்கிறார். இதேபோல் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி கதாநாயகன் ஆகிவிடலாம்.

அதற்கான திறமை பளிச்சிடுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத மெடிகல் ரெப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ். உதவும் மனப்பான்மை, மேனேஜரிடம் சிக்கி பொய் பேசுவது, நிக்கிக்கு உதவுவது என்று சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். கிஷோர், சார்லி, ஈ.ராம்தாஸ் மூவருமே தங்களது குணச்சித்திர நடிப்பால் படத்தை தாங்கி பிடித்துள்ளனர். டைகர் தங்கதுரை, மதன் கோபால், ஜார்ஜ் கூட்டணி படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்துகிறது. அஜய் கோஷ், அரோல் சங்கர், அபிஷேக் கூட்டணி இயல்பான வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்கள். பிருத்வி குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்.
இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். அனில் ஜான்சன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. பிரீத்தி மோகனின் படத்தொகுப்பு கச்சிதம். மருத்துவ துறையில் முக்கியமாக உடல் உறுப்பு தானம் விஷயத்தில் நடக்கும் குற்றங்களை பின்னணிகளுடன் தெளிவாக விளக்கி உள்ளது மெய்.

படம் பேசும் கருத்தும் மிகவும் முக்கியமானதும் அவசியமனாதும் கூட. உண்மை சம்பவங்களை கோர்த்து விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக்கிய எஸ்.ஏ.பாஸ்கரனுக்கு பாராட்டுகள். அவருக்கு துணையாக இருந்து கதை, வசனம் எழுதிய செந்தா முருகேசனுக்கும் பாராட்டுகள். இரண்டாம் பாதி முழுக்கவே கிளைமாக்ஸ் போல விறுவிறுப்பாக செல்கிறது.
மொத்தத்தில் ’மெய்’ மருத்துவத் துறையின் மறுபக்கம்.
ரஜினியின் எளிமை தன்னை வியக்க வைத்ததாக ‘தர்பார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. மும்பையில் பலத்த மழை பெய்ததால், படப்பிடிப்பை ஜெய்ப்பூருக்கு மாற்றியது படக்குழு. ரஜினி நடித்த ‘தளபதி’ படத்துக்குப் பிறகு, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.
‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் ஆச்சரியகரமான அன்பும் பிரகாசமும் ரஜினி சாரிடம் உள்ளது. அனைவரையும் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அவர் சரிசமமாக நடத்துவது உண்மையில் பிரமிக்க வைக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் படப்பிடிப்புக்கு வந்த துணை நடிகர்கள் பலரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது.






