search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காப்பான் படத்தில் சூர்யா
    X
    காப்பான் படத்தில் சூர்யா

    காப்பான் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.

    சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ். சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறேன். பல கதைகளை எழுதியுள்ளேன். கடந்த 2014-2016-ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன். அதில், பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார்.

    இந்த கதையை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினேன். அவர் கதையை கேட்டு மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அவருக்கு நேரம் இல்லை என்பதால், திரையுலகில் உயர்ந்த இடத்துக்கு வருவாய் என்று என்னை வாழ்த்தினார்.

    இதன்பின்னர் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இந்த கதையை விரிவாக கூறினேன். அவர் கதையை நன்றாக உள் வாங்கிக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

    காப்பான்

    இந்த நிலையில், என்னுடைய சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கான விளம்பரம் டி.வி. சேனல்களில் அண்மையில் வெளியானது.

    அதில் நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடு குறித்தும், விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளிக்கிறார். என்னுடைய கதையை தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த காப்பான் படத்தை இம்மாதம் (ஆகஸ்டு) இறுதி நாளில் வெளியிட உள்ளனர். எனவே, காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் மணிவாசகம் ஆஜராகி வாதிட்டார். எதிர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஹேமா சீனிவாசன், சங்கர் கிருஷ்ணமூர்த்தி, இந்த படம் ஆகஸ்டு மாதம் வெளியாகவில்லை.

    செப்டம்பர் 20-ந்தேதி தான் படம் வெளியாக உள்ளது. அதனால், இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டாம்’ என்று வாதிட்டனர்.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 4-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். 
    Next Story
    ×