என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட போன்ற படங்களில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரஜினி 168 படக்குழு

    90களில் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த எஜமான், முத்து, படையப்பா ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவா, ரஜினிக்கும் அப்படி ஒரு திரைக்கதையை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
    வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
    தமிழில் ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப் பயலே, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா நடித்து 2011–ல் வெளியாகி வசூல் குவித்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ரசிகர்கள் வற்புறுத்தினர்.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு கூறும்போது மங்காத்தா–2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2–ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார். சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமாரையும் நேரில் சந்தித்தும் பேசினார்.

    அஜித்குமார், போனிகபூர்

    தற்போது மங்காத்தா 2–ம் பாகத்துக்கான கதையை வெங்கட் பிரபு தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனிகபூரும், வெங்கட் பிரபுவும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது மங்காத்தா 2–ம் பாகம் கதையை வெங்கட்பிரபு சொன்னதாகவும் கதை பிடித்துள்ளதால் அஜித்குமாரை வைத்து அந்த படத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

    நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இன்னொரு படத்தை தயாரிக்கும் பணியில் போனிகபூர் ஈடுபட்டு உள்ளார். இந்த படத்தை முடித்து விட்டு மங்காத்தா 2–ம் பாகத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். விஜய், விக்ரம், ஜெயம் ரவி, விஷால், தனுஷ் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

    கடைசியாக சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் வந்தார். கடந்த வருடம் ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரே கோசேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அரவிந்தசாமியுடன் 'நரகாசுரன்' என்ற படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். 

    இந்த நிலையில் மும்பையில் தர்பார் படப்பிடிப்பு நடந்த அரங்கில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை வைத்து தர்பார் படத்தில் ஸ்ரேயா சில காட்சிகளில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது. 

    தர்பார் பட போஸ்டர்

    ஆனாலும் தர்பார் படத்தில் ஸ்ரேயா நடிப்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. மரியாதை நிமித்தமாகவே ரஜினியை அவர் சந்தித்துள்ளார் என்றும் பேசப்படுகிறது. தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் தர்பார் திரைக்கு வருகிறது. 
    புகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் காலமானார். மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
    மங்களூரு:

    மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூரில் 1949ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிறந்தார். கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்ற இவர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார். 

    கத்ரி கோபால்நாத்தின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு 2004ல் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் மேதை கத்ரி கோபால்நாத்துக்கு தமிழக அரசும் கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் சக்ரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார். கே.பாலசந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார் கத்ரி கோபால்நாத். 

    கத்ரி கோபால்நாத்

    டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ருத்ரேசு மகந்தப்பாவுடன் இணைந்து 2005-ல் கின்ஸ்மென் இசைத்தொகுப்பை வெளியிட்டார். ஜாஸ்புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஜேம்சுடன் இணைந்து சதர்ன் பிரதர்ஸ் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகாந்த் இசையமைப்பாளராக உள்ளார். மணிகாந்த் கத்ரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். 
    மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு மலையாளத்தில் சினிமாவாக உருவாகிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் ஏற்கனவே பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் கேரளாவை உலுக்கிய சயனைடு கொலைகள் சினிமா படமாகிறது. அங்குள்ள கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாய் கிராமத்தை சேர்ந்த ஜாலி தாமஸ் என்ற பெண், கணவர் ராய் தாமசுடன் வாழ பிடிக்காமல் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து குடும்பத்தையே தீர்த்து கட்டி உள்ளார். 

    முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றார். தொடர்ந்து மாமனார் டாம் தாமஸ், கணவர் ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ, கள்ளக்காதலன் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகியோரை கொன்று விட்டு 2017–ல் சாஜுவை திருமணம் செய்து கொண்டார். சொத்துகளையும் தனது பெயருக்கு எழுதிக் கொண்டார். ஜாலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

    மோகன்லால்

    இந்த சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் 2 படங்கள் தயாராகின்றன. ஒரு படத்தை திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கொலைகள் குறித்து விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இன்னொரு படத்தை ரோனேக்ஸ் பிலிப் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘கொலபாத கண்களூ டே ஒன்னா பத்தி தண்டு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் டினி டேனியல், சயனைடு கொலைகள் செய்த ஜாலி வேடத்தில் நடிக்கிறார்.
    களவாணி படத்தை தொடர்ந்து விமல் நடிப்பில் உருவாக இருக்கும் சோழ நாட்டான் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை நடிக்க இருக்கிறார்.
    களவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் "சோழ நாட்டான்". இப்படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கார்ரொன்யா கேத்ரின் நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் தெலுங்கில் நாயகியாக 4 படங்களில் நடித்துள்ளார். அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது, ‘எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்லா இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன்.

    கார்ரொன்யா கேத்ரின்

    இந்த படம் எனக்கு நல்ல வரவேற்பை தரும். தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன்’ என்றார். 
    தமிழில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் போதைக்கு அடிமையாக இருந்து சிகிச்சை பெற்றேன் என்று கூறியிருக்கிறார்.
    நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்த சுருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.

    இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

    சுருதி ஹாசன்

    இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் சுருதிஹாசன். இந்நிலையில் சினிமாவில் ஒதுங்கி இருந்தது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன்,

    ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.
    சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

    டப்பிங் பேசும் ஹரிஷ் கல்யாண்

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது அடுத்த கட்டமாக டப்பிங் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளார்கள். விரைவில் இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாக இருக்கிறது.
    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் காசோலையை நடிகர் சூர்யா நன்கொடையாக வழங்கியுள்ளார்.
    சூர்யா நடிப்பில் தற்போது காப்பான் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கிய இப்படத்தில் இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தை அடுத்து சுதா கங்கோரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    சூர்யா - ஆர்.வி.உதயகுமார்

    இந்நிலையில், நடிகர் சூர்யா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார் பெற்றுக் கொண்டார்.
    தமிழ், மலையாள சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்த ஷோபனா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
    தமிழ், மலையாள சினிமாவில் மிக சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஷோபனா. இயல்பிலேயே நடனம் கற்றவர் என்பதால் தனது முகபாவத்தில், கண்கள் அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி, தனது நாட்டிய பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 

    ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார் ஷோபனா. இவர் நடிக்கும் படத்தை துல்கர் சல்மான், தயாரிப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியுடன் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷோபனா இணைந்து நடிக்கிறார். 

    ஷோபனா - சுரேஷ் கோபி

    இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக சந்திரமுகியில் பிரபு ஜோதிகா கதாபாத்திரங்களை அதன் ஒரிஜினலான மணிச்சித்ரதாழ் படத்தில் நடித்தவர்கள் இந்த ஜோடி தான்.
    கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன் என்று நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    சாய் பல்லவி நடிப்பில் மே மாதம் என்.ஜி.கே படம் வெளியானது. தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து சாய் பல்லவி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். 

    நான் இயல்பாகவும் யதார்த்தமாகவும் நடிப்பதாக பலர் பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகையாக எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது. ஒரு கதையை கொடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீ நடிக்க போகிறாய் என்று சொன்னால் அந்த கதை முழுவதையும் படிப்பேன். அப்போதே கதாபாத்திரமாக மாறி விடுவேன். பின்னர் அதோடு ஒன்றி போய் நடிப்பேன். 

    சாய் பல்லவி

    எனது நடிப்பை யார் பாராட்டினாலும் அதற்கு காரணம் நான் தான் என்று மொத்த பலனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு படம் எப்படி தயாராக நூற்றுக்கணக்கானோரின் கஷ்டமும் உழைப்பும் இருக்கிறது. திரையில் மட்டும் என்னைப் போன்ற நடிகைகளையும், நடிகர்களையும் பார்க்கிறார்கள். எங்களுக்கு பின்னால் உழைப்பவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பது இல்லை. எல்லா பெருமையும் எங்களுக்குத்தான் வந்து சேர்கிறது. எனக்கு கிடைக்கும் பெயருக்கு பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நான் மறக்காமல் அவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன்.’’ என்று கூறியுள்ளார்.
    அசுரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் என்று நடிகர் தனுஷை தயாரிப்பாளர் தாணு பாராட்டியுள்ளார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் திரையுலக வாழ்க்கையில் அவருடைய மிகப்பெரிய வெற்றிப் படமாக 'அசுரன்' தான் வசூல் ரீதியில் இருக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக 'அசுரன்' தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- ’இந்த படத்தின் மையப்புள்ளியை இயக்குநர் வெற்றிமாறன் என்னிடம் விவரிக்கும்போதே, படம் பெரிய வெற்றியடையும் என உறுதியாக நம்பினேன். அதற்கு கட்டியம் கூறுவது மாதிரி இந்த வெற்றியும் அமைந்துள்ளது. நாங்கள் அனைத்து வகைகளிலும் போற்றி, பாராட்டி மகிழ்கிறோம். வெற்றிமாறனுடைய முழு எண்ணத்துக்கு, உழைப்புக்கு கட்டியம் கூறுவது மாதிரி தனுஷ் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். 

    அசுரன் படத்தில் தனுஷ்

    அவர் படத்துக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்து கொடுத்தார். சமகாலத்தில் ஒரு நடிகர் திலகம் கிடைத்துள்ளார் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம். சிவாஜி சார் இருந்திருந்தால் இந்த பிள்ளையை பார்த்து உச்சி முகர்ந்திருப்பார்" என்று தெரிவித்தார் தாணு. மேலும், 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வசூல்தான் தனுஷ் படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. அதை 'அசுரன்' முறியடிக்குமா என்ற கேள்விக்கு "ஆமாம். உண்மை தான்" என்று பதிலளித்தார்.
    ×