என் மலர்
சினிமா செய்திகள்
பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, பெண்களை சுதந்திரமாக வளருங்கள் என்று பேட்டியளித்துள்ளார்.
விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்திலும், ஹாலிவுட் படமொன்றிலும் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:-
‘பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய அளவில் சாதிப்பார்கள். இந்தியில் திறமையான நடிகைகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் படங்களிலும் முத்திரை பதிப்பார்கள். நான் அதற்கு உதாரணமாக இருக்கிறேன். எனக்கு சிறுவயதிலேயே பெற்றோர் சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர்.

எனக்கு பிடித்த பாடத்தை படித்தேன். சினிமாவில் நடிக்கவும் தடை சொல்லவில்லை. அதனால்தான் உயர முடிந்தது. பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். எல்லோரும் என்னை மாதிரி வர முடியாமல் போகலாம். ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சாதிக்க முடியும். அதற்கு பெற்றோர்களும், திருமணமான பெண்களுக்கு கணவன்மார்களும் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கை பாழாகி விடும் என்ற காலம் மலையேறி விட்டது. சுதந்திரம் கொடுத்தால் எந்த உயரத்துக்கும் அவர்களால் போகமுடியும் என்பதை உலகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது.’’
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.
நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பப்பி’ படத்தின் விமர்சனம்.
கல்லூரி மாணவனாக இருக்கும் நாயகன் வருண், வகுப்பறையில் வீடியோ பார்த்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். வருண் வீட்டிற்கு மேலே குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நண்பர் யோகிபாபுவின் அறிவுரைப்படி சம்யுக்தாவிடம் காதலை சொல்லுகிறார் வருண்.
நாயகியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வருணுக்கு, அந்த சூழ்நிலையும் அமைகிறது. இருவரும் ஒன்றாகி சில நாட்களில் சம்யுக்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்கிறார். வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று நினைக்கும் இவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த வருண், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட், நடனம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க இவரை சுற்றியே கதை நகர்வதால் அதை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். நாய் மீதான செண்டிமெண்ட் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகி சம்யுக்தாவிற்கு பொருப்பான கதாப்பாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். வருணின் நண்பராக வரும் யோகிபாபு படம் முழுவதும் பயணிக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், கண்டிப்பான அப்பாவாக வரும் மாரி முத்து ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

இளைஞர்கள் இளம் பெண்களுடன் பழக ஆசைப்பட்டு, காதல், அதைத் தொடர்ந்து கர்ப்பமாக்குதல், பின்னர் அதை கலைக்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஒரு உயிரை கொல்வது மிகவும் தவறு. இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் ஒரு ஆணும் பெண்ணும் கட்டுப்பாட்டுடன் பழக வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ். இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி விழிப்புணர்வு படமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார்.
தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். தீபக் குமாரின் ஒளிப்பதிவு கலர்ப்புல்லாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பப்பி’ இளைஞர்களுக்கு அறிவுரை.
சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் சாய் சேகர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அருவம்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கிறார். உணவில் கலப்படம் செய்பவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கிறார் சித்தார்த். அதே ஊரியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் நாயகி கேத்ரின் தெரசா. இவருக்கு நுகர்வு சக்தி கிடையாது. இதனால், ஒரு விபத்தில் தாய் இழக்கிறார். சமூக சேவையும் செய்து வரும் கேத்ரின் தெரசாவை சித்தார்த் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், வேலையில் மும்முரமாக இருக்கும் சித்தார்த்தின் செயலால், உணவில் கலப்படம் செய்யும் கபீர் சிங், மதுசூதனன், கந்தகுமார், சில்வா அகியோர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களால் நாயகன் சித்தார்த் கொல்லப்படுகிறார். இறந்த சித்தார்த், காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்குகிறார்.

ஒரு எறும்பு கூட கொல்ல கூடாது என்று குறிக்கோளுடன் இருக்கும் கேத்ரின் தெரசா, வில்லன்களை எப்படி பழி வாங்கினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நேர்மையான கண்டிப்புடன் செயல்படும் அதிகாரியாக நடிப்பில் பளிச்சிடுகிறார். இறந்த பிறகு ஆவியாக வந்து ஸ்கோர் செய்ய முடியவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா முதல் பாதியில் சமூக சேவகியாக மனதில் பதிகிறார். ஆனால், பிற்பாதியில் வில்லன்களை கதாபாத்திரம் அவருக்கு செட் ஆகவில்லை. காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் சதீஷ். குறைந்தளவே பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கபீர் சிங். மதுசூதனன், கந்தகுமார், சில்வா, ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
ரொம்ப பழைய கதையை தூசி தட்டி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சாய் சேகர். படத்தை முழுவதும் பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும். உணவில் கலப்படம் செய்வது மிகப்பெரிய தவறு என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். சிகரெட் பிடிப்பது கேடு என்று சொல்வதை போல, உணவில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால், நாளடையில் பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்கு சென்று விடுவோம் என்பதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். இந்த கருத்துக்கு சித்தார்த் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
தமன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவில் ஏகாம்பரம் கவனிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அருவம்’ சுவாரஸ்யம் குறைவு.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன், தான் ஒருவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
நடிகை லிசி, இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவர் 2 வருடத்துக்கு முன்புதான் நடிக்க வந்தார். ‘ஹலோ’ தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். கல்யாணியும், நடிகர் மோகன்லால் மகன் பிரணவும் சிறுவயது முதலே பழகி வருகின்றனர்.
சிறுவயது நட்பு வாலிப வயசானதும் காதலாக மாறியிருக்கிறது என்று செய்தி பரவுகிறது. பிரணவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கல்யாணி தந்தையும் இயக்குனருமான பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால் இருவரும் உயிர் நண்பர்கள். பிரியதர்ஷன் இயக்கத்தில் பல்வேறு படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். இரண்டு குடும்பத்தினரும் அவ்வளவு நெருக்கும்.

கல்யாணி, பிரணவ் காதலுக்கு இந்த நட்பும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பிரணவ்வை காதலிக்கிறீர்களா? என்று கல்யாணியிடம் கேட்டால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மறைமுக பதில் அளிக்கிறார். அவர் கூறும்போது, ’நான் ஒருவரை காதலிக்கிறேன். எதிர்காலத்தில் அவரை மணப்பேன். எங்கள் குடும்பத்தினருக்கு நான் யாரை காதலிக்கிறேன் என்று தெரியும். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது பெயரையும் மற்ற விவரங்களையும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் தரண், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் தரண். இவர் சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, இசையமைப்பாளர் தரண் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.
ரஜினியை சந்தித்த நிகழ்வு குறித்து இசையமைப்பாளர் தரண் கூறும்போது, ‘இப்போது என்னுள் பரவும் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ரஜினியை சந்திக்க வேண்டுமென்பது என் சிறு வயது முதலான கனவு. நானும் என் மனைவியும் அவரது தீவிர ரசிகர்கள்.
அவரைச் சந்தித்த தருணம் வாழ்வின் உன்னதமான ஒன்றாக அமைந்தது. அவர் வீட்டில் எங்களை உபசரித்த விதம் மறக்க முடியாதது. லதா ரஜினிகாந்த் மேடம் என்னை தங்களின் மகன் போலவே பாவித்தார்கள். அவர் வீட்டில் கிடைத்த நெருக்கமான சந்திப்பு, அவருடன் கழித்த தருணங்கள், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என் வாழ்வின் மறக்கமுடியாத பொன்னான நினைவுகள் என்றார்.
தமிழில் மேகா படம் மூலம் மிகவும் பிரபலமான சிருஷ்டி டாங்கே, கிடைக்கிற வாய்ப்பை நிராக்கரிக்கிற ஆள் நான் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேகா படத்தில் இடம்பெற்ற புத்தம் புதுகாலை பாடல் மூலம் பிரபலமானவர் சிருஷ்டி டாங்கே. அடுத்து டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில காலம் ஒதுங்கி இருந்தவர் பி.லெனின் கதை, திரைக்கதை வசனத்தில் யமுனா ஈவி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் கட்டில் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் சிருஷ்டிக்கு ஒரு குழந்தைக்கு தாய் கதாபாத்திரம்.
கட்டில் படம் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’பேரை வைத்து எதுவும் முடிவு பண்ணிவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படம். ஒரு குடும்ப அமைப்புக்கும் கட்டிலுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால் தான் இந்த பெயர். குடும்பத்துல இருக்குற உறவுமுறைகள், அவங்களுக்கு நடுவுல இருக்குற உணர்வுப் போராட்டங்கள்தான் இந்தப் படம்.

எமோஷனல் டிராமா. உலக சினிமா மாதிரி முயற்சி பண்றோம். நிறைய விருது விழாக்களுக்கு அனுப்புற ஐடியாவோடதான் இந்தப் படம் உருவாகுது. அதே நேரத்தில் கமர்சியல் விஷயங்களும் படத்தில் இருக்கும். படத்துல நான் ஹவுஸ் வைப். பத்து வருஷத்துல முதல் முறையா இப்படியொரு கேரக்டர்ல நடிக்கிறேன். நான் கிடைக்கிற வாய்ப்பை நிராகரிக்கிற ஆள் இல்ல. இதுவரை வந்த எல்லா வாய்ப்புகளிலுமே என்னால என்ன பண்ணமுடியுமோ அதப் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குப் படங்கள்தான் சரியா அமையவில்லை. அந்த குறையை கட்டில் படம் போக்கும்’ என்று கூறினார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கில் பிரபல நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
ரஷ்மிகா மந்தனா, கியரா அத்வானி போன்ற பல இளம் நடிகைகளின் வரவால் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் சற்று ஆட்டம் கண்டு வருகிறது. முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த அவரிடம் தற்போது சில படங்களே கைவசம் இருக்கின்றன.
தற்சமயம் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜலிடம் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க பேசி இருக்கின்றனர். ஆனால் அந்த வாய்ப்பை காஜல் நிராகரித்துள்ளார். அதாவது கதைப்படி படத்தின் படப்பிடிப்பு பெரிய பகுதி கர்நாடகாவின் காட்டுப்பகுதிகளில் நடக்கும் என கூறியுள்ளனர்.

அது தனக்கு பாதுகாப்பாக இருக்காது என சொல்லி காஜல் படத்தை நிராகரித்து விட்டாராம். ஆனால் இதே காரணத்தை சொல்லி நடிகை ராஷி கண்ணாவும் கோபிசந்த் படத்தை நிராகரித்துவிட்டாராம். அதன் காரணமாக படத்திற்கும் தகுந்த ஒரு புதுமுக நடிகையை படக்குழு தேடிகொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங் நடித்த என்.ஜி.கே படம் மே மாதம் திரைக்கு வந்தது. தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்திலும், சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததால்தான் பட வாய்ப்புகள் இல்லை என்று சிலர் பேசுகிறார்கள். சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்துக்கு எனக்கு கிடைத்து விட்டது.
வந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தினேன். அதனால் தோல்வி படங்களிலும் நான் இருக்க வேண்டியது ஆகிவிட்டது. இந்தியில் சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்ததும் தென்னிந்திய படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம். ஆனாலும் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போது கதைகள் தேர்வு செய்வதில் பக்குவமும், முதிர்ச்சியும் வந்து இருக்கிறது.

சும்மா நான்கு பாடல் காட்சிகளில் மட்டும் வந்து விட்டு போவதில் எனக்கு விருப்பம் இல்லை. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தெலுங்கில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளேன். தமிழிலும் பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டேன். இந்தியில் ரன்வீர் சிங்குடனும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடனும் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது.’’
இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும் சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன் எனவும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றி பெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா ரனாவத் நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

கோவையில் நடிகை கங்கனா ரனாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தலைவி திரைப்படத்திற்காக தமிழ் மொழி கற்று வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று நிறைய உள்ளன. ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் உள்ள காட்சிகள் மட்டும் சினிமாவில் இடம் பெற்று இருக்கும் என கூறினார்.
ஹரி அண்ட் ஹரிஷ் இயக்கும் திகில் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் பக்கம் நடிகைகள் பார்வை திரும்பி இருக்கிறது. நயன்தாரா ஏற்கனவே தன்னை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்துள்ளார். அவை வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்துள்ளன. தமன்னா பெட்ரோமாக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அமலாபால் ‘ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அனுஷ்காவும் அருந்ததியில் இருந்து தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் வரிசையில் ஹன்சிகாவும் தன்னை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க கதை கேட்டு வந்தார்.

இப்போது அப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடிக்கிறார். இது பேய் கதை உடன் திகில் படமாக தயாராகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் பேயாக ஹன்சிகா நடித்துள்ளார். புதிய படத்தை ஹரி அண்ட் ஹரிஷ் இயக்குகின்றனர். இவர்கள் அம்புலி, அ, ஜம்புலிங்கம் ஆகிய படங்களை எடுத்தவர்கள்.
இந்த படத்தில் ஹன்சிகாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே 2 இந்தி படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் மூலம் தற்போது தமிழ் பட உலகில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்கி கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
அறிமுக இயக்குநர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி நடிப்பில் உருவாகி இருக்கும் ’பெளவ் பெளவ்’ படத்தின் முன்னோட்டம்.
லண்டன் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.நடராஜன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பெளவ் பெளவ்’. இந்தப் படத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். மார்க் டி மியூஸ் மற்றும் டெனிஸ் வல்லபன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். அறிமுக இயக்குநரான பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது.

தனிமையில் இருக்கும் ஐந்து வயது சிறுவனுக்கும் ஒரு நாய்க்கும் உள்ள அன்பை பற்றி பேசும் இப்படம் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவில் நடைபெற்ற லவ் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த அயல் நாட்டு படத்திற்கான விருதை பெற்றுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற குழந்தைகள் திரைப்படவிழாவில் தொடக்கத் திரைப்படமாகவும்(opening film) திரையிடப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது பெளவ் பெளவ்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகாது என லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜயா புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன் படம் தள்ளிப்போயுள்ளதாக லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






