என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான வடிவேலு, தன்னைப் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

    இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

    இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    வடிவேலு

    ஆனாலும் கமலின் அரசியல் பணிகள், இந்தியன்-2 பட வேலைகள் போன்றவற்றால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘வெப்’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அதை ஏற்று ‘வெப்’ தொடருக்கு மாற வடிவேல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது.

    இதுகுறித்து நடிகர் வடிவேலு கூறும்போது, நான் வெப் சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் படம் தொடர்பான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளிவரும் என்றார். 
    தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் பிரபல நடிகை தங்கையாக நடித்து வருகிறார்.
    தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ரஜினி - கீர்த்தி சுரேஷ்

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
    பாஸ்கர் சீனுவாசன், தானா நாயுடு, கவுசல்யா, பேபி கைலா நடிப்பில் வெளியாகி இருக்கும் கைலா படத்தின் விமர்சனம்.
    கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பங்களா ஒன்றின் வாசல் அருகே தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகின்றன. போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார்கள். தானா நாயுடுவுக்கு மட்டும் அவை கொலைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. 

    குறிப்பாக அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பதும் கொலைகள் எல்லாம் ஒரே தேதியில் தான் நடக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த மர்ம கொலைகளின் ரகசியம் என்ன? தானா நாயுடு யார்? என்பதுதான் படத்தின் கதை.

    கைலா விமர்சனம்

    கதாநாயகிக்கும் வில்லனுக்கும் தான் படத்தில் முக்கியத்துவம். அதை உணர்ந்து நாயகி தானா நாயுடுவும் வில்லனாக நடித்துள்ள இயக்குனர் பாஸ்கர் சீனுவாசனும் நடித்துள்ளனர். 

    கவுசல்யா தனது உணர்வுபூர்வ நடிப்பால் இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறார். பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பரணி செல்வத்தின் ஒளிப்பதிவிலும் ஸ்ரவனின் இசையிலும் படத்துக்கான திகில் கூடுகிறது. 

    கைலா விமர்சனம்

    நல்ல கதைக்களத்தை கையில் எடுத்த பாஸ்கர் சீனுவாசன் இன்னும் வலுவான திரைக்கதையை அமைத்து இருக்கலாம். அதிக லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். வழக்கமான பேய் படங்கள் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கைலா’ திகில் குறைவு. 
    மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. 

    உதயநிதி

    சில காரணங்களால் இப்படம் இந்த மாதம் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    பட விழாவில் கலந்துக் கொண்ட நடிகை திரிஷா, அவரை பார்க்கும் போதெல்லாம் அந்த கேள்வியை அதிகமாக கேட்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் திரிஷா இந்தியிலும் நுழைந்து தனது திறமையை காட்டினார். இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் முதன் முறையாக 'ஹே ஜூட்' என்கிற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார். 

    தற்போது ஜீத்து ஜோசப் - மோகன்லால் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ராம்' என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் துவக்கவிழா பூஜை கொச்சியில் நடைபெற்றது.

    திரிஷா

    இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய திரிஷா, "நான் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அங்கே மோகன்லாலை பார்க்கும்போதெல்லாம் எப்போது நாம் இணைந்து நடிக்கப் போகிறோம் என்கிற கேள்வியையே அதிகமாக கேட்டிருக்கிறேன். இன்று என்னுடைய அந்த கனவு நனவாகியுள்ளது. மோகன்லால், ஜீத்து ஜோசப் என்கிற மிக அருமையான கூட்டணியில் நானும் இணைந்துள்ளது மகிழ்ச்சி" எனக் கூறியுள்ளார்.
    குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த்துக்கு பொய் பிரசாரம் செய்கிறார் என்று காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
    குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தனது டுவிட்டர் பதிவில், “எனக்கும், என் அன்பார்ந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றும் கணக்குகளிலிருந்து டுவிட்டுகள் மூலம் கைது செய்வோம் என்று மிரட்டல் வருகின்றன. சுதந்திரமான தேசத்தில் எங்கள் மனதில் இருப்பதை பேச முயல்கிறோம். அசிங்கமான வார்த்தைகளும், கடுமையான சட்டங்களும் எதிர்ப்புக் குரல்களை நெரிக்க முடியாது. எதிர்ப்பையும் மீறி நாங்கள் நிலைப்போம். ஜெய்ஹிந்த்” என தெரிவித்து இருந்தார்.

    சித்தார்த்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது:-

    சமூக ஊடகத்தில் மக்களைத் தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றால், பொய்யான பிரச்சாரம் எச்சரிக்கப்படும். எல்லா பிரபலங்களும் புத்திசாலிகள். அவர்கள் சொல்வது சரி என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் மீது பொய்மை திணிக்கப்படுகிறது. மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர். கவலைப்படுகின்றனர்.

    சித்தார்த் - காயத்ரி ரகுராம்

    ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவது தவறு. சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை.

    பொய்யான செய்திகள் மூலம் அமைதியைக் கெடுப்பது அல்லது பொது மக்களைத் தொந்தரவு செய்வது, அவர்களைத் தூண்டுவது எல்லாம் கண்டிக்கத்தக்கது. தீவிரமான பொதுப் பிரச்சினையில் பொய் சொல்வதும், மக்களின் அமைதியைக் குலைப்பதும் ஜனநாயகம் அல்ல.

    இந்தச் சட்டம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் சட்ட ரீதியாக ஏதாவது தவறு என்று தெரிந்தால் அதை சட்டரீதியாக நிரூபியுங்கள். அதன் பிறகு அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டலாம். (மக்களுக்கு) உண்மையைச் சொல்லுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சீதா, நிகிலா விமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தம்பி’ படத்தின் விமர்சனம்.
    மேட்டுப்பாளையத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் சத்யராஜ். இவர், தாய் சௌகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா என வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன் 15 வருடத்திற்கு முன்பு காணாமல் போகிறார். இதே சமயம் கோவாவில் பல பேரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் கார்த்தி, நான்தான் காணாமல் போன மகன் என்று சத்யராஜ் வீட்டுக்கு வருகிறார்.

    இங்கு வந்த பிறகு கார்த்தி குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தாலும், அவரை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அது யார்? எதற்கு கொல்ல நினைக்கிறார்கள்? சத்யராஜின் காணாமல் போன மகன் கார்த்தி தானா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தம்பி விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, திருடனாகவும், மகனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். திருடனாக மற்றவர்களை ஏமாற்ற செய்யும் சேட்டைகளும், பெற்றோர் மற்றும் அக்காவின் பாசத்திற்கு ஏங்கும் பரிதாபமான நடிப்பும் நெகிழ வைத்திருக்கிறது. 

    டீச்சராக வரும் ஜோதிகா, கண்டிப்பு, துணிச்சல், பாசம் என தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கிளாமாக்ஸ் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நிகிலா விமல், காதல் காட்சிகளிலும், அப்பா தவறு செய்தவுடன் வருத்தப்படும் காட்சிகளிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

    தம்பி விமர்சனம்

    எம்.எல்.ஏ.வாக வரும் சத்யராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஒரு தந்தை குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பொறுப்புள்ள அப்பாவாக நடிப்பில் பளிச்சிடுகிறார். அமைதியான அம்மாவாக நடித்திருக்கிறார் சீதா. பார்வையிலேயே பேசுகிறார் சௌகார் ஜானகி. இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இந்த வயதிலும் இப்படி நடிக்கிறாரே என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். வழக்கம்போல் அசுரமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார் அம்மு அபிராமி. காமெடியில் கலக்கி இருக்கிறார் அஸ்வந்த். இளவரசு, பாலா, ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    தமிழில் பாபநாசம் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப், தற்போதும் குடும்பங்கள் ரசிக்கும் படி தம்பி படத்தை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் அனைவரிடமும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அதுபோல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. முதல்பாதியின் நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    தம்பி விமர்சனம்

    கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அலட்டல் இல்லாமல் இருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மேட்டுபாளையம் மற்றும் கோவாவின் அழகை கண்முன் நிறுத்துகிறார்.

    மொத்தத்தில் ‘தம்பி’ குடும்பத்தில் ஒருவன்.
    தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடிக்க பிரபல நடிகை மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

    இதற்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு சோனாக்‌ஷி சின்கா மறுத்ததாக கூறப்படுகிறது.

    சோனாக்‌ஷி சின்கா

    சோனாக்‌ஷி சின்கா தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 10-ந் தேதி தொடங்கியது. சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில், 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்று கவனத்தை ஈர்த்த படங்களுக்கான வரிசையில் கத்தார், நியூசிலாந்து, சூடான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 10 படங்கள் முதன்முறையாக திரையிடப்பட்டன.

    அர்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 95 படங்கள் திரையிடப்பட்டன. 7 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு கொண்ட தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில், ‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்’, ‘பக்ரீத்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஜீவி’, ‘கனா’, ‘மெய்’, ‘ஒத்த செருப்பு’, ‘பிழை’, ‘சீதக்காதி’, ‘சில்லுக் கருப்பட்டி’ மற்றும் ‘தோழர் வெங்கடேசன்’ ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    நேற்று மாலை நடைபெற்ற இறுதி விழாவில், தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ படம், சிறந்த படத்துக்கான முதல் பரிசை வென்றது. படத்தின் இயக்குநருக்கு 2 லட்ச ரூபாயும், தயாரிப் பாளருக்கு 1 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை ‘சில்லுக் கருப்பட்டி’ மற்றும் ‘பக்ரீத்’ ஆகிய இரண்டு படங்களும் பகிர்ந்து கொண்டன. இரண்டு படங்களின் இயக்குநர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

    பார்த்திபன்

    சிறப்பு நடுவர் விருது, ‘அசுரன்’ படத்துக்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது’, ‘ராட்சசன்’ படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பு நடுவர் சான்றிதழ் விருது, ‘ஜீவி’ படத்தின் கதையை எழுதிய பாபு தமிழ் மற்றும் வி.ஜே. கோபிநாத் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
    பாவெல் நவகீதன் இயக்கத்தில் அருண் ராம் கேஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் ’வி1’ படத்தின் முன்னோட்டம்.
    பாவெல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வி1. அருண் ராம் கேஸ்ட்ரோ நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் விஷ்ணுபிரியா நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. வி1 என்ற எண்ணை கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். 

    வி1 படக்குழு

    இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “வி1” படத்தின் கதை. துப்பறியும் திரில்லரான இப்படம் முழுக்க விறுவிறுப்பும், காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். 
    அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர்.

    மேலும் பிரபு, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

    அர்ஜுன் சிதம்பரம்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அர்ஜுன் சிதம்பரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் தொடர்பாக நடிகைகள் குஷ்புவும், கஸ்தூரியும் டுவிட்டரில் காரசாரமாக விவாதித்தனர்.
    காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கடந்த சில நாட்களாக டுவிட்டர் தளத்தில் இயங்குவதை குறைத்து இருந்தார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தால் மீண்டும் டுவிட்டர் தளத்துக்கு திரும்பியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘யார் நாட்டின் குடிமகன், யார் குடிமகன் அல்ல என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார் அமித்ஷா? நமது நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளை தர நீங்கள் யார்? அகதிகள், அந்நியர்கள் என்று நீங்கள் அழைப்பவர்கள்தான் உங்களை ஆட்சியில் அமர வைக்க வாக்களித்தவர்கள். இந்த நாடு மதச்சார்பின்மையில் வாழ்கிறது. மதத்தில் அல்ல” என்று தெரிவித்தார்.

    இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கஸ்தூரி, “நான் குழப்பம் அடைந்துள்ளேன். எப்படி ஓட்டுப் போடும் குடிமக்கள் அந்நியர்களாக, அகதிகளாக இருக்க முடியும்? இந்திய வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்களே. ஏதோ இந்தியர்களுக்கு அவர்கள் குடியுரிமையே பறிக்கப்படுவதை போல பேசுகிறீர்கள்.

    குஷ்பு, கஸ்தூரி

    அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் நீங்கள் சி.ஏ.பி. குறித்து ஒழுங்காக தெரிந்துகொள்ள வேண்டும். குஷ்பு உட்பட பல பேர் சி.ஏ.பி. மற்றும் என்.ஆர்.சி பற்றி குழப்பி கொள்கிறார்கள். என்.ஆர்.சி என்பது மதரீதியான வழிமுறை அல்ல. 1971-ல் ஆரம்பித்த, அசாமியர்களிடையே நடத்தப்பட்ட வேட்டை. அது இப்போது நிறைவடைந்துள்ளது. அது காலனிய, நேருவிய கொள்கைகளினால் உருவான ஒன்று” என குஷ்புவின் டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டார்.

    கஸ்தூரியின் பதிவுக்கு குஷ்பு, “நான் சொன்னது சரி என்று நிரூபித்துவிட்டீர்கள். நான் சி.ஏ.பி. அல்லது என்.ஆர்.சி பற்றி குறிப்பிட்டேனா? நன்றாக ஓய்வெடுங்கள். உங்கள் மனதுக்குத் தேவைப்படுகிறது” என பதிலடி கொடுத்துள்ளார்.
    ×