என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார், தான் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த தனா இயக்கி இருக்கிறார். 

    குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சரத்குமார் கூறியதாவது:- “சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. அண்மையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தேன். ‘வானம் கொட்டட்டும்‘ கதையை நானும், ராதிகாவும் கேட்டதும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள், மற்றும் வெற்றி தோல்விகளை அவர்கள் எப்படி சந்திக்கின்றனர் என்பது கதை.

    சரத்குமார்

    இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார். ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை பின்பற்றி வருகிறேன். இதுவே நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம்.

    ராதிகாவுக்கு கோபம் பிடிக்காத விஷயம். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனி தான். ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி. எனக்கு ரஷ்ய மொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும்.” இவ்வாறு சரத்குமார் கூறினார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ஸ்ரேயா, சினிமாவில் நிலைத்திருக்க அதுதான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
    தமிழில் விஜய், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.

    அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவில் பெரிய நடிகை, சிறிய நடிகை என்ற பாகுபாடுகள் கிடையாது.

    ஸ்ரேயா

    சினிமா துறையினர் சீனியர், ஜூனியர் என்று வித்தியாசம் பார்த்து இருந்தால் நான் நிலைத்திருக்க முடியாது. கஷ்டப்பட்டு வேலை செய்வதுதான் முக்கியம். கடின உழைப்பாளிகளால் சினிமாவில் நீடிக்க முடியும். நான் கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நிலைத்து இருக்க முடிந்தது. 

    தற்போது திறமையான இளம் நடிகர், நடிகைகள் சினிமாவுக்கு அதிகமாக வருகிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம். வெப் தொடர்கள் அதிகம் வருகின்றன. அவற்றுக்கு சினிமா மாதிரி கட்டுபாடுகள் இல்லை. நினைத்ததை காட்சிப்படுத்த முடியும். நல்ல கதை அமைந்தால் வெப் தொடர்களில் நடிப்பேன்.” இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
    பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால் அவரது வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது குறித்த சி.டி. ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமி‌ஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

    ரஜினி வீட்டு முன், திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர், போராட்டம் நடத்த வந்த நிலையில், தமிழக அரசு, அவருடைய வீட்டிற்கு விசே‌ஷ பாதுகாப்பு அளித்துள்ளது.

    ரஜினி விவகாரத்தில், உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறையும் அளித்துள்ளது. ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

    பாலிவுட் பிரபலங்களான கங்கனா ரணாவத், கரன் ஜோகர், அத்னன் சமி மற்றும் ஏக்தா கபூர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    கல்வி, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 16 பேருக்கு பத்ம பூ‌ஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 34 பேர் பெண்கள். 18 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.

    மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 12 பேருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள் கிடைத்து இருக்கின்றன.

    திரைத்துறையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு விருது கிடைத்துள்ளது. இந்தி நடிகை கங்கனா ரணாவத், இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாடகர்கள் சுரேஷ் வாட்கர், அத்னன் சமி, டி.வி. நடிகர் சரிதா ஜோஷி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

    தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். விருது குறித்து கங்கனா ரணாவத் கூறுகையில், என்னை அங்கீகரித்த தாய் நாட்டிற்கு நன்றி. தங்களது கனவுகளை எண்ணி பயத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும், ஒவ்வொரு மகளுக்கும், ஒவ்வொரு தாய்க்கும் மற்றும் நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களின் கனவுகளுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரலில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
    ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று ஓவர் பில்டப் கொடுத்த நடிகை தற்போது வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறாராம்.
    மலையாளத்தில் கண்ணடித்து மிகவும் பிரபலமான நடிகை புகழின் உச்சிக்கு சென்றாராம். அந்த படத்தின் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் என்னை வைத்து புரமோசன்கள் செய்யுங்கள் என்று அவரே கூறினாராம். அனைவரும் புகழ்ந்து புகழ்ந்து பேச நடிகைக்கு ஓவர் கெத்து வந்துவிட்டதாம்.

    படம் வெளியாகி சரியாக ஓடாததால் நடிகை நொந்து போனாராம். மாறாக இந்த படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். ஓவர் பில்டப் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று மலையாள திரையுலகில் பலரும் பேசி வருகிறார்களாம்.
    ஒருநாள் கூத்து படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், தன்னுடைய ரசிகர்களுக்கு காதல் பற்றி விளக்கமளித்துள்ளார்.
    ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தை டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, பொன்மாணிக்க வேல் திரைப்படம் உருவாகியுள்ளது.

    நிவேதா பெத்துராஜ்

    தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் நிவேதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, அதற்கு "சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல்" என நிவேதா பதில் அளித்துள்ளார்.
    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் முன்னோட்டம்.
    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’. 

    அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

    இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமகேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார்.

    கலை இயக்கத்திற்கு மோகனமகேந்திரன் பொறுப்பேற்க, நடனத்திற்கு கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர் ஆகியோர் பங்களிக்க, கம்பம் சங்கர் வடிவமைப்பு பணிகளை செய்திருக்கிறார்.

    சபேஷ் - முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. அவரிடம் உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

    மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈசி’ பாடல் தான். 

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய நடிப்பை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். இப்படத்தின் மூலம் இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது எனக்கு வயது 22. இந்த சிறிய வயதில் யாரும் இதுபோன்ற முதிர்ச்சியான பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. அதன்பிறகு தான் சிலர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். நான் எப்போதும், எனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஃபியா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.

    மாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி

    இதன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பிக்கப்பட்டு கார்த்திக் நரேனை அழைத்து பாராட்டினார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

    இப்படத்தை பிப்ரவரி 21ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலாவின் அடுத்த படத்திற்காக உடல் எடையை கூட்டியிருக்கிறார்.
    பல வெற்றி படங்களை இயக்கியவர் பாலா. இவர் தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு, துருவ் விக்ரம் நடிப்பில் 'வர்மா' படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

    இப்படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா, அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பாலா படம் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    ஆர்.கே.சுரேஷ்

    அதில் 'பாலா படத்துக்காக 73 கிலோவில் இருந்து, 95 எடை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதன்பின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாஸ்டர் படத்தில் விஜய்

    நெய்வேலியில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனுக்கு விபத்தில் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் சமீபத்தில் சாம்பியன் என்ற படத்தை இயக்கி இருந்தார். 

    இந்நிலையில் இயக்குனர் சுசீந்தரன் நடைப்பயிற்சியின் எதிரே வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுசீந்திரனின் இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    சுசீந்திரன்

    இதற்காக லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் சுசீந்திரனிடம் கூறியுள்ளனர்.
    ×