என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலாவின் அடுத்த படத்திற்காக உடல் எடையை கூட்டியிருக்கிறார்.
    பல வெற்றி படங்களை இயக்கியவர் பாலா. இவர் தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு, துருவ் விக்ரம் நடிப்பில் 'வர்மா' படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

    இப்படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா, அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பாலா படம் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    ஆர்.கே.சுரேஷ்

    அதில் 'பாலா படத்துக்காக 73 கிலோவில் இருந்து, 95 எடை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதன்பின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாஸ்டர் படத்தில் விஜய்

    நெய்வேலியில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனுக்கு விபத்தில் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
    தமிழில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் சமீபத்தில் சாம்பியன் என்ற படத்தை இயக்கி இருந்தார். 

    இந்நிலையில் இயக்குனர் சுசீந்தரன் நடைப்பயிற்சியின் எதிரே வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுசீந்திரனின் இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    சுசீந்திரன்

    இதற்காக லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் சுசீந்திரனிடம் கூறியுள்ளனர்.
    டைட்டானிக் படம் மூலம் உலகளவில் பெயர் பெற்ற லியானார்டோ டிகாப்ரியோ இந்தி படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
    ஹாலிவுட் வில்லன் நடிகர்கள் தமிழ், இந்தி படங்களில் நடிக்கின்றனர். தற்போது பிரபல ஹாலிவுட் கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோவும் இந்திக்கு வருகிறார். இவர் டைட்டானிக், இன்செப்ஷன், ஏவியேட்டர், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 

    ‘டைட்டானிக்’ படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி 10 ஆஸ்கார் விருதுகளை வென்றது. தொடர்ந்து டிகாப்ரியோவின் பல படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டன. ‘தி ரெவனன்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

    டைட்டானிக் நாயகன்

    அடுத்த மாதம் வழங்கப்பட உள்ள ஆஸ்கார் விருதுக்கு இவரது நடிப்பில் வெளியான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. டிகாப்ரியோவுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

    டிகாப்ரியோ நடித்த ‘கிரேட் காஸ்பி’ படம் அமிதாப்பச்சன் நடிக்க இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் டிகாப்ரியோ அளித்துள்ள பேட்டியொன்றில் தனக்கு இந்தி படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்தி படமொன்றில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், விரைவில் இந்தியில் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
    தெலுங்கில் பிரபலமாகி தற்போது தமிழில் நடித்து வரும் நடிகை, இந்த தடவையும் ஏமாந்துட்டேன் என்று மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தெலுங்கில் பிரபலமான நடிகை தமிழில் வெளியான முதல் படத்தில் நடிகையின் கதாபாத்திரம் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது என்று சர்ச்சை எழுந்ததால், அந்த படத்தில் நடிகையின் காட்சிகளை தூக்கி விட்டார்களாம். இதனால், அடுத்ததாக நடித்தால் பெரிய ஹீரோ படத்தில்தான் என்று விடாப்பிடியாக இருந்து ஒல்லி நடிகர் படத்தில் நடித்திருந்தாராம்.

    இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டதாம். இந்த படத்திலும் நடிகையின் கதாபாத்திரம் பேசப்பட வில்லையாம். இதையறிந்த நடிகை இந்த தடவையும் ஏமாந்துட்டேன். அடுத்த படத்தில் நிச்சயம் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று வருத்தமாக கூறுகிறாராம்.
    யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, பாண்டியராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணா’ படத்தின் விமர்சனம்.
    ஆங்கிலேயர்கள் காலத்தில் வீரமாக செயல்பட்டவர்களை போலீசாக்கி அவர்களுக்கு டாணா என்று பெயர் வைக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையாக போலீசாகி வருகிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர் பாண்டியராஜன். இவர் உயரம் குறைவாக இருப்பதால் போலீசுக்கு தேர்வாகாமல் போகிறார். இதனால் தன்னுடைய மகன் வைபவை போலீசாக்க வேண்டும் என்று நினைக்கிறார். 

    ஆனால், அவருக்கு உணர்ச்சி வசப்பட்டாலோ, கோபப்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ அவரது குரல் பெண் குரலாக மாறிவிடுவதால், போலீசாகாமல் இருக்கிறார். இந்நிலையில், இவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்காக போலீசாக வேண்டும் என்று வைபவ் முடிவு செய்கிறார்.

    வைபவ் - யோகி பாபு

    இவரது போலீஸ் முயற்சிக்கு தடங்கல் வருகிறது. அது என்ன தடங்கல்? பிரச்சனையை சமாளித்து வைபவ் போலீஸ் ஆனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் வைபவ், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தனக்கே உரிய இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி படத்திற்கு பலம். வைபவ் - யோகிபாபு கூட்டணி சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

    வைபவிற்கு அப்பாவாக வரும் பாண்டியராஜன், அம்மா உமா ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். சைலண்ட் கில்லராக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஹரிஷ் பெராடி. 

    டாணா விமர்சனம்

    போலீஸ் கதையை எடுத்து, அதில் பாரம்பரியம், காதல், காமெடி என்று கொடுத்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி. குறிப்பாக இதில் டேட்டா பேஸ் மற்றும் டேட்டா எக்ஸ்சேஞ் என தனிமனித ரகசிய தகவல்களை திருடுதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு சில இடங்களில் தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். 

    விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சிவாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘டாணா’ காமெடி கலாட்டா.
    நடிகர் சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் என்.கே.கண்டி அடுத்ததாக ‘டே நைட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர்.

    டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.

    இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.

    டே நைட் படக்குழுவினர்

    படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்’. நான் சினிமாவை மட்டும் தான் நேசிக்கிறேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது’ என்றார்.

    நடிகரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ் இப்படம் குறித்து கூறும்போது, ‘எங்களுக்கு சினிமா பின்புலம் எதுவும் கிடையாது. அரசியல் பவரும் கிடையாது. 7 லட்சம் ரூபாயில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். இயக்குனர் என்.கே.கண்டிக்கு மிகப்பெரிய திறமை உண்டு. சரியான ஹீரோ, பட்ஜெட் கிடைத்தால் இவர் மிகப்பெரிய இயக்குனர் வரிசையில் இருப்பார். வெறும் பத்து லட்சம் ரூபாயில் இவ்வளவு குவாலிட்டியாக படம் எடுத்த இயக்குனர் கண்டிக்கு நன்றி. இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் எங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகிறோம். முழுக்க முழுக்க சினிமா மேல் இருக்கிற காதல் காரணமாகத் தான் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து தயாரித்து நடித்துள்ளேன்’ என்றார்.

    அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். ஏவிஎஸ் பிரேம் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.கே.கண்டி இயக்கியுள்ளார். ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் இளையராஜா இசையமைப்பில் வெளியாகி இருக்கும் சைக்கோ படத்தின் விமர்சனம்.
    கோவையில் பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதே ஊரில் பெண்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையாக இருக்கலாம் என தெரியவந்தது. 

    கொலையாளியை போலீசார் தேடி வரும் நிலையில், நாயகி அதிதி ராவ் அதே பாணியில் கடத்தப்படுகிறார். மற்ற பெண்களை கொலை செய்த நபர்தான் அதிதியையும் கடத்தியிருப்பது உதயநிதிக்கு தெரிய வருகிறது. 

    சைக்கோ விமர்சனம்

    இறுதியில் சைக்கோ கொலையாளியிடம் இருந்து அதிதி ராவை உதயநிதி உயிருடன் மீட்டாரா? சைக்கோ கொலையாளி யார்? எதற்காக பெண்களை கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்வையற்றவராக இவரின் நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு நடிப்பால் மிரட்டி இருக்கிறார் நித்யா மேனன். துணிச்சலான கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். உதயநிதிக்கு கண்ணாக அவருடனே பயணித்திருக்கும் சிங்கம் புலியின் நடிப்பு சிறப்பு. 

    சைக்கோ விமர்சனம்

    தனக்கே உரிய கிரைம், திரில்லர் பாணியில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்து, சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். வழக்கமான மிஷ்கின் படம் என்றாலும் மற்ற படங்களை விட சுவாரஸ்யம் குறைவு என்றே சொல்லலாம். அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்றும் முன்பே தெரிந்து விடுவதால் அதிகமாக ரசிக்க முடியவில்லை.

    படத்திற்கு பலம் இளையராஜாவின் இசை. பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதுபோல் தன்வீர் மிரின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் ‘சைக்கோ’ திரில்லிங் குறைவு.
    இயக்குனர் பாரதிராஜா, மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை எழுதி, நடித்து, இயக்கி இருக்கிறார்.
    மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் புதிய படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

    மீண்டும் ஒரு மரியாதை படத்தில் பாரதிராஜா

    இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமகேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை திட்டமிட்டப்படி நடத்தவேண்டும். ஆனால், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடந்தது. இதற்கிடையே தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    பாக்கியராஜ், நாசர்

    இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிப்பதற்கு பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார். 

    இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது ஹாலிவுட் நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
    ஹாலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67). இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹாலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

    இவற்றில் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூயார்க் போலீசாரால் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இவருக்கு எதிராக குற்றம் சுமத்திய பெண்களில் ஒருவர் 2013-ம் ஆண்டு ஹார்வி தன்னை பலாத்காரம் செய்தார் எனவும், மற்றொரு பெண் 2006-ம் ஆண்டு தன்னை பலாத்காரம் செய்தார் எனவும் கூறி இருந்தனர்.

    ஹார்வி வெய்ன்ஸ்டீன்

    இந்த 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதற்கிடையே 1990 காலகட்டத்தில் ஹார்வி தன்னை கற்பழித்ததாக 59 வயதான நடிகை அனபெல்லா சியோரா புகார் கூறி இருந்தார். அனபெல்லா சியோரா, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டும் “மீடூ” இயக்கத்துக்கு உதவியவர்.

    ஹார்வி மீதான வழக்கு விசாரணையின் போது அனபெல்லா சியோரா சாட்சியம் அளித்தார். அப்போது 1990-வது காலகட்டத்தில் மனிஹெட்டன் நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து தன்னை ஹார்வி கீழே தள்ளி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறினார். அவரிடம் ஹார்வியின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.
    சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சரயு, நந்தனா, சிருஷ்டி டாங்கே, இர்பான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ராஜாவுக்கு செக் படத்தின் விமர்சனம்.
    சேரன் - சரயு தம்பதி மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தனா என்ற மகள் இருக்கிறார். போலீஸ் அதிகாரியான சேரனுக்கு தூங்கும் வியாதி இருக்கிறது. மகள் நந்தனாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சேரனிடம் ஒப்புதல் கேட்கிறார் மனைவி சரயு. ஆனால் சேரன், தனது மகள் 10 நாட்கள் தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார். 

    ராஜாவுக்கு செக்

    இதற்கு சம்மதம் தெரிவிக்கும் சரயு, மகளை சேரனின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். 10 நாட்கள் சந்தோஷமாக தந்தை வீட்டில் வசிக்கும் நந்தனா, கடைசி நாளன்று கடத்தப்படுகிறார். சேரன் மீதான கோபத்தில், அவரது மகளை வில்லன் இர்பான் கடத்திவிடுகிறான். மகள் சீரழிக்கப்படுவதை வீடியோ லைவ்வில் பார்க்கவேண்டும் என்று சேரனை, வில்லன் டார்ச்சர் செய்கிறான். தூங்கும் வியாதியை மீறி வில்லனிடம் இருந்து மகளை சேரன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ராஜாவுக்கு செக்

    அன்பான மகளை காப்பாற்றப் போராடும் தந்தையின் கதை தான் இது. சேரன், பாசமிகு தந்தையாக நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சேரனுக்கு ஜோடி மலையாள ஹீரோயின் தான் என முடிவு செய்துவிட்டார்கள் போல இருக்கிறது. மலையாள நடிகை சரயு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

    நடிகை சிருஷ்டி டாங்கேவிற்கு சிறிய கதாபாத்திரம் தான். சேரனின் மகளாக நடித்துள்ள நந்தனா, கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இர்பான் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். 

    ராஜாவுக்கு செக்

    இயக்குனர் சாய் ராஜ்குமார், திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ள விதம் சிறப்பு. இருப்பினும் மகள் சீரழிக்கப்படுவதை வீடியோ லைவ்வில் தந்தையை வில்லன் பார்க்க வைப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி பெரும் பொருட்செலவு இல்லாமல், சிம்பிளான கதைகளத்தில் படமாக்கியிருக்கிறார்.

    ஓர் இரவில் நடக்கும் கதை என்பதால், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. வினோத் எஜமான்யாவின் இசையில் பாடல்கள் எதுவும் எடுபடாவிட்டாலும், பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார். 

    மொத்தத்தில் ”ராஜாவுக்கு செக்” பாசப் போராட்டம்.
    ×