என் மலர்
சினிமா செய்திகள்
என்.கே.கண்டி இயக்கத்தில் ஆதர்ஷ், அன்னம் ஷாஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டே நைட்’ படத்தின் முன்னோட்டம்.
அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர்.
டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.

படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்’. நான் சினிமாவை மட்டும் தான் நேசிக்கிறேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது’ என்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, இனி வருடத்துக்கு ஒரு படம் அப்படி நடிப்பேன் என கூறியுள்ளார்.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு, ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். கடந்த வருடம் மட்டும் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகிபாபு, தற்போது கைவசம் 16 படங்கள் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: திரையுலகுக்கு நான் அறிமுகமாகி, நகைச்சுவை நடிகராக பிரபலமானதும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் வேலை செய்தேன். இதனால் என் தூக்கம் போனது. களைப்பாக உணர்ந்தேன். கண்கள் தூக்கத்துக்கு ஏங்கின. உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், இப்போது இரவு-பகலாக நடிப்பதில்லை. கதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன். மற்ற படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்’’ என யோகி பாபு கூறியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வாள் மூலம் கேக் வெட்டிய நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவருக்கு கடந்த 20-ந் தேதி பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், ரசிகர்களுடன் நீண்ட வாள் மூலம் கேக் வெட்டி நடிகர் துனியா விஜய் கொண்டாடினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறையான அனுமதி பெறாமல் வீட்டுமுன்பு பந்தல் அமைத்திருந்ததாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் நடிகர் துனியா விஜய் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நீண்ட வாள் பயன்படுத்தியது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கோரி நடிகர் துனியா விஜய்க்கு கிரிநகர் போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்பேரில், கிரிநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி நடிகர் துனியா விஜய் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட வாளை பயன்படுத்தி கேக் வெட்டிய விவகாரத்திலும், அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி நடிகர் துனியா விஜய் மீது கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்காக ரஜினி பட வில்லன் நடிகர் 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் ஷமிதாப் என்னும் படத்தில் நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து பல்வேறு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்த தனுஷ், தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் தமிழ், இந்தியில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை ஆனந்த் எல். ராய் டைரக்டு செய்கிறார்.

இதில் அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள் தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 2.0 படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்தார். தனுஷ் படத்தில் நடிக்க அக்ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதை கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் நாயர் ஸான் படத்தில் மோகன்லாலும் ஜாக்கிசானும் இணைந்து நடிக்க உள்ளனர்.
கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் உதவியாகவும் இருந்தார். இவரை நாயர் ஸான் என்று அழைத்தனர்.
இவரது வாழ்க்கையை மலையாளத்தில் சினிமா படமாக எடுக்க 2009-ல் திட்டமிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால் படம் திடீரென்று கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதில் மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு நாயர் ஸான் என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்பர்ட் ஆண்டனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே நவ்யா நாயர் நடித்த கண்ணே மடங்குகா, ராகுல் மாதவ் நடித்த வாடா மல்லி ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் நாயர் ஸான் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.
மோகன்லால் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ரூ.400 கோடி செலவில் தயாராகிறது. ஜாக்கிசான் நடிப்பதால் படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சென்னை:
நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக நடிகர் விஷால், நாசர், கார்த்தி, சங்க உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் நீதிபதி கல்யாண சுந்தரம் தீர்ப்பளிக்கிறார்.

ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி சங்க உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாசர், கார்த்தி வழக்கு தொடர்ந்தனர்.
கடந்தாண்டு ஜுன் 23ம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது நாளை தெரியவரும்.
1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து உருவாகும் ’83’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. அதுபோல் 83 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கபீர்கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில், 83 படத்தை தமிழில் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது: ”83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் முன்னோட்டம்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் ‘சைக்கோ’ படத்தை தயாரித்துள்ளார். நாயகனுக்கும் சைக்கோ கொலையாளிக்கும் இடையேயான மோதல் தான் கதை. கவுதம் என்னும் கண் பார்வையற்ற கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ராம் சைக்கோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை எமி ஜாக்சன், நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால் லண்டன் புறப்பட்டு சென்றார். பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோடோவுடன் காதலில் இருந்தார். இதில் எமி கர்ப்பமானார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் ஆகாமலேயே கடந்த ஆண்டு எமி ஜாக்ஸன் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டார். குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்கும் எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராமில் தனது 4 மாத குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 'இன்றுடன் 4 மாதம் ஆகிறது. நீ எனக்கு குழந்தையாக பிறப்பதற்கு முன் எனது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நினைக்க கடினமாக இருக்கிறது.

நீ ஒரு அதிசயமான குழந்தை. உனக்கு அம்மாவாக இருக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார் எமி ஜாக்ஸன். குழந்தை பெற்ற பிறகே திருமணம் செய்துகொள்வது என்ற முடிவில் இருந்த எமி தனது பாய் பிரண்டை எப்போது மணக்கப்போகிறார் என்பதுபற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. புதிய பட வாய்ப்புகளும் எதுவும் தேடி வராத நிலையில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆகிவிட்ட எமி ஜாக்சன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் என அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சைக்கே'. இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது எப்படிப்பட்ட படம் என்று. டீசர், டிரைலர்களும் அதையே உணர்த்துகிறது.

இப்படம் பற்றி மிஷ்கின் கூறுகையில், சைக்கோ படம் பாருங்கள். கண்டிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இப்படத்தை பார்க்காதீர்கள். இது ஒரு கொலைக்களமான படம். அதனால் குழந்தைகள் மனதளவில் பயப்படுவார்கள். அதேப்போன்று நான்கைந்து காட்சிகளில் மிகவும் பயங்கரமாக இருக்கும். மற்றபடி 18 வயது நிரம்பிய ஆண், பெண் பார்க்கலாம் என்றார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார்.

தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார். குஷ்பு வில்லத்தனம் கலந்த ஒரு வேடத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் படத்தில் சித்தார்த்தும் நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. ரஜினிக்கு மாப்பிள்ளையாக அதாவது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், 74 வயது தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை 5-வது திருமணம் செய்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பமீலா ஆண்டர்சன் அடுத்து ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் அவரை முறைப்படி திருமணம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை எளிமையாக நடந்துள்ளது. பமீலாவும் ஜான் பீட்டரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர்.
இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் பற்றி பமீலா ஆண்டர்சன் கூறும்போது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார். புதிதாக திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.






