என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை அனிதா ஹசானந்தனி, கடந்த 2013-ம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 

    கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர். 

    அனிதா ஹசானந்தனி, ரோகித் ரெட்டி

    இந்நிலையில், நடிகை அனிதா ஹசானந்தனி, தனது கணவரை கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனிதாவின் கணவர் ரோகித் ரெட்டி, இதனால் தான் தனக்கு ரீல்ஸ் பிடிக்காது என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். 


    தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷும், நயன்தாராவும் பட வெளியீட்டில் மோத உள்ளனர்.
    தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார். மேலும் இப்படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    கர்ணன் மற்றும் நிழல் பட போஸ்டர்கள்

    இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படமான ‘நிழல்’ அதே தினத்தில் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிழல் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.
    தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். 

    இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சிரஞ்சீவி, ராம்சரண்

    இந்நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. நடிகர்கள் சிரஞ்சீவியும், ராம்சரணும் தற்போது ‘ஆச்சார்யா’ படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
    மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், ஆலியா பட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை கத்ரீனா கைஃப்பிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    கத்ரீனா கைஃப்பின் சமூக வலைதள பதிவு

    இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்ததும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

    நடிகை கத்ரீனா கைஃப், அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருந்த நிலையில், நடிகை கத்ரீனா கைஃப்பிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது.
    ஜனநாயக கடமையாற்றிய நடிகைகள் சிலரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
    சட்டசபை தேர்தலில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதேபோல் நடிகைகள் சிலரின் புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதன் தொகுப்பை காணலாம்.

    எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து அசத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், அவர் இன்று தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுப் போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

    ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி

    நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரும் இன்று தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ஓட்டுப் போட்ட பிறகு ‘மை’ விரலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ஒரு விரல் புரட்சி செஞ்சிட்டேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    தமிழில் டார்லிங், மரகத நாணயம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி, சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார்.

    நிக்கி கல்ராணி, ஆண்ட்ரியா

    பாடகி, நடிகை என பன்முகத்திறமை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா, இவர் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்களித்துள்ளார். வாக்களித்த பின் ‘மை’ விரலுடன் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    நடிகையும் முன்னாள் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ஜனனியும் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். ‘நான் ஓட்டுப் போட்டுட்டேன், நீங்க’ என்று டுவிட் போட்டுள்ள அவர், புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

    ஜனனி, சினேகா

    நடிகையும், நடிகர் பிரசன்னாவின் மனைவியுமான சினேகாவும் தேர்தலில் வாக்களித்துள்ளார். சென்னை தி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டு போட்ட அவர், ‘மை’யிடப்பட்ட விரலை காண்பித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

    பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் இன்று தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இவர் தற்போது சூர்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன், கீர்த்தி பாண்டியன்

    நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழில் தும்பா, அன்பிற்கினியாள் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இன்று தனது வாக்கினை அப்பா அருண் பாண்டியன் மற்றும் அம்மாவுடன் இணைந்து பதிவிட்டுள்ளார். குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். 

    அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராக உள்ளது. 

    இப்படத்திற்கு கடந்த வாரமே பூஜை போடப்பட்டாலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்பட்டது. 

    விஜய்

    அதன்படி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளதாம். இதற்காக நடிகர் விஜய் இன்று இரவு ஜார்ஜியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். இதையடுத்து சென்னை திரும்பும் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
    தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் வாக்களித்தனர்.
    சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, ஜீவா உள்ளிட்ட பலர் வாக்குகளை செலுத்தினார்கள். 

    சிம்பு, திரிஷா

    இந்நிலையில், நடிகர் சிம்பு சென்னை தி-நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல் நடிகை திரிஷாவும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அவர்கள் வாக்களிக்க வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
    நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

    சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்டார். ரசிகர்கள் கூடி விடக்கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர்.

    தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி அருகே குழுமினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, நடிகர் விஜயை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார்.

    நடிகர் விஜய் வாக்குச் செலுத்திவிட்டு திரும்பியபோது ரசிகர்கள் அதிகளவில் முண்டியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    வாக்களித்த பிறகு, மீண்டும் தனது வீட்டுக்கு சைக்கிளில் செல்ல நடிகர் விஜய் சென்றார். ஆனால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி நடிகர் விஜய் வீடு திரும்பினார். ரசிகர்கள் முண்டியடித்தபடி செல்பி எடுப்பதற்காக ஓடி வந்ததால், கடும் சிரமத்துக்கு இடையே தடுமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை அந்த நிர்வாகி ஓட்டினார்

    நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

    பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பு கூறும்போது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என கூறினார்.

    ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வதால் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.

    வாக்குச்சாவடி மையம் மிக அருகில் இருந்ததால் சைக்கிளில் வந்தார் விஜய். நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார்.


    லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
    தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. 

    மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரபுதேவா

    இந்நிலையில், இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் வாண்டட், தபாங் 3, ராதே போன்ற படங்களில் சல்மான் கான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். கமல் நடிப்பில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதமே வெளியானது. 

    இருப்பினும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் கமல் பிசியானதால் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தலுக்கு பின்னரே விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதனிடையே விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே பஹத் பாசில், லாரன்ஸ் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கமல், விஜய் சேதுபதி

    முன்னதாக கடந்தாண்டு நடந்த கமல்ஹாசனின் ‘உங்கள் நான்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, கமல்ஹாசனுடன் ஒரு முறையாவது பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பம் விக்ரம் படத்தின் மூலம் நிறைவேறுகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
    கோடம்பாக்கத்தில் ஓட்டு போட வந்த நடிகர் விஜய் சேதுபதி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்று கூறியிருக்கிறார்.
    சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வாக்குகளை செலுத்தினார்கள். 

    விஜய் சேதுபதி

    நடிகர் விஜய் சேதுபதி 2 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். அதன்பின் பேசிய விஜய் சேதுபதி, சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, மனிதர்கள் தான் முக்கியம்’ என்றார்.
    விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார்.
    மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார்.

    சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தார். இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.

    லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், தான் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்ததாகவும் லோகேஷ் கனகராஜ் வாக்களித்த விரல் மையுடன் கூடிய புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கொரோனாவால் இருந்து மீண்ட லோகேஷ் கனகராஜ்க்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    ×