என் மலர்
சினிமா செய்திகள்
விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம், பிரபல நடிகர் ஒருவரை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம்.
இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’இந்த அழகான மனிதரை சந்தித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்த போது அவரை கண்டித்து அனுப்பி இருக்கிறார்.
பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குகிறார். ஏற்கனவே மல்யுத்த வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்தார். இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தாவை கண்டித்தார். சமீபத்தில் லண்டன் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் அறிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்.

இந்த நிலையில் மும்பையில் ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுக்க முயன்றார். அந்த ரசிகர் முக கவசம் அணியாததால் தன்னுடன் புகைப்படம் எடுக்க ராக்கி சாவந்த் மறுத்ததுடன் அவரை கடுமையாக கண்டித்து விரட்டவும் செய்தார். அந்த ரசிகரை பார்த்து முக கவசம் அணியாமல் என்னுடன் செல்பி எடுக்க முடியாது. முக கவசம் அணியுங்கள். உங்களை போன்றவர்களால்தான் மும்பையில் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முக கவசம் அணியாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
புகார் மனு விவரம் வருமாறு:-

நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வன் படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
"டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார்.
டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.
புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.
முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.
அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.
சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால் அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.
விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.
ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.
ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.
ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.
இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.
இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.
ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.
மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.
ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.
மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.
அர்ஜூனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.
டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.
இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார்.
வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரையும் மே 1 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமணமான ஒரே மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னடம் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர். இருவரும் கடந்த சில வருடங்கள் காதலித்து வந்ததாகவும், அதன் பின்னரே திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென நடிகை சைத்ரா தனது வீட்டில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவருடைய தற்கொலை முயற்சி கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் நடிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சைத்ராவின் வாக்குமூலத்தை வாங்கிய பின்னரே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்வார்.
இந்நிலையில், ஆண்ட்ரியா உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தனுஷ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் படம் பார்த்தவர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இப்படத்தின் ஒரு காட்சியில் தனுஷ், ரஜினியின் தளபதி படத்தின் புகைப்படம் உள்ள டி.சர்ட் அனைந்திருப்பார். இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் 2வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. தளர்வுகள் அறிவித்ததால் இந்த ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் 50 % இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைவி படக்குழுவினர் ஏப்ரல் 23ம் தேதி திரைப்படம் வெளியாகவில்லை என்று அறிவித்து இருக்கிறார்கள். கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகு மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் விலகியது குறித்து காரணம் வெளியாகியுள்ளது.
நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தது. சில காரணங்களால் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் பிசியாக நடிப்பதாலும், அதன்பின் சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் இருப்பதாலும் கமலின் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போன காரணம் என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், கவின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் முதல்கட்ட ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அங்கு ஷூட்டிங் நடத்துவது சாத்தியமில்லை என்பதால் காஷ்மீர் போன்று உள்ள ஜார்ஜியாவில் இந்த படத்தை படமாக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக விஜய் ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்ற விஜய்க்கு படக்குழுவினரும், அங்குள்ள தமிழர்களும் உற்சாக வரவேற்பை அளித்தனர். தற்போது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் இயக்குனர் நெல்சன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






