என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா இரண்டு நாட்களாக எந்த பதிவும் செய்யாததால், கொரோனா தான் காரணம் என்று ரசிகர்களும், ராதிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் பதிவு செய்து வந்தார்கள்.

    ராதிகாவின் பதிவு

    இந்நிலையில் ராதிகா இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யாவின் மனைவியாவார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் சாயிஷா நடித்த ’யுவரத்னா’ என்ற படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில் யுவரத்னா படத்தில் இடம்பெற்ற ’நீதானே நா’ என்ற பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடிய வீடியோவின் காட்சிகளை சாயிஷா தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமான ஸ்டெப்ஸ்களுடன் ஆடும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    எம்.முருகன் இயக்கத்தில் எஸ்.பிரதீப் வர்மா, ஐஸ்வர்யா சிந்தோஷி, ரவிஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் ரவிஷங்கர் நடித்துள்ளார். 

    இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை அடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மா, இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஷி நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த அனுஸ்ரேயா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் தீனா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

    ஓட்டம் படக்குழு

    ஜோசப் ராய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம்தேவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மஞ்சு நடனம் பயிற்சியையும், 
    சத்குணமூர்த்தி, டி.பார்த்தசாரதி ஆகியோர் அசோசியேட் தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

    மர்மம் மற்றும் திகிலான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் உருவாகும் ‘ஓட்டம்’ படத்தின் படப்பிடிப்பு படத்தை 
    போலவே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தை வருகிற தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் வெளியிட உள்ளனர்.
    கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து, ஓடிடி-யில் படங்கள் நேரடியாக வெளியிடப்பட்டன. அதேபோல் யோகிபாபுவின் ‘நாங்க ரொம்ப பிஸி’, ‘மண்டேலா’, விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’, சமுத்திரகனியின் ‘ஏலே’ ஆகிய படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட்டன.

    அந்த வகையில் தற்போது நேரடி டி.வி. வெளியீட்டிற்காக தயாராகி உள்ள படம் ‘வணக்கம்டா மாப்ள’. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர்.

    வணக்கம்டா மாப்ள படத்தின் போஸ்டர்

    இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இந்நிலையில், ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று, நேரடியாக டி.வி.யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘சுல்தான்’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகர் கார்த்தியும், நடிகை ராஷ்மிகாவும் நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

    அதேபோல் நடிகை ராஷ்மிகா, கார்த்தியிடம் பொன்னியின் செல்வன் படம் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு கார்த்தி பதில் கூறியதாவது: “எனது அடுத்த படம் ‘பொன்னியின் செல்வன்’. இரு பாகங்களாக வெளிவரவுள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை, இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம்.

    மணிரத்னம்

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை 70 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.

    கொரோனா பிரச்சனையால் படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு உள்ளோம். இந்தக் கதையை தமிழ்த் திரையுலகம் கடந்த 60 ஆண்டுகளாகப் படமாக்க முயன்று வருகிறது. ஆனால் அது இப்போதுதான் நடைபெறுகிறது”. இவ்வாறு கார்த்தி கூறினார்.
    சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சூர்யா

    இந்நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வேட்டி சட்டை அணிந்திருக்கும் சூர்யா, கையில் வாளுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். அந்த மாஸான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் விமர்சனம்.
    பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம் கிடையாது. இங்கு இருக்கும் மக்கள் வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மேலூர் எனும் ஊருக்கு சென்று பேருந்து ஏற வேண்டும். மேலூர் ஊரில் இருக்கும் சிலர் பஸ் ஏற வந்த கௌரியை அசிங்கப் படுத்துகிறார்கள்.

    இதனால் கோபமடைந்த தனுஷ், அவர்களை வெளுத்து வாங்குகிறார். பதிலுக்கு தனுஷை பழிவாங்க நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில்  கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்ல நிற்கும்போது, பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள்.

    கர்ணன் விமர்சனம்

    இதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி நட்டி, ஊர் பெரியவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை துவம்சம் செய்கிறார். கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து தனுஷ் தப்பித்தாரா? ஊர் மக்களை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் தனுஷ், படத்தில் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கர்ணனாக மனதில் நிற்கிறார். அசுரனை தாண்டி வேற ஒரு தனுஷை பார்க்க முடிகிறது. நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். 

    கர்ணன் விமர்சனம்

    குணசித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். பாட்டியிடம் திருடும் காட்சியில் கவர்கிறார். அதேபோல் யோகிபாபுவை நகைச்சுவைக்காக பயன்படுத்தாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி இருப்பது அருமை. தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா பாசம் கோபம் என கைத்தட்டல் வாங்குகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ், நடிப்பில் பளிச்சிடுகிறார். போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்கான கதாபாத்திரத்தை திறம்பட செய்தியிருக்கிறார்.

    1990-களில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார். தலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா, கந்தசாமி மகனுக்கு கண்ணபிரான் பெயர் இருக்கலாம், மாடசாமி மகனுக்கு கர்ணன் பேர் இருக்க கூடாதா... என வசனங்கள் படத்திற்கு பலம். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்து அழகு படுத்தி இருக்கிறார். 

    கர்ணன் விமர்சனம்

    கதாபாத்திர தேர்வும் அருமை. தனுஷ் போன்ற மாஸ் நடிகர் படத்தில் இருந்தாலும், அவருக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தான் சொல்லவந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். மெதுவான திரைக்கதை படத்திற்கு பலவீனம். 

    படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன்  இசை. பாடல்களில் அதிக கவனம் செலுத்திய இவர், பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் கவனித்து இருக்கலாம். கிராமத்து அழகை மாறாமல் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். 

    மொத்தத்தில் ‘கர்ணன்’ அடக்க முடியாதவன்.
    நடிகர் கார்த்திக்கிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லை என்று தெரியவந்த போதிலும் மூச்சுத்திணறல் சரியாகாமலேயே உள்ளது.
    மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெரியவந்த போதிலும் மூச்சுத்திணறல் சரியாகாமலேயே உள்ளது. இதை தொடர்ந்து டாக்டர்கள் கார்த்திக் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில், பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கமல்

    இந்நிலையில், இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த கமல், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் விக்ரம் படத்தில் அத்தகைய வேடத்தில் நடிக்கிறாராம்.

    இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல் படத்தையும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
    தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியானது.
    சென்னை:

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    எனினும், கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு வெளியிட்டார்.

    கர்ணன் படத்தில் தனுஷ் தோற்றம்

    இதுதொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டரில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று எஸ்.தாணு பதிவிட்டிருந்தார்.

    அதன்படி, கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால், காலையிலேயே தியேட்டர்கள் முன் திரண்ட ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    திரையரங்குகள் முன் வைக்கப்பட்டு உள்ள பல அடி உயர கட் அவுட்டில் இருந்து மலர்களை ரசிகர்கள் தூவினர். கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாடினர். இதனை கீழேயிருந்து ரசிகர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படங்களாக பதிவு செய்து வெளியிட்டவண்ணம் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    இவ்வாறு பிசியான நடிகராக வலம் வந்தாலும், ரசிகர்கள் மீது தீராத அன்பு கொண்டவர் விஜய் சேதுபதி. அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.

    விஜய் சேதுபதி

    இந்நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆண் குழந்தைக்கு துருவன் என பெயர் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அந்த ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
    மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதனை சிவி குமார் இயக்கி தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் 2017-ல் வெளியான படம் மாயவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதலே கதை. மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்து உள்ளனர். 

    இதுகுறித்து மாயவன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுக்கு பிடித்த மாயவன் நிலத்தில் இறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ரசிகர்களின் ஆதரவினால் இந்த புதிய முயற்சியில் ஈடுபடுகிறோம். மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் மாயவன் ரீலோடட் ஆக தயாராக உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    மாயவன்

    இதுபோல் இன்று நேற்று நாளை, சூதுகவ்வும் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களையும், இதே பட நிறுவனம் படமாக்க உள்ளது. மாயவன் படத்தை சி.வி.குமார் இயக்கி இருந்தார். ஏற்கனவே பில்லா, எந்திரன், சண்டகோழி, சாமி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், காஞ்சனா படங்கள் மூன்று பாகங்களாக வந்துள்ளன. ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.
    ×